வெடித்துச் சிதறும்வரை வேடிக்கை பார்க்கப் போகிறார்களா?

0 479

நாட்டின் பல்­வேறு பகு­தி­க­ளிலும் சமையல் எரி­வாயு கசிவு மற்றும் அத­னோ­டி­ணைந்த வெடிப்புச் சம்­ப­வங்கள் பர­வ­லாகப் பதி­வாகி வரு­கின்­றமை மக்­களைப் பெரிதும் அச்­சத்தில் ஆழ்த்­தி­யுள்­ளது. எந்த நேரத்தில் எந்த வீட்டில் வெடிக்­குமோ என்ற பதற்­றத்தில் நிம்­ம­தி­யின்றித் தவிக்­கின்­றனர்.

ஏலவே சமையல் எரி­வாயு விலை அதி­க­ரிப்பு மற்றும் தட்­டுப்­பாடு கார­ண­மாக கடந்த பல மாதங்­க­ளாக நெருக்­க­டி­களைச் சந்­தித்து வந்த மக்­க­ளுக்கு இந்த எரி­வாயுக் கசிவு விவ­காரம் மேலும் தலை­யி­டியைக் கொடுத்­துள்­ளது.

கடந்த நவம்பர் 20 முதல் நேற்று மாலை வரை சுமார் 30க்கும் அதி­க­மான எரி­வாயுக் கசிவு மற்றும் அதனால் ஏற்­பட்ட வெடிப்புச் சம்­ப­வங்கள் நாடெங்கும் பதி­வா­கி­யுள்­ளன. கடந்த இரு தினங்­களில் மாத்­திரம் 20 சம்­ப­வங்கள் பதி­வா­கி­யுள்­ளன. இவை அனைத்­திற்கும் எரி­வாயுக் கசி­வுதான் கார­ணமா என்­பதைக் கண்­ட­றி­வ­தற்­கான விசா­ர­ணை­களை பொலிசார் முன்­னெ­டுத்து வரு­கின்­றனர்.

இத­னி­டையே இது குறித்து ஆராய்­வ­தற்­காக நிய­மிக்­கப்­பட்­டுள்ள மொரட்­டுவ பல்­க­லைக்­க­ழ­கத்தைச் சேர்ந்த நால்வர் கொண்ட குழுவின் அறிக்கை நேற்று மாலை நுகர்வோர் அதி­கார சபை­யிடம் கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இதன் கண்­ட­றி­தல்கள் குறித்து நேற்­றி­ரவு வரை தக­வல்கள் வெளி­யி­டப்­ப­ட­வில்லை.

இத­னி­டையே சபு­கஸ்­கந்த எண்ணெய் சுத்­தி­க­ரிப்பு நிலை­யத்­தினால் மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வு­க­ளின்­படி, சமையல் எரி­வாயு விநி­யோக நிறு­வ­னங்­களால் அதன் இர­சா­யனக் கல­வையில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றங்­களே இந்த வெடிப்புச் சம்­ப­வங்­க­ளுக்குக் காரணம் எனக் கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது. இது குறித்த அறிக்­கை நுகர்வோர் அதி­கார சபைக்கு கைய­ளிக்­கப்­பட்­டுள்­ளது. எனினும் இந்த அறிக்­கையை ஏற்றுக் கொள்ள முடி­யாது என எரி­வாயு விநி­யோக நிறு­வனம் தெரி­வித்­துள்­ளது. அதே­போன்று இக் கல­வையின் விகி­தத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட மாற்­றமே இதற்குக் காரணம் என பாரா­ளு­மன்ற உறுப்­பினர் ஹர்ஷ டி சில்வா சில ஆவ­ணங்­களை வெளி­யிட்டு உறு­திப்­ப­டுத்­தி­யுள்ளார்.

எனினும் தாம் எரி­வாயு கல­வையில் எந்­த­வித மாற்­றங்­க­ளையும் மேற்­கொள்­ள­வில்லை என்றும் சர்­வ­தேச தர நிர்­ண­யங்­களைப் பின்­பற்­றியே செயற்­பட்டு வரு­வ­தா­கவும் குறித்த எரி­வாயு விநி­யோக நிறு­வனம் வாதிட்டு வரு­கின்­றது. அது­மாத்­தி­ர­மன்றி நுகர்­வோரின் தவ­றான கையாள்­கையே இந்த விபத்­து­க­ளுக்குக் காரணம் என நுகர்வோர் மீதே அந்­நி­று­வனம் பழி­சு­மத்த ஆரம்­பித்­துள்­ளது.

சமை­ய­லறை விபத்துச் சம்­ப­வங்கள் அவ்­வப்­போது நாட்டில் நிகழ்­வது வழக்கம். எனினும் நாடெங்கும் குறு­கிய காலத்­தினுள் இவ்­வா­றான வெடிப்புச் சம்­ப­வங்கள் இதற்கு முன்னர் பதி­வா­க­வில்லை. என­வேதான் இதன் உண்­மை­யான கார­ணத்தைக் கண்­ட­றிய வேண்­டி­யது அவ­சி­ய­மாகும்.

இலங்­கையில் எரி­வாயு விநி­யோ­கத்தில் இரண்டு நிறு­வ­னங்­களே ஏக­போக உரி­மையைக் கொண்­டுள்­ளன. இதுவே இவ்­வா­றான சிக்­கல்கள் நீடிக்­கவும் குறித்த நிறு­வ­னங்கள் பொறுப்­பற்ற வித­மாக நடந்து கொள்­ளவும் கார­ண­மாகும். இந்த ஏக­போக உரிமை நீக்­கப்­பட்டு, போட்­டி­மிக்க சந்தைச் சூழல் ஒன்று உரு­வாக்­கப்­பட வேண்டும். அதன் மூலமே நுகர்­வோரின் நலன்­களைப் பாது­காக்க முடி­யு­மா­க­வி­ருக்கும்.

தேசிய பாது­காப்பு என்­பது நாட்டில் வாழு­கின்ற எல்லா மக்­களும் அச்­ச­மின்றி நிம்­ம­தி­யாக வாழ வழி­வ­குப்­ப­தாகும். தீவி­ர­வா­தி­க­ளி­ட­மி­ருந்து நாட்டைப் பாது­காப்­பது மாத்­திரம் தேசியப் பாது­காப்­பல்ல. இந்த அர­சாங்கம் தேசிய பாது­காப்பு எனும் கோஷத்தை முன்­னி­றுத்­தியே ஆட்­சிக்கு வந்­தது. துர­திஷ்­ட­வ­ச­மாக இன்று வீட்டில் உள்ள சமையல் எரி­வாயு கூட பாது­காப்­பற்­ற­தாக மாறி மக்­க­ளுக்கு அச்­சு­றுத்தல் விடுக்­கின்ற அள­வுக்கு நாட்டின் தேசிய பாது­காப்பு கேள்­விக்­கு­றி­யா­கி­யி­ருக்­கி­றது.

இன்று ஒவ்­வொரு வீட்­டிலும் வெடி குண்­டுகள் இருப்பதாக இந்த விவகாரத்தை முன்னிறுத்தி எதிர்க்கட்சியினர் விமர்சனங்களை முன்வைக்கத் தொடங்கியுள்ளனர். அப்படியானால் அந்த வெடி குண்டுகளை ஒவ்வொரு வீடுகளுக்கும் அனுப்பிய நிறுவனத்திற்கு எதிராக, அதற்குப் பொறுப்பான அதிகாரிகளுக்கு எதிராக அரசாங்கம் என்ன நடவடிக்கை எடுக்கப் போகிறது? அல்லது எல்லா வீடுகளும் வெடித்துச் சிதறும் வரை அரசாங்கம் வேடிக்கை பார்க்கப் போகிறதா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.