(ஏ.ஆர்.ஏ.பரீல்)
வெளிநாடுகளிலிருந்து நாட்டிற்குள் இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதற்கு அரசாங்கம் புதிய விதிகளை விதித்துள்ளது.
புதிய விதிகளுக்கமைய இறக்குமதி செய்வதற்கு முன்பு அதற்கான அனுமதியைப் பெற்றுக்கொள்ளவேண்டும். முன் அ-னுமதியின்றி இஸ்லாமிய நூல்கள் இறக்குமதி செய்ய முடியாது.
நிறுவனங்களோ, அமைப்புகளோ,தனிநபர்களோ இஸ்லாமிய நூல்களை இறக்குமதி செய்வதென்றால் அதன் பிரதியொன்று முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவேண்டும்.
அத்தோடு நூலின் பெயர், நூலின் உள்ளடக்கம், ஆசிரியரின் பெயர், அவரது பின்னணி, நூலில் தீவிரவாத கருத்துக்கள் உள்ளடங்கியுள்ளனவா-? அந்நூல் வெளிநாடுகளில் தடை செய்யப்பட்டுள்ளதா? எந்த நாட்டிலிருந்து நூல் இறக்குமதி செய்யப்படவுள்ளது. எனும் விபரங்கள் இறக்குமதியாளர்களால் சமர்ப்பிக்கப்படவேண்டும்.
மேலும் புத்தகம் விலை கொடுத்து கொள்வனவு செய்யப்படுகின்றதா? அல்லது நன்கொடையாகக் கிடைக்கப்பெறுகிறதா? நன்கொடையென்றால் நன்கொடையாக வழங்குபவரின் விபரங்கள் என்பனவும் தெரிவிக்கப்படவேண்டும்.
இந்த விதிகள் தொடர்பில் முஸ்லிம் சமயபண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர்ஏ.பி.எம்.அஷரப் விளக்கமளிக்கையில்:
இஸ்லாமிய நூல்கள் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்வதற்கு குறிப்பிட்ட விபரங்களுடன் விண்ணப்பம் கிடைத்ததும் அது தொடர்பில் ஆராய்ந்து புத்தகம் இறக்குமதி செய்வதற்கு தகுதியுடையதென்றால் அது தொடர்பான சிபாரிசினை திணைக்களம் புத்தசாசன மற்றும் மதவிவகாரங்களுக்கான அமைச்சிற்கு வழங்கும்.
புத்தசாசன மற்றும் மதவிவகாரங்களுக்கான அமைச்சு பரிசீலனை செய்து பாதுகாப்பு அமைச்சுக்கு தனது சிபாரிசினை வழங்கினால் மாத்திரமே இஸ்லாமிய புத்தகங்களை நாட்டுக்குள் இறக்குமதி செய்ய முடியும்.
இந்நடைமுறை தற்போது அமுலுக்கு வந்துள்ளது. எனவே இறக்குமதியாளர்கள் இதனைப்பின்பற்றவேண்டும் என்றார்.- Vidivelli