மத்ரஸாக்கள் செய்தவை மகத்தான சேவையா? நாச வேலையா?

0 857

– பேராசிரியர் மௌலவி
எம்.எஸ்.எம். ஜலால்தீன்(கபூரி) –

இலங்­கையின் அண்­மைக்­கால பேசு­பொ­ரு­ளா­கவும் மாற்று மதத்­தவர் சிலரின் அச்­சு­றுத்­த­லுக்கு உள்­ளாக்­கப்­பட்­ட­தா­கவும் முஸ்­லிம்­களின் ஆயிரம் ஆண்டு கால வர­லாற்றைக் கெண்ட ‘மத்­ர­ஸாக்கள்’ காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றா­ன­தொரு இக்­கட்­டான நிலையில் இந்­நாட்டின் வர­லாற்றில் மத்­ர­ஸாக்­களின் தோற்றம், அதன் பங்­க­ளிப்பு மற்றும் செயற்­பா­டு­க­ளையும் இக்­கட்­டுரை ஓர­ளவு நிதர்­ச­ன­மாக முன்­வைக்கும் என எண்­ணு­கின்றேன்.
‘மத்­ர­ஸாக்கள்’ என்ற அறபுச் சொல்லை பாட­சா­லைகள், கல்விக் கூடங்கள் என தமிழில் மொழி­பெ­யர்க்­கலாம். பெரு­மானார் (ஸல்) அவர்கள் காலத்­தி­லேயே இஸ்லாம் இலங்­கைக்கு அறி­முகம் செய்­யப்­பட்­ட­தாக மிகத் தெளி­வான வர­லாற்றுக் குறிப்­புகள் இன்றும் காணப்­ப­டு­கின்­றன. இஸ்­லா­மிய கல்விப் போத­னைகள் பெரு­மானார் (ஸல்) அவர்­களின் நபித்­துவ (இறை­தூ­த­ரான) வெளிப்­பாட்டின் பின், முஸ்­லிம்­களின் புனி­த­மிகு மஸ்­ஜி­து­களில் ஒன்­றான மதீனா முனவ்­வ­ராவை அடிப்­ப­டை­யாகக் கொண்டு தோற்றம் பெற்­றன. சில நூற்­றாண்­டு­களில் இஸ்­லாத்தின் விரி­வாக்கம் வியா­பித்த போது , அப்­பா­ஸிய கிலா­பத்தின் தலை நக­ரான பக்­தாத்­துக்கும், அதை அண்­மித்­துள்ள நாடு­க­ளுக்கும் மிக விரை­வி­லேயே இஸ்­லா­மிய கல்வி முறை­களும் அறி­மு­க­மாகி அதனைத் தொடர்ந்து முஸ்­லிம்கள் வாழ்ந்த நாடு­க­ளுக்­கெல்லாம் இஸ்­லா­மியப் போத­னைகள் அறி­மு­க­மா­கின. இத்­தொ­ட­ரி­லேயே இலங்­கை­யிலும் இஸ்­லா­மிய போத­னைகள் அறி­மு­க­மா­கி­யது என நாம் உறுதி கொள்­ளக்­கூ­டிய பல வர­லாற்றுச் சான்­றுகள் காணப்­ப­டு­கின்­றன. இவ்­வா­றான இஸ்­லா­மிய போத­னைகள் ஆரம்­பத்தில் முஸ்­லிம்கள் வாழ்ந்த இலங்­கையின் கிரா­மங்கள், நக­ரங்­களில் காணப்­பட்ட மஸ்­ஜி­து­க­ளி­லேயே பெரும்­பாலும் இடம்­பெற்று வந்­தன.

‘எவ்­வா­றெ­னினும் கி.பி. 1870ஆம் ஆண்­டுக்கு முன்னர் இலங்­கையில் காணப்­பட்ட இவ்­வா­றான இஸ்­லா­மிய போதனை நிலை­யங்­களின் எண்­ணிக்கை, அதில் கல்வி கற்ற மாணவர் தொகை, கற்­பிக்­கப்­பட்ட கல்­வி­முறை, கல்­வி­கற்று வெளி­யான மாணவர் தொகை என்­பன பற்­றி­யெல்லாம் உறு­தி­யாகக் கூற முடி­யா­துள்­ளது. (இப்­றாஹீம் எம்.ஏ.)
1870க்கு முன் இலங்­கையில் காணப்­பட்ட இவ்­வா­றான இஸ்­லா­மிய கல்வி போதனை நிலை­யங்­களை இரண்­டாக வகைப்­ப­டுத்­தலாம்.

1. ‘மக்­தபா’ அல்­லது ‘கதா­தீபு’ என அழைக்­கப்­பட்ட சிறார்­க­ளுக்கு அல் குர்­ஆ­னையும், இஸ்­லா­மிய நம்­பிக்கை, மார்க்க சட்­ட­திட்­டங்கள், எழுத்துப் பயிற்சி, கணிதம் என்­ப­வற்றை கற்­பிக்கும் ஆரம்ப மத்­ர­ஸாக்கள். இவ்­வா­றான சில மத்­ர­ஸாக்­களில் குர்­ஆனை மனனம் செய்யும் பகு­தியும் காணப்­பட்­டது.

2. உயர் கல்­வியைக் கற்கும் அற­பு­மொழி மத்­ர­ஸாக்கள். இவ்­வா­றான மத்­ர­ஸாக்­களில் அற­பு­மொழி இலக்­கண, இலக்­கி­யங்கள், அல்­குர்ஆன், அல்­ஹ­தீஸின் விரி­வான ஆய்­வுகள், இஸ்­லா­மிய சட்­டக்­கலை, வர­லாறு என பல்­வேறு துறை­யி­லான போத­னைகள் இடம்­பெற்று வந்­தன.

அற­பு­நா­டு­களில் தோற்­றம்­பெற்­றி­ருந்த இவ்­வா­றான உயர்­கல்­வியை அடிப்­ப­டை­யாகக் கொண்ட மத்­ர­ஸாக்கள் கி.பி. 16ஆம்­நூற்­றாண்டில் இந்­தி­யா­விலும், 19ஆம் நூற்­றாண்டில் இலங்­கை­யிலும் அறி­மு­க­மா­கின.

கி.பி. 1258இல் நடந்த பக்­தாதின் வீழ்ச்­சிக்கு முன் இலங்கை முஸ்­லிம்­களின் அற­பு­லகத் தொடர்­பு­களும், தென்­னிந்­தியா, இந்­தோ­னே­ஷியா, மலே­ஷியா போன்ற தென் கிழக்கு ஆசிய நாடு­க­ளு­ட­னான தொடர்­பு­களும் மிக அதி­க­ளவில் காணப்­பட்­டன. அற­பு­லக கலீ­பா­வான ஹாறூன் ரஷீத் அவர்கள் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கு இஸ்­லா­மிய கல்விப் போத­னை­களைக் கற்­பிக்க காலித் இப்னு பக்­காயா என்­ப­வரை இலங்­கைக்கு அனுப்­பி­ய­தாக உறு­தி­யான வர­லாற்று சான்று காணப்­ப­டு­கின்­றது. அவரைத் தொடர்ந்து வந்த பல கலீ­பாக்­களும் இவ்­வா­றான முயற்­சி­களை தொடர்ந்து மேற்­கொண்டு வந்­தனர். இலங்­கைக்கு வியா­பா­ரி­க­ளாக வந்த பல இஸ்­லா­மிய அறி­ஞர்­களும் இலங்­கையில் தரித்­தி­ருந்து இஸ்­லா­மிய கல்விப் போத­னை­களில் மிக விருப்­ப­முடன் ஈடு­பட்டு வந்­த­தையும் அறிய முடி­கின்­றது.

இலங்­கையின் சில இஸ்­லா­மிய அறி­ஞர்கள் பக்­தா­திலும், அற­பு­லக நாடு­க­ளிலும் மிகவும் பிர­பல்யம் பெற்று விளங்­கி­னார்கள். இலங்கை முஸ்லிம் அறி­ஞர்­களால் அறபு மொழியில் எழு­தப்­பட்ட பல நூல்கள், ஆக்­கங்கள் அற­பு­லக அறி­ஞர்­களின் பாராட்­டையும் கவ­னத்­தையும் பெற்­றி­ருந்­த­தா­கவும் நாம் அறிய முடி­கின்­றது.

இலங்­கையை ஆண்ட பல சிங்­கள மன்­னர்கள் இவ்­வாறு அற­பு­மொ­ழியில் திற­மை­பெற்று விளங்­கிய முஸ்லிம் அறி­ஞர்­களை எகிப்து, பக்தாத் போன்ற அற­பு­லக நாடு­க­ளுக்கு தூது­வர்­க­ளாக அனுப்பி அவர்­களின் பல்­வேறு வெகு­ம­தி­களை தமக்­காக பெற்­றுக்­கொண்­ட­தோடு, ஏற்­று­மதி இறக்­கு­மதி – பண்­ட­மாற்று வர்த்­த­கத்­துக்கும் அவர்­களைப் பயன்­ப­டுத்தி வந்­தார்கள்.

இலங்­கையை ஆட்­சி­செய்த போர்த்­துக்­கேயர் ஒல்­லாந்­தர்­களின் ஆட்சிக் காலங்­களில் இலங்கை முஸ்­லிம்­க­ளுக்கும் அறபு நாடு­க­ளுக்­கு­மி­டை­யி­லான தொடர்­பு­களும் அறபு மொழி மூல­மான வியா­பார பரி­மாற்­றமும் ஓர­ளவு வீழ்ச்­சி­ய­டைந்து காணப்­பட்­டது.

மத்­ர­ஸாக்­களின் தோற்றம்
19ஆம் நூற்­றாண்டின் இறுதிப் பகு­தியில் இலங்­கையின் தென் மாகா­ணத்தின் வெலி­க­மயில் ‘மத்­ர­ஸதுல் பாரி’ என்ற மத்­ர­ஸாவும், அதனைத் தொடர்ந்து காலி கோட்­டையில் ‘பஹ்­ஜதுல் இப்­றா­ஹி­மிய்யா’ என்ற மத்­ர­ஸாவும் இலங்­கையின் முதன்மை மத்­ர­ஸாக்­க­ளாகத் தோற்றம் பெற்­றன. இலங்­கையில் தோற்றம் பெற்ற பல அர­சாங்கப் பாட­சா­லை­களில் அறபு மொழியும் ஒரு பாட­மாக கற்­பிக்­கப்­பட்டு வந்­தது. குறிப்­பாக சேர் ராஸிக் பரீதின் முயற்­சி­யினால் அறபு மொழி ஒரு பாட­மாக அரச பாட­சா­லை­களில் கற்­பிக்­கப்­பட்டு வந்­த­துடன், இதைக் கற்­பிப்­ப­தற்­காக மௌலவி ஆசி­ரி­யர்­களை நிய­மிக்கும் திட்­டமும் அர­சினால் மேற்­கொள்­ளப்­பட்டு வந்­தது.

இவ்­வ­ர­லாற்றின் தொடர்ச்­சி­யாக கி.பி. 19ஆம் நூற்­றாண்­டி­லி­ருந்தே கிட்­டத்­தட்ட இலங்­கையில் முஸ்­லிம்கள் அதி­க­மாக வாழும் எல்லா நகர்கள், கிரா­மங்­க­ளிலும் மத்­ர­ஸாக்கள் தோற்றம் பெற்று, முஸ்லிம் சமய, கலா­சாரத் திணைக்­க­ளத்தில் அவை பதிவு செய்­யப்­பட்டு, அரச அங்­கீ­காரம் பெற்ற அறபு மொழிக் கலா­சா­லை­க­ளாக இன்­று­வரை தமது பணி­யினைத் தொடர்ந்து முன்­னெ­டுத்து வரு­கின்­றன. இவ்­வாறு இலங்­கையில் இது­வரை 500க்கும் மேற்­பட்ட மத்­ர­ஸாக்கள் தம்மை பதிவு செய்து, ஒவ்­வொரு வரு­டமும் நூற்­றுக்­க­ணக்­கான உல­மாக்­களை இந்த நாட்டின் முஸ்லிம் சமூ­கத்தின் சமய ரீதி­யி­லான எழுச்­சிக்கும், நாட்டின் முன்­னேற்­றத்­திற்கும் பட்­ட­ம­ளித்து, வெளி­யாக்கி வரு­கின்­றன.

உல­மாக்­களின் பங்­க­ளிப்பு என்ன?
இவ்­வாறு இலங்­கையில் அறபுக் கலா­சா­லை­களில் 6 – 8 வரு­டங்கள் கல்வி கற்று வெளி­யான உல­மாக்கள் நாட்டின் மூலை முடுக்­கெல்லாம் ஆயி­ரக்­க­ணக்கில் காணப்­ப­டு­கின்­றார்கள். இவர்­களின் செயற்­பாட்டைப் பொறுத்­த­வ­ரையில் முஸ்லிம் சமூகம் மட்­டு­மன்றி, இந்­நாடும் பல்­வேறு வகையில் பல நன்­மை­களை பெற்­றுள்­ளது. பெற்று வரு­கின்­றது. அவற்றில் ஒரு சில­வற்றை மட்டும் நாம் பின்­வ­ரு­மாறு அடை­ய­ளப்­ப­டுத்­தலாம்.

முஸ்லிம் சமூ­கத்தின் தாஇக்­க­ளாக n(பிரச்­சா­ர­க­ரர்­க­ளாக) உல­மாக்கள்
முஸ்லிம் சமூகம் என்­பது வல்ல அல்­லாஹ்வின் வழி­காட்­ட­லான அல் குர்­ஆ­னையும் பெரு­மானார் (ஸல்) அவர்­களின் சுன்­னத்­தான ஹதீஸ்­க­ளையும் அடிப்­படை வழி­காட்­டி­யாகக் கொண்டு, தனது இம்மை, மறுமை வாழ்வை சீர­மைத்துக் கொள்ள உறுதி கொண்­டுள்ள ஒரு சமூ­க­மாகும்.

இந்த வகையில் இவ்­வு­லகில் எவ்­வாறு வாழ வேண்டும், தம் குடும்பம், அய­லவர், பிற சமூ­கத்­தி­ன­ரோடு எவ்­வாறு தொடர்­பு­களை வைத்துக் கொள்ள வேண்டும் என்று அல்­குர்ஆன், அல்­ஹதீஸ் மூலம் தெளி­வாக விளக்­கப்­பட்­டுள்­ள­தோடு, தான் வாழும் நாட்டின் சட்ட திட்­டங்­க­ளையும் மதித்து, அரச ஆணைக்­கேற்ப செயற்­பட வேண்­டு­மெ­னவும் இஸ்லாம் கட்­ட­ளை­யிட்­டுள்­ளது.

இஸ்­லாத்தில் பெரும்­பா­வங்­க­ளாக இறை­வ­னுக்கு இணை­வைப்­பது மட்­டு­மன்றி, விபச்­சாரம், போதை­வஸ்து பாவ­னையும் அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளன. விப­சா­ரமும் போதை­வஸ்து பாவ­னையும் எமது நாட்டின் எதிர்­கால சந்­த­தி­க­ளையே நாச­மாக்கும் வகையில் இந்த நாட்டில் இப்­போது தலை­வி­ரித்­தா­டு­கின்­றது. இவ்­வி­ரண்­டையும் இந்­நாட்­டி­லி­ருந்து முற்­றாக இல்­லா­தொ­ழிப்­ப­தற்கு எமது அர­சாங்கம் அரும் பாடு­ப­டு­வ­துடன் பல்­வேறு வேலைத்­திட்­டங்­க­ளையும் நடை­மு­றைப்­ப­டுத்தி வரு­கின்­றது. குறிப்­பாக போதை­வஸ்து பாவனை இப்­போது உலகில் பல வடிவம் பெற்று பல மூலப் பொருள்­க­ளாக உருவம் பெற்று வரு­கின்­றது. முன்னர் போதை­வஸ்து பொருட்­க­ளாக நாம் கேள்­விப்­பட்ட கஞ்சா, சாராயம், வெளி­நாட்டு மது­பா­னங்கள் மட்­டு­மன்றி, இப்­போது ஹெரோயின், ஐஸ் என்ற பல பெயர்­களில் புது­வ­டிவம் பெற்று வரு­கின்­றது. நாட்டின் கடற்­ப­ரப்பில் தினமும் கோடிக்­க­ணக்­கான போதை­வஸ்­துகள் பாது­காப்பு படை­யி­னரால் கைப்­பற்­றப்­பட்­டாலும் பல தடை­களை ஏற்­ப­டுத்­தி­னாலும் இன்­று­வரை இவ்­வி­நி­யோக மார்க்கம் வளர்ந்து கொண்டே வரு­கின்­றது.

இஸ்லாம் மார்க்­கத்தைப் பொறுத்­த­வ­ரையில் போதை­வஸ்து என்­பது என்ன பெயர் கொண்டு எவ்­வ­கையில் வெளி­வந்­தாலும் அது ஒரு பெரும் பாவ­மாகக் கணிக்­கப்­ப­டு­கின்­றது. அதே நேரத்தில் இலங்­கையின் பெரும்­பான்­மை­யின மக்­களின் மத­மான பௌத்த மதத்தை பின்­பற்­று­ப­வ­ரி­டையே மது மற்றும் போதை­வஸ்துப் பாவனை அதிகம் காணப்­ப­டு­வ­தாக அண்­மையில் மேற் கொள்­ளப்­பட்ட ஓர் ஆய்வின் மூலம் (Gombrich and Obeysekera.1988) பகி­ரங்­க­மாகத் தெரிய வந்­துள்­ளது. 4532 பேரி­டத்தில் மேற்­கொள்­ளப்­பட்ட மற்­றொரு ஆய்வில் (46 வய­து­டைய ) 48.1 வீத ஆண்­களும் 1.2 வீத பெண்­களும் போதை­வஸ்து பாவ­னையை உடை­ய­வர்­க­ளாக அடை­யா­ளப்­ப­டுத்­தப்­பட்­டுள்­ளனர்.
2019ஆம் ஆண்டு இலங்­கையின் மாவட்ட ரீதியில் மது­பானம் மற்றும் போதைப் பொருட்கள் தொடர்­பான தகவல் நிலை­யத்­தினால் (ADIC) மேற்­கொள்­ளப்­பட்ட ஆய்­வொன்றில் அநு­ரா­த­புர மாவட்­டத்தில் 34.7 வீத­மா­னோரும் நுவ­ரெ­லியா மாவட்­டத்தில் 34.3 வீத­மா­னோரும் கொழும்பு மாவட்­டத்தில் 30.7 வீத­மா­னோரும் மது­பான பாவ­னைக்கு அடி­மை­யா­கி­யுள்­ள­தாக கண்­ட­றி­யப்­பட்­டுள்­ளது.

இவ்­வா­றான மற்­றொரு பெரும்­பா­வமே விப­சா­ர­மாகும். இலங்­கையில் இன்று 50000 (ஐம்­ப­தி­னா­யிரம்) விப­சா­ரிகள் காணப்­ப­டு­வ­தாக புதிய ஆய்­வொன்று தெரி­விக்­கின்­றது. (UNFPA and UNDP- – 2014) இலங்­கையில் விப­சாரம் மேற்­கொள்­வது சட்­ட­ரீ­தி­யாக தடை செய்­யப்­பட்­டாலும் கூட, வெளி­நாட்டு சுற்­றுலா பய­ணி­களின் வருகை, வறுமை, இரவு கேளிக்கை விடு­திகள், மஸ்­ஸாஜிங் நிலையம், ஸ்பா (Spa) நிலை­யங்கள் என்­ப­வற்­றி­னூ­டாக விப­சாரம் தொடர்ச்­சி­யாக வளர்ச்சி பெற்று வரு­வதை ஆய்­வு­களின் மூலம் அறிய முடி­கின்­றது. இலங்­கையில் விப­சாரம் தடை செய்­யப்­பட்­டாலும், அதற்­கான பல்­வேறு மூல­வ­ழிகள் இன்றும் திறந்து விடப்­பட்­டுள்­ளன. குறிப்­பாக நக­ரங்­களில் மூலை முடுக்­கெல்லாம் காணப்­படும் சட்ட அனு­மதி பெற்ற தொடுகை நிலை­யங்கள் (Massage Centers and Spa) மூலம் இளம் வயது பெண்கள் மட்­டு­மன்றி, சிறு­மிகள் கூட விப­சா­ரத்தில் இல­கு­வாக இணைந்து கொள்­கின்­றனர்.

இலங்­கையில் மத்­ர­ஸாக்­களை பூர­ண­மாக இல்­லா­தொ­ழிக்க பல மட்­டத்தில் குர­லெ­ழுப்பி, சிங்­கள மக்­களை உணர்ச்­சி­யூட்டும் பௌத்த துற­விகள் எவரும், இலங்­கையில் இடம்­பெறும் இவ்­வா­றான விப­சார விடு­திகள், அதில் சீர­ழியும் ஆயி­ரக்­க­ணக்­கான யுவ­திகள் பற்­றியோ எவ்­வித குரலும் எழுப்­பாது அதற்கு எதி­ராக எவ்­வித நட­வ­டிக்­கையும் எடுக்­கா­ம­லி­ருப்­பது புது­மை­யா­னதே.

ஆனால் அற­புக்­கல்­லூ­ரி­களில் (மத்­ர­ஸாக்­களில்) கல்வி கற்று வெளி­யாகும் உல­மாக்கள், விப­சாரம், போதை­வஸ்­துக்கு எதி­ராக இஸ்­லா­மிய வழியில் போதனை செய்து முடிந்­த­ளவு முஸ்லிம் சம­ுதா­யத்­தி­லா­வது இவ்­விரு பெரும் பாவங்­க­ளையும் குறைப்­ப­தற்கு காரண கர்த்­தாக்­க­ளாக அமைந்­துள்­ளார்கள். அவ்­வாறே இந்த உல­மாக்கள், பொய் பேசுதல், மனித குலத்­துக்கு தீங்கு செய்தல், முறை­கே­டான வியா­பாரம், கொடுக்கல் வாங்கல் போன்ற பல்­வேறு பாவங்­க­ளுக்கு எதி­ரா­கவும் மக்­க­ளுக்கு உரிய இஸ்­லா­மிய போத­னை­களை தினமும் நடாத்தி, அப்­பா­வங்­க­ளி­லி­ருந்து அவர்கள் முற்று முழு­தாக விடு­பட அர்ப்­ப­ணிப்­புடன் சேவை­யாற்றிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள். இத்­த­கைய தூய்­மை­யான இஸ்­லா­மியக் கல்­வியை இவர்­க­ளுக்கு போதித்­தது மத்­ர­ஸாக்­களே என்­பதில் மாற்றுக் கருத்து கிடை­யாது.

இலங்­கையில் முஸ்­லிம்­களின் மத்­ர­ஸாக்கள் போன்று பௌத்­தர்­களின் தம்ம பாட­சா­லை­களும், ஹிந்­துக்­க­ளி­னதும், கிறிஸ்­த­வர்­க­ளி­னதும் அற­நெறிப் பாட­சா­லை­களும் சிறு­வர்­களை பாட­சாலை மாண­வர்­களை இலக்­காகக் கொண்டு, அவர்­க­ளுக்கு தத்­த­மது சமய போத­னை­க­ளையும் அற­நெறிக் கருத்­துக்­க­ளையும் போதிப்­பதை, நடை­மு­றைப்­ப­டுத்­து­வதை நோக்­காகக் கொண்டு பல்­லா­யிரம் வரு­டங்­க­ளாக செயல்­பட்டு வரு­கின்­றன. இவ்­வா­றான சமயம் சார்ந்த பாட­சா­லைகள், கல்­லூ­ரி­களால் அதில் கல்வி பயிலும் மாண­வர்­க­ளி­டையே எந்­த­ளவு அற­நெறிக் கருத்­துக்­களை, வாழ்க்கை முறை­களை ஏற்­ப­டுத்த முடிந்­தது? என்­பது ஆழ­மாக ஆய்வு செய்­யப்­பட வேண்டும்.

ஏனெனில், இலங்­கையில் வாழும் முஸ்லிம் அல்­லா­த­வர்­க­ளி­டையே போதை­வஸ்துப் பாவனை, பாவ­மான ஆண் பெண் தொடர்­புகள், விபச்­சா­ரங்கள், ஏனைய சமூ­கங்­க­ளுக்கு எதி­ரான தாக்­கு­தல்கள், கொலைகள், கொள்­ளைகள், தர்க்­கங்கள் போன்ற பல பாவச் செயல்­களும், தவ­றான நடத்­தை­களும் இலங்­கையில் தினமும் அதி­க­ரித்துச் செல்­கின்­றதே தவிர குறைந்­த­பா­டில்லை. பௌத்த தர்­மங்­க­ளுக்கும் பௌத்த துற­வி­களின் வழி­காட்­டு­த­லுக்கும் முற்­றாக கீழ்ப்­ப­டியும் சமூ­க­மாக தம்மைக் காட்டிக் கொண்­டி­ருக்கும் பௌத்­தர்­களால் கூட இவ்­வா­றான பாவங்­களை விட்டும் தவிர்ந்து கொள்ள முடி­யாமல் இருப்­பது துர­திஷ்­டமே. இலங்­கையில் முஸ்­லிம்கள், தமி­ழர்­க­ளுக்கு எதி­ராக சிங்­க­ள­வர்­களால் மேற்­கொள்­ளப்­பட்ட பல தாக்­கு­தல்கள், அரா­ஜக நட­வ­டிக்­கை­களின் வர­லாற்­றையும் அச்­செ­யற்­பாட்டின் தன்­மை­யையும், நாம் ஆய்வு செய்­கின்ற போது பௌத்த மத இளை­ஞர்­க­ளா­லேயே இத்­தாக்­கு­தல்கள் தோற்­று­விக்­கப்­பட்டு மிகத் திட்­ட­மிட்ட முறையில் மாற்றுச் சமூ­கத்­த­வர்­களும் அவர்­களின் வீடுகள், வணக்­கஸ்­த­லங்கள், வியா­பா­ரத்­த­லங்கள் என அழித்­தொ­ழிக்­கப்­ப­டு­வதை அளுத்­கம, திகன, மினு­வாங்­கொட ஆகிய இடங்­களில் இடம்­பெற்ற மிக அண்­மைக்­கால இனவன்முறை­களின் போது கூட எம்மால் அறிய முடிந்­தது. அதிலும் மிக ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால், நல்­லொ­ழுக்­கத்­தையும் அற­நெ­றி­க­ளையும் மற்ற சமூ­கங்­க­ளு­ட­னான உற­வு­க­ளையும் போதிக்க வேண்­டிய பௌத்த மத­கு­ரு­மாரே இவ்­வா­றான சில கல­வ­ரங்­களின் முக்­கிய சூத்திர­தா­ரி­க­ளாக செயல்­பட்­டுள்­ள­மையை உயிர்த்த ஞாயிறு தாக்­கு­தல்கள் பற்­றிய ஜனா­தி­பதி ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையின் மூலம் அறிய முடி­கின்­றது.

அவ்­வா­றானால் பௌத்த மத ஆரம்பக் கல்­வி­களும் தம்ம பாட­சா­லை­களும் அவற்றின் போத­னை­களில் செயற்­பாட்டுக் கிர­மத்தில் வெற்­றி­பெற முடி­ய­வில்­லையா? என்ற கேள்வி எம்மில் எழு­கின்­றது. அது­மட்­டு­மன்றி பௌத்த மக்­க­ளையும், இளை­ஞர்­க­ளையும் குறிப்­பாக யுவ­தி­க­ளையும் பெரு­ம­ளவில் சீர­ழித்­துக்­கொண்­டி­ருக்கும் போதை­வஸ்து, விபச்­சாரம், தவ­றான ஆண் பெண் உற­வுகள், சமயம் வெறுக்கும் களி­யாட்­டங்­களை இந்த நாட்­டி­லி­ருந்து முற்­றாக இல்­லா­தொ­ழிக்கும் எந்த வேலைத் திட்­டத்­தையும் எவ்­வித பிர­சா­ரங்­க­ளையும் எந்த மத­கு­ருவோ, பன்­ச­லை­களோ, அமைப்­பு­களோ இது­வரை திட்­ட­மிட்ட முறையில் மேற்­கொள்­ள­வு­மில்லை. அதற்­கான எவ்­வித முயற்­சி­களும் எடுக்­கப்­ப­ட­வில்லை என்­பது இவற்­றினால் பாதிப்­புக்­குள்­ளாகும் எம்­ம­வர்­க­ளுக்கும் ஒரு துர­திஷ்­டமே. இந்த நாட்டின் எல்லா விட­யங்­க­ளிலும், அர­சியல், கல்வி, சுகா­தாரம், அபி­வி­ருத்தி என்ற அனைத்து துறை­க­ளிலும் ஆழ­மாக வேரூன்றி பாடு­படும் எந்த பௌத்த துற­வி­களும் மேற்­சொன்ன விட­யங்­களில் இன்­று­வரை எவ்­வித நட­வ­டிக்­கை­களும் எடுக்­காது அவற்றை அவர்­களே அங்­கீ­க­ரிப்­பது போல் கைகட்டி வேடிக்கை பார்த்து நிற்­கின்­றனர்.
ஆனால் மத்­ர­ஸாக்­களில் கல்வி கற்று வெளி­யாகும் உல­மாக்கள், தமக்கு மத்­ரஸா தந்த தூய்­மை­யான கல்­வியின் வழியில் செயல்­பட்டு, இவ்­வா­றான மோச­மான, பாவ­மான, செயல்­களை தமது சமூ­கத்­தி­லி­ருந்து மட்­டு­மல்ல, தாம் வாழும் சூழல், தமது பிர­தேசம், ஊரி­லி­ருந்து வேரோடு களை­வ­தற்கு தொடர்ந்து பாடு­பட்டு வரு­வ­துடன், இதற்­காக வெள்ளிக்­கி­ழமை ஜும்ஆ, மிம்­பர்கள், தஃவா களங்கள், பயான்கள், திரு­மண வைப­வங்கள், ஜனாஸா அடக்கம் செய்­யப்­படும் நிகழ்­வுகள் என்ற அனைத்­தையும் பூர­ண­மாக பயன்­ப­டுத்தி வரு­வதன் மூலம் குறைந்­தது தமது சமூ­கத்­தி­லி­ருந்­தா­வது இவற்றை இல்­லா­தொ­ழிக்க முயற்சிக்கின்றனர். எனவே சமூக, சமய, நாட்டின் மறு­ம­லர்ச்­சிக்­கான மத்­ர­ஸாக்­களின் பங்­க­ளிப்பை எவரும் இல­கு­வாகக் கருதி விட முடி­யாது.

இலங்­கையின் கல்விப் பங்­க­ளிப்பில் உல­மாக்கள்
இலங்­கையில் காணப்­படும் பாட­சா­லை­க­ளிலும், உல­மாக்கள் ஆசி­ரி­யர்­க­ளாக, அதி­பர்­க­ளாக, கல்விப் பணிப்­பா­ளர்­க­ளாக, விரி­வு­ரை­யா­ளர்­க­ளாக, திட்­ட­மிடல் அதி­கா­ரி­க­ளாக, ஆயி­ரக்­க­ணக்கில் கட­மை­யாற்றி வரு­கின்­றார்கள். பலர் தமது கட­மை­களை செவ்­வனே நிறை­வேற்றி ஓய்வும் பெற்­றுள்­ளார்கள். இவ்­வா­றான உல­மாக்கள் தமது சமயம் சார்ந்த அற­பு­மொழி, இஸ்­லா­மிய துறை பாடங்கள் மட்­டு­மன்றி, பல்­வேறு துறை­க­ளிலும் பாடங்­க­ளிலும் கூட இவ்­வாறு வேவை­யாற்றி வரு­கின்­றார்கள். இவ்­வா­றான கடமை உணர்­வுள்ள உல­மாக்­களை உரு­வாக்­கி­யது இந்­நாட்டில் ஆயிரம் ஆண்­டு­க­ளாக செயல்­பட்­டு­வரும் மத்­ர­ஸாக்­களே என்­பதில் மாற்றுக் கருத்­தில்லை.

வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளாக உல­மாக்கள்
இலங்­கையில் காணப்­படும் ‘ஜாமிஆ நளீ­மிய்யா’ போன்ற உயர் அற­பு­மொழி கல்விக் கூடங்­களில் கற்று வெளி­யான பல இஸ்­லா­மிய அறி­ஞர்கள் இன்று இலங்கை நாட்டின் தூது­வர்­க­ளாக வெளி­நா­டு­களில் பணி­பு­ரி­கின்­றனர். எனக்குத் தெரிந்த வகையில் இவ்­வாறு மூவர் வெளி­நாட்டுத் தூது­வர்­க­ளாக பணி புரி­கின்­றனர். எவ்­வாறு இலங்­கையில் மன்னர் காலத்தில் அறபு மொழி தெரிந்த உல­மாக்கள் மன்­னர்­களின் தூது­வர்­க­ளாக அறபு நாடு­க­ளுக்கு பல­முறை சென்று வந்­தார்­களோ அப்­பணி இப்­போதும் உல­மாக்கள் மூலம் தொடர்­கின்­றமை மத்­ர­ஸாக்­களின் இந்­நாட்­டுக்­கான பங்­க­ளிப்­பாகும்.

பல்­க­லைக்­க­ழ­கங்­களில் உல­மாக்கள்
இலங்­கை­யி­லுள்ள பத்­துக்கும் மேற்­பட்ட பல்­க­லைக்­க­ழ­கங்­களில் உல­மாக்கள் விரி­வு­ரை­யா­ளர்­க­ளா­கவும், பேரா­சி­ரி­யர்­க­ளா­கவும், பீடத் தலை­வர்­க­ளா­கவும் பீடா­தி­ப­தி­க­ளா­கவும் கட­மை­யாற்றி வரு­கின்­றனர். மத்­ர­ஸாவில் தமது ஆரம்பக் கல்­வியைக் கற்று வெளி­யான இவர்கள், அறபு, இஸ்­லா­மியத் துறை­களில் மட்­டு­மன்றி, பல்­வேறு துறை­க­ளிலும் கட­மை­யாற்றி வரு­வதை ஒரு பல்­க­லைக்­க­ழக முன்னாள் ஊழியர் என்ற வகையில் என்னால் நிரூ­பிக்க முடியும். அவ்­வாறே உல­மாக்கள் பலர் குறிப்­பாக பெண் மௌல­வி­யாக்கள் இலங்­கையில் பல்­க­லைக்­க­ழ­கங்­களில் கற்று வைத்­தியக் கலா­நி­தி­க­ளா­கவும் இலங்­கையின் பல்­வேறு பகு­தி­களில் கட­மை­யாற்றி வரு­வ­தையும் நான் அறிவேன்.

அமைச்­சுக்­களின் செய­லா­ளர்­க­ளாக உல­மாக்கள்
இலங்­கையின் மத்­ர­ஸாக்­களில் அறபுக் கல்­விக்­கூ­டங்­களில் கற்று வெ ளியான பல உல­மாக்கள் இலங்­கையின் பல்­வேறு அமைச்­சு­களில் செய­லா­ளர்­க­ளாக, உதவிச் செய­லா­ளர்­க­ளாக தொடர்ந்து கட­மை­யாற்றி வரு­கின்­றனர். பலர் கட­மை­யாற்றி இப்­போது ஓய்வு நிலை­யையும் அடைந்­துள்­ளனர். இவ்­வாறு இரு­ப­துக்கும் மேற்­பட்ட உல­மாக்கள் பல்­வேறு அமைச்­சு­களில் செய­லா­ளர்­க­ளாக, உதவிச் செய­லா­ளர்­க­ளாக கட­மை­யாற்­று­வதை தர­வுகள் மூலம் நாம் அறி­யலாம்.

மாவட்ட, பிர­தேச செய­லா­ளர்­க­ளாக உல­மாக்கள்
இலங்­கையில் பல்­வேறு பிர­தே­சங்­களில் (மத்­ர­ஸாக்­களில், அற­புக்­கல்விக் கூடங்­களில் கற்று வெளி­யான) உல­மாக்கள் மாவட்டச் செய­லா­ளர்­க­ளாக சுமார் 25க்கும் மேற்­பட்டோர் கட­மை­யாற்றி வரு­வ­தையும், காலஞ்­சென்ற முன்னாள் உதவி மாவட்ட செய­லாளர் ஹபீப் முஹம்­மது என்­ப­வரும் ஒரு உல­மாவே என்­பதில் வியப்­பில்லை. இவர்கள் அனை­வரும் தமது மத்­ரஸாக் கல்­வியை இந்­நாட்டின் சிறந்த நிர்­வா­கத்­துக்கும் நல்­லாட்­சிக்கும் அர்ப்­ப­ணித்து செயற்­ப­டு­கின்­றமை அவர்­களின் சேவை மனப்­பாங்கு மூலம் நாம் அறி­யலாம்.

சட்­டத்­து­றையில் உல­மாக்கள்
அறபுக் கல்­லூ­ரி­களில் கல்வி கற்று வெளி­யான பல உல­மாக்கள் இலங்­கையில் பல பகு­தி­களில் சட்­டத்­த­ர­ணி­க­ளா­கவும், நீதி­ப­தி­க­ளா­கவும் கட­மை­யாற்றி வரு­கின்­றார்கள்.
சர்­வ­தேச நாடு­களின் மகா­நா­டு­களில் மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளாக உல­மாக்கள்
இலங்­கையில் 1976ஆம் ஆண்டில் அணி­சேரா நாடு­களின் உச்சி மாநாடு அப்­போ­தைய பிர­தமர், திரு­மதி ஸ்ரீமாவோ பண்­டா­ர­நா­யக்கா அவர்­களின் தலை­மையில் நடை­பெற்­றது. அவ்­வாறே காமன்வெல்த் நாடு­களின் உச்சி மாநாடு 2013ஆம் ஆண்டில் அப்­போ­தைய ஜனா­தி­பதி மகிந்த ராஜ­பக்ஷ தலை­மையில் நடை­பெற்­றது. இவ்­வாறு பல சர்­வ­தேச மாநா­டு­களும், பல்­வேறு சர்­வ­தேச கருத்­த­ரங்­கு­களும் இலங்­கையில் பல­முறை நடை­பெற்­றுள்­ளன. தொடர்ந்து நடை­பெற்று வரு­கின்­றன. இம்­மா­நா­டு­களில், கருத்­த­ரங்­கு­களில் அறபு நாடு­க­ளி­லி­ருந்து நூற்­றுக்­க­ணக்­கான அர­சியல் பிர­மு­கர்கள், பிர­தம மந்­தி­ரிகள், ஜனா­தி­ப­திகள், அமைச்­சர்கள், ஆய்­வா­ளர்கள், ஒவ்­வொரு நாட்டின் பிர­தி­நி­தி­க­ளாக பங்­கு­பற்­று­வ­துடன் இந்­நாட்டின் அபி­வி­ருத்­திக்கும் வளர்ச்­சிக்கும் தம்­மா­லான பங்­க­ளிப்­புக்­க­ளையும் தமது நாடு­க­ளி­லி­ருந்து பெற்றுக் கொடுத்­துள்­ளனர். இவ்­வா­றான மாநா­டு­களில், முக்­கிய மொழி­பெ­யர்ப்­பா­ளர்­க­ளாக இலங்கையின் மத்ரஸாக்களில் கல்வி கற்று வெளியான உலமாக்களே கடமையாற்றியுள்ளமை நிதர்சனமாகும். பொதுவாக இம்மாநாடுகளின் பூரண வெற்றிக்கு இந்த உலமாக்களும் குறிப்பிட்ட வகையில் தமது பங்களிப்பை நல்கியுள்ளமை வெள்ளிடைமலையாகும்.
இவ்வாறு ஆயிரம் ஆண்டுகளாக இந்நாட்டில் கல்வி போதிக்கும் மத்ரஸாக்களும், அங்கு கற்று வெளியாகிய அறிஞர்களும் இந்நாட்டின் வளர்ச்சிக்கும் எழுச்சிக்கும் பல்வேறு வழிகளில் தொடர்ச்சியாக தமது பங்களிப்பை நல்கி வருகின்றமையை நாம் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

சஹ்ரானும் மத்ரஸாவும்
கடந்த 2019 ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் முக்கிய சூத்திரதாரியாக கருதப்படும் சஹ்ரான் ஹாசிமும் ஒரு அறபுக் கல்லூரியில் மத்ரஸாவில் கற்றவரே என்பது இன்று மத்ரஸாக்களை இல்லாதொழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டி நிற்பவர்கள் கூறும் முக்கிய காரணமாகும்.

இக்கூற்றில் உண்மையிருப்பினும், சஹ்ரானின் இளமைக் கால வாழ்க்கை வரலாற்றை தெரிந்தால், அவனின் மூர்க்கக் குணமும் யாருக்கும் கட்டுப்படாத வெறித்தனமும், தன்னிலையாக எம்முடிவையும் எடுக்கும் சர்வாதிகார போக்கையும் நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளமுடியும். உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல் தொடர்பான ஆணைக்குழு விசாரணை அறிக்கையிலும் சஹ்ரானின் இவ்வாறான மோசமான செயற்பாடுகள் பல வெளிப்படுத்தப்பட்டுள்ளன. இவ்வாறான பல மோசமான செயற்பாடுகளினாலேயே சஹ்ரான் மத்­ர­ஸா­வி­லி­ருந்து விரட்­டி­ய­டிக்­கப்­பட்­ட­துடன், அவன் மத்­ர­ஸாவில் பூர­ண­மாக கற்ற ஒரு உல­மா­வாக வெளி­வ­ர­வில்லை.

சஹ்­ரானின் மோச­மான செயற்­பா­டு­களை இந்த நாட்­டுக்கு முதலில் வெளிப்­ப­டுத்­தி­யது மத்­ரஸா நிர்­வா­கமே. இவனின் மிருகக் குணமே பல பயங்­க­ர­வா­தி­க­ளோடு தொடர்­பு­க­ளையும் ஏற்­ப­டுத்தி உயிர்த்த ஞாயிறு குண்­டுத்­தாக்­கு­தலை மேற்­கொண்டு பல நூற்­றுக்­க­ணக்­கான உயிர்­களைக் காவு கொண்­டது. இவ்­வாறு மிருக குணம் கொண்ட ஒருவன் மத்­ர­ஸாவில் சில காலம் கற்­ற­தற்­காக மத்­ர­ஸாக்­களை இல்லாதொழிக்க வேண்டும் என்று கூப்பாடு போடுவதில் என்ன நியாயம் இருக்கின்றது. வரலாற்று ரீதியாக முஸ்லிம் சமூகத்தின் எழுச்சிக்கும், உயர்ச்சிக்கும் மட்டுமன்றி இந்நாட்டின் ஐக்கியம், எழுச்சி, சர்வதேச அபிவிருத்தி, சிறந்த நிர்வாகம் அறபுலக முஸ்லிம் நாடுகளுடனான ராஜதந்திரத் தொடர்புகள் அந்நாடுகளின் பல்வேறு உதவிகள் என்பவற்றுக்கு கால்கோலாக உள்ள உலமாக்களை உருவாக்கும் இலங்கையின் மத்ரஸாக்கள், இந்நாட்டின் தேசிய சொத்துக்களில் ஒன்றாக கருதப்பட வேண்டும். பிரகடனப்படுத்தப்பட வேண்டும்.-Vidivelli

Leave A Reply

Your email address will not be published.