மூதூர் முறாசில்
கொரோனாவின் பேரலைத் தாக்குதல் நம் நாட்டையும் நிலைகுலையச் செய்து வருகின்றது. பொதுவாக இத்தாக்குதலில் இருந்து காத்துக் கொள்வதற்கு எல்லோரும் முயற்சித்தும் முழுமையாக ஒத்துழைத்தும் வருகின்றோம்.
இந்நிலையில் கொரோனாவிலிருந்து பாதுகாப்பைப் பெறும் முதன்மை வழிமுறையாக கொரோனா தடுப்பு மருந்தை வாங்குவதிலும் அதனைக் குடி மக்களுக்கு வழங்குவதிலும் ஆர்வம் காட்டும் முன்னணி நாடுகளைப் போலவே இலங்கை நம் தாய் நாடும் செயற்பட்டு வருகின்றது. பணம் செலுத்தியும் நன்கொடையாகவும் தடுப்பு மருந்தைப் பெறுவதில் தொடராக முயற்சித்து வருகின்றது.
கொரோனாவிற்கு எதிரான செயற்பாட்டில் ஈடுபடுவோர், இலகுவில் கொரோனா பாதிப்பிற்கு உள்ளாகும் பிரிவினர் முதலானோருக்கு முன்னுரிமை வழங்கி நாட்டு மக்கள் அனைவருக்கும் இத்தடுப்பு மருந்தை பெற்றுக்கொடுக்கும் மேலான எண்ணம் அரசாங்கத்திற்கு உண்டு.
அரசாங்கத்தினால் இலவசமாக -இலகுவாக வழங்கப்படும் இத்தடுப்பு மருந்தை கொரோனாவிலிருந்து பாதுகாப்புப் பெறுவதற்கு தமக்குக் கிடைத்த பேரதிஷ்டமாகக் கருதி அதனை ஏற்றிக்கொள்வதில் பெருந்தொகையானோர் ஆர்வம் காட்டி வருகின்றனர். அதேவேளை, சிலர் அதனை ஏற்றிக் கொள்வதிலிருந்து விலகி ஒதுங்கியிருப்பதையும் அவதானிக்க முடிகிறது.
இவ்வாறு சிலர் இத்தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ள முயற்சிக்காமைக்கு முக்கியமாக மூன்று காரணங்களை அவதானிக்க முடியும். இக்காரணங்களில் ஒன்று இம்மருந்தைப் பெற்றுக் கொள்வதனால் பக்கவிளைவுகளுக்கு உள்ளாக நேரிடும் என்ற அச்சமாகும். மற்றொன்று இத் தடுப்பு மருந்து தொடர்பாக எதுவும் அறிந்திராமையாகும். மூன்றாவது காரணம், இம்மருந்தைப் பெற்றுக் கொள்வதிலுள்ள அலட்சிய மனோபாவமாகும்.
இம்முதல் காரணத்தை கூர்ந்து நோக்கினால் சமூக ஊடகங்கள் ஊடாக தடுப்பு மருந்து தொடர்பில் போதிய அறிவில்லாதவர்களினால் இடப்பட்ட பதிவுகள் அல்லது தடுப்பு மருந்து தொடர்பிலான பதிவுகளுக்கு இடப்பட்ட பின்னூட்டங்கள் மூலமாக ஏற்படுத்தப்பட்ட பிழையான புரிதல்களே இவ்வச்சத்திற்கான அடிப்படையாக அமைந்துள்ளதனைக் காணமுடிகின்றது. அத்தோடு அரைகுறை கேள்வி ஞானத்தோடு வாய்க்கு வந்தமாதிரி கதை பின்னும் சிலரினால் ஏற்படுத்தப்பட்ட வதந்தியோ அல்லது சுயமாகவே ஏற்படுத்திக் கொண்ட பிரமையோ அல்லது சந்தேகமோ மக்களில் சிலர் இத்தடுப்பு மருந்து தொடர்பில் அச்சப்படுவதற்கான காரணமாகவுள்ள.
எனவே, இக்காரணங்கள் அனைத்துமே அறிவியலுக்குப் பொருந்தாது என்பதை இனங்கண்டு அவற்றைப்புறந்தள்ளிவிட்டு, கொரோனா தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்வதற்கு முன்வருதல் வேண்டும்.
தடுப்பு மருந்தைப் பெற்றுக் கொள்ளும் நூற்றுக் கணக்கானோரில் ஓரிருவருக்கு சிறிய காச்சல் ஏற்படலாம். பலருக்கு மருந்து ஏற்றப்பட்ட இடத்தில் ஓரிரு நாட்கள் சிறிய நோவு தென்படலாம். சரியாகக் கூறுவதானால் வயதானவர்கள் பலருக்கு ஈர்ப்பு வலிக்கு எதிரான (Tetanus toxoid vaccine) தடுப்பு மருந்தைப் பெற்ற அனுபவம் இருக்கலாம். அம்மருந்தைப் பெறுவதைக் காட்டிலும் கொரோனா தடுப்பு மருந்தைப் பெறுவது மிகவும் சௌகரியமானதாகவும் இனிமையான அனுபவமாகவும் அமையும். இதனை செலுத்தும் போதும் செலுத்திய பின்பும் பெரிதாக எவ்வித அசௌகரியமும் தென்படுவதில்லை.
தற்போது கிடைக்கப்பெறும் இத்தடுப்பு மருந்தில் பாரதூரமான எவ்வித பக்க விளைவுகளும் இல்லை. ஆதலால் இதனை ஏற்றிக்கொள்ள அச்சப்படுவதற்கு எவருக்கும் எவ்வித தேவையுமில்லை. தொற்று நோய்களுக்கெதிரான தடுப்பு மருந்தேற்றல் என்பது நேற்று இன்று உருவான விடயமல்ல. இற்றைக்கு 200 வருடங்களுக்கு முன்பு பெரியம்மை (Smallpox) வைரஸ் நோயினால் உலகம் பேரழிவை எதிர் நோக்கியிருந்த காலத்தில் தடுப்பு மருந்தை கண்டுபிடித்து அதனை ஏற்றியது முதல் பல்வேறு தொற்று நோய்களுக்கு எதிரான தடுப்பு மருந்துகள் கண்டு பிடிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டதோடு தடுப்பு மருந்தேற்றலில் அதீத நிபுணத்துவத்தையும் உலகம் நிலை நிறுத்தியுள்ளது.
நீண்ட காலமாக இலங்கை நம் நாட்டில் பல்வேறு தொற்று நோய்களுக்கெதிரான தடுப்பு மருந்துகள் நடைமுறையில் உள்ளன. பெரியம்மைக்கு எதிரான தடுப்பு மருந்து இற்றைக்கு 135 வருடங்களுக்கு முன்பு 1886 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. 1949 ஆம் ஆண்டில் காசநோக்கு எதிரான பிசிஜி (BCG) தடுப்பு மருந்து ஏற்றப்பட்டது. 1961ஆம் ஆண்டில் தொண்டைக்கரப்பான், குக்கல் மற்றும் ஈர்ப்பு வலிக்கு எதிரான முக்கூட்டு தடுப்பு மருந்து அறிமுகம் செய்யப்பட்டது. அதேபோல 1962ஆம் ஆண்டில் போலியோக்கு எதிரான வாய்மூலமான சொட்டு மருந்து வழங்கப்பட்டது.
தற்போது குழந்தையொன்று பிறந்ததன் பின்பு அதே தினத்தில் அல்லது பிறந்து நான்கு வாரங்களுக்குள் பிசிஜி தடுப்பு மருந்து ஏற்றப்படுவது முதல் குழந்தைப் பருவம், முன்பள்ளிப் பருவம், பள்ளிப் பருவம், மற்றும் வளர்ந்தோருக்கென பல்வேறு நிலைகளில் ஏற்றத்தக்க வெவ்வேறு நோய்களுக்கு எதிரான தடுப்பூசிகள் நடைமுறையில் உள்ளன.
இலங்கையில் பயன்பாட்டிலுள்ள இத்தகைய தடுப்பு மருந்துகள் போலவே கொரோனா தடுப்பு மருந்தும் பல்வேறுபட்ட ஆய்வுகளைத் தொடர்ந்து உற்பத்தி செய்யப்பட்டு வழங்கப்படுகின்றது. ஆனால், ஏனைய தடுப்பு மருந்துகளை தமக்கோ அல்லது தமது பாராட்டிச் சீராட்டி வளர்க்கும் பச்சிளம் குழந்தைகளுக்கோ வழங்குவதற்கு பெரும்பாலும் எவரும் அச்சம் கொள்வதில்லை. அவ்வாறெனில், கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுவதற்கும் எவரும் வீணாக அச்சம் கொள்ளத் தேவையே இல்லை.
எனவே, கொரோனா தடுப்பு மருந்து கிடைக்கப்பெறுவதானது உரிய தரப்பினருக்கு அந்நோயிலிருந்து விடுபடுவதற்கு கிடைத்த பெரும் வாய்ப்பாகக் கருதி அதனைப் பெற்றுக் கொள்வதற்கு முழுமனதுடன் முன்வருதல் வேண்டும்.- Vidivelli