பயங்கரவாதத் தடைச்சட்டத்தின் கீழ் கைதுசெய்து, தடுத்துவைக்கப்பட்டிருக்கும் கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமிற்கு எதிரான ஆதாரங்கள் எவையும் இல்லாதவிடத்து அவர் உடனடியாக விடுதலை செய்யப்பட வேண்டும் என்றும் அவர் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் அவரது மனித உரிமைகள் பாதுகாக்கப்படுவதை உறுதிப்படுத்துவதற்கு நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் சர்வதேச மன்னிப்புச்சபை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவிடம் வலியுறுத்தியிருக்கிறது.
இதுகுறித்து சர்வதேச மன்னிப்புச்சபையின் தெற்காசியப்பிராந்தியப் பணிப்பாளர் யாமினி மிஷ்ரா இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் ஆணையாளர் கலாநிதி ஜகத் பாலசூரியவிற்குக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார். அக்கடிதத்தில் மேற்கண்டவாறு வலியுறுத்தியிருக்கும் அவர் மேலும் கூறியிருப்பதாவது:
சந்தேகநபர் என்று கருதும் ஒருவரை எவ்வித குற்றப்பதிவுகளும் விசாரணைகளுமின்றி 18 மாதங்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைப்பதற்கான அதிகாரங்களை வழங்குகின்ற பயங்கரவாதத்தடைச்சட்டத்தின் கீழ் கடந்த 2020 ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் திகதி கைதுசெய்யப்பட்டுத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் 26 வயதுடைய கவிஞரும் ஆசிரியருமான அஹ்னாப் ஜசீமின் தற்போதைய நிலைவரம் தொடர்பில் உங்களுடைய அவதானத்திற்குக் கொண்டுவரவிரும்புகின்றேன். எவ்வித குற்றச்சாட்டுக்களோ அல்லது ஏற்றுக்கொள்ளத்தக்க ஆதாரங்களோ இல்லாமல், அஹ்னாப் ஜசீம் 400 நாட்களுக்கும் அதிகமான காலம் தடுத்துவைக்கப்பட்டிருக்கிறார். இது நியாயமான முறையில் வழக்கு விசாரணைகளுக்கு உட்படுத்தப்படுவதற்கான அவரது உரிமையைப் புறக்கணிக்கின்றது.
அஹ்னாப் ஜசீம் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் காலப்பகுதியில் மிகவும் மோசமான, மனிதாபிமானமற்ற வகையில் அவர் நடாத்தப்படுவதற்கான வாய்ப்புக்கள் காணப்படுவதுடன் சட்ட உதவியை நாடுவதற்கும் அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அஹ்னாப் ஜசீமை நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்துவதுடன் தொடர்புடைய விவகாரங்களில் அதிகாரிகள் அஹ்னாப் ஜசீமின் சட்டத்தரணிகளுடன் ஒத்துழைப்பைப் பேணவில்லை. அதுமாத்திரமன்றி அஹ்னாப் ஜசீமுக்கும் அவரது சட்டத்தரணிகளுக்கும் இடையிலான உரையாடல்கள் அதிகாரிகளால் ஒலிப்பதிவு செய்யப்பட்டுள்ளன.
கடந்த ஜூன் மாதம் 11 ஆம் திகதி அஹ்னாப் ஜசீம் கொழும்பிலிருந்து தங்காலை தடுப்புநிலையத்திற்கு மாற்றப்பட்டார். அதற்கு மறுநாள் அவரது குடும்பத்தாருடன் எவ்வித தொடர்புகளையும் ஏற்படுத்தாமல் அவர் நீதிவான் நீதிமன்றத்தில் முன்நிலைப்படுத்தப்பட்டார்.
பல நாட்களாகத் தடுத்துவைக்கப்பட்டிருக்கும் அஹ்னாப் ஜசீம் அவரது குடும்பத்தார் மற்றும் சட்டத்தரணிகளுடன் கலந்துரையாடுவதற்கு அனுமதி மறுக்கப்பட்டிருக்கும் நிலையில், அவரது உடல்நலன் மற்றும் பாதுகாப்பு தொடர்பில் அவரது குடும்பத்தினர் பெரிதும் அச்சமடைந்திருக்கின்றார்கள். தடுத்துவைத்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின்போது பொய்யான வாக்குமூலத்தை வழங்குமாறும் அவரால் புரிந்துகொள்ள முடியாத மொழியில் எழுத்தப்பட்டிருந்த ஆவணத்தில் கையெழுத்திடுமாறும் அதிகாரிகள் அஹ்னாப் ஜசீமை வற்புறுத்தியதாக அவரது தரப்பு சட்டத்தரணிகள் தெரிவித்துள்ளனர். இது சர்வதேச ரீதியில் ஏற்றுக்கொள்ளப்பட்ட மனித உரிமைகள் பிரகடனத்திற்கு அமைவாக அவரது உரிமைகளை மீறும் செயற்பாடு மாத்திரமல்ல, மாறாக நாட்டின் அரசியலமைப்பிற்கும் முற்றிலும் முரணானதாகும்.
தற்போது நடைமுறையிலிருக்கும் பயங்கரவாதத்தடைச்சட்டம் சீரான சட்டத்திருத்தங்கள் மூலம் மறுசீரமைப்புச்செய்யப்படும் வரையில் அதன்கீழ் புதிதாக கைது நடவடிக்கைகளை முன்னெடுப்பதைத் தவிர்ப்பது குறித்து செயற்திட்டமொன்றை வகுக்குமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் நாயகம் வலியுறுத்தியிருக்கிறார்.
இலங்கைவாழ் முஸ்லிம் சமூகத்தினர் இலக்குவைக்கப்பட்டு அடக்குமுறைகளுக்கு உட்படுத்தப்பட்டுவரும் சூழ்நிலையிலேயே அஹ்னாப் ஜசீமின் கைது இடம்பெற்றிருக்கிறது. எனவே அஹ்னாப் ஜசீமின் மனித உரிமைகளைப் பாதுகாப்பதற்கு விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு நான் உங்களைக் கேட்டுக்கொள்கின்றேன். அதேவேளை அவர் குற்றமிழைத்தமைக்கான முறையான சான்றுகள் எவையும் இல்லாதவிடத்து அவரை விடுதலை செய்யுமாறும் வலியுறுத்துகின்றேன். அஹ்னாப் ஜசீமின் குடும்பத்தினர் மற்றும் சட்டத்தரணிகள் அவரைச் சந்திப்பதற்குத் தடை ஏற்படுத்தப்படாதிருப்பதையும் உறுதிசெய்யவேண்டும். மேலும் பயங்கரவாதத்தடைச்சட்டத்தை மீளாய்வுசெய்து அதில் திருத்தங்களை மேற்கொள்வதற்கு இலங்கை அரசாங்கம் உடனடியாக நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் அக்கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.-Vidivelli