எஸ்.றிபான்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடைபெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அத்தாக்குதல் பற்றிய கருத்துக்களும், சந்தேகங்களும் அதிகளவில் முன் வைக்கப்படுவதனை அவதானிக்க முடிகிறது. இத்தாக்குதலை பின்னணியில் இருந்து இயக்கியவர் யார் என்பதில் சந்தேகங்கள் நீடிக்கின்றன. இந்நிலையில் இத்தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை எழுந்தமானத்தில் இவர்தான் என்று குற்றம்சாட்டுவதனையும் ஏற்றுக் கொள்ள முடியாதென்று எதிர்க்கட்சியினர் தெரிவித்துக் கொண்டிருக்கின்றார்கள். ஜனாதிபதி ஆணைக்குழுவில் சாட்சியமளித்தவர்களின் சாட்சியங்கள் மறுக்கப்பட்டுள்ளதாகவும் எதிர்க்கட்சியினர் குற்றம் சுமத்திக் கொண்டிருக்கின்றார்கள்.
எவ்வாறாயினும் இத்தாக்குதலுடன் பொறுப்புடையவர்கள் நீதியின் அடிப்படையில் உறுதி செய்யப்பட வேண்டும். இதற்கு மாற்றமாக விமர்சனங்களிலிருந்து விடுபட்டுக் கொள்வதற்காக இவர்தான் பிரதான சூத்திரதாரி என்று அடையாளப்படுத்தும் போது உண்மையான சூத்திரதாரி தப்பித்துக் கொள்வதற்கும், அவரை பாதுகாத்துக் கொள்வதற்கும் காரணமாக அமைந்துவிடும். அதுமட்டுமல்லாது உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற இன்னுமொரு தாக்குதலை தடுப்பதற்கு முடியாது கூட போய்விடும்.
இதே வேளை, அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுடன் தொடர்புடைய உண்மையான சூத்திரதாரியை அடையாளங் காணவும், கைது செய்து சட்டத்தின் முன் நிறுத்தவும் பலதரப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
முஸ்லிம்களின் நிலைப்பாடு
மேலும், இத்தாக்குதலுடன் தொடர்புடையவர்களை விரைவாக கைது செய்து சட்ட நடவடிக்கைகளை எடுப்பதற்கு முஸ்லிம்கள் வழங்கிய ஒத்துழைப்பு பிரதான காரணமாகும். இத்தாக்குதலின் பின்னர்; பாதுகாப்பு தரப்பினரின் கெடுபிடிகள், வீடுகளில் மேற்கொள்ளப்பட்ட இராணுவச் சோதனைகள், இனவாதிகளின் கருத்துக்கள் போன்றவைகளினாலும், பௌத்த இனவாதிகளின் தாக்குதல்களினாலும் முஸ்லிம்கள் பெரும் துயரங்களை அனுபவித்தார்கள்.
இத்தனை தொல்லைகளுக்கு மத்தியிலும் முஸ்லிம்கள் சமூகத்தின் மீது விரல் நீட்டப்பட்ட பயங்கரவாத முத்திரைக்கும் முஸ்லிம்களுக்கும் சம்பந்தமில்லை என்று நிருபிப்பதற்குரிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்தார்கள். பாதுகாப்பு தரப்பினருக்கு தமது பூரண ஒத்துழைப்புக்களை வழங்கினார்கள். இன்றும் முஸ்லிம்கள் அதே நிலைப்பாட்டிலேயே இருக்கின்றார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரி கைது செய்யப்பட வேண்டுமென்பதில் முஸ்லிம் சமூகம் பிடிவாதமாகவே இருக்கின்றது.
இத்தாக்குதலுக்கும் முஸ்லிம் சமூகத்திற்கும் சம்பந்தமில்லை என்பதனை நிருபித்துள்ள போதிலும், சிலர் இன்னும் முஸ்லிம் சமூகத்தை பயங்ரவாதிகள் போன்று சித்தரித்துக் கொண்டிருப்பதனையும், முஸ்லிம்களின் மத்ரஸாக்களை மூட வேண்டுமென்றும், இஸ்லாமிய புத்தகங்களின் இறக்குமதிக்கு தடைவிதிக்க வேண்டுமென்றும் தெரிவித்துக் கொண்டிருப்பது முஸ்லிம்களுக்கு வேதனைக்குரியதாகவே இருக்கின்றது. ஆதலால், அரசாங்கம் முஸ்லிம்களின் இந்த வேதனையை இல்லாமல் செய்வதற்குரிய நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.
பேராயர் மல்கம் ரஞ்சித்
உயிர்த்த ஞாயிறு (ஏப்ரல் 21) தாக்குதல் குறித்து பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்டுக் கொண்டிருக்கின்ற கருத்துக்கள் முரண்பாடுகளைக் கொண்டதாக இருக்கின்றன. இத்தாக்குதல் நடைபெற்ற போது, இத்தாக்குதலுக்கும் சாதாரண முஸ்லிம்களுக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. அதனால், பாதிக்கப்பட்டவர்கள் முஸ்லிம்களை கடிந்து கொள்ள வேண்டியதில்லை என்று அறிக்கை வெளியிட்டார். இவரது இந்த அறிக்கை பலராலும் பாராட்டப்பட்டது.
இதே வேளை, கடந்த நல்லாட்சி அரசாங்கம் தாக்குதல் குறித்த தகவல்கள் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த போதிலும், அதனை தடுப்பதற்குரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்று மைத்திரி – ரணில் கூட்டாட்சியை பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை விமர்சனம் செய்திருந்தார். மேலும், இன்றைய புதிய அரசாங்கத்தின் மீதும் ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீதும் நம்பிக்கையையும் வெளியிட்டிருந்தார்.
இத்தகைய பின்னணியில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு தனது அறிக்கையை ஜனாதிபதியிடம் ஒப்படைத்தது. இந்த அறிக்கையின் பிரதி பேராயர் கர்தினால் ரஞ்சித் ஆண்டகையிடமும் கையளிக்கட்டது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையடையாத ஓர் அறிக்கை என்பதால் அது குறித்து திருப்தி அடைய முடியாது என பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை கொழும்பு பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பொன்றில் தெரிவித்திருந்தார்.
இன்றைய அரசாங்கத்தின் மீது நம்பிக்கை வெளியிட்ட பேராயர் மல்கம் ரஞ்சித் ஆண்டகை 2021 ஏப்ரல் 21இற்கு முன்னதாக அரசாங்கம் உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சூத்திரதாரியை கைது செய்யாது போனால், நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாகவும், சர்வதேசத்தின் உதவியை நாடப்போவதாகவும் பிறிதொரு வேளையில் அவர் அரசாங்கத்தை எச்சரித்தார்.
“பௌத்த அமைப்புகளை தடை செய்யுமாறு, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் குறித்து விசாரணைகளை மேற்கொண்ட ஜனாதிபதி ஆணைக்குழு முன்வைத்துள்ள பரிந்துரைகளை நிராகரிப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆணைக்குழுவின் பரிந்துரைகள் சில பௌத்தர்களுக்கும் கத்தோலிக்கர்களுக்கும் இடையிலான ஐக்கியத்திற்கு பாதிப்பை ஏற்படுத்துகின்றன.
மேலும் ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கை முழுமையாகாத ஒன்றும் என்றும் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இவ்வாறு பௌத்த இனவாத முஸ்லிம் விரோத அமைப்புக்களுக்கு ஆதரவாக கருத்துக்களை பதிவு செய்த அவர், முஸ்லிம் அமைப்புக்களை அரசாங்கம் தடை செய்த போது அது பற்றி எக்கருத்துக்களையும் நேரடியாக வெளியிடவில்லை.
ஆயினும், இந்தப் பின்னணியில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை வெளியிட்ட கருத்துக்கள் ஊடகங்களில் முக்கிய இடத்தினைப் பிடித்தது. அதாவது, “உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலுக்கு மத தீவிரவாதம் காரணமல்ல. மத தீவிரவாதத்தை ஒரு கருவியாக பயன்படுத்தி தமது அரசியல் அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்ள முற்பட்ட சிலரது செயலே இது” என்றுள்ளார்.
“அன்று எமது சகோதரர்களை தாக்கியவர்கள் மத அடிப்படைவாதிகள் அல்லர். அந்த மத அடிப்படைவாதிகளை தமது கைபொம்மைகளாக பயன்படுத்தி, தமது அரசியல் அதிகாரங்களை வலுப்படுத்திக் கொள்ள முன்னின்றவர்களே அதனைச் செய்தனர். தமது அதிகாரத்தை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சில குழுவினர் முன்னெடுத்த முயற்சியின் பிரதிபலனாகவே அதனை நாம் பார்க்கின்றோம். மதத்தையோ, இனத்தையோ, மொழியையோ மற்றொருவரை துன்புறுத்துவதற்காக பயன்படுத்த வேண்டாம் என நாட்டிலுள்ள அனைவரிடமும் கோரிக்கை முன்வைக்கின்றோம். அத்துடன் தமது அதிகாரத்தை வலுப்படுத்துவதற்காக ஏனையவர்களை கொலை செய்யும் சிந்தனையிலிருந்து விடுபடுங்கள்” என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் கேட்டிருந்தார்.
இவ்வாறு தெரிவித்த பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் மறுநாள் மேற்படி கருத்தினை மறுத்து மற்றுமொரு அறிக்கையை வெளியிட்டார்.
நாட்டில் முஸ்லிம் தீவிரவாதம் இல்லை என நான் தெரிவிக்கவில்லை. நான் நாட்டில் எந்த அரசியல் சக்தி குறித்தும் குறிப்பிடவில்லை. நான் சர்வதேச அளவில் காணப்படும் வஹாபிசம் குறித்தே தெரிவித்தேன்.
உலகின் வலிமைமிக்க நாடுகள் வஹாபிசத்தை தங்களின் சாதனமாக பயன்படுத்தலாம். உள்ளுர் அரசியல் கட்சிகள் குறித்தோ, அதன் தலைவர்கள் குறித்தோ நான் எதனையும் தெரிவிக்கவில்லை சர்வதேச சக்திகள் குறித்தே நான் தெரிவித்திருந்தேன் என்றார்.
பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் ஆண்டகை தாம் வெளியிட்ட கருத்தை மறுநாளே மறுக்கின்றார் என்றால், அவர் ஏதோவொரு சக்திக்கு அச்சப்படுகின்றார் அல்லது தமது கருத்தை தெளிவாக முன் வைப்பதில் தடுமாறிக் கொண்டிருக்கின்றார் என்று கருத முடிகின்றது.
இரட்டை முகவராக செயற்படல்
அரசியல் நோக்கத்தை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டது என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ள கருத்தை ஏற்றுக் கொள்ள முடியாது. இரட்டை முகவராக செயற்படுவதை கர்தினால் தவிர்த்துக் கொள்ள வேண்டும். ஜனாதிபதி மற்றும் அரசாங்கம் மீது உள்ள முரண்பாட்டை அவர் தனிப்பட்ட முறையில் பேசி தீர்த்துக் கொள்ள வேண்டும். அதனை விடுத்து ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவத்தை ஒரு கருவியாக பயன்படுத்துவது முறையற்றது என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் ஞானசார தேரர் பேராயர் கர்தினாலின் கருத்துக்கு பதில் அளித்துள்ளார்.
நுவரெலியா அமோகராம விகாரையில் இடம் பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துரைக்கையிலே மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இஸ்லாமிய அடிப்படைவாதம் உலகளாவிய ரீதியில் வியாபித்துள்ளது. அறவழி மத கொள்கைக்கு அப்பாற்பட்டவர்கள் இஸ்லாமிய மத கொள்கையினை தவறான வகையில் புரிந்துக் கொண்டு அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுப்பட்டு ஏனைய மதங்கள் மீது வேறு தாக்குதல்களை முன்னெடுக்கிறார்கள்.
இஸ்லாமிய அடிப்படைவாத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் நடத்தப்பட்டது என்பது பல்வேறு விசாரணைகள் ஊடாகவும், குண்டுத்தாக்குதலில் உயிரிழந்த அடிப்படைவாதிகளின் காணொளி ஆதாரங்கள் ஊடாகவும் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. ஐ.எஸ்.ஐ.எஸ் கொள்கையினால் ஈர்க்கப்பட்டவர்கள் தாக்குதல்களை முன்னெடுத்தார்கள் என்று மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை ஆரம்பத்தில் குறிப்பிட்டார்.
ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் சம்பவம் இடம்பெற்று இரண்டு வருடங்கள் பூர்த்தியாகின்றன. இவ்வாறான நிலையில் ஏப்ரல் 21 குண்டுத்தாக்குதல் மத கொள்கையினை அடிப்படையாகக் கொண்டு நடத்தப்பட்டது அல்ல. அத்தாக்குதல் அரசியல் காரணிகளை அடிப்படையாகக் கொண்டது என மெல்கம் ரஞ்சித் கர்தினால் ஆண்டகை குறிப்பிட்டுள்ளதை வன்மையாக கண்டிக்கிறோம் என ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
அருட்தந்தையின் கருத்து
தௌஹித் ஜமாஅத் உள்ளிட்ட 15 அடிப்படைவாத அமைப்புக்களில் சுமார் 350 இஸ்லாமிய இளைஞர் யுவதிகள் அடிப்படைவாத, வன்முறைகளில் ஈடுபடுவதற்கான பயிற்சியைப் பெற்றுள்ளதாக உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. இவர்களில் தற்கொலை குண்டுதாக்குதல்களை மேற்கொண்டு இறந்தவர்கள் தவிர ஏனைய அனைவரும் நாட்டின் பல பகுதிகளிலும் நடமாடிக் கொண்டிருக்கின்றனர். எஞ்சியோரில் மிகக் குறுகியளவானோரே கைது செய்யப்பட்டுள்ளனர் என்று அருட்தந்தை சிறில் காமினி தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டு இரண்டு வருடங்கள் நிறைவடையவுள்ள நிலையில் இது வரையில் வெளியாகியுள்ள தகவல்களின் அடிப்படையில் சஹ்ரான் என்பவரால் தௌஹித் ஜமாஅத் அமைப்பினால் அடிப்படைவாத செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வந்துள்ளன. இதனுடன் தொடர்புடைய 15 அமைப்புக்கள் நாட்டில் செயற்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த அமைப்புக்களால் இஸ்லாமிய இராச்சியம், ஏனைய மதங்களை அழித்தல், இஸ்லாமியர்களுக்கு இழைக்கப்படுகின்ற அநீதிகளுக்காக அவர்களை பழிவாங்குதல் உள்ளிட்ட 5 விடயங்கள் பரப்பப்பட்டுள்ளன என்றும் தெரிவித்துள்ளார்.
மேற்படி கருத்துக்கள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம்.ஹரீஸ் பாராளுமன்றத்தில் உரையாற்றுகையில், அருட்தந்தை சிறில் காமினியின் கருத்துக்கள் குறித்து அவரை விசாரணை செய்யுமாறு அரசாங்கத்தை கேட்டுக் கொண்டார்.
இதே வேளை, உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதலின் இரண்டு வருட நிறைவையொட்டி ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிகழ்வுகள் தொடர்பில் விளக்கமளிக்கும் விசேட செய்தியாளர் மாநாடு கொழும்பிலுள்ள பேராயர் இல்லத்தில் (19.04.2021) நடைபெற்றது. இதில் பேராயர் கர்தினால் மல்கம் ரஞ்சித் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
முஸ்லிம் அடிப்படைவாதிகள், முஸ்லிம் தீவிரவாத செயற்பாடுகளை வைத்து நாம் அந்த குற்றச்சாட்டை சாதாரண முஸ்லிம் மக்கள் மீது சுமத்தப் போவதில்லை. சிறு தரப்பினரே இத்தகைய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றனர். இந்த நாட்டில் முஸ்லிம்கள் பலநூறு வருடங்களாக சிங்கள, தமிழ் மக்களுடன் மிகவும் ஐக்கியமாக வாழ்ந்து வருகின்றனர். அவர்களை நாம் ஒருபோதும் புறக்கணிக்க மாட்டோம்.
சர்வதேச அழுத்தங்கள் காரணமாக அவர்களில் சிறு தரப்பினர் இத்தகைய தீவிரவாத செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர். உண்மையான முஸ்லிம்கள் மத அடிப்படையை தவிர்த்து அவ்வாறானவர்களுக்கு இடமளிக்க வேண்டாமென நாம் உண்மையான முஸ்லிம்களிடம் கேட்டுக்கொள்கின்றோம் எனத் தெரிவித்துள்ளார்.
விசாரணைகளில் திருப்தியில்லை
“உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்வைக்கப்பட்டுள்ள பரிந்துரைகளை தவிர்த்து, ஒரு சிலரை மாத்திரம் கைது செய்து அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதால் திருப்தியடைந்து விட முடியாது. தற்போதைய அரசாங்கத்தின் செயற்பாடுகளிலும் எம்மால் 100 வீதம் திருப்தியடைய முடியாது. தற்போதுள்ளதை விடவும் மேலும் தீவிரமாக விசாரணைகளை முன்னெடுத்து உண்மைகளை வெளிப்படுத்த வேண்டும்.
கத்தோலிக்க மக்களுக்காக மாத்திரம் நாம் இந்த கோரிக்கையை முன்வைக்கவில்லை. உயிர்த்த ஞாயிறு தாக்குதல்களால் இந்து, பௌத்த, முஸ்லிம் மக்களும் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த அடிப்படைவாத தாக்குதல்களின் பின்னணி கண்டறியப்படும் வரை முழு நாடும் அச்சுறுத்தல் மிக்க நிலைமையிலேயே காணப்படும். இந்த கோரிக்கைகளின் மூலம் மதங்களுக்கிடையில் பிளவுகளை ஏற்படுத்த நாம் முயற்சிக்கவில்லை. உண்மையை கண்டறியும் செயற்பாடுகள் புறக்கணிக்கப்பட்டால் நாடு அபாய கட்டத்திலிருந்து மீள முடியாது.
‘ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தொடர்பில் கடுமையாக கூறப்பட்டுள்ளது. அண்மையில் அவர் தொடர்பில் கேள்வியெழுப்பிய போது நான் அதற்கு பதலளித்திருந்தேன். அந்த அறிக்கையில் முன்னாள் பிரதமர் தொடர்பிலும் சில விடயங்கள் கூறப்பட்டுள்ளன. ஒவ்வொருவர் தொடர்பிலும் நான் தனித்தனியாக கருத்துக்களை தெரிவிக்கவில்லை.
அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு கட்சி தலைவர் மாத்திரம் எதிராக வாக்களிக்க ஏனைய அனைவரும் அதற்கு ஆதரவாக வாக்களித்திருந்தனர். இதில் உள்ள இரகசியம் என்ன? முஸ்லிம் வாக்குகள் தேவையில்லை என்று தெரிவித்த நபருக்கு ஆதரவாக இந்த செயற்பாடு இடம்பெற்றிருக்கிறது. இதற்கான காரணம் என்ன? இவ்வாறான செயற்பாடுகள் மூலம் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரத்தில் அரசாங்கம் இரகசிய கூட்டணியாக செயற்படுகின்றதா என்ற சந்தேகம் எழுகிறது.
பாராளுமன்ற உறுப்பினர் ரிஷாத் பதியுதீனுடைய சகோதரர் கைது செய்யப்பட்டு விடுவிக்கப்பட்ட போதே நாம் இதனைக் கூறியிருந்தோம். இவ்வாறு அரசாங்கம் இரகசிய கூட்டணியாக செயற்பட்டு உயிர்த்த ஞாயிறு விவகாரத்தை புறந்தள்ள முயற்சித்தால் அது முழு நாட்டுக்கும் இழைக்கப்படும் அநீதியாகும்” என்றும் பேராயர் மல்கம் ரஞ்சித் தெரிவித்துள்ளார்.
அரசியல் இலாபம் தேடல்
இதே வேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதலை வைத்து அரசியல் கட்சிகள் அரசியல் இலாபம் தேடிக் கொள்ளும் வகையில் ஆளுக்கு ஆள் குற்றச்சாட்டுக்களையும், சந்தேகங்களையும் தெரிவித்துக் கொண்டிருப்பதனை அரசியல் கட்சிகள் நிறுத்த வேண்டும். முஸ்லிம்களிடையே இன்னும் ஒரு சிறு குழுவினர் திவிரவாதிகளாக இருக்கின்றார்கள் என்ற கருத்துக் கூட முஸ்லிம்கள் எல்லோரையும் சந்தேகிக்க வேண்டியதொரு சூழலை உருவாக்கியுள்ளது.
தீவிரவாதிகள், பயங்கரவாதிகள் எந்த இனமாக இருந்தாலும் கைது செய்யப்பட வேண்டும். அதில் மாற்றுக் கருத்துக்கள் இருக்க முடியாது. ஆனால், வெளியிடப்படுகின்ற கருத்துக்கள் அப்பாவிகளின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்துவதாக இருக்கக் கூடாது.
இதே வேளை, வல்லரசு நாடுகளும் இலங்கையின் மீது கழுகு பார்வை கொண்டு செயற்பட்டுக் கொண்டிருக்கின்றன. தங்களின் ஆதிக்கத்தை இலங்கையில் நிலைநாட்டிக் கொள்வதற்கு ஆட்சியாளர்களின் மீது நெருக்கடிகளை ஏற்படுத்திக் கொண்டு வருவதனையும் அவதானிக்க முடிகின்றது. மேலும், அரசாங்கம் இலங்கை முஸ்லிம்களின் விவகாரங்களில் பௌத்த இனவாதிகளை திருப்திபடுத்தும் செயற்பாடுகளை தவிர்த்தல் வேண்டும். இலங்கை அரசாங்கத்தின் அண்மைக்கால நடவடிக்கைகள் பல முஸ்லிம் நாடுகளின் அதிருப்திக்கு காரணமாகியுள்ளன. இதனால்தான் ஐக்கிய நாடுகள் சபையில் மனித பேரவையில் இலங்கைக்கு எதிரான தீர்மானம் நிறைவேறுவதற்கு காரணமாகும். ஆகவே, நாடு என்ற ரீதியில் இலங்கையின் மீது சர்வதேச ரீதியாக கொண்டு வரப்படும் அழுத்தங்கள் முஸ்லிம்களையும் பாதிக்கச் செய்யும், நாட்டின் எதிர்காலத்தின் மீதும் தாக்கத்தை ஏற்படுத்தும். ஆதலால் இந்த நாட்டின் முன்னேற்றத்திற்கும், அபிவிருத்திற்கும், அமைதியான வாழ்வுக்கும் முஸ்லிம் சமூகம் கடந்த காலங்களைப் போன்று துணையாக செயற்படும். அத்தோடு, இதற்கு மாற்றமாக முஸ்லிம்களிடையே யார் செயற்பட்டாலும் அவர்களை சட்டத்திற்கு முன் நிறுத்துவதற்கு முஸ்லிம்கள் தயங்கக் கூடாதென்பது எமது வேண்டுகோளாகும்.- Vidivelli