ஏகாதிபத்தியவாதிகளின் மயானபூமி தலிபான்களின் பசுந்தரையாகுமா?

0 460

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

பத்­தொன்­பதாம் நூற்­றாண்டில் பிரித்­தா­னிய வல்­ல­ரசு, இரு­பதாம் நூற்­றாண்டில் சோவியத் வல்­ல­ரசு, இரு­பத்­தோராம் நூற்­றாண்டில் அமெ­ரிக்க வல்­ல­ரசு என்­ற­வாறு மூன்று தற்­கால வல்­ல­ர­சுகள் தமது ஏகா­தி­பத்­தி­யத்தை வளர்ப்­ப­தற்­காக ஆப்­கா­னிஸ்­தானைக் கட்­டி­யாள நினைத்­தன. அவை மூன்­றுக்கும் அந்த நாடு ஒரு மயா­ன­பூமி­யாக மாறி­ய­தையே வர­லாறு உணர்த்­து­கி­றது.

திட்­ட­மிட்டுச் சோடிக்­கப்­பட்ட ஆதா­ரங்­களை உல­குக்குக் காட்டி ஏமாற்றி 2001இல் அமெ­ரிக்க வல்­ல­ரசு அதன் நேச­நா­டு­க­ளுடன் கைகோர்த்து ஆப்­கா­னிஸ்­தா­னையும் ஈராக்­கையும் கைப்­பற்றி, முத­லா­வதை தலி­பான்­களின் பயங்­க­ர­வாத இஸ்­லா­மிய ஆட்­சி­யி­லி­ருந்தும் இரண்­டா­வதை சதாம் ஹூசைனின் சர்­வா­தி­கார ஆட்­சி­யி­லி­ருந்தும் விடு­த­லை­யாக்கி, மக்­க­ளுக்கு ஜன­நா­யக சுதந்­தி­ரத்தை வழங்கி, ஆப்­கா­னியப் பெண்­ணி­னத்தின் அடிமைத் தளை­க­ளையும் நீக்கி, இரு நாடு­க­ளையும் பொரு­ளா­தார வளர்ச்சிப் பாதையில் நடை­போடச் செய்­வ­தாக அமெ­ரிக்க ஜனா­தி­பதி ஜோர்ஜ் டபிள்யு புஷ் பறை­ய­டித்­ததை உலகு மறந்­தி­ருக்­காது. 2003 வைகாசி மாதம் முதலாம் திக­தி­யன்று அமெ­ரிக்க விமா­னந்­தாங்கிக் கப்­ப­லொன்றின் மேற்­த­ளத்தில் நின்று கொண்டு அதே ஜனா­தி­பதி எங்கள் ”தூது முடி­வ­டைந்­து­விட்­டது” என்று அவ­ச­ரப்­பட்டு அறி­வித்­த­தையும் மக்கள் மறந்­தி­ருக்­க­மாட்­டார்கள். அதன் பிற­கு­தானே ஈராக் ஒரு கொலைக்­க­ள­மாக மாறி­யது? 2011இல் அமெ­ரிக்கத் துருப்­புகள் ஈராக்­கை­விட்டு வெளியே­றி­னாலும் இன்­று­வரை அங்கே அர­சியல் அமைதி இல்லை என்­ப­தைத்­தானே செய்­திகள் உறு­திப்­ப­டுத்­து­கின்­றன? கடந்த இரு­பது வரு­டங்­க­ளாக ஆப்­கா­னிஸ்­தா­னிலும் அர­சியல் சது­ரங்க ஆட்டம் ஆடி இன்று தலி­பான்­களால் வெளியேற்­றப்­பட்­டுள்­ளனர்.

ஆப்­கா­னிஸ்­தானில் 2001இல் தலி­பான்­களை விரட்­டி­ய­டித்­தபின் தேர்தல்கள் நடை­பெற்­றதும் அமெ­ரிக்கப் பொம்­மைகள் அங்கே தலை­வர்­க­ளா­னதும் தலை நக­ரிலும் அதனை அண்­மித்த பகு­தி­க­ளிலும் பெண்கள் சுதந்­தி­ர­மாக நட­மா­டி­யதும் கல்­வியில் ஈடு­பட்­டதும் யாவரும் அறிந்த விட­யங்­களே. ஆனாலும் அத்­த­லை­வர்­களால் முழு நாட்­டையும் கட்­டி­யாள முடி­ய­வில்லை. தலி­பான்கள் ஆப்­கா­னிஸ்­தானின் எல்லைப் புறங்­களில் ஒதுங்­கி­யி­ருந்து கொரில்லா யுத்தம் நடத்திக் கொண்டே இருந்­தனர். அதனால் அந்­நாட்டின் பொம்மை ஜனா­தி­ப­திகள் காபுலின் மேயர்­க­ளா­கவே இன்­று­வரை செயற்­பட்­டு­வந்­தனர். அவர்­களின் ஆட்சி தலை­ந­க­ருக்கும் மற்றும் சில மாகா­ணங்­க­ளுக்கும் அப்பால் செல்­லு­ப­டி­யா­க­வில்லை. இரு­பது வரு­டங்­க­ளாக நடை­பெற்ற இந்த அமெ­ரிக்க நாட­கத்தால் மூன்று திரில்­லியன் டொலர்­க­ளையும் (3,000 000 000 000) சுமார் 2400 படை­வீ­ரர்­க­ளையும் அமெ­ரிக்கா இழந்­துள்­ளது. பொரு­ளா­தார ரீதி­யாக நலி­வ­டைந்­து­வரும் அமெ­ரிக்க வல்­ல­ரசு இனியும் ஆப்­கா­னிஸ்­தானில் இருப்­பதால் மேலும் இழப்­பு­களைச் சந்­திக்­க­வேண்­டி­வரும் என்று நினைத்­ததால் புதிய ஜனா­தி­பதி ஜோ பைடன் அங்­கி­ருந்து வெளியே­று­வ­தாக அறி­வித்து ஆப்­கா­னிஸ்­தானின் பாது­காப்பை அமெ­ரிக்கா இது­வரை பயிற்­று­வித்த ஆப்­கா­னியப் படை­க­ளி­டமே ஒப்­ப­டைக்­கவும் முடி­வு­செய்தார். இது ஏற்­க­னவே முன்­னைய ஜனா­தி­பதி டொனல்டு ட்ரம்ப் எடுத்த முடிவு. அதை செயற்­ப­டுத்­தி­யுள்­ளார் பைடன். இதைத்தான் தலி­பான்­களும் இத்­தனை ஆண்­டு­க­ளாக எதிர்­பார்த்துக் கொண்­டி­ருந்­தனர். 1969இல் தப்­பினோம் பிழைத்தோம் என்று எவ்­வாறு அமெ­ரிக்­கப்­ப­டை­களும் அவர்­களின் ஆத­ர­வா­ளர்­களும் வியட்­னா­மை­விட்டு வெளியே­றி­னார்­களோ அவ்­வா­றான ஒரு வெளியேற்­றமே இப்­போது ஆப்­கா­னிஸ்­தா­னிலும் நடை­பெற்­றுள்­ளது. தலி­பான்­களின் ஒரு புதிய சந்­த­தியின் கைக­­ளுக்குள் சிக்­கி­யுள்ள ஆப்­கா­னிஸ்தான் பாலை­யா­குமா பசுந்­த­ரை­யா­குமா என்­பதை பொறுத்­தி­ருந்துதான் பார்க்க வேண்டும்.

இதற்கு முன்னர், அதா­வது 1996 தொடக்கம் 2001 வரை, தலி­பான்கள் ஆண்­ட­போது இஸ்­லா­மிய ஆட்சி என்ற பெயரில் கடைப்­பி­டித்த கொள்­கை­கள உலகே அறியும். ஷரியத் சட்­டத்தை நிலை நாட்­டு­கிறோம் என்று கூறிக்­கொண்டு உல­குக்குக் காட்­டிய பகி­ரங்க தூக்கு மேடை­களும், கசை­ய­டி­களும், கல்­லெ­றியும் தண்­ட­னை­களும் இஸ்­லாத்­தைப்­பற்­றிய ஒரு தவ­றான அபிப்­பி­ரா­யாத்தை வளர்த்­தது என்­பதை மறுக்க முடி­யுமா? அவர்­க­ளு­டைய ஆட்­சியில் ஆப்­கா­னிஸ்தான் பெண்­களின் சிறை­கூ­ட­மாக அமைந்­த­தை­யுந்தான் மறுக்க முடி­யுமா? சுருக்­க­மாகச் சொன்னால் அது ஓர் முழுக்­க­மு­ழுக்க வைதீ­கத்தில் மூழ்­கிய முல்­லாக்­களின் ஆட்­சி­யாக அமைந்து திக்குத் தெரி­யாது தடு­மா­றி­யது. அங்கே புஷ்துன் இனத்­த­வர்­களைத் தவிர மற்ற இனங்­க­ளெல்லாம் தலி­பான்­களின் வெறுப்­புக்கு ஆளாகித் துன்­பு­றுத்­தப்­பட்­டன. எனவே இந்த ஆட்­சியும் மீண்டும் அதே கொள்­கை­க­ளைத்தான் கடைப்­பி­டிக்­கு­மென அவ­தா­னிகள் பலர் கணிப்­பி­டு­கின்­றனர். ஆனால் அது ஒரு தப்­பான கணிப்­பீ­டெனக் கரு­தவும் இட­முண்டு.

Women with their children try to get inside Hamid Karzai International Airport in Kabul, Afghanistan August 16, 2021. REUTERS/Stringer NO RESALES. NO ARCHIVES

அமெ­ரிக்க ஆத­ர­விலே கட்­டாரின் டோகா நக­ரிலே நடை­பெற்ற சமா­தானப் பேச்­சு­வார்த்­தை­களிற் கலந்­து­கொண்ட தலிபான் பிர­தி­நி­திகள் தங்­களை மித­வா­திகள் என அடை­யா­ளப்­ப­டுத்­தினர். இன்று அர­சியல் அவ­தா­னி­களை எதிர்­நோக்கும் ஒரே கேள்வி தலி­பான்­களின் இரண்­டா­வது ஆட்சி மித­வா­தி­களின் கைகளில் இருக்­குமா தீவி­ர­வா­தி­களின் கைகளில் இருக்­குமா என்­ப­துதான். தீவி­ர­வா­தி­களின் கைக­ளுக்குச் செல்­லு­மானால் அது உலகின் பல பாகங்­க­ளிலும் குமு­றிக்­கொண்டு செயற்­படும் அல் கையிதா, ஜமாஅத் இஸ்­லா­மிய்யா, போகோ ஹொறாம், ஐசிஸ் போன்ற இயக்­கங்­க­ளுக்கு ஒரு புதிய உத்­வே­கத்தை அளிக்கும். அத்­தீ­வி­ர­வா­தி­களுட் சிலர் தலி­பான்­களின் தற்­போ­தைய போராட்­டத்­திலும் கலந்து கொண்­டி­ருப்­பார்­க­ளெ­னவும் நம்ப இட­முண்டு. எனவே ஆப்­கா­னிஸ்­தானின் அரசு தலிபான் தீவி­ர­வா­தி­களின் கைக­ளுக்குச் செல்­லு­மானால் அந்த நாடு உலக இஸ்­லா­மிய தீவி­ர­வா­தத்தின் தாய­க­மா­கவும் மாறலாம். அவ்­வாறு மாறினால் கானல் நீரான கிலா­பத்தைத் தேடிப் பல ஜிஹாதுக் கும்­பல்கள் முஸ்லிம் நாடு­க­ளுக்குள் தோன்­றலாம். அது இன்­னு­மொரு குரு­தி­ப­டிந்த அத்­தி­யா­யத்தை உலக வர­லாற்றில் தோற்­று­விக்க இட­முண்டு. இந்தப் பயம் வெறும் கற்­ப­னை­யல்ல, சாத்­தி­யப்­ப­டக்­கூ­டிய ஒன்று. முஸ்லிம் நாடு­களின் அர­சி­யலைக் கூர்ந்து அவ­தா­னிப்­போ­ருக்கு இது புலப்­படும்.
ஆனால் முத­லா­வது ஆட்­சியை நிறு­விய தலி­பான்­களின் சந்­த­திக்கும் இரு­பது ஆண்­டு­க­ளுக்குப் பிறகு இப்­போது ஆட்­சி­யே­றி­யுள்ள சந்­த­திக்­கு­மி­டையே சிந்­தனைப் புரட்சி ஒன்று ஏற்­பட்டு கட்­டா­ரிலே சொன்­ன­துபோல் மித­வாதக் குழு­வொன்று தலி­பான்­களின் தலை­மைத்­து­வத்தைக் கைப்­பற்றி இருக்­குமா? அவ்­வா­றான ஒரு மாற்றம் ஏற்­பட்­டி­ருக்­கலாம் என்­பதை ஒரு சம்­பவம் சுட்­டிக்­காட்­டு­கி­றது. அமெ­ரிக்கப் படைகள் வெளியே­றப்­போ­வதை அறிந்த சீனா காலம் தாழ்த்­தாது தலிபான் தலை­மை­யுடன் கைகோர்க்கத் தொடங்­கி­யுள்­ளது. தலி­பானும் சீனத் தலைவன் சீ ஜின்­பிங்கை ”வர­வேற்­கத்­தக்க நண்பன்” என அழைத்­துள்­ளது. இந்த நிகழ்வை எவ்­வாறு எடை­போ­டலாம்?

சீனாவின் ராஜ­தந்­தி­ரத்­துக்கும் அமெ­ரிக்­காவின் ராஜ­தந்­தி­ரத்­துக்கும் இடையே ஒரு முக்­கிய வேறு­பா­டுண்டு. சீனா மற்ற நாடு­களின் உள்­நாட்டு அர­சி­ய­லிலும் பிரச்­சி­னை­க­ளிலும் தலை­யி­டு­வ­தில்லை. அமெ­ரிக்­காவோ ஜன­நா­யக ஆட்சி, அர­சியல் சுதந்­திரம், மனித உரி­மைகள் போன்ற அம்சங்­களை வலி­யு­றுத்தி மற்ற நாடு­க­ளு­ட­னான உற­வினை வலு­வாக்கும் அல்­லது குறைக்கும். தலி­பான்­களின் தலை­மைத்­துவம் தீவி­ர­வா­தி­களின் கைக­ளி­லேதான் இருக்­கு­மென்றால், அவர்கள் இஸ்­லா­மிய ஆட்­சியை ஆப்­கா­னிஸ்­தானில் நிறுவி அவ்­வா­றான ஓர் ஆட்­சி­யையே உலகின் ஏனைய முஸ்லிம் நாடு­களும் சமூ­கங்­களும் அடை­வ­தற்குப் பாடு­ப­டுவர். அவ்­வா­றாயின் இன்று சீ பிங் தலை­மை­யி­லான சீனா அங்கு வாழும் உய்கர் முஸ்­லிம்­களின் இஸ்­லாத்­தையும் முஸ்லிம் கலா­சா­ரத்­தையும் அழித்து இன­ஒ­ழிப்புச் செய்­வதை மறந்து அத்­த­லை­வ­னுடன் கைகோர்த்து அவரை வர­வேற்க வேண்­டிய நண்பன் எனக் கூறு­வதை எவ்­வாறு சரி­கா­ணலாம்? அதற்கு மாறாக, அந்தக் கைகோர்ப்பு சீனாவை நோக்கி, நாங்­களும் உங்கள் உள்­நாட்டு விவ­கா­ரங்­களிற் தலை­யி­ட­மாட்டோம், நீங்­களும் எங்கள் உள்­நாட்டு விவ­கா­ரங்­களிற் தலை­யி­ட­வேண்டாம், இரு­வரும் நமக்­கி­டையே உள்ள பரஸ்­பர நலன்­களைப் பெருக்­குவோம் என்று ராஜ­தந்­தி­ரத்­துடன் கூறி­ய­துபோல் தெரி­ய­வில்­லையா? இவ்­வாறு நோக்­கும்­போது தலி­பானின் அர­சி­யலில் ஒரு மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை அது காட்­ட­வில்­லையா? சவூதி அரே­பியா உட்­பட எத்­த­னையோ முஸ்லிம் நாடுகள் சீனா­வு­ட­னான பொரு­ளா­தார உறவை வளர்ப்­ப­தற்­காக உய்கர் முஸ்­லிம்­களைப் பலி­யாக்­கி­ய­துபோல் தலி­பானும் ஏன் பலி­யாக்கக் கூடாது? இது அவர்­களின் அர­சியல் சிந்­த­னையில் ஒரு மாற்றம் ஏற்­பட்­டுள்­ளது என்­பதை உணர்த்­த­வில்­லையா? என்னும், மித­வாதம் நோக்­கிய அந்த மாற்றம் ஏனைய முஸ்லிம் தீவி­ர­வாத இயக்­கங்­களை தலி­பானின் எதி­ரி­க­ளாக மாற்­றவும் கூடும். அது மித­வாத தலி­பான்­க­ளுக்கு உலக அரங்கில் ஆத­ரவு தேட ஓர் அரிய வாய்ப்­பையும் அளிக்கும்.

மேலும், தலிபான் தலை­வ­ரொ­ருவர் அண்­மையில் அளித்த பேட்­டி­யொன்றில் அவர்­க­ளது புதிய ஆட்சி பெண்­களின் கல்­விக்குத் தடை­வி­திக்­கா­தென்றும் பெண்கள் தொழில்­களில் ஈடு­ப­டு­வ­தையும் தடுக்­கா­தென்றும் கூறி­யுள்ளார். இது வர­வேற்­க­வேண்­டிய ஒரு செய்தி. இரு­பது வரு­டங்­க­ளாக அர­சியல் அஞ்­ஞா­ன­வாசம் அனுஷ்­டித்த தலி­பான்கள் மித­வா­தி­க­ளாக மாறி­விட்­டனர் எனவும் நம்பத் தோன்­று­கி­றது. ஆனால் தலி­பான்கள் எல்­லா­ருமே மித­வா­தி­க­ளாகி விட்­டார்­களா? அம்­மி­த­வா­தி­களின் பலம் எத்­த­கை­யது? தீவி­ர­வாதத் தலி­பான்­களும் அங்கே இருப்பின் அது அதி­காரச் சண்­டை­யொன்­றுக்கு வழி­வ­குக்­காதா? அத­னா­லேதான் ஆப்­கா­னிஸ்தான் தலி­பான்­களின் புதிய ஆட்­சியில் பாலை­யா­குமா பசுந்­த­ரை­யா­குமா என்­ப­தை­யெல்லாம் இப்­போது திட்­ட­வட்­ட­மாகக் கூற­மு­டி­யாமல் இருக்­கி­றது. ஆனால் ஒன்று மட்டும் உண்மை. காலம் நோய் தீர்க்கும் ஒரு சிறந்த பரி­காரி. தலி­பான்கள் அவர்­களின் முத­லா­வது ஆட்­சியில் அடைந்த கசப்­பான அனு­ப­வங்கள் அவர்­க­ளுக்குப் பல பாடங்­களை கற்­பித்­தி­ருக்­கலாம். உல­கத்தைப் பகைத்­துக்­கொண்டு எந்த ஒரு ஆட்­சி­யா­ளனும் ஒரு நாட்டை ஆள­மு­டி­யா­தென்­பதை அவர்கள் உணர்ந்­தி­ருப்பர். ஆப்­கா­னிஸ்தான் செழிப்­ப­தற்கு பண­வ­ரு­வாயும், தொழில்­நுட்­பத்­தி­றனும், ஆண்பெண் அனை­வரின் உழைப்பும் அவ­சியம். இவற்­றை­யெல்லாம் ஆயு­தங்­க­ளைக்­கொண்ட அடக்­கு­முறை ஆட்­சியால் பெற்­று­விட முடி­யாது. இதை தலி­பான்கள் உணர்ந்­தி­ருப்­பார்­க­ளானால் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கு ஒரு அமை­தி­யான எதிர்­காலம் உண்­டெனக் கரு­தலாம். எனவே அவ­ச­ரப்­பட்டு அவர்­களின் ஆட்­சியை யாரும் எடை­போ­டு­வதைத் தவிர்த்தல் ஆப்­கா­னிஸ்­தா­னுக்கும் நல்­லது, வெளி உல­குக்கும் நல்­லது.

இவற்­றை­யெல்­லாம்­விட இன்­னு­மொரு பிரச்­சி­னையே தலி­பான்-­சீன நட்பின் விளை­வாக உலக ராஜ­தந்­திர அரங்கில் முக்­கி­யத்­துவம் பெறும். அது இலங்­கையின் வெளிநாட்டுக் கொள்­கை­யிலும் மாற்­றத்தை ஏற்­ப­டுத்­தலாம். ஏற்­க­னவே ஆப்­கா­னிஸ்­தா­னுடன் பொரு­ளா­தரத் தொடர்­பு­களை சீனா வளர்த்­தி­ருந்த போதிலும், அமெ­ரிக்கா வெளியே­றி­ய­வுடன் தலி­பான்­க­ளுடன் தோழமை பூண்டு அந்­நாட்டின் பொரு­ளா­தாரத் துறையில் தனது கால்­களை ஆழ­மாகப் பதிப்­ப­தற்கு சீனா­வுக்கு ஒரு வாய்ப்பு கிடைத்­துள்­ளது. அதன்­மூலம் புதிய பட்­டுப்­பாதை வழி­யாக உரு­வாக்­கப்­பட்ட சீன-­–பாகிஸ்தான் பொரு­ளா­தாரத் தாழ்­வா­ரத்­துக்குள் ஆப்­கா­னிஸ்­தா­னையும் சேர்க்க சீனா தயங்­காது. ஏற்­க­னவே இலங்கை அதனுள் உள்­வாங்­கப்­பட்­டுள்­ள­மைக்கு சீனா உரு­வாக்­கிய கொழும்புத் துறை­முக நகர் ஓர் எடுத்­துக்­காட்டு. இந்த மாற்­றங்­களைப் புவி­சார்­ அ­ர­சியல் ரீதி­யா­கவோ ராஜ­தந்­திர ரீதி­யா­கவோ நோக்­கினால் ஆப்­கா­னிஸ்தான், பாக்­கிஸ்தான், வங்­கா­ள­தேசம், இலங்கை ஆகிய நாடு­க­ளுக்குள் தனது செல்­வாக்கை ஆழ­மாக்கி, ஆசியாவில் தனக்கு ஒரு சவாலாக வளரும் இந்தியாவை சீனா சுற்றிவளைக்கின்றதை உணரலாம் அல்லவா? எற்கனவே ஈரானுடன் உள்ள உறவை முறித்துக்கொண்ட அமெரிக்கா ஆப்கானிஸ்தானையும் இப்போது இழந்துள்ளதால் தனது நண்பனான இந்தியாவின் பிராந்திய நலன்களை எவ்வாறு பாதுகாத்து அதேசமயம் இந்து சமுத்திரத்தில் தனது பலத்தையும் எவ்வாறு நிலைநாட்டுவது என்பது பற்றியே உலக அரங்கில் மேற்கத்திய நட்பு நாடுகளுடன் அமெரிக்கா கலந்தாலோசிக்கும். அதன் விளைவாக அமெரிக்காவின் ராஜதந்திர ராடருக்குள் இலங்கை மீண்டும் இழுக்கப்பட்டுக் கண்காணிக்கப்படும். இன்று இலங்கை அரசு தன்னிச்சையாகச் சீனாவுடன் தேன் நிலவு கொண்டாடுவது இலங்கையின் வெளிநாட்டுக் கொள்கையில் பிரச்சினைகளைத் தோற்றுவிப்பதைத் தடுக்கமுடியாது. அவற்றைத் தவிர்ப்பதற்காக ராஜபக்ச அரசு பல முயற்சிகளை இப்போது எடுத்துள்ளது. இதனைப்பற்றி அடுத்த கட்டுரை ஆராயும்.

இந்தக்கட்டுரை ஒன்றை மட்டும் வலியுறுத்த விரும்புகிறது. எவ்வாறு ரோஹண விஜேவீரவின் அன்றைய தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணிக்கும் இன்று அதன் அவதாரமாக விளங்கும் அனுர குமார திசநாயக்காவின் மிதவாத மக்கள் விடுதலை முன்னணிக்கும் இடையே வேறுபாடுண்டோ அவ்வாறான ஒரு வேறுபாட்டை தலிபான்களின் இரு சந்ததிகளிடையேயும் எதிர்பார்க்க வேண்டும். எனவே இரண்டாவது தலிபான் ஆட்சியைப்பற்றி எந்த முடிவுக்கும் இப்போது நாம் வந்துவிடக்கூடாது.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.