ஹஸ்பர் ஏ ஹலீம்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி பிரதேசத்தில் படகுப் பாதை விபத்துக்குள்ளான சம்பவம் தேசிய ரீதியாக பாரிய அதிர்வலைகளை எழுப்பியுள்ள நிலையில், இச் சம்பவத்தைத் தொடர்ந்து குறித்த பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இதற்கமைய பாலத்தை நிர்மாணிக்கும் பணிகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார். 9 மாதங்களுக்குள் இப் பாலத்தின் நிர்மாணப் பணிகளை பூர்த்தி செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மற்றுமொரு சிறுமி மரணம்
கிண்ணியா குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தில் உயிரிழந்த மரணங்களின் எண்ணிக்கை ஏழாக உயர்ந்துள்ளது. திருகோணமலை பொது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த குறிஞ்சாக்கேணி பகுதியை சேர்ந்த ரபீஸ் பாத்திமா நபா எனும் 6 வயது சிறுமியே சிகிச்சை பலனின்றி கடந்த சனிக்கிழமை இரவு உயிரிழந்துள்ளார்.
இவர் கிண்ணியா அல் அஷ்கர் வித்தியாலயத்தில் தரம் 1 இல் கல்வி பயின்று வந்தார். தனது தாயுடன் பாடசாலைக்குச் செல்வதற்காக படகுப் பாதையில் பயணித்த போதே இந்த அனர்த்தம் நிகழ்ந்துள்ளது. தாய் உயிர் தப்பி கிண்ணியா தள வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பியிருந்தார்.
குறித்த சம்பவம் தொடர்பில் தாயிடம் வினவிய போது “எனது பிள்ளை சம்பவம் நடந்து ஆறு நாட்களாக கண்களை திறக்கவில்லை திருகோணமலை வைத்தியசாலையில் இருந்து இரவு மரணித்ததாக தகவல் வந்தது” என கண்ணீர் மல்கக் கூறினார். இரு பெண் பிள்ளைகளில் மூத்த பெண் பிள்ளையே இவ்வாறு உயிரிழந்தவராவார்.
உயிரிழந்த சிறுமியின் ஜனாஸா கிண்ணியா நடுத்தீவு பொது மையவாடியில் ஞாயிற்றுக்கிழமை மாலை நல்லடக்கம் செய்யப்பட்டது. இதற்கமைய படகுப் பாதை விபத்தில் ஐந்து மாணவர்கள் உட்பட ஏழு பேர் மரணித்துள்ளனர்.
நகர சபை தலைவருக்கும் விளக்கமறியல்
இப் படகுப் பாதை விபத்து தொடர்பில் கிண்னியா நகர சபை தலைவர் எஸ்.எச்.எம். நளீம் பொலிஸாரால் கடந்த வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். கிண்ணியா பொலிஸ் நிலையத்துக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்ட அவர், விசாரணைகளினிடையே இவ்வாறு கைது செய்யப்பட்டு திருகோணமலை நீதிவான் நீதிமன்றில் ஆஜர் செய்யப்பட்டார். இதன்போது அவரை எதிர்வரும் 9 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் ஐ.பி. ரஸாக் உத்தரவிட்டார்.
தண்டனை சட்டக் கோவையின் 273,275 மற்றும் 298 ஆம் அத்தியாயங்களின் கீழ் அவருக்கு எதிராக பொலிஸார் குற்றம் சுமத்தியுள்ளனர்.
கிண்ணியா பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்ட நகர சபை தலைவர் நளீம், அங்கு வைத்து கைது செய்யப்பட்டார். இக்கைது தொடர்பில் கருத்து தெரிவித்த பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் நிஹால் தல்துவ, ‘ இந்த 6 பேரின் உயிரிழப்புக்கு காரணமான சம்பவத்துக்கு மறைமுகமாக நகர சபையின் தலைவர் உதவி ஒத்தாசை புரிந்துள்ளார். எந்த விதமான பரிசோதனைகளும் இன்றி அந்த படகுப் பாதையை நடாத்திச் செல்ல அனுமதியளித்துள்ளார். அது குறித்த எந்த அவதானத்தையும் அவர் செலுத்தவில்லை. இவ்வாறான பின்னணியிலேயே சம்பவத்துடன் அவருக்கு குற்றவியல் பொறுப்பு சாட்டப்பட்டு கைது செய்யப்பட்டார்” என குறிப்பிட்டார்.
இதேவேளை முன்னதாக கைது செய்யப்பட்ட படகுப் பாதையின் உரிமையாளர், செலுத்துநர் மற்றும் கட்டண பணம் வசூலிப்பவர் ஆகிய மூவரையும் எதிர்வரும் டிசம்பர் மாதம் 8 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கவனயீனமாக செயற்பட்டு 7 பேருக்கு மரணத்தை ஏற்படுத்தியமை மேலும் 20 பேருக்கு காயமேற்படுத்தியமை தொடர்பில் அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கடற்படையினால் பாதுகாப்பான படகுச் சேவை
குறிஞ்சாக்கேணி படகுப் பாதை விபத்தைத் தொடர்ந்து அதே களப்பில் பாடசாலை மாணவர்கள் பாதுகாப்பாக செல்வதற்கான போக்குவரத்து சேவையை கடற்படை ஆரம்பித்துள்ளது. கடந்த வியாழக்கிழமை முதல் இந்த களப்பில் படகுச் சேவையை ஆரம்பித்ததாக கடற்படை ஊடகப் பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா தெரிவித்தார்.
25 மாணவர்கள் ஒரே தடவையாக பயணிக்க முடியுமான, போக்குவரத்து படகொன்றினை, கடற்படையின் கிழக்கு கட்டளை மையம் ஊடாக சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும், காலை 7 மணி முதல் 8 மணி வரையும் பிற்பகல் 12 மணி முதல் 2 மணி வரையும் இந்த படகு பாடசாலை மாணவர்களுக்காக சேவையில் இருக்கும் எனவும் கடற்படை பேச்சாளர் கெப்டன் இந்திக டி சில்வா கூறினார்.
கிண்ணியா படகுப் பாதை விபத்தையடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. மக்கள் பாதுகாப்பாக படகில் ஏறுவதற்கு கடற்படை தற்காலிக ஜெட்டி ஒன்றையும் அமைத்துள்ளது.
சகல படகுப் பாதைகள் குறித்தும் ஆய்வு
இதனிடையே கிழக்கு மாகாணத்தில் தற்போது பயன்பாட்டில் உள்ள அனைத்து படகுப் பாதைகளினதும் தரம் குறித்து உடனடி தர பரிசோதனைகளை முன்னெடுத்து அறிக்கை சமர்ப்பிக்க கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் விஷேட குழுவொன்றினை அமைத்துள்ளார். மாகாண போக்குவரத்து பொறியியல் துறையின் அதிகாரிகள், பொலிஸார், கடற்படை அதிகாரிகளை உள்ளடக்கியதாக குறித்த குழுவை அவர் அமைத்துள்ளார்.
பால நிர்மாண பணிகள் துரிதம்
இதேவேளை, கிண்ணியா தொடக்கம் குறிஞ்சாக்கேணி வரையான பாலத்திற்கான நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
ஆறு தொடக்கம் ஒன்பது மாதங்களுக்குள் பாலத்தின் நிர்மாணப்பணிகளை நிறைவு செய்ய எதிர்பார்ப்பதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் எல்.வி.எஸ். வீரகோன் குறிப்பிட்டுள்ளார்.
ஒப்பந்தக்காரரின் தாமதம் காரணமாகவே குறிஞ்சாக்கேணி பாலத்தின் நிர்மாணப்பணிகளும் தாமதமாகியுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
இதனால் கிண்ணியா தொடக்கம் குறிஞ்சாக்கேணி வரையான பாலத்திற்கான நிர்மாணப் பணிகளை வேறொரு ஒப்பந்தக்காரரிடம் வழங்கி, நிர்மாணப்பணிகளை துரிதப்படுத்த தீர்மானித்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் சுட்டிக்காட்டியுள்ளார்.
கிண்ணியாவில் துக்க தினம்
படகுபாதை கவிழ்ந்தமையின் காரணமாக சிறுவர்கள் உள்ளிட்ட 7 பேர் உயிரிழப்பதற்கு காரணமாக அமைந்த கிண்ணியா – குறிஞ்சாங்கேணி பாலத்தின் நிர்மாணப் பணிகளை துரிதப்படுத்துமாறு வலியுறுத்தியும், உயிரிழந்தவர்களுக்கு இரங்கலை வெளிப்படுத்தும் வகையில் பிரதேச மக்களால் கடந்த வியாழக்கிழமை துக்க தினம் அனுஷ்டிக்கப்பட்டது.
இதன் காரணமாக கிண்ணியா நகரிலுள்ள சகல கடைகளும் மூடப்பட்டிருந்ததோடு, சகல அரச மற்றும் தனியார் நிறுவனங்களில் வெள்ளை கொடியேற்றப்பட்டிருந்தது. குறிப்பாக கிண்ணியா பகுதியிலுள்ள பாடசாலைகளிலும் இவ்வாறு வெள்ளைக் கொடியேற்றி இரங்கல் வெளிப்படுத்தப்பட்டது.
ரிஷாத் பதியுதீன் விஜயம்
கிண்ணியா, குறிஞ்சாக்கேணியில் படகுப் பாதை விபத்துக்குள்ளானதில் உயிரிழந்தவர்களின் ஜனாஸா வீடுகளுக்கு கடந்த புதன் கிழமை விஜயம் செய்த அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாட் பதியுதீன், பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அதேபோன்று கிண்ணியா மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ரூபும் சம்பவத்தில் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார்.
ஊடகவியலாளர்கள் மீது தாக்குதல்
குறித்த படகுப் பாதை விபத்து தொடர்பாக அறிக்கையிடச் சென்ற ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் முஸ்லிம் மீடியா போரம் பலத்த கண்டனத்தை வெளியிட்டுள்ளது.
ஊடகவியலாளர்களான எச்.எம்.ஹலால்தீன், ஏ.எல்.எம். ரபாய்தீன் மற்றும் அப்துல் சலாம் யாசீம் ஆகியோர் தம் கடமைகளை செய்து கொண்டிருக்கும்போது அச்சுறுத்தப்பட்டு தாக்கப்பட்டு விரட்டியடிக்கப்பட்டுள்ளனர். அத்துடன் ஊடகவியலாளரான அப்துல் சலாம் யாசீமின் கையடக்கத்தொலைபேசி பறிக்கப்பட்டுள்ளதுடன் இது தொடர்பில் கிண்ணியா பொலிஸ் நிலையத்திலும் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஊடகவியலாளர்கள் தம் கடமையான படகு விபத்து மற்றும் அதனுடன் தொடர்பான விடயங்களை அறிக்கை விடுவதற்கு முற்பட்டபோதே தாக்கப்பட்டுள்ளனர். ஊடகவியலாளர்கள் தமது கடமையைச் சுதந்திரமாக மேற்கொள்வதற்கு இடையூறு ஏற்படுத்தும் இது போன்ற முறையற்ற செயற்பாட்டை வன்மையாக கண்டிப்பதோடு இது தொடர்பாக விசாரித்து சம்பந்தப்பட்டவர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறும் ஸ்ரீ லங்கா முஸ்லிம் மீடியா போரம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை ஊடகவியலாளர்களின் தாக்குதலை கண்டித்து நேற்றுகிண்ணியாவில் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றும் இடம்பெற்றது. திருகோணமலை மாவட்ட ஊடகவியலாளர் சங்கம் மற்றும் கங்கதலாவ ஐக்கிய ஊடக ஒன்றியம் இணைந்து இதனை ஏற்பாடு செய்திருந்தனர். இதில் திருகோணமலை மாவட்டத்தை சேர்ந்த பல ஊடகவியலாளர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
காயமடைந்தவர்களை பார்வையிட்ட ஆளுநர்
கிண்ணியா விபத்தில் காயமடைந்து வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருபவர்களை கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் கடந்த வியாழக்கிழமை நேரில் சென்று பார்வையிட்டார்.
அங்கு ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், “இனிமேல் இப்படி ஒரு விபத்து நடக்காமல் நாம் அவதானமாக இருக்க வேண்டும். ஒருவரையொருவர் நோக்கி விரல் நீட்டும் நேரம் இதுவல்ல. போருக்குப் பின்னர், இலங்கையில் அதிக எண்ணிக்கையிலான பாலங்கள் கிழக்கு மாகாணத்தில் நிர்மாணிக்கப்பட்டன. இலங்கையின் மிக நீளமான பாலம் கிழக்கு மாகாணத்தில் உள்ளது. இந்த இடத்தில் பாலம் கட்டும் பணி கொவிட் முடக்கம் காரணமாகவே தாமதமானது. மாற்று வழி இருந்தபோதிலும், மக்கள் அதை பயன்படுத்த விரும்பவில்லை. இந்த சம்பவம் தொடர்பில் நாம் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறோம். அறிக்கையில் உள்ள பரிந்துரைகள் தொடர்பில் அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்போம். குற்றவாளிகள் இருந்தால் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க தயங்க மாட்டோம். பொறுப்பில் இருந்து யாரும் தப்ப முடியாது. எனினும் தற்போது இவர்களுக்கு தேவையான போக்குவரத்து வசதிகள் கடற்படையினரால் வழங்கப்பட்டு வருகின்றது. மேலும், இந்த பாலத்தின் பணிகளை விரைவில் முடிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது” என்றார்.
வாக்குறுதிகள் நிறைவேற்றப்படுமா?
இந்த விபத்தைத் தொடர்ந்து பிரதேச அரசியல்வாதிகளும் அதிகாரிகளும் ஒருவரையொருவர் குற்றம்சாட்டி வருகின்றனர். பாராளுமன்றத்தில் கூட இது குறித்து அரசியல்வாதிகள் ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டுக்களை முன்வைத்ததை அவதானிக்க முடிந்தது. மக்களின் உயிர்களைப் பலி கொடுத்த பின்னர் இவ்வாறு குற்றம்சாட்டி விளையாடுவதில் எந்த அர்த்தமுமில்லை. நிச்சயமாக இதற்குக் காரணமான அனைவரும் தண்டிக்கப்பட வேண்டும். அத்துடன் இம் மக்களது குறைபாடுகள் அனைத்தும் தீர்க்கப்பட வேண்டும். வழங்கப்பட்டுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் நிறைவேற்றப்பட வேண்டும் என்பதே அனைவரதும் எதிர்பார்ப்பாகும்.- Vidivelli