ஹிஷாலினிகளைத் தோற்றுவிக்கும் வறுமை

0 802

கலா­நிதி அமீ­ரலி,
மேர்டொக் பல்­க­லைக்­க­ழகம்,
மேற்கு அவுஸ்­தி­ரே­லியா

சில வாரங்­க­ளுக்கு முன்னர் சுமார் பதி­னாறு வயது நிரம்­பிய ஹிஷா­லினி என்ற மலை­யகத் தமிழ் சிறுமி ஒரு முஸ்லிம் அர­சி­யல்­வா­தியின் வீட்­டிலே பணிப் பெண்­ணாகத் தொழில்­பு­ரிந்து வரும்­வே­ளையில் தீயினால் எரி­யுண்டு அகால மரணம் எய்­தி­யமை பல சர்ச்­சை­க­ளையும் வதந்­தி­க­ளையும் தோற்­று­வித்து அர­சாங்கப் பாது­காவல் துறை­யி­னரின் விசா­ர­ணைக்கும் ஆளா­கி­யுள்­ளது. இந்தத் துயர்­ப­டிந்த சம்­பவம் இலங்­கையின் தீராத இன­வாத நோய்க்குக் கிடைத்த ஒரு புதிய கிரு­மி­யாக மாறி­யுள்­ள­திலும் ஆச்­ச­ரி­ய­மில்லை.

எனினும் இச்­சம்­பவம் பற்­றிய உண்­மைகள் இனித்தான் வெளி­வரும் என எதிர்­பார்க்­கலாம். அப்­பெண்ணின் மரணம் திட்­ட­மி­டப்­பட்ட கொலை­யாக இருந்தால் அக்­கொ­லை­ஞர்­க­ளையும் அவர்­க­ளுக்கு உடந்­தை­யாக இருந்­த­வர்­க­ளையும் சட்­டப்­படி தண்­டிக்­க­வேண்டும் என்­ப­தோடு இச்­சம்­ப­வம்­பற்­றிய விப­ரங்­களை நிறுத்­திக்­கொண்டு, இளம்­வ­யதுச் சிறு­வர்­களும் சிறு­மி­யர்­களும் பாட­சா­லையிற் கழிக்­க­வேண்­டிய பொன்­னான காலத்தை வறு­மை­யினால் பீடிக்­கப்­பட்­டுள்ள அவர்­களின் குடும்­பங்­களின் கஷ்­டங்­களைப் போக்­கு­வ­தற்­காக அடிமைத் தொழில் செய்­ய­வேண்­டிய நிலைக்குத் தள்­ளப்­ப­டு­கின்ற ஒரு நாட்டின் பொரு­ளா­தார அவ­லட்­ச­ணங்­களைப் பற்­றியும் அதனை எவ்­வாறு அர­சி­யல்­வா­திகள் தேர்தல் வேட்­டைக்­காகப் பயன்­ப­டுத்­து­கின்­றனர் என்­பது பற்­றியும் சில சிந்­த­னை­களை இக்­கட்­டுரை வாச­கர்­க­ளுடன் பகிர்ந்து கொள்ள விரும்­பு­கி­றது.

மறுக்­க­மு­டி­யாத ஓருண்மை
இலங்­கைக்குச் சுதந்­திரம் கிடைத்த நாள் தொடக்கம் இன்று வரை இலங்கை அர­சு­களோ சர்­வ­தேசத் தாப­னங்­களோ வரைந்த வறுமைக் கோடு­க­ளுக்குக் கீழே இந்த நாட்டில் வாழும் மிகப்­பெரும் வர்க்கம் மலை­நாட்டுத் தமிழர் என்­பதை யாரும் மறுக்க முடி­யாது. சுமார் இரண்டு நூற்­றாண்­டு­க­ளாக பிரத்­தா­னி­யரால் தோட்டத் தொழி­லா­ளி­க­ளாகக் கொண்­டு­வ­ரப்­பட்டு உரு­வா­கிய இத்­தமிழ்ச் சமூகம் அன்று தொடக்கம் நாடு சுதந்­திரம் அடை­யும்­வரை தோட்டத் துரை­மாரின் சுரண்­டல்­க­ளுக்­குள்­ளாகி உரி­மை­க­ளற்ற ஓர் இன­மா­கவே வளர்ந்­து­வந்­தது. சுதந்­தி­ரத்­துக்­குப்­பின்னர் அவர்­களுள் ஒரு பகு­தி­யினர் இந்­தி­யா­வுக்குத் திருப்பி அனுப்­பப்­பட ஏனையோர் பிரஜா உரிமை பெற்று இலங்கை அர­சு­க­ளாலும் தமிழ் தலை­மைத்­து­வத்­தி­னாலும் ஒரு மாற்­றாந்தாய் மனப்­பான்­மை­யு­ட­னேயே வழி­ந­டாத்­தப்­பட்டு வந்­துள்­ளமை கண்­கூடு. மலை­யகத் தமி­ழர்­க­ளுக்­குள்­ளேயே தொழிற்­சங்­க­வா­தி­க­ளாக சிலர் உரு­வெ­டுத்து அம்­மக்­களின் நல­னுக்­காகப் பாடு­ப­டு­கிறோம் என்று சொல்­லிக்­கொண்டு முன்­வந்­த­வர்­களும் அவர்­களின் குடும்­பங்­களும் அர­சியற் செல்­வாக்கால் தமது சொந்த நலன்­க­ளையே பெரிதும் வளர்த்துக் கொண்­டார்­க­ளே­யன்றி அந்த மக்­களின் வாழ்­வா­தா­ரத்தை வளர்ப்­ப­தற்குத் தவ­றி­விட்­டனர்.

வறு­மையால் பீடிக்­கப்­பட்டு பிறந்த நாட்­டை­விட்டு ஓடி­வந்த இத்­தமிழ்ச் சமூ­கத்தின் மூதா­தை­யர்கள் அனு­ப­வித்த அதே கஷ்­டங்கள் அவர்­களின் இன்­றைய சந்­த­தி­க­ளையும் இரு நூற்­றாண்­டு­க­ளுக்குப் பின்­னரும் வாட்டிக் கொண்­டி­ருக்­கின்­றன என்ற அவ­லட்­ச­ணத்தை உலகு உணர வேண்­டாமா? தோட்டத் தொழி­லா­ளி­களின் குறைந்­த­பட்ச அற்ப வேத­னத்தை ஆயிரம் ரூபா­வாக உயர்த்­து­வ­தற்கு அண்­மையில் நடந்த அர­சியல் நாடகம் எப்­ப­டி­யெல்லாம் இச்­ச­மூகம் அர­சி­யல்­வா­தி­களின் பக­டைக்­கா­யா­கி­விட்­டது என்­பதை தெளி­வு­ப­டுத்­த­வில்­லையா? சுருங்கச் சொல்­வ­தாயின் மலை­யகத் தமிழர் வறு­மையின் பிறப்­பி­ட­மா­கி­விட்­டனர். அவர்­க­ளுக்­குள்ளே ஒரு சிறு­பான்மை கல்­வி­யி­லு­யர்ந்தும் உழைப்­பினால் உயர்ந்தும் பேரா­சி­ரி­யர்­க­ளா­கவும் அர­சாங்க நிர்­வா­கி­க­ளா­கவும் கவி­ஞர்­க­ளா­கவும் கலை­ஞர்­க­ளா­கவும் முத­லா­ளி­க­ளா­கவும் வளர்ந்­துள்ள போதிலும் பெரும்­பான்­மை­யான மலை­யகத் தமிழ் குடும்­பங்கள் வறு­மையால் வாடு­கின்­றன. அந்தக் குடும்­பங்­களின் இளம் வாரி­சு­களில் ஒன்­றுதான் தீயினால் மர­ணித்த ஹிஷா­லினி. அந்த மரணம் தோட்டத் தொழி­லாளர் வர்க்­கத்தின் வறு­மையின் பிர­தி­ப­லிப்பு என்­ப­தை­விட இலங்கைப் பொரு­ளா­தார அவ­லட்­ச­ணத்தின் பிர­தி­ப­லிப்பு என்­பதே பொருந்தும்.

இலங்­கையின் பொரு­ளா­தாரம்
தோற்­று­விக்கும் ஹிஷா­லி­னிகள்
ஜெய­வர்த்­தன ஆட்­சியில் கொண்­டு­வ­ரப்­பட்ட திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கைகள் கடந்த நாற்­பது வரு­டங்­க­ளாகச் சாதித்த ஒரு முக்­கிய சாதனை உற்­பத்திப் பொருள்­களை வெளி­நா­டு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வ­து­போன்று நாட்டின் புரு­ஷர்­க­ளையும் பெண்­க­ளையும் வெளி­நா­டு­க­ளுக்கு, அதிலும் குறிப்­பாக எண்ணெய் வள வளை­குடா நாடு­க­ளுக்கு ஏற்­று­மதி செய்­வது. இலங்­கையின் வேலை­யற்றோர் பிரச்­சி­னையைத் தீர்க்க திறந்த பொரு­ளா­தாரக் கொள்கை காட்­டிய வழி இதுதான். அவ்­வாறு தொழில் தேடிச் சென்ற ஆண்­களும் யுவ­தி­களும் என்­னென்ன சூழ்­நி­லை­களில் எவ்­வித கஷ்­டங்­களை அனு­ப­வித்து அங்கு வேலை செய்­கி­றார்கள், அவர்கள் படும் இன்­னல்­க­ளென்ன, அவர்­க­ளுக்கு அங்கே என்ன பாது­காப்பு என்­பன பற்­றி­யெல்லாம் பேச்­ச­ளவில் மட்டும் கவனம் எடுத்­துக்­கொண்டு அந்தத் தொழி­லா­ளிகள் அனுப்பும் அந்­நியச் செலா­வ­ணி­யி­லேயே அரசு கண்­ணா­யி­ருந்­தது. இன்­றைய பொரு­ளா­தார நெருக்­க­டியில் அர­சாங்கம் அந்தச் செலா­வ­ணி­யையே ஒரு வரப்­பி­ர­சா­த­மாக நம்பி இருக்­கி­றது. இலங்கைப் பொரு­ளா­தா­ரத்தின் கறை­ப­டிந்த ஒரு பக்கம் இது.

வளை­குடா நாடு­க­ளுக்குப் பெண்கள் போவதன் ஆபத்­து­களை 1980களி­லேயே பேரா­சி­ரியர் எதி­ரி­வீர சரச்­சந்­திரா போன்­ற­வர்கள் விரி­வாக எடுத்­துக்­காட்­டினர். அதனால் ஏற்­படும் குடும்பப் பிரச்­சி­னைகள், பெண்­களின் திரு­மணப் பிரச்­சி­னைகள், ஒழுக்­கக்­கே­டுகள் என்­றெல்லாம் பல விட­யங்­களை ஜெய­வர்த்­தன அர­சுக்கு விளக்கி அவரின் திறந்த பொரு­ளா­தாரக் கொள்­கையை கண்­டனம் செய்­தனர். அவை­யெல்லாம் செவிடன் காதில் ஊதிய சங்­கா­யிற்று. பூகோ­ள­வா­தத்­தி­னதும் அதன் தாராண்மைப் பொரு­ளி­யல்­வா­தத்­தி­னதும் மகு­டியில் மயங்­கிய இலங்கை அரசு, சிங்­கள, தமிழ், முஸ்லிம் கன்­னி­யரும் மனை­வி­யரும் பணிப்­பெண்­க­ளாக அரபு நாடு­க­ளுக்குப் படை­யெ­டுத்­ததை ஊக்­கு­வித்­த­தே­யன்றி தடை­செய்­ய­வில்லை. இந்தப் படை­யெ­டுப்பால் நன்­மை­ய­டைந்­த­வர்­களுள் ஒரு தரகர் வர்க்கம் மேலோங்கி நின்­றது வேறு விடயம்.

முஸ்லிம் பணிப்­பெண்கள்
இலங்கை முஸ்லிம் பெண்கள் பிற இன அல்­லது பிற மதத்­த­வர்­களின் மனை­களில் பணிப்­பெண்­க­ளாக வேலை­செய்­வது அபூர்வம். முஸ்லிம் வீடு­க­ளிற்­கூட பெரும்­பாலும் வயது முதிர்ந்த பெண்­கள்தான் பணிப்­பெண்­க­ளாகக் கட­மை­யாற்­றுவர். இளம்­பெண்கள் கூண்டுக் கிளிகள் போல் தத்தம் வீடு­க­ளி­லேயும் குடி­சை­க­ளி­லே­யுமே அடை­பட்டு வாழ்ந்­து­வந்­தனர். திறந்த பொரு­ளா­தாரம் அந்த நிலை­மையை மாற்­றி­விட்­டது. அரபு நாட்டு நோக்­கிய பெண்கள் படை­யெ­டுப்பில் முஸ்லிம் பெண்கள் கணி­ச­மாக அடங்­குவர். வறுமை முஸ்லிம் கன்­னி­ய­ரையும் மனை­வி­ய­ரையும் தொழில் வாய்ப்புத் தேடி ஓடு­மாறு விரட்­டி­யது. அரபு முஸ்லிம் நாடுகள் அவர்­க­ளுக்­காகத் தமது கத­வு­களைத் திறந்­து­விட்­டன. இதில் ஆச்­ச­ரியம் என்­ன­வென்றால் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களோ மதத்­த­லை­வர்­களோ இதன் விளை­வு­க­ளைப்­பற்­றியோ முஸ்லிம் குடும்­பங்­களின் வறு­மை­யைப்­பற்­றியோ எந்த ஒரு மேடை­யிலும் வாய்­தி­ற­வாமல் மௌனி­க­ளாக இருந்­த­மையே. அகில இலங்கை ஜம்­இய்­யத்துல் உலாமா இப்­பி­ரச்­சி­னை­யைப்­பற்றி ஏன் இன்னும் வாய்­தி­ற­வாமல் இருக்­கி­றது? முஸ்லிம் சமூ­கத்தில் ஹிஷா­லி­னிகள் தோன்­ற­வில்­லையா? அன்று மர­ண­ம­டைந்த ஹிஷா­லினி ஒரு முஸ்­லி­மாக இருந்­தி­ருந்தால் முஸ்லிம் அர­சி­யல்­வா­தி­களோ மதத்­த­லை­வர்­களோ வாய் திறந்­தி­ருப்­பார்­களா?

மலை­யகம் ஒரு விதி­வி­லக்கு
இந்தப் படைக்கு ஒரு விதி­வி­லக்காய் அமைந்­தது மலை­யகம். இதற்குக் காரணம் அதன் கொடிய வறுமை. ஏற்­க­னவே வறு­மையில் உழன்று ஒரு ஒதுக்­கப்­பட்ட சமூ­க­மாக வாழ்ந்த மலை­நாட்டுப் பெண்கள், தர­கர்­க­ளுக்குப் பணம்­கொ­டுத்து, அவர்­க­ளது இச்­சை­க­ளுக்கும் ஆளாகி, விமா­ன­மேறிச் சென்று அங்­கா­வது சிறிது பணம் உழைக்­க­லா­மென்றால் அதற்­கு­ரிய சேமிப்பு அவர்­க­ளிடம் இருக்­க­வில்லை. அதற்­காக அப்­பெண்­க­ளுக்குக் கடன் கொடுப்­போரும் அந்தச் சமூ­கத்தில் இருக்­க­வில்லை. ஆகையால் மலை­யக இள­வல்­க­ளுக்கு உள்ள ஒரே­யொரு வாய்ப்பு நாட்­டுக்­குள்­ளேயே தொழில் தேடு­வ­தாகும். பள்­ளி­வ­யதுச் சிறு­வரும் சிறு­மி­யரும் பணிப்­பெண்­க­ளா­கவும் கூலி­க­ளா­கவும் தன­வந்­தர்­களின் வீடு­க­ளிலும் வேலைத்­த­லங்­க­ளிலும் தஞ்சம் புகுந்­தனர். இவ்­வா­றா­ன­வர்­களின் ஏக விநி­யோ­கத்­தர்­க­ளாக மாறி­யது மலை­நாட்டுத் தமிழ்ச்­ச­மூகம். அவ்­வாறு உரு­வா­கிய இளம் பெண்­களே ஹிஷா­லி­னிகள். அர­சி­யல்­வா­திகள் உட்­பட அநே­க­மான தன­வந்­தர்­களின் வீடு­களில் பணிப்­பெண்­க­ளாகப் பணி­பு­ரியும் பெரும்­பான்­மை­யா­ன­வர்கள் மலை­நாட்டு யுவ­தி­களே.

எந்த ஒரு தாயோ தகப்­பனோ தன்­பிள்ளை தரக்­கு­றை­வான தொழில்­பு­ரிந்து அப்­பிள்­ளையின் உழைப்பால் குடும்­பத்தின் பசி ஆற்­றப்­பட வேண்­டு­மென்று எப்­போ­துமே விரும்­பு­வ­தில்லை. ஆனால் ஒரு பக்­கத்தில் நாடும் சமூ­கமும் அவர்­க­ளுக்கு வேறு வாய்ப்­பு­களை அளிக்க மறுக்க மறு­பக்­கத்தில் பசி குடும்­பத்தை வாட்டி வதைக்க அப்­பெற்­றோ­ருக்கு வேறு வழிகள் தெரி­யா­ததால் தோற்­று­விக்­கப்­பட்­ட­வர்­களே ஹிஷா­லி­னிகள். இது யார் குற்றம்?

அர­சி­யல்­வா­தி­களும் மலை­யக மக்­களும்
இன்­றுள்ள அர­சியல் நிலை­மையில் அர­சி­யல்­வா­தி­க­ளுக்குத் தேவை மலை­யக மக்­களின் வாக்­குகள் மட்­டுமே. அவர்­க­ளுக்கு வாக்­கு­ரிமை இல்­லை­யென்றால் அவர்­களின் பக்­கமே தலை­வைத்தும் படுக்­க­மாட்­டார்கள் இலங்­கையின் இன்­றைய அர­சி­யல்­வா­திகள். கொவிட் நோயின் மத்­தி­யிலும் எவ்­வாறு ஆறு­முகம் தொண்­ட­மானின் மர­ணத்­தையும் அர­சி­யல்­ம­யப்­ப­டுத்தி ராஜ­பக்ச அரசு தேர்தல் வேட்­டை­யா­டி­யது என்­பது யாவரும் அறிந்­ததே. அவ்­வா­றா­ன­தொரு அர­சியல் வேட்டை ஹிஷா­லி­னியின் மர­ணத்­திலும் ஆரம்­பிக்­கப்­பட்­டுள்­ளதை அவ­தா­னிகள் அறிவர்.

வயது குறைந்த பெண்­க­ளையும் ஆண்­க­ளையும் தொழி­லுக்கு அமர்த்­து­வதைத் தடை­செய்­யும்­வ­கையில் சட்­ட­மி­யற்­று­வது பற்றி நாடா­ளு­மன்­றத்தில் கூக்­கு­ரல்கள் எழு­கின்­றன. அது உண்­மை­யி­லேயே நிறை­வே­றி­னாலும் அந்தப் பிரச்­சி­னையைத் தோற்­று­விக்கும் மலை­யக மக்­களின் வறு­மையை ஓட்ட என்ன வழி என்­பதை இந்த அர­சி­யல்­வா­திகள் கூறு­வார்­களா? அந்த வறுமை நிலைக்­கு­மட்டும் ஹிஷா­லி­னி­களும் பெரு­கிக்­கொண்டே இருப்பர். இது ஒரு பொரு­ளா­தாரப் பிரச்­சினை. நாடு வங்­கு­றோத்து நிலைக்குச் சரிந்து செல்­லு­கையில் இன்னும் எத்­தனை ஹிஷா­லி­னிகள் எவ்­வாறு செத்து மடியப் போகி­றார்­களோ?

தமிழ் அர­சியல் தலை­மைத்­துவம்
சுதந்திர இலங்கையின் வரலாற்றிலே மலையகத் தமிழர்களுக்கு மிகப் பெரும் அநீதி இழைத்தவர்கள் தமிழ் தலைவர்களே. 1948ஆம் ஆண்டு இலங்கைப் பிரஜா உரிமைச் சட்டத்துடன் அந்த அநீதி ஆரம்பமாகி இன்னும் தொடர்கிறது. இதைப்பற்றி இங்கு விளக்குவது இக்கட்டுரைக்குப் பொருத்தமாகாது. இனியாவது தமிழ் தலைமைத்துவம் மலையக மக்களின் நலனில் ஆழ்ந்த கவனம் செலுத்துவார்களா? மலையக மக்களிடையே வளர்ந்துள்ள தலைமைத்துவமும் முஸ்லிம் அரசியல்வாதிகள்போன்று காற்றடிக்கும் பக்கம் தலை சாய்பவர்களாகவே செயற்படுகின்றனர். இந்த நிலைமாறி சிங்கள மக்களிடையே துளிர்விட்டுள்ள முற்போக்கு அரசியல் சக்திகளுடன் கூட்டுச் சேர்ந்து செயற்படாவிட்டால் மலையக ஹிஷாலினிகள் பெருகுவதைத் தடுக்க முடியாது.

ஓர் எச்சரிக்கை
இறுதியாக ஓர் எச்சரிக்கை! இந்த அரசு எவ்வழியிலாவது சுற்றுலாத்துறையை ஊக்குவித்து அந்நியச் செலாவணியைத் திரட்ட முனைகிறது. சுற்றுலாத்துறை எவ்வாறு கன்னியர்களுக்கும் பதின்ம வயதினருக்கும் தொழில் வழங்கியுள்ளது என்பதை பிலிப்பைன்ஸ், தாய்லாந்து, வியட்நாம், கம்போடியா ஆகிய நாடுகளின் அனுபவங்களிலிருந்து தெரிந்து கொள்ளலாம். ஹிஷாலினிகள் பணிப்பெண்களாகத் தொழில் புரிவதைத் தடுக்கும் சட்டம் அவர்கள் சுற்றுலாத்துறையில் தொழில் புரிவதையும் தடுக்குமா?- Vidivelli

Leave A Reply

Your email address will not be published.