ஏ.ஆர்.ஏ.பரீல்
“முஸ்லிம்கள் ஏனைய மதத்தவர்களை தங்களது சகோதரர்களாகவே கருதுகிறார்கள். அவர்களின் துன்பத்தில் பங்கு கொள்கிறார்கள். எமது சமூகத்தின் ஜனாஸாவுக்கு மெய்க்காவலராக சென்ற உதவி பொலிஸ் பரிசோதகர் விபத்தில் பலியான சோகத்தில் ஹட்டன் முஸ்லிம்கள் ஆழ்ந்திருக்கிறார்கள். ஹட்டன் ‘சமாதான நகரம்’ என்று பெயர் சூட்டப்பட்டுள்ளது. இங்கு நாம் ஏனைய சமூகத்தினருடன் கைகோர்த்து நல்லுறவுடன் வாழ்கிறோம். விபத்தில் பலியான உதவி பொலிஸ் பரிசோதகரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்கிய அனைவருக்கும் நன்றிகள்“ என ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாக சபைத் தலைவரும் அப்பிரதேச மரண விசாரணை அதிகாரியுமான ஏ.ஜே.எம்.பஸீர் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
ஹட்டனில் கொவிட் 19 வைரஸ் தொற்று காரணமாக உயிரிழந்த வயோதிபப் பெண்மணியின் ஜனாஸா நல்லடக்கத்துக்காக எடுத்துச் செல்லப்பட்டபோது ஜனாஸாவுக்கு பாதுகாப்பளித்துச் சென்ற வேன் விபத்துக்குள்ளாகி 200 அடி பள்ளத்தில் வீழ்ந்ததால் மெய்க்காவலுக்காக சென்ற ஹட்டன் பொலிஸ் நிலையத்தின் சிறு முறைப்பாட்டுப் பிரிவின் பொறுப்பதிகாரி உதவி பொலிஸ் பரிசோதகர் எஸ்.பெனடிக்ட் (SI) ஸ்தலத்திலேயே பலியானார்.
இந்த விபத்து கடந்த சனிக்கிழமை 5ஆம் திகதி ஹட்டன், வட்டவல கெரோலினா என்ற பகுதியில் காலை வேளையில் இடம்பெற்றுள்ளது. ஜனாஸாவை எடுத்துச் சென்ற வாகனத்துக்கு பாதுகாப்பு வழங்கி முன்னால் சென்ற வேனே விபத்துக்குள்ளாகியுள்ளது. விபத்துக்குள்ளான வேனின் முன் ஆசனத்தில் குறிப்பிட்ட உப பொலிஸ் பரிசோதகர் எஸ். பெனடிக்ட் பயணித்துள்ளார். வேனில் மேலும் மூன்று பொலிஸ் உத்தியோகத்தர்களும் ஜனாஸாவின் பேரன்கள் இருவருமாக மொத்தம் 6 பேர் சாரதியைத் தவிர பயணித்துள்ளனர்.
கொவிட் 19 தொற்றினால் மரணித்தவர் ஹட்டனிலிருந்து 3 கிலோ மீற்றர் தூரத்துக்கு அப்பால் நுவரெலிய வீதியில் குடாஓயா எனும் இடத்தைச் சேர்ந்த நாகூர் உம்மா (79) வயது பெண்ணாவார்.
திடீர் மரண விசாரணை அதிகாரியும் ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருமான ஏ.ஜே.எம். பஸீர் தொடர்ந்தும் ‘விடிவெள்ளி’க்கு கருத்து தெரிவிக்கையில், ‘கடந்த 2ஆம் திகதி அதிகாலை 1.20 மணியளவில் இந்த மரணச்செய்தி எனக்கு அறிவிக்கப்பட்டது. பொது சுகாதார அதிகாரி மற்றும் பொலிஸாருடன் சென்று குறிப்பிட்ட பெண்ணின் நோய் தொடர்பில் விசாரித்த போது சந்தேகம் ஏற்படவே ஜனாஸாவை சுகாதார வழிகாட்டலின்படி பொதி செய்து டிக்கோயா வைத்தியசாலைக்கு பி.சி.ஆர். பரிசோதனைக்காக அனுப்பினோம். மறுதினம் 3ஆம் திகதி பிற்பகல் 3.30 மணியளவில் கொவிட் 19 தொற்று உறுதி (பொசிடிவ்) செய்யப்பட்டது.
கடந்த 5ஆம் திகதி ஜனாஸா டிக்கோயா வைத்தியசாலையில் சீல்பண்ணப்பட்டு, அங்கு ஜனாஸா தொழுகையும் நடத்தப்பட்டது. பின்பு நல்லடக்கத்துக்காக ஓட்டமாவடிக்கு கொண்டு செல்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டது. இராணுவத்தினரே ஜனாஸாவுக்கு பாதுகாப்பு வழங்குவது வழக்கம். இராணுவத்தினர் இன்மையால் ஹட்டன் பொலிஸார் ஜனாஸாவுக்கு பாதுகாப்பு வழங்கி ஜனாஸா வண்டிக்கு முன்னால் பிறிதோர் வேனில் பயணித்தனர்.
அன்று காலை 7.20 மணியளவில் ஜனாஸா வண்டியில் சென்ற உதவியாளர் எனக்கு போன் பண்ணினார். பாதுகாப்புக்கு வந்த வாகனம் ஹட்டன் கொழும்பு வீதி 7 கிலோ மீற்றர் தூரத்தில் வட்டவல, கெரோலியா என்ற இடத்தில் விபத்துக்குள்ளாகிவிட்டதாகக் கூறினார். நான் உடனே ஸ்தலத்துக்குச் சென்றேன். காயமடைந்தவர்கள் டிக்கோயா வைத்தியசாலைக்கும், நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கும் அனுப்பி வைக்கப்பட்டார்கள். பின்பு டிக்கோயா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டவரும் நாவலப்பட்டி வைத்தியசாலைக்கு இடமாற்றப்பட்டார். அவர்கள் பாரியளவில் பாதிக்கப்படாது சிறு காயங்களுக்கு உள்ளாகியிருந்ததால் கடந்த ஞாயிற்றுக் கிழமை மாலை 6 ஆம் திகதி வைத்தியசாலையிலிருந்தும் விடுவிக்கப்பட்டார்கள்.
சனிக்கிழமை 5 ஆம் திகதி மாலை ஹட்டன் ஜும் ஆ பள்ளிவாசல் நிர்வாக சபை ஒன்று கூடி விபத்தில் பலியானவர் தொடர்பில் கலந்துரையாடியது. நிர்வாக சபையின் ஆலோசகரும், ஹட்டன் – டிக்கோயா நகரசபையின் உதவித் தலைவருமான ஏ.ஜே.எம் பாமிஸின் ஆலோசனைக்கமைய பலியான பொலிஸ் பரிசோதகரின் குடும்பத்துக்கு நிதியுதவி வழங்குவதென தீர்மானிக்கப்பட்டது. ஹட்டன் ஜமாஅத்தார்களை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு நிதி சேகரிக்கப்பட்டது. 3 இலட்ச ரூபா சேகரிக்கப்பட்டது.
அன்றைய தினமே ஹட்டன் பிரிவுக்குப் பொறுப்பான எஸ்.எஸ்.பி. விஜித டி அல்விஸை சந்தித்து உதவி வழங்குவது பற்றி தெரிவித்தோம். அவர் விபத்தில் பலியான பொலிஸ் பரிசோதகரின் குடும்பத்தினை சந்திப்பதற்கு ஏற்பாட செய்தார். ஹட்டன் ஏ.எஸ்.பி. – எஸ்.டி.எம். பாரூக் எம்முடன் இணைந்து கொண்டார். நானும், செயலாளர், பொருளாளர் என்போர் கேகாலையிலுள்ள அவரது வீட்டுக்குச் சென்று 3 இலட்சம் ரூபா நிதியுதவியினை வழங்கினோம்.
குறிப்பிட்ட ஜனாஸா 5ஆம் திகதி சனிக்கிழமை கண்டி வைத்தியசாலைக்கு எடுத்து வரப்பட்டு அங்கிருந்து குருநாகல் ஜனாஸா சேகரிக்கும் மத்திய நிலையத்துக்கு கொண்டு செல்லப்பட்டு அங்கிருந்து ஓட்டமாவடிக்கு அடக்கத்துக்காக அனுப்பப்பட்டது. அன்றை தினம் ஓட்டமாவடி மையவாடியில் மாலை ஐந்து மணியளவில் அடக்கம் செய்யப்பட்டது என்றார்.
கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள்
சம்மேளனம் புலமைப்பரிசில் உதவி
கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர். ஏ. சித்தீக்கும் விபத்தில் பலியான பொலிஸ் அதிகாரியின் கேகாலை வீட்டுக்கு ஹட்டன் ஜும்ஆ பள்ளிவாசல் தலைவருடன் சென்றிருந்தார்.
விபத்தில் பலியான பொலிஸ் அதிகாரி பெனடிக்ட் மூன்று பிள்ளைகளின் தந்தையாவார். மூன்று பிள்ளைகளும் ஒரே சூலில் பிரசவிக்கப்பட்டவர்களாவர். அவர்களில் இருவர் பெண்கள். ஒருவர் ஆண். மூவருக்கும் 19 வயது. மூவரும் க.பொ.த. உயர்தரப் பரீட்சையில் இந்தத் தடவை சித்தியடைந்திருக்கிறார்கள். இருவர் பல்கலைக்கழகத்துக்கு தகுதி பெற்றிருக்கிறார்கள்.
கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே. ஆர்.ஏ. சித்தீக்கை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு இது தொடர்பில் வினவியபோது அவர் பின்வருமாறு தெரிவித்தார்.
விபத்தில் பலியான பொலிஸ் அதிகாரியின் பிள்ளைகளின் உயர்கல்வியை கருத்திற்கொண்ட கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனம் புலமைப்பரிசில் நிதி வழங்கத் தீர்மானித்திருக்கிறது.
‘எமது சமூகத்தின் ஜனாஸாவொன்றுக்கு பாதுகாப்பு வழங்கும் கடமையில் ஈடுபட்டிருந்த பொலிஸ் அதிகாரி விபத்தில் பலியானமை எம் அனைவரையும் கவலையில் ஆழ்த்தியுள்ளது. சம்பந்தப்பட்ட குடும்பத்துக்கு உதவிகள் செய்வதன் மூலம் எமக்கு ஆறுதல் கிடைக்கிறது. இவ்வாறான உதவிகள் மூலம் நாம் சமூகங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை பலப்படுத்த முயற்சிக்கிறோம்’ என கண்டி மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் கே.ஆர்.ஏ. சித்தீக் தெரிவித்தார்.
இதேவேளை விபத்தில் பலியான உதவி பொலிஸ் பரிசோதகர் (SI) எஸ்.பெனடிக்ட் பொலிஸ் பரிசோதகராக பொலிஸ் பரிசோதகராக (IP) பதவி உயர்வு வழங்கப்பட்டது. பதவி உயர்வு கடிதம் ஹட்டன் உதவி பொலிஸ் அத்தியட்சகர் (ASP) எஸ்.டி.எம். பாரூக்கினால் அவரது குடும்பத்தவர்களிடம் கையளிக்கப்பட்டது.-Vidivelli