ஹிஜாஸுக்கு எதிராக மற்றொரு விசாரணை?

0 374

– பிணை மறுக்கப்பட்டது ஏன்?
– போலியாக புனையப்பட்ட வழக்கு என மன்றுக்கு அறிவிப்பு
– ஜனவரி 28 இல் சாட்சி விசாரணை

 

எம்.எப்.எம்.பஸீர்

சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்டு, சாட்சி விசா­ர­ணை­க­ளுக்­கான திக­தியும் குறிக்­கப்­பட்­டுள்ள நிலையில், அவ­ருக்கு எதி­ராக வேறு விட­யங்கள் தொடர்பில் பொலிஸ் விசா­ர­ணைகள் இடம்­பெ­று­வது தொடர்­பி­லான தக­வல்கள் வெளிப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன.

கடந்த 19 ஆம் திகதி, சட்ட மா அதிபர் திணைக்­க­ளத்தின் பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, மன்றில் முன்­வைத்த விட­யங்கள் ஊடாக இந்த விடயம் வெளிப்­பட்­டது. எனினும் சிரேஷ்ட சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் ஹிஸ்­புல்­லாஹ்­வுக்கு எதி­ராக முன்­னெ­டுக்­கப்­படும், குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­ப­டாத அந்த விசா­ர­ணைகள் என்ன என்­பதை பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா வெளிப்­ப­டுத்­த­வில்லை.
தம் பக்க நியா­யங்­களை முன் வைக்க, குறிப்­பாக வழக்கின் சாட்­சி­யா­ளர்­க­ளான மலிக் மற்றும், பெளசான் ஆகியோர் ஜனா­தி­பதி விசா­ரணை ஆணைக் குழு­வுக்கு வாக்கு மூலம் வழங்­கி­யி­ருப்பின் அதன் பிர­திகள், ரி.ஐ.டி., சி.சி.டி. ஆகிய பொலிஸ் பிரி­வுகள் இவ்­வ­ழக்­குடன் தொடர்­பு­பட்டு முன்­னெ­டுத்த இரு­வேறு விசா­ர­ணைகள் தொடர்­பி­லான ஆவ­ணங்கள் உள்­ளிட்­ட­வற்றை பிர­தா­ன­மாக கோரினர். எனினும் அவற்றை வழங்க முடி­யாது என சட்ட மா அதிபர் மறுப்பு தெரி­வித்தார்.

பிர­தி­வா­திகள் கோரும் சான்­றா­வ­ணங்கள் பல, இந்த வழக்­குடன் நேர­டி­யாக தொடர்­பு­பட்­ட­தல்ல எனவும், அத்­துடன் பிர­தி­வா­தி­க­ளுக்கு எதி­ராக இடம்­பெறும் வேறு விசா­ர­ணை­க­ளுடன் தொடர்­பு­டை­யது என்­ப­தாலும் அவற்றை வழங்க முடி­யாது என வழக்குத் தொடுநர் சார்பில் மன்றில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா குறிப்­பிட்­டி­ருந்தார்.

இத­னூ­டா­கவே, ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மற்றும் மெள­லவி சலீம் கான் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்பட்­டு­ள்ள வழக்­குக்கு மேல­தி­க­மாக வேறு விட­யங்கள் குறித்த பொலிஸ் விசா­ர­ணை­களும் இடம்­பெற்று வரு­கின்­றதா எனும் கேள்வி எழுந்­துள்­ளது.

கைதும் குற்­றச்­சாட்­டுக்­களும்
உயிர்த்த ஞாயிறு தொடர் தற்­கொலை குண்டுத் தாக்­கு­தல்­களில் தொடர்­பு­பட்ட சினமன் கிராண்ட் ஹோட்­டலில் தாக்­குதல் நடாத்­திய இன்சாப் அஹமட் எனும் குண்­டு­தா­ரி­யுடன் தொடர்­பு­களை பேணி­ய­தாக கூறி, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் 2020 ஏப்ரல் 14 ஆம் திகதி சி.ஐ.டி. யினரால் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார். அது முதல் தடுத்து வைக்­கப்­பட்­டி­ருந்த அவரை, பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் குற்­றச்­சாட்­டுக்கள் சுமத்­து­வ­தற்­கான தக­வல்கள் விசா­ர­ணையில் வெளிப்­பட்­டுள்­ள­தாக சுட்­டிக்­காட்­டியே, அக்­குற்­றச்­சாட்­டுக்­களின் கீழ் அவரை மன்றில் ஆஜர் செய்ய சட்ட மா அதிபர் கடந்த பெப்­ர­வரி 17இல் ஆலோ­சனை வழங்­கி­யி­ருந்தார்.

அதன்­படி இக்­குற்­றச்­சாட்­டுக்­களை அடிப்­ப­டை­யாகக் கொண்டு, ஹிஜா­ஸிடம் வாக்கு மூலம் ஒன்­றினை பதிவு செய்­து­கொண்டு அதன் பின்னர் அவரை நீதி­மன்றில் ஆஜர் செய்­யு­மாறு பொலிஸ் மா அதி­ப­ருக்கு சட்ட மா அதிபர் அறி­வித்த நிலை­யி­லேயே முதன் முறை­யாக கடந்த பெப்­ர­வரி 18 ஆம் திகதி ஹிஜாஸ் கோட்டை நீதிவான் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு அன்று முதல் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்ளார்.
இவ்­வா­றான நிலை­யி­லேயே சட்ட மா அதிபர் கடந்த பெப்­ர­வரி 17 வழங்­கிய ஆலோ­ச­னைக்கு அமைய ஹிஜா­ஸுக்கு உதவி ஒத்­தாசை வழங்­கி­ய­தாக கூறி, அல் சுஹை­ரியா மத்­ர­ஸாவின் அதிபர் மொஹம்மட் சகீல் அன்­றைய தினமே சி.ஐ.டி.யினரால் கைது செய்­யப்­பட்­டி­ருந்தார்.

இவ்­வா­றான பின்­ன­ணி­யி­லேயே அவ்­வி­ரு­வ­ருக்கும் எதி­ராக தற்­போது புத்­தளம் மேல் நீதி­மன்றில் குற்றப் பத்­தி­ரிகை தாக்கல் செய்­யப்­பட்­டுள்­ளது.

கடந்த 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதலாம் திக­திக்கும் 31 ஆம் திக­திக்கும் இடைப்­பட்ட காலப்­ப­கு­தியில் புத்­தளம் அல் சுஹை­ரியா மத்­ரஸா பாட­சா­லையில் கல்வி பயின்ற மாண­வர்­க­ளுக்கு, கற்­றுக்­கொ­டுக்­கப்­பட்ட சொற்கள் ஊடா­கவோ, தவ­றான பிரதி நிதித்­துவம் ஊடா­கவோ பல்­வேறு மதங்­க­ளுக்கு இடையில் மோதல் ஏற்­படும் வண்ணம் எதிர் உணர்­வு­களை தூண்டும் வித­மாக சொற் பொழி­வினை நடாத்­தி­யமை, அதற்­காக சதி செய்­தமை தொடர்பில் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் கீழ் தண்­டனைக்குரிய குற்றம் ஒன்­றினை புரிந்­துள்­ள­தாக ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் மீது குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.
அத்­துடன் ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் தொடர்பில், ‘ இஸ்­ரே­லி­யர்கள் கைப்­பற்­றி­யி­ருப்­பது, எமது பள்­ளி­வா­சல்கள். இலங்­கையில் கத்­தோ­லிக்­கர்­க­ளுக்கு எதி­ராக தாக்­குதல் நடத்­தி­னா­லேயே அவர்கள் அச்­சப்­ப­டுவர்.’ என கூறி இஸ்ரேல் – பலஸ்தீன் யுத்த வீடி­யோக்­களை கண்­பித்­தமை ஊடாக மதக் குழுக்கள் இடையே மோதல் நிலை­மையை ஏற்­ப­டுத்தும் வண்ணம் உணர்­வு­களை தூண்­டி­ய­தாக குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

குறித்த இரு குற்­றச்­சாட்­டுக்கள் தொடர்­பிலும் உதவி ஒத்­தாசை புரிந்­த­தாக சுஹை­ரியா மத்­ரஸா பாட­சாலை அதிபர் சலீம் கான் மொஹம்மட் சகீல் மீது பயங்­க­ர­வாத தடை சட்ட ஏற்­பா­டுகள் பிர­காரம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

இத­னை­விட, பலஸ்தீன் – இஸ்ரேல் தொடர்­பி­லான யுத்த வீடியோ காட்­சி­களை காண்­பித்து ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் கூறி­ய­தாக கூறப்­படும் வச­னங்கள் ஊடாக வெறுப்­பு­ணர்­வு­களை விதைத்­தாக குற்றம் குற்றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது.

எவ்­வா­றா­யினும் தற்­போது குற்றப் பகிர்வுப் பத்­திரம் தாக்கல் செய்­யப்­பட்­டுள்ள வழக்கின், சாட்சி விசா­ர­ணை­களை எதிர்­வரும் 2022 ஜன­வரி 28 ஆம் திகதி ஆரம்­பிக்க புத்­தளம் மேல் நீதி­மன்றம் தீர்­மா­னித்­துள்­ளது. இதற்­காக முதல் சாட்­சி­யா­ள­ருக்கு சாட்­சியம் வழங்க அன்­றைய தினம் மன்றில் ஆஜ­ரா­கு­மாறு அறி­வித்­தலும் அனுப்­பப்பட்­டுள்­ளது.

பிணை மறுக்க காரணம் என்ன?
இரு­வ­ருக்­கு­மாக கடந்த ஒக்­டோபர் 8 ஆம் திகதி புத்­தளம் மேல் நீதி­மன்றில் பிணை கோரி வாதங்கள் முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

ஹிஜாஸ் சார்பில் ஜனா­தி­பதி சட்­டத்­த­ரணி நளின் இந்­ர­திஸ்ஸ பிணை கோரி வாதங்­களை முன் வைத்­துள்ளார். அவர் சும­ன­சேன எதிர் சட்ட மா அதிபர் எனும் உயர் நீதி­மன்றின் முன்னாள் நீதி­ய­ரசர் சரத் என் சில்வா வழங்­கிய வழக்குத் தீர்ப்பை முன் வைத்து பிணை கோரி­யுள்ளார்.

இத­னை­ய­டுத்து சலீம் கான் சார்பில் ஆஜ­ரான சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள, பல உயர் நீதி­மன்ற தீர்ப்­புக்­களை மன்றில் முன்­னி­றுத்தி, நீதி­மன்றின் செயற்­பா­டுகள் தொடர்பில் தீர்­மானம் எடுக்க வேறு நிறு­வ­னங்­க­ளுக்­குக்கு அதி­காரம் இல்லை எனவும், பிணை­ய­ளிப்­பது குறித்த செயற்­பாடு நீதி­மன்றின் செயற்­பாடு என சுட்­டிக்­காட்டி பிணை கோரி­யுள்ளார்.

எவ்­வா­றா­யினும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான பிரதி சொல்­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, பயங்­க­ர­வாத தடை சட்டம் என்­பது நாட்டில் ஏற்­றுக்­கொள்­ளப்­பட்ட சட்டம் எனவும், அதன் கீழ் குற்றம் சாட்­டப்­படும் ஒரு­வ­ருக்கு பிணை வழங்க மேல் நீதி­மன்­றுக்கு நீதி­மன்ற அதி­காரம் இல்லை எனவும் வாதிட்­டுள்ளார்.
இவ்­வா­றான நிலை­யி­லேயே, இந்த பிணை கோரிக்கை தொடர்­பி­லான நீதி­மன்றின் தீர்­மா­னத்தை கடந்த 19 ஆம் திகதி நீதி­பதி குமாரி அபே­ரத்ன அறி­வித்தார்.

நீதி­ப­தியின் தீர்ப்பு
‘முதலாம், இரண்டாம் பிர­தி­வா­தி­க­ளுக்கு ( ஹிஜாஸ், மெள­லவி சலீம் கான்) பிணை­ய­ளிக்­கு­மாறு அவர்கள் சார்பில் ஆஜ­ரான சட்­டத்­த­ரணிகள் கோரிக்கை முன் வைத்­துள்­ளனர். பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழ் பிர­தி­வா­திகள் விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், குடி­ய­கல்வு குடி­வ­ரவு சட்­டத்தின் 48 (1) ஆம் பிரிவை ஒத்த நிலை­மையை அச்­சட்டப் பிரிவு கொண்­டுள்­ள­தா­கவும் அவர்கள் சுட்­டிக்­காட்­டி­யி­ருந்­தனர். குடி­வ­ரவு குடி­ய­கல்வு சட்­டத்தின் 48 (1) ஆம் அத்­தி­யா­ய­மா­னது அர­சி­ய­ல­மைப்பின் 13 (2) ஆம் உறுப்­பு­ரி­மையை மீறு­வ­தாக உயர் நீதி­மன்றின் திலங்க சும­தி­பால, குமா­ர­தாச உள்­ளிட்ட வழக்­குளின் தீர்ப்­புக்­க­ளுடன் ஒப்­பீடு செய்து பிணை கோரி பிர­தி­வா­திகள் சார்பில் வாதங்கள் முன் வைக்­கப்­பட்­டி­ருந்­தன.

எவ்­வா­றா­யினும் வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரான பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, பிர­தி­வா­திகள் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 15 (2) ஆம் அத்­தி­யா­யத்தின் கீழேயே விளக்­க­ம­றி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ள­தா­கவும், அவர்கள் தொடர்பில் பயங்­க­ர­வாத தடைச் சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யாயம் செல்­லாது எனவும் வாதங்­களை முன் வைத்­துள்ளார்.

பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 7 (2) ஆம் அத்­தி­யா­ய­மா­னது, ஒருவர் சந்­தேக நப­ராக இருக்கும் சூழலில் நீதி­மன்றில் ஆஜர் செய்­யப்­பட்டு விளக்­க­ம­றியல் உத்­த­ரவு பிறப்­பிப்­ப­தற்­கான ஏற்­பா­டாகும். இவ்­வ­ழக்கில் பிர­தி­வா­தி­க­ளான இந்த இரு­வரும் பயங்­க­ர­வாத தடை சட்­டத்தின் 15 (2) ஆம் பிரிவின் கீழேயே விளக்­க­மறி­யலில் வைக்­கப்­பட்­டுள்­ளனர். இதுவே வழக்குத் தொடு­நரின் நிலைப்­பா­டாகும்.

இந்­நி­லையில், பிர­தி­வா­தி­க­ளுக்கு பிணை­ய­ளிக்க இந்த நீதி­மன்­றுக்கு பிணை­ய­ளிக்கும் அதி­காரம் இல்லை என்­பதால், அவர்­களின் பிணைக் கோரிக்கை நிரா­க­ரிக்­கப்­ப­டு­கி­றது.’ என மேல் நீதி­மன்ற நீதி­பதி தனது பிணை குறித்த தீர்ப்பில் அறி­வித்தார்.

வழக்கு விசா­ர­ணைக்கு திகதி
அதன்­படி இந்த வழக்­கா­னது எதிர்­வரும் 2022 ஆம் ஆண்டு ஜன­வரி 28 ஆம் திகதி சாட்சி விசா­ர­ணை­க­ளுக்­காக எடுத்­துக்­கொள்­ளப்­ப­ட­வுள்­ள­துடன், அன்­றைய தினம் வழக்கின் முதல் சாட்­சி­யா­ளரை மன்றில் ஆஜ­ராக நீதி­மன்றம் அறி­வித்தல் அனுப்­பி­யது. அத்­துடன் அன்­றைய தினத்தில் பிர­தி­வா­தி­க­ளான ஹிஜாஸ் ஹிஸ்­புல்லாஹ் உள்­ளிட்ட இரு­வ­ரையும் மன்றில் கண்­டிப்­பாக ஆஜர் செய்­யு­மாறு நீதி­பதி குமாரி அபே­ரத்ன, நீர்­கொ­ழும்பு சிறைச்­சாலை அத்­தி­யட்­ச­ருக்கு விஷேட உத்­த­ர­வினைப் பிறப்­பித்தார்.

சான்­றா­வ­ணங்­களை கோரும் ஹிஜாசும் மறுக்கும் சட்ட மா அதி­பரும்
நியா­ய­மான வழக்கு விசா­ர­ணை­க­ளுக்­காக, தம் பக்க நியா­யங்­களை முன் வைக்க தேவை­யான சான்­றா­வ­ணங்­களைப் பெற்­றுக்­கொள்ள சட்­டத்­த­ரணி ஹிஜாஸ் உள்­ளிட்ட இருவர் சார்­பிலும் பல ஆவ­ணங்கள் வழக்குத் தொடு­ந­ரிடம் கோரப்பட்­டுள்­ளன. எனினும் அவற்றில் பலதை வழ­ங்­கி­யுள்ள வழக்குத் தொடுநர் சட்ட மா அதிபர் தரப்பு, சில ஆவ­ணங்­களை வழங்க முடி­யாது என மறுத்து வரு­கி­றது.

இந் நிலையில் அவ்­வா­றான ஆவ­ணங்­களை பெற்­றுக்­கொள்ள நீதி­மன்றின் உத்­த­ர­வினைப் பெறும் நோக்கில் , கடந்த நவம்பர் 19 ஆம் திகதி பிர­தி­வா­தி­க­ளுக்­காக சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள வாதங்­களை முன் வைத்­தி­ருந்தார்.
அதற்கு பதில் வாதங்­களை பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா முன் வைத்தார்.

இந் நிலையில் இரு­பக்க வாதங்­க­ளையும் செவி­ம­டுத்த நீதி­பதி , பிர­தி­வா­திகள் கோரும் சான்­றா­வ­ணங்­களை வழங்க நீதி­மன்ற உத்­த­ரவை பிறப்­பிப்­பதா இல்­லையா என்ற தீர்­மா­னத்தை எதிர்­வரும் 2022 ஜன­வரி 7 ஆம் திகதி வழங்­கு­வ­தாக நீதி­மன்றம் அறி­வித்­தது.
இத­னை­விட, இரு தரப்பும் இணைந்து ஒன்­றி­ணைந்த நகர்த்தல் பத்­திரம் ஊடாக, வழக்குத் தொடு­ந­ரிடம் இருந்து கிடைக்கப் பெற்ற சான்­றா­வ­ணங்கள், மேலும் எதிர்­பார்க்­கப்­படும் ஆவ­ணங்கள் தொடர்­பி­லான பூரண விட­யங்­களை உள்­ள­டக்­கிய விபர அறிக்­கையை எதிர்­வரும் டிசம்பர் 3 ஆம் திக­திக்கு முன்னர் சமர்ப்­பிக்க வேண்டும் எனவும் இரு தரப்­புக்கும் அறி­வித்­துள்­ளது.

விசா­ரணை துரி­தப்­ப­டுத்­தப்­படும்
கடந்த 19ஆம் திகதி இந்த வழக்கு விசா­ர­ணை­க­ளி­டையே திறந்த மன்றில் கருத்து வெளி­யிட்ட நீதி­பதி குமாரி அபே­ரத்ன, இந்த வழக்கை நான் இழுத்துச் செல்ல விரும்­ப­வில்லை. இவ்­வ­ழக்கை எதிர்­வரும் ஜன­வரி முதல் தொடர்ச்­சி­யாக விசா­ர­ணைக்கு எடுத்து முடிக்­கவே நான் எதிர்­பார்க்­கின்றேன் என தெரி­வித்­தி­ருந்தார்.

புனை­யப்­பட்ட வழக்கு
ஹிஜாஸ், மெள­லவி சலீம் ஆகி­யோ­ருக்கு எதி­ராக தொட­ரப்­பட்­டுள்ள சதி செய்­தமை, சமூ­கங்­க­ளி­டையே வெறுப்­பு­ணர்வை தூண்­டி­யமை தொடர்­பி­லான குற்­றச்­சாட்­டுக்­களின் கீழான வழக்­கா­னது முற்­றிலும் புனை­யப்­பட்ட ஒன்று என அவ்­வி­ருவர் சார்­பிலும் நீதி­மன்­றுக்கு அறி­விக்­கப்­பட்­டது. அதுவே தமது நிலைப்­பாடு என சிரேஷ்ட சட்­டத்­த­ரணி சமிந்த அத்­து­கோ­ரள நீதி­மன்­றுக்கு தெரி­வித்தார்.

அதனை மன்­றுக்கு நிரூ­பிப்­ப­தற்­காக தாம் கோரும் ஆவ­ணங்­க­ளையே வழக்குத் தொடுநர் தரப்பு வழங்க மறுப்­ப­தாக அவர் சுட்­டிக்­காட்­டினார்.

குறிப்­பாக வழக்கின் சில சாட்­சி­யா­ளர்­க­ளிடம் குறித்த திக­தியில், சி.ஐ.டி.யில் வைத்து வாக்கு மூலம் பெற்­ற­தாக குறிப்­பி­டப்­பட்­டி­ருந்­தாலும், அவர்­க­ளிடம் சி.ஐ.டி.க்கு வெளியே தடுத்து வைத்து வாக்கு மூலங்கள் பெற்றுக்கொண்டமைக்கான தகவல்கள் தம்மிடம் இருப்பதாகவும், தம் பக்க நியாயங்களை முன் வைக்கும் போது அவற்றை மன்றில் வெளிப்படுத்த எதிர்பார்ப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

இவற்றை உறு­திப்­ப­டுத்த, சி.ஐ.டி.யின் பொறுப்பில் உள்ள சில ஆவ­ணங்­க­ளையும், அறி­வியல் சார் ஆவ­ணங்­க­ளையும் தான் கோரு­வ­தாக சுட்­டிக்­காட்­டிய அவர், கொட்­ட­கெத்­தன தொடர் பெண் கொலைகள், சிறுமி சேயா படு­கொலை வழக்கில் கைது செய்­யப்­பட்டு குற்­றவா­ளிகள் என முத்­திரை குத்­தப்­பட்­ட­வர்கள் விடு­த­லை­யா­கவும், உண்மைக் குற்­ற­வாளி கைது செய்­யப்­ப­டவும் அறி­வியல் ரீதி­யி­லான தடய ஆவ­ணங்­களே வழி கோலி­ய­தாக சுட்­டிக்­காட்­டினார்.

எனினும் சட்ட மா அதிபர் சார்பில் ஆஜ­ரா­கி­யி­ருந்த பிரதி சொலி­சிட்டர் ஜெனரால் சுதர்­ஷன டி சில்வா, சில ஆவ­ணங்­களை வழங்க முடி­யாது என்­பதில் உறு­தி­யாக இருந்­த­துடன் அறி­வியல் ரீதி­யி­லான சான்­று­க­ளாக கரு­தப்­படும் தொலை­பேசி அழைப்பு விப­ரங்கள் அடங்­கிய அறிக்­கையை தற்­போது நீதி­மன்ற தலை­யீட்­டுடன் தொலை­பேசி சேவை வழங்­கு­நர்­க­ளிடம் இருந்து பெற்று விசா­ரணை நிலைமை ஒன்றின் போதான செயற்­பாடு­களை முன்­னெ­டுக்­கவும் எதிர்ப்பு வெளி­யிட்டார்.
இவ்­வா­றான நிலை­யி­லேயே இது தொடர்பில் நீதிமன்றம் எதிர்வரும் 2022 ஜனவரி 7 ஆம் திகதி தனது தீர்மானத்தை அறிவிக்க உள்ளது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.