இலங்கை முஸ்லிம்கள் : சமூகம் எப்படியோ தலைமைத்துவம் அப்படி

0 1,211

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

இந்தத் தலைப்பில் இதற்கு முன்னும் சில கட்­டு­ரை­களை எழு­தி­யுள்ளேன். எனினும், இன்று நாடு போகின்ற போக்கில் ஆட்­சி­யினர் முஸ்லிம் சமூ­கத்­தையே ஒரு குற்­ற­வா­ளியைக் கூண்டில் நிறுத்தி விசா­ரிப்­ப­துபோல் நடத்­து­வதும், அது தெரிந்தும் முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் செய­லி­ழந்து காணப்­ப­டு­வதும் வேத­னை­ய­ளித்த போதிலும், முஸ்லிம் தலை­மைத்­து­வத்­தைப்­பற்­றிய சில உண்­மை­களை வாச­கர்­க­ளுக்கு உறுத்­தி­யு­ரைப்­பது காலத்தின் கட்­டா­ய­மெனக் கரு­தியே மீண்டும் ஒரு முறை இவ்­வி­ட­யத்தை அல­சு­கிறேன். இது தாய்­நாட்­டைப்­பற்­றியும் அதில் வாழும் சமூ­கங்­க­ளைப்­பற்­றியும் அதிலும் குறிப்­பாக தான் பிறந்து வளர்ந்த ஒரு சமூ­கத்தைப் பற்­றியும் சதா சிந்­தித்துக் கொண்­டி­ருக்கும் ஓர் அவ­தா­னியின் ஆத்­மார்த்த உணர்வின் வெளிப்­பா­டே­யன்றி வேறு எந்த நோக்­கு­டனும் எழு­தப்­ப­ட­வில்லை.

சமூகம் எப்­ப­டியோ தலை­மைத்­துவம் அப்­படி
ஒரு சமூகம் எத்­தன்மை வாய்ந்­ததோ அத்­தன்­மை­யுள்ள தலை­வர்­க­ளைத்தான் அது உரு­வாக்கும் அல்­லது அவர்­க­ளி­டையே உரு­வாகும் எனப் பொது­வாகக் கரு­தப்­ப­டு­வ­துண்டு. அதில் ஓர­ளவு உண்­மையும் உண்டு. ஆனால் இலங்கை முஸ்­லிம்­களைப் பொறுத்­த­வரை அவர்­க­ளி­டையே உரு­வா­கிய தலை­வர்­களை நோக்­கும்­போது அக்­கூற்று முற்­றாகப் பொருந்­து­வ­துபோல் தெரி­கி­றது. முஸ்லிம் சமூகம் எப்­ப­டியோ அப்­ப­டியே அவர்­களின் தலை­மைத்­து­வமும் அமைந்­துள்­ளது. எனவே சமூகம் விழித்­தெ­ழுந்து மாறா­த­வரை அதன் தலை­மைத்­து­வமும் மாறா­தி­ருக்கும்.

இலங்கை முஸ்­லிம்­களின் வர­லாற்­றிலே இது­வரை மூன்று வகை­யான தலை­மைகள் உரு­வா­கி­யுள்­ளன. ஒன்று, பணக்­கார வர்க்­கத்தின் தலைமை, மற்­றது இஸ்­லா­மிய மார்க்­க­வா­தி­களின் தலைமை, மூன்­றா­வது அர­சி­யல்­வா­தி­களின் தலைமை. இவற்றுள் முதல் இரண்டும் காலத்தால் முந்­தி­யவை. மூன்­றா­வது சுதந்­தி­ரத்­துக்குப் பின்னர் தோன்­றி­யது. எனினும் முத­லி­ரண்டின் செல்­வாக்கு மூன்­றா­வ­துக்­குள்ளும் நுழைந்­துள்­ளது. இந்தத் தலை­மைத்­து­வங்கள் எவ்­வாறு முஸ்லிம் சமூ­கத்தின் நிலை­யினை பிர­தி­ப­லிக்­கின்­றது என்­பதை முதலில் விளக்­க­வேண்­டி­யுள்­ளது.

இலங்கை முஸ்­லிம்கள் வர்த்­த­கர்­க­ளாக வந்­த­வர்கள் என்­பது வர­லாற்று உண்மை. அவர்­க­ளு­டன்தான் இஸ்­லாமும் வந்­தது என்­பதும் உறுதி. ஆரம்­பத்தில் அரே­பி­யா­வி­லி­ருந்து ஊற்­றெ­டுத்த இஸ்லாம் கால­வோட்­டத்தில் இந்­தி­யா­வி­லி­ருந்து ஊற்­றெ­டுக்­க­லா­யிற்று. இந்த இரண்டு ஊற்­று­க­ளுக்­கு­மி­டையே நிறைய வித்­தி­யா­சங்கள் உண்டு. அவற்­றை­யெல்லாம் இங்கே விப­ரிக்க வேண்­டி­ய­தில்லை. ஆனால் ஒன்றை மட்டும் இங்கே உணர்த்­த­வேண்டி இருக்­கி­றது. அதா­வது, இலங்­கையில் போதிக்­கப்­பட்ட இஸ்லாம் மறு­மையே நிச்­சயம், உலக வாழ்வு அனிச்­சயம். ஆதலால் ஒரு முஸ்லிம் பர­லோக வாழ்வை நம்பி இக­லோக வாழ்வில் சடத்­துவத் தேவை­களை மட்டும் நிறை­வேற்­றிக்­கொண்டு தானும் தன் குடும்­பமும், வியா­பா­ரமும், பள்­ளி­வா­சலும் என்ற போக்கில் வாழ்­வதே இஸ்­லா­மிய வாழ்வு எனப் போதிக்­கப்­பட்­டது. இதைத்தான் கடந்த நூற்­றாண்­டி­லி­ருந்து சில பிரச்­சா­ர­கர்­களும் போதித்­தனர். இவ்­வா­றான போதனை எவ்­வா­றான ஒரு சமூ­கத்தைத் தோற்­று­விக்கும் என்­பதைச் சிந்­தித்துப் பார்க்க வேண்டும்.

இக­லோக வாழ்க்­கையில் ஒரு பய­ணிபோல் நின்­று­கொண்டும் தான் அடை­யப்­போகும் நிரந்­த­ர­மான தலத்­தையே சதா எதிர்­பார்த்­துக்­கொண்டும் வாழும் ஒரு­வ­னுக்கு நாட்­டுப்­பற்று, மொழிப்­பற்று, சமூ­கப்­பற்று, அர­சியல் நோக்கு என்­ப­தெல்லாம் அநா­வ­சியம். ஆன்­மீகத் தேவை, பொரு­ளா­தாரத் தேவை என்­பன மட்­டுமே அவ­னுக்கு இருக்­குமே தவிர இர­சா­ஞான தேவை என்­ப­தொன்று அவ­னுக்கு இருக்­க­மாட்­டாது. அப்­ப­டிப்­பட்ட மனி­தர்­களைக் கொண்ட ஒரு சமூ­கத்தை வழி­ந­டத்தும் தலை­வர்­களின் கடமை என்ன?
பணக்­காரத் தலை­மைத்­துவம் தான­தர்மம் செய்­வ­திலும் பள்­ளி­வா­சல்­க­ளையும் மத­ர­சாக்­க­ளையும் கட்டிப் பரா­ம­ரிப்­ப­திலும் ஏழைக் கும­ரி­க­ளுக்கு விவாகம் செய்­து­வைத்தல் போன்ற கரு­மங்­க­ளிலும் ஈடு­ப­டும்­போது அத்­த­லை­மைத்­து­வத்தின் பெயரும் புகழும் பெருகும். அத்­த­லை­வர்­களை சமூகம் தலையில் தூக்­கி­வைத்துக் கொண்­டாடும். அவர்­களின் செல்வம் எவ்­வ­ழியில் திரட்­டப்­பட்­டி­ருந்­தாலும் அது இறை­வனின் அருளால் கிடைத்­த­தென்றே சமூகம் புகழும். இது பரம்­ப­ரை­யாக நடந்­து­வந்த கதை. மார்க்கத் தலை­மைத்­து­வமும் அதே பல்­ல­வி­யைப்­பாடிப் பணக்­கார வர்க்­கத்­துடன் இணைந்து செல்லும். இத்­த­லை­மைத்­து­வங்­க­ளுக்கும் அவற்றின் பின்னால் திரளும் சமூ­கத்­துக்கும் அவர்கள் வாழும் நாட்­டுக்கும் இடை­யே­யுள்ள தொடர்பு மந்­தை­க­ளுக்கும் புல்­லுக்கும் இடை­யே­யுள்ள தொடர்­பே­யன்றி வேறில்லை. மந்­தை­க­ளுக்குப் புல் எப்­படி வளர்­கின்­றது அல்­லது வளர்ப்­பது என்ற கவலை இல்லை. வளர்ந்த புல்லை மேய்ந்­து­கொண்டு வாழ்­வதே அதன் ஒரே தொழில். இப்­ப­டித்தான் முஸ்லிம் சமூ­கமும் அத்­த­லை­வர்­களால் வழி­ந­டத்­தப்­பட்­டது.

சுதந்­தி­ரத்­துக்குப் பின்னர் உரு­வா­கிய அர­சியல் தலை­மைத்­துவம் இந்­தப்­போக்­கினை மாற்­றி­யதா? ஓரி­ரு­வ­ரைத்­த­விர பெரும்­பா­லான முஸ்லிம் அர­சியல் தலை­வர்கள் அதே போக்­கி­னைத்தான் கடைப்­பி­டித்­தனர். ஏனெனில் சமூக மக்­க­ளுக்கு அவர்­களின் சொந்த வாழ்க்­கையை இடை­யூ­றின்றி வாழ்­வ­தற்­கேற்ப சில வச­தி­களைப் பெற்றுக் கொடுத்தால் அதுவே அவர்­களின் ஆத­ரவைப் பெறு­வ­தற்குப் போது­மா­ன­தாக இருந்­தது. உதா­ர­ண­மாக அர­சாங்­கத்­தி­ட­மி­ருந்து நோன்பு காலத்தில் நோன்பு திறக்கப் போதி­ய­ளவு பேரிச்சம் பழங்­களும் ஹஜ் யாத்­தி­ரைக்கு அந்நிய செலா­வ­ணியும் பெற்­றுக்­கொ­டுத்து வியா­பா­ரத்­துக்கும் இடை­யூ­றுகள் ஏற்­ப­டாமல் பார்த்­துக்­கொண்டால் அதுவே அர­சியல் தலை­மைத்­து­வத்­துக்கு ஆத­ரவு திரட்டும் மார்க்­க­மாக இருந்­தது. அவ்­வா­றாயின் கல்­வித்­து­றையில் பாட­சா­லைகள் எவ்­வாறு முஸ்­லிம்­க­ளி­டை­யியே உரு­வா­கின? அது மற்ற இனங்கள் போராடிப் பெற்­றெ­டுத்த வச­திகள். நெல்­லுக்­கி­றைத்த நீர் வாய்க்கால் வழி­யோடிப் புல்­லுக்கும் பொசிந்­த­துபோல் முஸ்­லிம்­க­ளுக்கும் பாட­சா­லைகள் கிடைத்­தன. அவைதான் பின்னர் ராசிக் பரீத், பதி­யுத்தீன் மஹ்மூத் போன்­ற­வர்­களால் தனி முஸ்லிம் பாட­சா­லை­க­ளாக மாற்­றப்­பட்­டன. ஆனால் சமூ­கத்தின் அடி­மட்­டத்­தி­லி­ருந்து அதற்­கான கோரிக்­கைகள் எழ­வில்லை. ஏனெனில் முஸ்­லிம்­களின் வாழ்க்­கையை இயக்­கிய தத்­து­வத்­துக்கும் பள்­ளிக்­கூடக் கல்­விக்கும் எந்தச் சம்­பந்­தமும் இருக்­க­வில்லை. சமூ­கமே விழிக்­கா­தி­ருக்­கும்­போது தலை­மைத்­து­வமும் அதனை விழிக்­க­வைக்க விரும்­ப­வு­மில்லை. எனினும் இப்­பொ­து­வான நிய­திக்கு ஓரி­ரண்டு புற­ன­டைகள் இருந்­தன என்­ப­தையும் இங்கே மறுக்­க­வில்லை.

இந்தத் துர்ப்­பாக்­கிய நிலையை அண்­மைக்­கா­லத்தில் உரு­வா­கிய முஸ்லிம் தலை­மைத்­துவம் ஒரு புதிய கண்­கொண்டு நோக்­கி­யது. சமூ­கத்­துக்கே நாட்­டைப்­பற்­றியும் அதன் அபி­வி­ருத்­தியைப் பற்­றியும் கவ­லை­யில்­லா­த­போது நாமேன் அதைப்­பற்றிக் கவ­லைப்­ப­ட­வேண்டும்? முஸ்­லிம்­க­ளு­டைய வாக்­கு­களைக் கவர்­வ­தற்குப் பணமும் இஸ்­லாத்­தைப்­பற்­றிய பிரச்­சா­ரமும் இருந்­தாலே போதும். அத­னா­லேதான் தேர்தல் காலங்­களில் பண­மூட்­டைகள் அவிழ்க்­கப்­பட்டு தேர்தல் மேடைகள் ஹதீஸ் மஜ்­லி­சு­க­ளாக மாறி­யுள்­ளன. இதுதான் இன்­றைய முஸ்லிம் தலை­மைத்­து­வத்தின் நிலைப்­பாடு. அந்த இரண்­டையும் கொண்டு வாக்­கு­க­ளைப்­பெற்று நாடா­ளு­மன்­றத்­துக்குள் நுழைந்த தலை­வர்கள் அவர்­களின் சொந்த நலன்­களைப் பெருக்­கு­வதில் கவனம் செலுத்­து­வதில் ஏன் குறை­காண வேண்டும்? சமூகம் எப்­ப­டியோ அதன் தலை­மைத்­து­வமும் அப்­ப­டியே.

உரு­வாகும் ஒரு புதிய வர்க்கம்
இது­வரை காலமும் உல­கி­யற்­க­லை­களைக் கற்­றுத்­தேர்ந்த அறி­வா­ளி­க­ளுக்கு தலை­மைத்­து­வத்தை வழங்கி அவர்­களின் வழி­காட்­டலில் முஸ்லிம் சமூகம் என்­றுமே ஒன்­று­பட்­ட­தில்லை. கல்­வி­ய­றி­விலே முஸ்­லிம்கள் கவனம் செலுத்­தாதும் வர்த்­த­கர்­க­ளா­கவே நீண்­ட­கா­ல­மாக வாழ்ந்­த­மையும் இதற்­கொரு காரணம். அத்­துடன் மார்க்கத் தலை­வர்­களும் உல­கி­யற்­கல்வி ஆகி­றத்­துக்கு உத­வாது என்று போதித்­தது இன்­னொரு காரணம். இன்றோ அந்த நிலை மாறிக்­கொண்டு வரு­கின்­றது. கடந்த முப்­பது அல்­லது நாற்­பது ஆண்­டு­க­ளாக உல­கியற் கல்­வியில் முஸ்­லிம்­க­ளுக்கு ஒரு விழிப்பு ஏற்­பட்­டுள்­ளது. அதிலும் பெண்கள் முக்­கிய ஆர்வம் காட்­டு­வது ஆரோக்­கி­ய­மான ஒரு வளர்ச்சி. முஸ்லிம் பெண்­களின் எழுத்து ஆக்­கங்­களைப் படிக்­கும்­போது அவர்­களை நீண்­ட­கா­ல­மாக எழும்­ப­வி­டாது கூண்டுக் கிளி­களாய் வளர்த்த வைதீ­கத்தை சபிக்­காமல் இருக்க முடி­யாது. இன்­றைய மாற்­றத்தை முஸ்லிம் சமூகம் வர­வேற்க வேண்டும். இந்த ஆண் பெண் புத்­தி­ஜீ­விகள் முஸ்­லிம்­க­ளுக்குள் ஒரு புதிய வர்க்­க­மாக உரு­வா­கி­யுள்­ளனர். அவர்­களின் கைக­ளுக்குள் தலை­மைத்­துவம் செல்ல வேண்டும். ஆனால் அதை­வி­டவும் ஒரு கடமை இப்­புத்­தி­ஜீ­வி­க­ளுக்கு உண்டு.

முஸ்லிம் சமூகம் இன்னும் அர­சியல் விவ­கா­ரங்­க­ளிலும் அது­பற்­றிய சிந்­த­னை­யிலும் முதிர்ச்சி அடை­ய­வில்லை. தம்முடன் உள்ள வாக்குரிமையின் பெறுமதியையும்கூட பெரும்பாலான முஸ்லிம்களால் உணரமுடியாமல் இருக்கின்றது. அதை உணர்ந்திருந்தால் இன்று நாடாளுமன்றத்துக்குள் அவர்களின் பிரதிநிதிகளாய் இருப்போரில் தொண்ணூறு சதவீதமானவர்களேனும் அங்கே நுழைந்திருக்கமாட்டார்கள். அவர்களை நீக்குவது இச்சமூகத்தின் இன்றைய கடமை. முஸ்லிம் சமூகத்துக்கு அந்தப் பிரதிநிதிகள் ஓர் அசிங்கம். அந்த அசிங்கத்தைக் களைய சமூகத்துக்கு வழிகாட்ட வேண்டியவர்கள் இப்புத்திஜீவிகளே. அது இவர்களின் தலையாய கடமை. அத்துடன் முஸ்லிம்களுக்கென்று ஒரு தனிக்கட்சி தேவையேயில்லை. நாட்டின் யாவரினதும் நலனுக்காகவும் நாட்டின் நலனுக்காகவும் கொள்கைகளை வகுத்து அவற்றை நடைமுறைப்படுத்தக்கூடிய எத்தனையோ மனிதாபிமானங்கொண்ட முற்போக்கான சிங்கள தமிழ் மக்கள் இருக்கவே இருக்கிறார்கள். அவர்களுடன் இணைந்தாலன்றி முஸ்லிம்களுக்கு விமோசனமில்லை. இந்த உணர்வை புத்திஜீவிகள் முஸ்லிம் சமூகத்திடையே பதித்துவிட்டால் தலைமைத்துவமும் உங்களை வந்தடையும்.- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.