- சிவில் அமைப்புகள் கூடி ஆராய்வு
- சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்தவும் தீர்மானம்
காதி நீதிமன்ற முறைமையை இல்லாதொழிப்பது உள்ளிட்ட முஸ்லிம் தனியார் சட்ட திருத்தங்கள் தொடர்பில் அமைச்சரவையில் மேற்கொள்ளப்பட்டுள்ள தீர்மானங்கள் ஒருதலைப்பட்சமானவை என முஸ்லிம் சமூகத்தில் பலத்த அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளது. காதிநீதிமன்ற முறைமை ஒழிக்கப்பட வேண்டும், முஸ்லிம் ஆண்களின் பலதார மணம் தடை செய்யப்படவேண்டும் என்பன உள்ளிட்ட பல தீர்மானங்கள் அண்மையில் அமைச்சரவையில் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், இது குறித்து முஸ்லிம் சமூகத்தின் மார்க்க, சிவில் தலைமைத்துவங்களின் அபிப்பிராயங்கள் பெற்றுக் கொள்ளப்படவில்லை என்றும் மாற்றுக் கருத்துக்களை முன்வைப்பதற்கான போதிய அவகாசம் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
மேலும் நீதி அமைச்சர் அலி சப்ரியினால் நியமிக்கப்பட்ட, முஸ்லிம் சட்ட சீர்திருத்த ஆலோசனைக் குழுவும் மேற்படி தீர்மானங்கள் தொடர்பில் ஏகோபித்த சம்மதத்தை முன்வைக்கவில்லை என்றும் அக் குழுவின் உறுப்பினர்கள் மத்தியிலும் இது தொடர்பில் ஆரம்பத்திலிருந்தே கருத்து வேறுபாடுகள் நிலவுவதாகவும் தெரிய வருகிறது. இக் குழுவின் அங்கத்தவராக நியமிக்கப்பட்ட சிரேஷ்ட சட்டத்தரணி ஒருவர்,
முதல் மூன்று அமர்வுகளில் மாத்திரமே பங்கேற்றதாகவும் பின்னர் இக் குழுவிலிருந்து இராஜினாமாச் செய்து விட்டதாகவும் தற்போது அறிய முடிகிறது.
இதனிடையே, முஸ்லிம் சமூகத்தின் மார்க்க, சிவில் தலைமைகளிடம் ஆலோசிக்காது எதேச்சாதிகாரமான முறையில் முஸ்லிம் சமய விவகாரம் தொடர்பில் அமைச்சரவை மேற்கொண்டுள்ள தீர்மானத்தை சட்ட ரீதியாக சவாலுக்குட்படுத்துவது தொடர்பில் சிவில் அமைப்புகள் கொழும்பில் சில தினங்களுக்கு முன்னர் கூடி ஆராய்ந்துள்ளன. சிரேஷ்ட முஸ்லிம் சட்டத்தரணி ஒருவர் தலைமையில் இடம்பெற்ற இக் கூட்டத்தில், அமைச்சரவைத் தீர்மானத்தை நடைமுறைப்படுத்த முயற்சிக்கும்பட்சத்தில் அதனை எதிர்த்து உயர் நீதிமன்றில் அடிப்படை உரிமை மீறல் மனுக்களைத் தாக்கல் செய்வது குறித்தும் ஆராயப்பட்டுள்ளது.
இதேவேளை அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா இத்தீர்மானம் கவலையையும் அதிருப்தியையும் தருவதாக தெரிவித்துள்ளது.
காதி நீதிபதிகள் போரமும் இத்தீர்மானத்தைக் கண்டித்து நீதியமைச்சருக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளது.
அமைச்சரவையில் விடயத்துக்குப் பொறுப்பான அமைச்சராகவும் ஒரே ஒரு முஸ்லிம் அமைச்சராகவும் ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி இருக்கின்ற போதிலும், காதி நீதிமன்ற முறைமையை ஒழிப்பது உள்ளிட்ட யோசனைகளை தான் அமைச்சரவையில் முன்மொழியவில்லை என அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.- Vidivelli