கிழக்கே கொந்தளிக்கும் இனவாதம்: சில நினைவுகளும் சிந்தனைகளும்

0 712

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

கிழக்­கி­லங்­கையில் முஸ்லிம் தமிழர் இன­வாதம் திட்­ட­மிட்டு வளர்க்­கப்­ப­டு­கின்­றது. அதிலும் குறிப்­பாக, மட்­டக்­க­ளப்பு, அம்­பாறை ஆகிய இரு மாவட்­டங்­களும் இவ்­ இ­ன­வா­தத்தின் மையங்­க­ளாக விளங்­கு­கின்­றன. இந்த இன­வாதம் எப்­படி யாரால் எப்­போது உரு­வாக்­கப்­பட்­டது? இது புரை­யோ­டிய ஒரு புண்ணா அல்­லது அண்­மையில் ஏற்­பட்ட சிரங்கா? இதை எவ்­வாறு சுகப்­ப­டுத்­தலாம்? என்­ப­ன­போன்ற கேள்­வி­க­ளுக்கு விடை ­காண்­பதே இக்­கட்­டுரை.

குருக்­கள்­மடக் கோயில்
சுமார் நான்கு அல்­லது ஐந்து வரு­டங்­க­ளுக்கு முன்னர் நான் இலங்கை வந்­தி­ருந்­த­போது என் நண்பர் ஒரு­வ­ருடன் குருக்­கள்­ம­டத்­தி­லுள்ள ஓர் இந்துக் கோயி­லுக்குச் சென்றேன். அக்­கோ­யி­லினுள் தலையில் தலைப்பாய் அல்­லது தொப்­பி­ய­ணிந்­த­வாறு செதுக்­கப்­பட்ட கற்­சிலை ஒன்று நடுக்­கோ­யி­லுக்­குள்ளே இருந்­த­தைக்­கண்டு அதைப்­பற்றி வின­வினேன். அது பட்­டா­ணியர் சிலை­யென்றும் பட்­டா­ணி­ய­ருக்­காகப் பூசை வரு­டா­வ­ருடம் நடை­பெ­று­வ­தா­கவும் அறிந்தேன். யார் அந்தப் பட்­டா­ணியர் என்று ஆராயத் தொடங்­கி­ய­போது அவர்கள் முன்­னொரு காலத்தில் திமி­ல­ருக்கும் முக்­கு­வ­ருக்­கு­மி­டையே ஏற்­பட்ட சண்­டை­யொன்றில் முக்­குவர் சார்­பாக நின்று போர்­பு­ரிந்த முஸ்­லிம்கள் என்றும் அவர்­க­ளுக்கு நன்றி பாராட்டும் முக­மாக மட்­டக்­க­ளப்­புக்குத் தெற்­கே­யுள்ள பல கோயில்­களில் அவ்­வா­றான பூசை நடை­பெ­று­வ­தென்றும் அறிந்து வியந்தேன். இந்த வர­லாறு எந்த அள­வுக்கு அங்­குள்ள தமி­ழ­ருக்கும் முஸ்­லிம்­க­ளுக்­கு­மி­டையே நேசமும் பாசமும் ஒரு காலத்தில் இருந்­துள்­ள­தென்­பதை வெளிப்­ப­டுத்­த­வில்­லையா? இன்றும் காத்­தான்­குடி முஸ்­லிம்­க­ளி­டையே நிலவும் குடி­முறை முக்­கு­வர்­க­ளி­டையே இருந்து வந்­தது என்­பதை கன­க­ரத்­தின முத­லி­யார் தனது நூலில் விளக்­கி­யுள்ளார். இக்­கு­டி­முறை தாய்­வ­ழி­யாக வளர்ந்­துள்­ளது என்­பதை நோக்­கும்­போது பண்டை நாட்­களில் முஸ்­லிம்கள் முக்­குவப் பெண்­க­ளையும் திரு­மணம் செய்­தி­ருப்பர் என்­ப­தையும் நிரா­க­ரிக்க முடி­யுமா? எனவே இன­வாதம் என்ற புண் அண்­மைக்­கா­லத்தில் ஏற்­பட்­ட­தொன்றே என்­பதை ஏற்­றே­யாக வேண்டும். அதை நிரூ­பிப்­ப­தாக அமைந்­தது நான் இரண்டு வரு­டங்கள் கழித்து மீண்டும் ஒரு­முறை அதே கோயி­லுக்குச் சென்­ற­போது அந்தச் சிலையைக் காண­மு­டி­யா­மற்­போ­னமை. இந்­துத்­து­வ­வா­திகள் அதனை அகற்­றி­விட்­டனர் என்று ஒருவர் கூறக்­கேட்டுக் கவ­லை­யுற்றேன்.

நான் கண்ட தேர்தல் கல­வரம்
நான் பிறந்­தது மட்­டக்­க­ளப்பு மாவட்­டத்தில் நூற்­றுக்கு நூறு வீதம் முஸ்­லிம்கள் வாழ்­கின்ற காத்­தான்­கு­டியில். அந்த ஊருக்குத் தெற்கே ஆரை­யம்­ப­தியும் வடக்கே பூனொச்­சி­முனை, கல்­லடி ஆகிய கிரா­மங்­களும் தமிழர் அடர்த்­தியாய் வாழு­மி­டங்கள். இலங்கை சுதந்­திரம் அடைந்­த­போது எனக்கு வயது எட்டு. அதனால் 1947இல் நடை­பெற்ற முத­லா­வது நாடா­ளு­மன்றத் தேர்தலைப்­பற்­றிய ஞாப­கங்கள் சற்­றேனும் எனக்குக் கிடை­யாது. இரண்­டா­வது தேர்தல் 1952இல் நடை­பெற்­ற­போது எனக்கு வயது பன்­னி­ரண்டு. அந்தத் தேர்தலின்­போ­துதான் தமிழர் முஸ்லிம் இன­வா­தத்தின் கோர­வ­டிவை நேரிற் கண்டேன். அந்தத் தேர்தல் இரு அங்­கத்­த­வர்­க­ளுக்­கி­டை­யி­லான நேரடிப் போட்டி. ஒருவர் முஸ்லிம், மற்­றவர் தமிழர். ஐக்­கிய தேசியக் கட்­சியில் போட்­டி­யிட்­டவர் முஸ்லிம். சுயேச்­சை­யாகப் போட்­டி­யிட்டு வென்­றவர் தமிழர். தேர்தல் பிர­சாரம் களை­கட்டி இருந்த வேளையில் முஸ்­லிம்­க­ளைப் ­பற்­றிய அவ­தூ­றுகள் தமிழர் மத்­தி­யிலும் தமி­ழ­ரைப்­ பற்­றிய இழிவு சிறப்­புகள் முஸ்­லிம்கள் மத்­தி­யிலும் தாரா­ள­மாக அவிழ்த்து விடப்­பட்­டி­ருந்­தன. இனக்­க­சப்பு விரை­வாகப் பர­வி­யது. அதன் விளை­வாக ஒரு நாள் சாயந்­தரம் நான்கு மணி இருக்கும், காத்­தான்­கு­டியின் சின்­ன­பள்­ளி­வா­சலில் இருந்து ஆரை­யம்­ப­தியை நோக்கி சுமார் ஐம்­பது யார் தூரத்தில் நடுத்­த­ர­வ­யது நிரம்­பிய முஸ்­லிம்­களின் ஒரு கூட்டம் திரண்­டி­ருந்­தது. அதி­லி­ருந்து மேலும் சுமார் நூறு யார் தூரத்தில் ஆரை­யம்­ப­தியின் பொன்­னையா அண்­ணனின் பேக்­கரிக் கடை­யொன்றின் முன்னே தமிழர் கூட்டம் ஒன்றும் திரண்டு நின்­றது. இரு கும்­பல்­களும் ஒன்­றை­யொன்று நோக்கித் தூஷணத் திரு­வா­சகம் பாடத் தொடங்­கினர். நானும் என்­னோடு விளை­யா­டித்­தி­ரிந்த என்­வ­யது நண்­பர்­களும் சின்­னப்­பள்­ளி­வாசல் முன்­றலில் நின்று வேடிக்கை பார்த்தோம். அங்­கேதான் நாங்கள் தினந்­தினம் கூடி விளை­யா­டு­வது வழக்கம். இளங்­கன்­றுகள் நாங்கள். எங்­க­ளுக்­கேது பயம்?

விரைவில் அங்கே நடை­பெ­ற­வி­ருந்த கற்­போ­ருக்கு உத­வு­வ­து ­போன்று அர­சாங்­கத்தின் பொது வேலைத் திணைக்­க­ளமும் வீதி திருத்தும் நோக்கில் பாறாங்­கற்­களை ஏற்­க­னவே வீதி­யோ­ரத்தில் சின்­னப்­பள்­ளி­யின் ­முன்பு குவித்­தி­ருந்­தது. அதே­போன்று ஆரை­யம்­ப­திக்­க­ரு­கேயும் ஒரு குவியல் கிடந்­தது. முஸ்லிம் கும்­ப­லுக்குள் நின்ற எனக்கு நன்­றாகத் தெரிந்த ஒருவர், அவர் என் உற­வி­ன­ருங்­கூட, “எடுங்­கடா கல்லை! எறிங்­கடா அந்த நாய்­க­ளுக்­கு”, என்ற மந்­தி­ரத்­துடன் வீசி­னார் ஒரு கல்லை. திரு­வா­சகம் பாடிச் சொல் மழையில் நனைந்த இரு­கூட்­டங்­களும் சற்று நேரத்தில் கல்­ம­ழையிற் காய­மு­ற­லா­யின. அந்தச் சூழலில் ஒரு தமிழ் நடுத்­தர வய­தினன் அரு­கா­மை­யி­லி­ருந்த ஒரு முஸ்­லிமின் வீட்டுக் கூரை­மீ­தேறி ஓட்­டைப்­பி­ரித்து உள்ளே குதிக்க முயன்றான். அதைக் கண்­ணுற்ற ஒரு முஸ்லிம் கடைக்­காரன் அவ­னு­டைய துப்­பாக்­கியால் அந்த வாலி­பனின் கால்­களை நோக்கிச் சுட்டுக் காயப்­ப­டுத்த, அவன் உருண்டு புரண்டு வீதியில் விழுந்தான். அவ­னது நல்ல நேரம், சாக­வில்லை.

இதற்­கி­டையே இக்­க­ல­வரம் வெடித்த செய்தி எப்­ப­டியோ மட்­டு­நகர் காவல் துறை­யி­ன­ருக்கு எட்­டி­யதால் அங்­கி­ருந்து கல­வ­ரக்­களம் நோக்கி விரைந்­தது காவற் படை. சுமார் பத்து நிமி­டங்­க­ளுக்குள் அவர்கள் அங்கே வந்து தடி­யடிப் பிர­யோகம் செய்தும் வானை நோக்கி வெடி­வைத்தும் கும்­பல்­களைக் கலைத்­தனர். யாரை­யா­வது கைது­செய்­தார்­களா என்­பது எனக்கு இப்­போது ஞாப­க­மில்லை. ஆனால் கலகம் அடங்­கி­யது. புதினம் பார்த்து நின்ற நாங்­களும் புதினம் முடிந்­து­விட்­டதே என்ற ஏமாற்­றத்­துடன் வீடு திரும்­பினோம். அதனைத் தொடர்ந்து அன்­றி­ரவு மட்­டு­ந­க­ரிலும் ஆரை­யம்­ப­தி­யிலும் முஸ்லிம் வியா­பாரத் தலங்கள் தமிழர்­களால் நொறுக்­கப்­பட்­ட­தா­கவும், பொருட்கள் கொள்­ளை­ய­டிக்­கப்­பட்­ட­தா­கவும் அதனை தமிழர் நிரம்­பிய காவல் துறை தடுக்­க­வில்லை எனவும் மறுநாள் காலை செய்­திகள் காத்­தான்­கு­டியை வந்­த­டைந்­தன. அவை என் ஞாப­கத்தில் இன்னும் அழி­யா­தி­ருக்­கின்­றன. அதன்பின் தொட­ரப்­பட்ட வழக்­குகள் அதன் முடி­வுகள் யாவற்­றை­யும் ­பற்றி அறிய விரும்­புவோர் அன்­றைய பத்­தி­ரி­கை­களை நாடலாம்.

இனவா­தத்தின் ஆரம்பம்
சுமார் இரண்டு மணித்­தி­யா­லங்­க­ளுக்குள் நடந்து முடிந்த அந்தக் கல­வ­ரத்தின் எதி­ரொ­லி­யாகத் தமி­ழ­ருக்­கெ­தி­ரான வன்­முறைச் சம்­ப­வங்கள் முஸ்­லிம்­களால் கல்­மு­னை­யிலும் சம்­மாந்­து­றை­யிலும் நிந்­த­வூ­ரிலும் அவிழ்த்து விடப்­பட்­ட­தாக அப்­போது காத்­தான்­குடி மத்­திய கல்­லூ­ரியில் என்­னுடன் கல்வி பயின்ற அவ்வூர் மாணவ நண்­பர்­க­ளி­ட­மி­ருந்து அறிந்தேன். சுமார் எழு­பது வரு­டங்­களின் பின்னர் அப்­போது நடந்­த­வற்றை மீட்டுப் பார்க்­கையில் அந்தக் கல­வ­ரமே கிழக்­கி­லங்­கையில் தமிழர் முஸ்லிம் இன­வாதம் வளர்­வ­தற்கு வித்­திட்­டது என்­பதை உணர்­கிறேன். அதன்பின் கிழக்­கிலே நடை­பெற்ற தேர்தல் போட்­டி­களில் தமி­ழர் -­முஸ்லிம் இன­வா­தமே அடிக்­கோ­டாக விளங்­கி­ய­தெனக் கூறுதல் பொருந்தும். அந்த இன­வா­தத்தை வளர்க்கும் ஒரு கரு­வி­யாக விளங்­கி­யது இலங்கைத் தமி­ழ­ரசுக் கட்­சியின் ஆர்ப்­பாட்­டங்­களும் பிர­சா­ரங்­களும்.

1952 தேர்தலில் தமி­ழ­ரசுக் கட்சி மொத்தம் இரண்டு ஆச­னங்­க­ளையே கைப்­பற்­றி­யது. அவை இரண்டும் வடக்­கி­லே­யே­யன்றிக் கிழக்கில் இல்லை. அதன் பிற­குதான் அக்­கட்சி கிழக்கை நோக்கிப் படை­யெ­டுத்து 1956ஆம் வருடத் தேர்தலில் மட்­டக்­க­ளப்பு, கல்­முனை, திரு­கோ­ண­மலை, பொத்­துவில் ஆகிய நான்கு தொகு­தி­களை கிழக்­கிலே கைப்­பற்­றி­யது. இதில் வேடிக்கை என்­ன­வென்றால் கல்­மு­னை­யிலும் பொத்­து­வி­லிலும் அக்­கட்­சியின் ஆத­ரவில் வென்­ற­வர்கள் இரு முஸ்­லிம்கள். அவர்கள் பின்னர் அக்­கட்­சி­யை­விட்டும் விலகி ஆளும் கட்­சி­யுடன் இணைந்­ததால் முஸ்­லிம்கள் ”தொப்பி திருப்­பிகள்” என்ற ஓர் அவ­மா­னப்­பெ­யரும் தமிழ் மக்­க­ளி­டையே வள­ர­லா­யிற்று. மட்­டக்­க­ளப்பில் போட்­டி­யிட்ட காத்­தான்­கு­டியைச் சேர்ந்த முஸ்லிம் வேட்­பாளர் தோல்­வி­யுற்றார்.

இலங்­கை­யிலே தேர்தலுக்­காக ஒரு கட்­சியில் போட்­டி­யிட்டு வென்­றபின் அதி­லி­ருந்து பிரிந்து ஆளும் கட்­சி­யுடன் சேர்தல் என்­பது முஸ்­லிம்­க­ளுக்கு மட்­டுமே உரிய ஒரு பண்­பல்ல. சுய­நலன் தேடும் எல்லா அர­சி­யல்­வா­தி­க­ளுக்கும் சொந்­த­மான ஒரு பண்பு. ஆனால் கிழக்­கி­லங்­கையின் குடி­ச­னப்­ப­ரம்­பலை அறிந்­த­வர்­க­ளுக்கு 1956இல் கல்­மு­னை­யிலும் பொத்­து­வி­லிலும் நடை­பெற்ற மாற்­றங்கள் இரு இனங்­க­ளுக்­கி­டை­யேயும் எவ்­வா­றான ஒரு கசப்­பினை ஏற்­ப­டுத்­தி­யி­ருக்கும் என்­பதை ஓர­ளவு விளங்கிக் கொள்­ளலாம். அத்­துடன் முஸ்­லிம்­களின் தலை­மைத்­துவம் அக்­கா­லத்தில் மேல்­மா­கா­ணத்­திலே வளர்ந்­ததால் அத்­த­லை­மைத்­துவம் சிங்­கள முஸ்லிம் இன உற­வினை வளர்க்கப் பாடு­பட்­டதே ஒழிய தமிழர் முஸ்லிம் உற­வைப்­பற்றி எந்தக் கரி­ச­னையும் எடுக்­க­வில்லை. அத்­துடன் சிங்­கள தமிழ் உறவு விரி­வ­டை­வ­தற்கு தமி­ழ­ரசுக் கட்­சியே காரணம் என்று முஸ்லிம் தலை­மைத்­துவம் கரு­தி­யதால் கிழக்­கிலும் முஸ்­லிம்­க­ளி­டையே அக்­க­ருத்து வலு­வ­டையத் தொடங்­கிற்று. உதா­ர­ண­மாக, சீங்­கள ஸ்ரீ எழுத்துப் போராட்டம் ஆரம்­பித்­த­வேளை கல்­முனைத் தொகுதி முஸ்லிம் நாடா­ளு­மன்ற உறுப்­பினர் தமி­ழ­ர­சுக்­கட்­சியின் தமிழ் ஸ்ரீக்குப் பதி­லாக அர­பியில் ஸ்ரீ எழுதி வாக­னங்­களிற் பொறிக்­கு­மாறு தனது ஆத­ர­வா­ளர்­களை வேண்­டிக்­கொண்­டது என் ஞாப­கத்­துக்கு வரு­கி­றது. தமி­ழர்-­ முஸ்லிம் இன­வாதம் துளிர்­விட ஆரம்­பித்த காலம் அது.

குடி­சனப் பரம்­பலும் இன உறவும்
கிழக்­கி­லங்­கை­யிலே தமி­ழர்­களும் முஸ்­லிம்­களும் கிராமம் கிரா­ம­மாக எவ்­வாறு இணைந்­துள்­ளார்கள் என்­பதை “பிட்டும் தேங்­காய்ப்­பூவும்” என்ற உவ­மா­னத்தின் மூல­மாக விளக்­குவர். இந்த இணைப்­பினால் கிழக்கின் எல்லாத் தேர்தல் தொகு­தி­க­ளுக்­குள்ளும் இரு இன மக்­களும் அடங்­குவர். இப்­போது சில தொகு­தி­க­ளுக்குள் சிங்­கள இனமும் அடங்­கி­யுள்­ளமை அண்­மையில் ஏற்­பட்ட ஒரு மாற்றம். கிழக்­கி­லங்­கையின் இன­வாத வளர்ச்­சியில் சிங்­களக் குடி­யேற்ற ஊடு­ருவல் இன்று முன்­னிலை வகிக்­கி­றது. அது ஒரு புற­மி­ருக்க, குடி­சனப் பரம்­பலால் ஏற்­பட்ட இணைப்பு தமிழர் முஸ்லிம் உறவை ஒரு வியா­பா­ரிக்கும் வாடிக்­கை­யா­ள­னுக்கும் இடை­யே­யுள்ள உற­வாக மாற்­றி­ய­தே­யன்றி இரு சகோ­த­ரர்­க­ளுக்­கி­டை­யேயோ அல்­லது இரு நண்­பர்­க­ளுக்­கி­டை­யேயோ நிலவும் உற­வாக வளர்க்­க­வில்லை.

பிட்­டிலே இரண்டு வகை­யுண்டு. ஒன்று வண்டுப் பிட்டு, மற்­றது குழல் பிட்டு. வண்டுப் பிட்டில் மாவும் தேங்காய்ப் பூவும் இரண்­டறக் கலந்­தி­ருக்கும். ஆனால் குழல் பிட்­டுக்குள் மாவும் தேங்­காயும் அவற்றின் விளிம்­பு­க­ளி­லேதான் ஒட்டிக் கிடக்கும். முஸ்லிம் தமிழர் உறவு குழல் பிட்­டாக இருந்­த­தே­யன்றி வண்டுப் பிட்­டாக என்­றுமே இருந்­த­தில்லை. அவ்­வாறு இருப்­பதைத் தடுத்­தன இரு இனங்­களும் பின்­பற்­றிய மதங்­களும், 1952க்குப்பின் வளர்ந்த அவர்­களின் அர­சி­யலும்.

இனங்­க­ளுக்­கி­டையே நெருங்­கிய உறவு ஏற்­ப­டு­வ­தற்கு எவ்­வாறு அவ்­வி­னங்கள் பின்­பற்­றிய மதங்கள் ஒரு தடையாய் இருந்­தன என்­ப­தைப்­பற்றி விரி­வாக விளக்க இக்­கட்­டு­ரையின் நீளம் இடந்­த­ராது. சுருக்­க­மாக ஒரு வரி­யிலே கூறப்­போனால் எல்லா மதங்­களும் ஒரே மலையின் உச்­சி­யி­லி­ருந்து அரு­வி­க­ளாக ஊற்­றெ­டுத்து அவை பின்னர் வெவ்­வேறு நதி­க­ளாகி இறு­தியில் இறைவன் என்னும் சமுத்­தி­ரத்­துக்குள் சங்­க­ம­மா­கின்­றன என்ற உய­ரிய தத்­து­வத்தை எந்த மதத் தலை­வனும் அவன் வழி­காட்டும் மக்­க­ளுக்கு என்­றுமே உணர்த்­தி­ய­தில்லை. பொது­மேடைப் பிர­சங்­கங்­களில் மட்டும் எல்­லோ­ரையும் திருப்­திப்­ப­டுத்­து­வ­தற்­காக அதைக் கூறி அத்­துடன் திருப்­­தி­ய­டை­வானே ஒழிய அதைத் தனது பக்­தர்­க­ளிடம் தனிப்­பட்ட முறையில் என்­றுமே அவன் ஓது­வ­தில்லை. பல்­லின மக்கள் ஒன்­றோ­டொன்று உரசி வாழு­கின்ற ஒரு சமு­தா­யத்தில் மேடைப் பேச்­சோடு இத்­தத்­துவம் நின்­று­வி­டு­தலால் இனங்­களும் விளிம்பில் நின்­றுதான் உற­வா­டு­கின்­றன. இது ஒரு துர­திஷ்டம்.

அர­சியல் வளர்த்த இன உறவு
கிழக்­கி­லங்­கையில் இன­வாதம் பேசித் தேர்தலில் வென்று நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்த அர­சி­யல்­வா­திகள் ஒவ்­வொ­ரு­வரும் தமது தொகு­திக்குள் வாழ்ந்த மற்ற இனத்­துக்­காக அல்­லது அவ்­வினம் வாழும் கிரா­மத்தின் வளர்ச்­சிக்­காக எந்த முயற்­சியும் எடுக்­க­வில்லை. தனிப்­பட்ட முறையில் ஒரு முஸ்லிம் அங்­கத்­தவர் சில தமி­ழர்­க­ளுக்கும் அதே­போன்று ஒரு தமிழ் அங்­கத்­தவர் சில முஸ்­லிம்­க­ளுக்கும் உதவி இருந்­தாலும் இரு இனங்­க­ளி­னதும் சம­மான வளார்ச்­சிக்­காக எந்த அங்­கத்­த­வனும் பாடு­ப­ட­வில்லை. 1950களில் இருந்து வளர்க்­கப்­பட்ட இந்தப் பார­பட்சம் இந்த நூற்­றாண்டில் தீவி­ர­மாகப் பின்­பற்­றப்­ப­டு­கி­றது.

இந்தப் பார­பட்சப் போக்­கினால் நீண்­ட­கா­ல­மாக கிழக்­கிலே நட்­ட­ம­டைந்த சமூகம் தமிழர் சமூ­கமே. ஒரு பக்­கத்தில் தமி­ழரின் தலை­மைத்­துவம் சிங்­கள அர­சாங்­கங்­களை எதிர்த்தே நின்­றதும் மறு­பக்­கத்தில் அந்த எதிர்ப்பால் விளைந்த விரி­சலை முஸ்லிம் தலை­வர்கள் தமது இனத்­துக்குக் கிடைத்த ஒரு வரப்­பி­ர­சா­த­மாக நினைத்துச் செயற்­பட்­டதும் இந்த இழப்பை உண்­டாக்­கிற்று. முஸ்­லிம்கள் வாழும் பகு­திகள் கல்­வீ­டு­க­ளாலும் கடை வீதி­க­ளாலும் நிரம்பி மின்­சார விளக்­கு­க­ளு­டனும் குழாய் குடிநீர் வச­தி­க­ளு­டனும் பட்­ட­ணங்­க­ளாகக் காட்­சி­ய­ளிக்க, தமிழர் வாழ்ந்த பகு­தி­களோ பெரும்­பாலும் ஓலை வீடு­க­ளாலும் ஓரி­ரண்டு சில்­லறைக் கடை­க­ளாலும் ஏதோ இருளில் மூழ்­கிய பாழ­டைந்த பகு­தி­க­ளா­கவே நீண்ட கால­மாகக் காட்­சி­ய­ளித்­தன. அந்த நிலையை மேலும் சீர­ழித்­தது புலி­களின் தமி­ழீழப் போராட்டம். எனினும் கிழக்கின் சம­நி­லை­யற்ற வளர்ச்சி எவ்­வி­த­மான ஒரு மனோ­பா­வத்தை தமி­ழ­ரி­டையே தூண்டி இருக்கும் என்­பதை முஸ்லிம் தலை­வர்கள் அன்று நினைத்­துக்­கூடப் பார்க்­க­வில்லை. இது அவர்­களின் தூர­நோக்­கற்ற தலை­மைத்­து­வத்தின் ஒரு பிர­தான குறை­பாடு. அது மட்­டுமா?

மூலைக்குள் முடங்கும் முஸ்­லிம்கள்
இன்று கிழக்­கி­லங்கை முஸ்லிம் இனத்தை வாட்­டு­வது நிலப் பசி. இந்­தப்­ப­சியே இங்கு கொந்­த­ளிக்கும் இன­வா­தத்­துக்குத் தூண்­டு­த­லா­கவும் விளங்­கு­கி­றது. கிழக்கு மாகா­ணத்தில் சுமார் மூன்றில் ஒரு பகு­தி­யி­ன­ராக வாழும் முஸ்­லிம்கள் ஆக ஐந்து சத­வீத நிலப்­ப­ரப்­புக்­குள்­ளேதான் வாழ்­கின்­றனர். உண்­மை­யி­லேயே முஸ்லிம் சமூகம் ஒரு மூலைக்குள் முடங்கிக் கிடக்­கின்­றது. இருக்­கின்ற ஐந்து வீதத்­தை­யும்­கூட எப்­ப­டி­யா­யினும் குறைத்து முஸ்­லிம்­களை கிழக்கு மாகா­ணத்­தை­விட்டே விரட்­டி­ய­டிக்கும் நோக்­குடன் ஓர் இன­வாதத் தமிழ்த் தலை­மைத்­துவம் இப்­போது அங்கே உரு­வா­கி­யுள்­ளது. ஆனால் இந்த நிலப்­பற்­றாக்­கு­றையை கடந்த அரை நூற்­றாண்­டுக்கும் மேலாக நாடா­ளு­மன்­றத்தில் அங்­கத்­துவம் வகித்த எந்த கிழக்­கி­லங்கை முஸ்லிம் தலை­வ­னுமே உண­ரா­ததை என்­ன­வென்று கூறு­வதோ! எதிர்­கா­லத்­தைப்­பற்றி எந்தச் சிந்­த­னை­யு­மில்­லாத முட்­டாள்­களை தலை­வர்­க­ளாகத் தெரிந்­த­னுப்­பி­யது முஸ்­லிம்­கள்­தானே. ஆகவே வாக்­கா­ளர்­க­ளைத்தான் முதலில் குறை­கூற வேண்­டி­யுள்­ளது. பள்­ளி­வா­சல்­க­ளையும் மத­ர­சாக்­க­ளையும் கட்­டு­வ­திலும் தமக்கு ஆத­ர­வில்லா ஆசி­ரி­யர்­க­ளையும் அர­சாங்க உத்­தி­யோ­கத்­தர்­க­ளையும் இட­மாற்றம் செய்­வ­திலும் தமக்­கெனச் சொத்து சேர்த்துச் சுக­போ­கங்­களை அனு­ப­விப்­ப­திலும் கவனம் செலுத்­திய இத்­த­லை­வர்கள் தமது சமூ­கத்தின் எதிர்­கால நிலை­பற்றி எந்தக் கவ­லை­யு­மின்றே வாழ்ந்­தனர். முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களின் ஆலோ­ச­னை­க­ளுடன் சமூ­கத்தின் நீண்­ட­காலத் தேவை­களை கருத்­திற்­கொண்டு பொருத்­த­மான திட்­டங்­களை வகுத்து தமது அர­சியல் செல்­வாக்கின் மூலம் அர­சாங்க ஆத­ர­வைப்­பெற்றுச் செயற்­ப­டுத்த எந்த முஸ்லிம் தலை­வ­னுக்கும் ஆர்­வமோ துணிவோ இருக்­க­வில்லை. அதன் விளை­வைத்தான் இன்று முஸ்லிம் சமூகம் கிழக்­கி­லங்­கையில் அனு­ப­விக்­கி­றது.

இனி என்ன செய்­யலாம்?
அர­சி­யலும் மதமும் வளர்த்­து­விட்ட இன­வா­தத்தை அவை இரண்­டுக்கும் வெளியே நின்­றுதான் நீக்­க­வேண்­டி­யுள்­ளது. அதற்­காக, இரு சமூ­கங்­களின் அடி­மட்­டத்தில் மாற்றுச் சிந்­த­னைகள் வள­ர­வேண்டும். அதனை வளர்க்­க­வேண்­டிய பொறுப்பு இன்­றைய இளஞ்­சந்­த­தி­யி­டமும், அவர்­க­ளி­டையே உரு­வா­கி­யுள்ள புத்­தி­ஜீ­வி­க­ளி­டமும், அந்தப் புத்­தி­ஜீ­வி­களின் தலை­மையில் அமைக்­கப்­ப­ட­வேண்­டிய சிவில் அமைப்­புக்­க­ளி­ட­முமே தங்­கி­யுள்­ளது.
இரு இனங்­க­ளையும் இணைப்­பது தமிழ் மொழி. அது மட்­டு­மல்­லாமல் இரு இனங்­க­ளி­னதும் கலாசா­ரத்­திலும் நிறைய கலப்­பு­க­ளுண்டு. ஆதலால் மொழி­யையும் கலா­சா­ரத்­தையும் கரு­வி­க­ளாகப் பாவித்து ஜன­ரஞ்­ச­க­மான படைப்­புகள் ஊடா­கவும் நிகழ்­வுகள் ஊடா­கவும் இரு இனங்­களும் ஒன்­றாகக் கூடிக்­க­ளித்து உற­வா­டக்­கூ­டிய சந்­தர்ப்­பங்­களை ஏற்­ப­டுத்­த­வேண்­டி­யது அவ­சி­ய­மா­கின்­றது. இசை, நடனம், நாடகம், சித்­திரம், ஓவியம், விளை­யாட்டு என்­ற­வாறு இர­சா­ஞானத் துறை­களை இரு இனங்­களும் கூட்­டாக வளர்ப்­ப­தன்­மூலம் இன உறவை வலுப்­ப­டுத்­தலாம். இதனை முஸ்லிம் இளை­ஞர்­களும் யுவ­தி­களும் முக்­கி­ய­மாக உண­ர­வேண்டும். ஏனெனில் உங்­களை இந்தத் துறை­களில் ஈடு­ப­ட­வி­டாமல் தடுக்­கின்­றது உங்­களின் வைதீக மார்க்கம். இத­னா­லேதான் நீங்கள் மற்ற இனங்களால் ஒதுக்கப்பட்டுள்ளீர்கள். இந்த ஒதுக்கம் இனவாதம் வளர்வதற்கு ஒரு முக்கியமான காரணம் என்பதை பல இடங்களில் நான் சுட்டிக்காட்டியுள்ளேன்.
ஆனால் இது ஒரு நீண்டகாலத்திட்டம்.

குறுங்­கா­லத்தில் தமிழர்- முஸ்லிம் இன­வாதம் குறை­வ­தானால் அர­சியல் அடிப்­ப­டையில் மாற்­றங்கள் ஏற்­பட வேண்­டி­யுள்­ளது. அதைச் செய்ய இன­றுள்ள தமிழ் முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் பலரை அகற்ற வேண்டும். பணத்­துக்­கா­கவும் பத­விக்­கா­கவும் சமூ­கத்தை விலை­பேசும் அர­சியல் தலை­வர்­களால் இன­வாதம் பெரு­கு­மே­யன்றி குறை­ய­மாட்­டாது. இதற்­கி­டையில், தமிழர் முஸ்லிம் ஆகிய இரு இனங்­க­ளுமே இந்த நாட்­டுக்குச் சொந்­த­மா­ன­வை­யல்ல என்று கூறிக்­கொண்டு ஒரு பேரி­ன­வாத இயக்கம் சிங்­கள மக்­க­ளி­டையே பூதா­க­ர­மாக உரு­வா­கி­யுள்­ளது. அதன் ஆத­ர­வா­ளர்கள் கிழக்­கி­லங்­கை­யிலும் அரசின் ஆத­ர­வுடன் இன்று செயற்­பட்டுக் கொண்­டி­ருக்­கின்­றனர். அவர்­களின் சந்­தர்ப்ப சக­வா­சத்­தைப்­பற்­றியும் அது எவ்­வாறு தமி­ழர்­க­ளையும் முஸ்­லிம்­க­ளையும் பிரித்து வைக்­கின்­றது என்­பது பற்­றியும் ஏற்­க­னவே ஒரு பத்­தி­ரி­கையில் நான் விளக்­கி­யுள்ளேன். இந்தப் பேரி­ன­வா­தத்தை தமி­ழரும் முஸ்­லிம்­களும் தனித்­து­நின்று தோற்­க­டிக்க முடி­யாது. இணைந்தால் வெற்றி காணலாம். இணை­வ­தற்கு மறுக்­கின்­றனர் இப்­பச்­சோந்தித் தலை­வர்கள். என­வேதான் அடுத்த சந்­தர்ப்பம் வரும்­போது அவர்­களை தோல்­வி­ய­டையச் செய்­வது இரு இனங்­க­ளி­னதும் பிர­தான கடமை. தமிழ், முஸ்லிம் புத்­தி­ஜீ­வி­களே விழியுங்கள். உங்கள் மக்களையும் விழிப்படையச் செய்யுங்கள். உங்களுக்கிடையே கொந்தளிக்கும் இனவாதத்தை விரட்டியடியுங்கள்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.