மாண்டவர் புகழ்பாடினால் வாழ்பவர் பிரச்சினைகள் தீருமா?

0 556

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

முன்னோர் வகுத்தவழி முறைப்படியே
வாழுவது நன்மை தரும் என்று சொல
நான் அங்கே மறைந்துவிட்டேன்
– கவிஞர் அப்துல் காதர் லெப்பை
சொந்தக் கோடரி தான் கொண்டு
சுயமே வெட்டுன் பாதைதனை
முந்திச் சென்றோர் அடிமீது
முனைந்து நடத்தல் பாபமதாம்
–அல்லாமா இக்பால்
செப்டெம்பர், இலங்கை முஸ்லிம் காங்­கி­ரஸின் ஸ்தாபகர் அஷ்ரப் அவர்­களின் புகழ்­பாடும் மாதம். இப்­பா­டலின் வரிகள் வெவ்­வே­றா­னாலும் அதன் ராகம் ஒன்­றுதான். அதா­வது அவர் திறந்த அர­சியல் பாதை வழி­யேதான் வாழ்­ப­வர்­களும் வாழப்­போ­கி­ற­வர்­களும் நடந்­து­செல்ல வேண்டும் என்­ப­தாகும். இந்தச் சிந்­த­னை­யைப்­பற்றிச் சில கருத்­துக்­களை முன்­வைப்­பதே இக்­கட்­டு­ரையின் நோக்கம்.

மர்ஹூம் அஷ்ரப் அவர்­களை என்னால் மறக்­க­மு­டி­யாது. அவர் எனது தந்தை கவிஞர் அப்துல் காதர் லெப்­பையின் அர­சியற் சிந்­தனை தோற்­று­வித்த ஒரு தலைவன். என் தந்தை இரு­தய நோயினால் பீடிக்­கப்­பட்டுப் போராடிக் கொண்­டி­ருக்­கை­யிலே அடிக்­கடி மாத்­த­ளைக்குச் சென்று அவரைக் கவ­னித்து, அவர் மர­ணித்­த­ போது நான் உட­னி­ருந்து செய்ய வேண்­டிய கட­மைகள் யாவற்­றையும் அவ­ரது பெறா­மகன் ஆப்­தீ­னுடன் சேர்ந்து கவ­னித்த அந்தப் பெரு­ம­கனை நன்­றி­யு­ணர்­வுடன் சதா நினை­வு­ப­டுத்­திக்­கொண்டே வாழ்­கிறேன். ”எந்­நன்றி கொன்­றார்க்கும் உய்­வுண்டாம் உய்­வில்லை செய்­நன்றி கொன்ற மகர்க்கு” என்­ப­தற்­கொப்ப அஷ்­ரபின் நினைவு என்றும் என்னில் நிலைத்­தி­ருக்கும். ஆனாலும் அவர் வகுத்த அர­சி­யற்­ப­ாதையில் ஓர் அடி­கூட எடுத்­து­வைக்க நான் விரும்­ப­வில்லை. அந்தப் பாதையே இன்று வாழும் இலங்கை முஸ்­லிம்­களின் நெருக்­க­டி­யான நிலை­மைக்கு முக்­கிய காரணம் என்­ப­தையும் அந்தப் பாதையை விட்டும் வில­கி­னா­லன்றி முஸ்­லிம்­களின் எதிர்­கால சபீட்சம் ஒரு கேள்­விக்­கு­றி­யா­கவே இருக்கும் என்­ப­தையும் நான் பல சந்­தர்ப்­பங்­களில் வலி­யு­றுத்­தி­யுள்ளேன். அவ­ரு­டைய புகழ்­பாடும் இந்தச் சூழ­லிலும் அதையே மீண்டும் இக்­கட்­டுரை தெளிவு­ப­டுத்த விரும்­பு­கி­றது.

அஷ்ரப் வளர்த்த ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்­கிரஸ் என்னும் அர­சியல் மரத்தின் விதை நடப்­பட்­டது கிழக்கு மாகா­ணத்தின் கல்­மு­னையில் அல்ல, மத்­திய மாகா­ணத்தின் மாத்­த­ளையில். அதனை விதைத்த ஐவரும் இன்று உயி­ருடன் இல்லை. என் தந்தை, அஷ்ரப், அவரின் மாமா மாவட்ட நீதி­பதி ஹுஸைன், கவி­ஞரின் பெறா­மகன் ஆப்தீன், அவரின் மனைவி பரீதா ஆகி­யோரே அவ்வனை­வரும். மாவட்ட நீதி­பதி என் தந்­தையின் சிந்­தனைத் தோழன். அவர்­க­ளது தோழமை பது­ளையில் ஆரம்­ப­மாகி குருத்­த­லா­வ ­வரை சென்று மாத்­த­ளை­யிலே பூர்த்­தி­யா­னது. அப்­போது வாலிபன் அஷ்ரப் சட்­டக்­கல்­லூரி மாண­வ­ரா­கவும் திரு­மணச் சந்­தையில் விலை­பெறக் காத்­தி­ருப்­ப­வ­ரா­கவும் இருந்தார்.

அது ஜெய­வர்­த­னவின் ஆட்­சிக்­காலம். அவர் கொண்­டு­வந்த அர­சியல் யாப்பு சிறு­பான்மை இனங்கள், அதிலும் குறிப்­பாக முஸ்­லிம்கள், தமது வாக்குப் பலத்தால் அர­சியல் கட்­சி­க­ளுடன் பேரம்­பேசும் நிலை­மையை அகற்றும் நோக்­கு­டனும் அதே சமயம் லங்கா சம­ச­மாஜக் கட்சி, பொது­வு­டமைக் கட்சி போன்ற இடது சாரி­களின் செல்­வாக்கை முறி­ய­டிக்கும் நோக்­கு­டனும் அறி­மு­கப்­ப­டுத்­தப்­பட்ட ஒரு யாப்பு. இந்த யாப்பின் தந்­தி­ரத்தை முறி­ய­டிக்க ஒரே வழி முஸ்­லிம்கள் ஒரே குடை­யின்கீழ் ஒன்று திரள்­வ­துதான் என்று நினைத்­த­வர்­களே கவி­ஞரும் மாவட்ட நீதி­ப­தியும். இவர்கள் இரு­வ­ரி­னதும் முடி­வுக்கு முன்­னு­தா­ர­ண­மாக விளங்­கி­யது முகம்­ம­தலி ஜின்­னாவின் இந்­திய முஸ்லிம் லீக் கட்­சியும் அதன் பாக்­கிஸ்தான் போராட்­டத்தின் வெற்­றியும். அப்­போ­ராட்­டத்தின் சம­கா­லத்­த­வர்கள் இவ்­விரு சிந்­த­னை­யா­ளர்­களும். ஜின்­னா­வைப்­போன்று சட்­டத்­தையே ஆயு­த­மாகக் கொண்டு முஸ்­லிம்­களை ஒரே கட்­சியின் கீழ் திரட்­டக்­கூ­டிய ஒரு தலைவன் இலங்­கை­யிலும் உரு­வாக வேண்­டு­மெனக் கனவு கண்­டனர். அந்தக் கன­விலே தோன்­றி­ய­வரே அஷ்ரப்.

அப்­பொ­ழுது நான் அவுஸ்­தி­ரே­லி­யா­வுக்கு வந்­து­விட்டேன். என் வரு­கையின் பின்­ன­ணியும் அர­சி­யலே. அதை இங்கே விப­ரிக்கத் தேவை­யில்லை. முஸ்­லிம்­க­ளுக்­கென ஒரு தனிப்­பட்ட அர­சியற் கட்சி வேண்டும் என்ற கருத்­தையும் அதற்குப் பொருத்­த­மான தலைவன் அஷ்ரப் என்­ப­தையும் கடிதம் மூலம் என்­தந்தை எழு­தி­யி­ருந்தார். அந்தக் கருத்தை எனது பதில் மூலம் அன்றே நிரா­க­ரித்ேதன். என் தந்­தையும் மாவட்ட நீதி­ப­தியும் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்குள் ஒரு ஜின்­னாவைத் தேட நானோ ஓர் அபுல்­கலாம் ஆஸாத்­தையோ இன்னும் ஒரு பதி­யுதீ­னையோ தேடினேன். இன்றும் தேடு­கிறேன். எனது பிர­தி­வா­தமோ இதுதான்: இந்­தி­யா­வைப்­போன்று இலங்­கை­யிலும் முஸ்­லிம்கள் நாடெங்­கிலும் பரந்து வாழ்­கின்­றனர். ஆனால் செறி­வாகச் சில மாகா­ணங்­க­ளிலும் சித­ற­லாகப் பல­மா­கா­ணங்­க­ளிலும் வாழ்­கின்­றனர். இந்­தி­யாவில் முஸ்­லிம்கள் செறி­வாக வாழ்ந்த மாகா­ணங்­களின் பலத்­தினால் வென்­றெ­டுக்­கப்­பட்­டதே பாக்­கிஸ்தான். அதன் விளை­வாகச் சித­ற­லாக வாழ்ந்த சுமார் 120 கோடி முஸ்­லிம்கள் அனா­த­ர­வாக்­கப்­பட்டு இந்­துத்­து­வ­வா­தி­களின் இன்­னல்­களால் இன்று இந்­தி­யாவில் நசுக்­கப்­ப­டு­கி­றார்கள். அதே­போன்று இலங்­கை­யிலே கிழக்கு மாகாண முஸ்­லிம்­களின் பலத்தைக் கொண்டு உரு­வாகும் ஒரு தலைமை எவ்­வாறு ஏனைய மாகா­ணங்­க­ளிலே சித­றுண்­டு­வாழும் முஸ்­லிம்­களின் நலனைப் பாது­காக்கும் என்­பதே எனது பிர­தி­வாதம். அதை நான் வெளிப்­ப­டுத்­தி­யபின் தந்தை எனக்கு எழு­திய ஒரு கடி­தத்தில், ”நீயும் அஷ்­ரபும் இரு துரு­வங்­களில் நிற்­கி­றீர்கள்” எனக் குறிப்­பிட்­டபின் அவ்­வி­ட­யம்­பற்றி எழு­து­வதை நிறுத்திக் கொண்டார். எனது வாழ்க்­கை­யி­லேயே என் தந்­தை­யுடன் நான் முரண்­பட்­டது இந்த ஒரு விட­யத்­தி­லேதான்.

இன்­றுள்ள முஸ்லிம் காங்­கி­ரசின் ஆத­ர­வா­ளர்கள் பலர் அன்று விடு­தலைப் புலி­களால் ஏற்­பட்ட ஆபத்­து­க­ளி­லி­ருந்து முஸ்­லிம்­களைக் காப்­பாற்ற அந்தக் கட்­சியே ஒரே பரி­கா­ர­மாக இருந்­தது என்றும் இன்­றைய தலை­மைப்­பீடம் கட்­சியைச் சீர­ழித்­து­விட்­டது என்றும் எனவே அதனைச் சீர்­ப­டுத்தி திற­மை­யுள்ள ஒரு தலை­மைத்­துவத்­தின்கீழ் கொண்­டு­வர வேண்­டு­மென்றும் வாதா­டு­கின்­றனர்.

விடு­த­லைப்­பு­லிகள் முஸ்­லிம்­களை வேட்­டை­யா­டி­யது உண்­மையே. ஆனால் புலி­களின் பலத்தைக் கண்டு விரண்ட தமிழ் முஸ்லிம் தலை­வர்கள் அவ்­வி­யக்­கத்தின் போராட்டம் என்­றுமே வெற்­றி­பெ­றாது என்­பதை ஏனோ உண­ரத்­த­வ­றி­விட்­டனர். அதற்­கு­ரிய கார­ணங்­களை லண்­ட­னி­லி­ருந்து வெளிவந்த Tamil Times என்ற சஞ்­சி­கையில் 1986ல் நான் சுட்­டிக்­காட்டி இருந்தேன். தமிழ் நாடு தனி நாடா­கா­த­வரை தமி­ழீழம் வர­மு­டி­யாது என்­பதே அக்­கா­ர­ணங்­களின் சுருக்கம். அதை உணர்ந்­தி­ருந்தால் தனிப்­பட்ட ஒரு கட்­சியை அமைக்­காது இலங்கை அர­சுடன் இணைந்து தமிழ் முஸ்லிம் தலை­வர்கள் மாற்று வழி­யொன்றைக் கையாண்­டி­ருக்­கலாம். புலி­க­ளுக்கும் அதைப் புரி­ய­வைத்­தி­ருக்­கலாம். இப்­போது இது நடந்து முடிந்த கதை. அதைப்­பற்றி மேலும் விப­ரிக்க வேண்­டிய அவ­சி­ய­மில்லை.

ஆனால் புலி­க­ளி­னா­லேதான் முஸ்லிம் காங்­கிரஸ் உரு­வா­க­வேண்டி இருந்­தது என்று கூறினால் புலிகள் ஒழிந்­த­போதும் ஏன் இக்­கட்சி இன்னும் இயங்­கு­கி­றது? ஏனெனில், இஸ்லாம், முஸ்லிம் என்ற கோஷங்­களை எழுப்பி, வாக்­கா­ளர்­களை ஏமாற்றி, தலை­வர்­க­ளாகிச் செல்­வந்­தர்­க­ளா­கலாம் என்ற சுய­லாப நோக்கு. அதைத்­தானே இன்­றுள்ள காங்­கிரஸ் அர­சி­யல்­வா­திகள் செய்­துள்­ளனர்? முஸ்­லிம்­க­ளுக்­கெனத் தனிக்­கட்­சி­யொன்றை அமைக்­காமல் அன்­றைய முஸ்லிம் தலை­வர்கள் சிலர் சாதித்­ததில் ஒரு சத­வீ­தத்­தை­யேனும் இவர்­களால் சாதிக்க முடிந்ததா? இல்லை­யென்றால் ஏன் இந்த ஏமாற்று வித்தை?

இத­னி­டையே, இன்­றைய முஸ்லிம் தலை­வர்­கள்மேல் அதி­ருப்­தி­கொண்டு அரும்­பு­கின்ற ஓர் இளைய தலை­முறை அஷ்­ரபின் புகழ்­பா­டிக்­கொண்டு அவர்­காட்­டிய வழியில் கட்­சியைச் சீர­மைப்போம் என்று கூறி இன்­னொரு கட்­சி­யையும் அமைக்கப் போவ­தாக வதந்­திகள் உலா­வு­கின்­றன. ஒரே குட்­டையில் ஊற இன்­னு­மொரு மட்­டையா? இது முஸ்­லிம்­களை இந்­நாட்டின் நிரந்­தர எதி­ரிகள் என்று பெரும்­பான்மை மக்­க­ளி­டையே பரப்ப விளையும் முட்­டாள்­தனம்.

இன்று முஸ்­லிம்கள் எதிர்­நோக்கும் பிரச்­சி­னை­களோ அனந்தம். அவற்றுள் எதை­யுமே முஸ்­லிம்கள் தனித்­து­நின்று போராடித் தீர்க்க முடி­யாது. பெரும்­பான்மை இனத்­துடன் சேராமல் சிறு­பான்மை இனங்கள் எதுவும் எதையும் வென்­றெ­டுக்க முடி­யாது. இதனைத் தமி­ழர்­களும் உண­ர­வேண்டும். ஆனால் இன்­றுள்ள ஆளும் கூட்­ட­ணிதான் சிங்­கள பௌத்த பேரி­ன­வாதத்தை வளர்க்கும் அணி­யென்றால் அக்­கூட்­ட­ணியை எதிர்க்கும் கட்­சி­களும் அத­னையே ஒரு துரும்­பாகப் பாவித்து ஆட்­சியைப் பிடிக்க முனை­கின்­றன. ஆகவே அவர்­க­ளி­டமும் இன்­றைய பிரச்­சி­னை­களைத் தீர்க்கப் பரி­காரம் இல்லை. அதே­வேளை, பெரும்­பான்மை மக்­க­ளெல்­லா­ருமே பேரி­ன­வா­திகள் அல்லர் என்ற உண்­மை­யையும் சிறு­பான்மை இனங்கள் உண­ர­வேண்டும்.

சிங்­கள பௌத்த மக்கள் சகிப்புத் தன்­மையும் தாரா­ள­ம­னமும் விருந்­தோம்பும் குணமும் எவ­ரு­டனும் சர­ள­மாகப் பேசிப்­ப­ழகும் பண்பும் உள்­ள­வர்கள். அதை இலங்­கையின் பண்­டைய வர­லாறு அழ­காகத் தெளிவு­ப­டுத்­து­கி­றது. அந்தப் பண்­புகள் அவர்­க­ளிடம் இல்­லா­தி­ருந்­தி­ருந்தால் முஸ்­லிம்கள் இந்­நாட்டில் குடி­கொண்­டி­ருக்க முடி­யுமா? முஸ்லிம் சிறு­பான்­மை­யி­னரை பௌத்த சிங்­கள மன்­னர்கள் ஆத­ரித்­த­வாறு வேறு எந்த நாட்­டிலும் எந்த அர­சனும் ஆத­ரித்­த­தில்லை என்­பதை அடிக்­கோ­டிட்டு எழு­தலாம். அந்தப் பண்­பு­களைத் திட்­ட­மிட்டுச் சீர்­கு­லைத்­த­வர்கள் அவர்­க­ளி­டையே உரு­வா­கிய அர­சி­யல்­வா­தி­களும் அந்த அர­சி­யல்­வா­தி­க­ளுக்குப் பின்னால் இயங்­கிய தீய சக்­தி­க­ளுமே. எழு­பது வரு­டங்­க­ளுக்கும் மேலான சுதந்­திர இலங்­கையின் சீர­ழிவு இந்தச் சீர்­கு­லை­வினால் ஏற்­பட்­டதை இன்று அந்த மக்­களே உணர்­கின்­றனர். அந்த மக்­க­ளி­டையே இப்­போது உரு­வா­கி­யுள்ள சிவில் இயக்­கங்கள் பலவும் புத்­தி­ஜீ­வி­களும் மதத் தலை­வர்கள் பலரும் இதனை உணர்ந்து பெரும்­பான்மை மக்­க­ளுக்கு யதார்த்­தத்தைப் புரி­ய­வைக்கப் பாடு­ப­டு­கின்­றனர். அவர்­க­ளுக்குக் கைகொ­டுத்து உதவி அவர்­க­ளுடன் சேர­வேண்­டி­யது முஸ்லிம் சிவில் இயக்­கங்­க­ளி­னதும் புத்­தி­ஜீ­வி­க­ளி­னதும் தலை­யாய கடமை. அதை­வி­டுத்து மாண்­ட­வர்­களின் புகழ்­பா­டிக்­கொண்டு உருப்­ப­டி­யான ஒரு செயற்­திட்­டமும் இல்­லாமல் முஸ்லிம்களை ஏமாற்ற முயலும் பச்சோந்திகளை முஸ்லிம்கள் ஒதுக்க வேண்டும்.

அஷ்ரப் மறைந்துவிட்டார். அவர் வாழ்ந்த சூழல் வேறு, இன்றுள்ள சூழல் வேறு. இன்றுள்ள இனவாதம் பேசும் எல்லாக் கட்சிகளுமே இந்த நாட்டினதும் அதன் பல்லின அமைப்பினதும் எதிரிகளே. துவேஷத்தினால் ஆட்சிபீடம் ஏறியவர்கள் சிறுபான்மை இனங்களைப் பலிக்கடாக்களாக்கி தொடர்ந்தும் நாட்டைச் சூறை­யா­டு­வதை சிங்­கள பௌத்த மக்­களே இப்­போது உணரத் தொடங்­கி­விட்­டனர். கொள்ளை நோயையும் பொருட்­ப­டுத்­தாது அவர்கள் போராட்­டத்தில் இறங்கி விட்­டனர். நாட்டை இப்­போது முடக்கி அவ­ச­ர­காலச் சட்­டத்­தையும் பிறப்­பித்­தி­ருப்­பது அந்தப் போராட்டங்­களைத் தடுப்­ப­தற்­கா­கவே. நாடு திற­பட்­டதும் போராட்­டங்கள் மீண்டும் தொடரும். முஸ்­லிம்­களும் தமி­ழர்­களும் அவர்­க­ளுடன் இணைந்­து­போ­ராடும் சந்­தர்ப்பம் இது. முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை இதை­விடச் சிறந்த வழி வேறில்லை. அஷ்­ரபின் பெயரைச் சொல்­லிக்­கொண்டும் முஸ்லிம் கட்­சி­களைக் கட்­டிப்­பி­டித்­துக்­கொண்டும் கூத்­தா­டு­வது முஸ்லிம் சமூகத்தையே புதை குழிக்குள் தள்ளிவிடும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.