பயங்கரவாத தடுப்பு சட்டத்தின் கீழ் 11 அமைப்புகளுக்கு தடை
விதிகளை மீறுவோருக்கு 10 முதல் 20 வருட சிறைத் தண்டனை
(ஏ.ஆர்.ஏ.பரீல்)
நாட்டின் சமாதானத்தை உறுதிப்படுத்தும் வகையில் தேசிய பாதுகாப்பு, பொதுமக்கள் ஒழுங்கு மற்றும் சட்டவாட்சியின் நலனில் அரசாங்கத்தின் முயற்சிகளை முன்னெடுப்பதற்காக அடிப்படைவாதத்துடன் தொடர்புடைய 11 அமைப்புகளை தடை செய்வதாக கடந்த 13 ஆம் திகதி அதிவிசேட வர்த்தமானியை வெளியிட்டு அரசாங்கம் அறிவித்துள்ளது. இலங்கை முஸ்லிம்கள் புனித ரமழான் மாதத்தில் முதலாவது நோன்பை நோற்பதற்குத் தயாராகிக் கொண்டிருந்த வேளையிலேயே இந்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
1979 ஆம் ஆண்டின் 48 ஆம் இலக்க பயங்கரவாதத் தடுப்பு (தற்காலிக ஏற்பாடுகள்) சட்டத்தின்கீழ் 27 ஆம் பிரிவு 2021 ஆம் ஆண்டின் 1 ஆம் இலக்க ஒழுங்கு விதிகளுக்கமைய குறிப்பிட்ட 11 அமைப்புகளும் தடை செய்யப்பட்டுள்ளதாக கூறும் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ கையொப்பமிட்டுள்ளார்.
இதற்கமைய பின்வரும் அமைப்புக்களுக்கு தடை விதிக்கப்படுகின்றன:
1. ஐக்கிய தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (UTJ)
2. சிலோன் தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (CTJ)
3. ஸ்ரீலங்கா தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (SLTJ)
4. அகில இலங்கை தௌஹீத் (தௌஹீத்) ஜமாஅத் (ACTJ)
5. ஜம்மியதுல் அன்ஸாரி சுன்னதுல் மொஹமதியா (JASM) மறுபெயர் ஜம்மாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹமதியா ஒழுங்கமைப்பு மறுபெயர் அகில இலங்கை ஜம் – ஈ – அது அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா மறுபெயர் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா கழகம் மறுபெயர் ஜமாஅத் அன்ஸாரிஸ் சுன்னதில் மொஹம்மதியா
6. தாருல் அதர் மறுபெயர் ஜாமிஉல் அதர் பள்ளிவாசல் மறுபெயர் தாருல் அதர் குர் ஆன் மத்ரசா மறுபெயர் தாருல் அதர்அத்தபாவிய்யா
7. ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கம் (SLISM) மறுபெயர் ஜம்இய்யா
8. ஈராக் மற்றும் சிரியா இஸ்லாமிய அரசு (ISIS) மறுபெயர் அல் – தௌலா அல் – இஸ்லாமியா
9. அல்கைதா அமைப்பு
10. சேவ் த பேர்ள்ஸ் அமைப்பு மறுபெயர் சேவ் த பேர்ள் சங்கம்
11. சுப்பர் முஸ்லிம் அமைப்பு
இதேவேளை இலங்கையில் அல்லது இலங்கைக்கு வெளியில் குறித்த அமைப்புகள் தொடர்பில் பின்வரும் செயற்பாடுகளுடன் தொடர்புபடுதல் அவற்றில் சம்பந்தப்படுதல் போன்ற சந்தேகத்துக்கு உட்படலாகாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன் மேற்குறிப்பிட்ட அமைப்புக்களின்
(அ) உறுப்பினரொருவராக அல்லது அங்கத்தவரொருவராக இருத்தலாகாது,
(ஆ) அதற்குத் தலைமைத்துவம் அளித்தலாகாது,
(இ) சீருடையை, உடையை, சின்னத்தை, தனிக்குறியை அல்லது கொடியை அணிதலோ, வெளிக்காட்டுதலோ, ஏந்துதலோஅல்லது உடைமையில் வைத்திருத்தலோ ஆகாது,
(ஈ) கூட்டமொன்றை அழைத்தலோ, கூட்டுதலோ, நடாத்துதலோ அல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது,
(உ) உறுப்பாண்மையைப் பெறுதலோ அல்லது அதைச் சேருதலோ ஆகாது,
(ஊ) ஓர் உறுப்பினருக்கு, அங்கத்தவருக்கு அல்லது வேறெவரேனும் இணையாளருக்குப் புகலிடமளித்தலோ, அவரை மறைத்துவைத்தலோ அல்லது அவருக்கு உதவுதலோ ஆகாது,
(எ) மேம்பாட்டுக்கு உதவுதலோ, அதனை ஊக்குவித்தலோ, அதற்கு ஆதரவளித்தலோ, மதியுரையளித்தலோ, உதவுதலோ அல்லது அதன் சார்பில் செயலாற்றுதலோ ஆகாது,
(ஏ) ஏதேனும் செயற்பாட்டை அல்லது நிகழ்வை ஒழுங்குபடுத்தலோஅல்லது அதில் பங்குபற்றுதலோ ஆகாது,
(ஐ) பணத்தை அல்லது பொருட்களை நன்கொடையளித்தலோ அல்லது உதவுதொகையளித்தலோ ஆகாது,
(ஒ) அதற்காக அல்லது அதன் பொருட்களைப் பெறுதலோ, களஞ்சியப்படுத்தலோ, இடம்பெயர்த்தலோ, உடைமையில் வைத்திருத்தலோ அல்லது விநியோகித்தலோ ஆகாது,
(ஓ) நோக்கத்தை ஊக்குவித்தலோ அல்லது பிரதிநிதித்துவப்படுத்தலோ ஆகாது,
(ஒள) அதனோடு ஏதேனும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபடுதலாகாது, அல்லது
(க) அதன் சார்பில் தகவலைப் பரப்புவித்தலாகாது,
சிறைத் தண்டனை
மேற்படி ஒழுங்குவிதிகளுக்கு முரணாகச் செயற்படுபவர்களுக்கு 20 வருடங்களுக்கு மேற்படாத சிறைத் தண்டனை விதிக்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி ஒழுங்குவிதிகளுக்கு முரணாகச் செயற்படுவதற்கு உடந்தையாகவிருக்கின்ற ஒருவருக்கு 10 ஆண்டுகளுக்கு மேற்படாத சிறைத்தண்டனை விதிக்கப்படும் என்றும் குறித்த வர்த்தமானியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இரகசிய பொலிஸ் விசாரணை குழுக்கள்
இதனிடையே, சட்டமா அதிபர் திணைக்களத்தினால் தடை செய்யப்பட்டுள்ள 11 முஸ்லிம் அமைப்புகள் தொடர்பில் மேலதிக தகவல்களைத் திரட்டிக் கொள்வதற்காக இரகசிய பொலிஸ் விசாரணைப் பிரிவின் குழுக்கள் நாட்டின் பல்வேறு பிரதேசங்களுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாகவும், அக்குழுக்கள் அவ்வப்பகுதிகளில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாகவும் பொலிஸ் ஊடகப்பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்தார்.
தடைசெய்யப்பட்டுள்ள 11 முஸ்லிம் அடிப்படைவாத அமைப்புகள் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், ‘இந்த அமைப்புகள் அடிப்படைவாதத்துடன் தொடர்புகளை பேணியுள்ள முறை, அதனுடன் தொடர்புபட்ட தலைவர்கள், உறுப்பினர்கள், நேரடியாக தொடர்புபடாதவர்கள் பற்றிய விபரங்களை சேகரிப்பதற்காக இந்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன’ என்றார்.
மேலும், ஐ.எஸ். பயங்கரவாதிகளுடன் நேரடியாக தொடர்புபட்டவர்கள் இருப்பின் அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும். அத்தோடு குறிப்பிட்ட அடிப்படைவாத முஸ்லிம் அமைப்புகளுக்கு கிடைக்கும் வெளிநாட்டு நிதியுதவிகள் பற்றி ஆராய்வதுடன் நிதியுதவிகள் அனுப்பி வைப்பவர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும். அத்தோடு நிதியுதவிகள் பெற்றுக்கொள்ளும் நபர்கள் தொடர்பிலும் சட்ட நடவடிக்கைள் முன்னெடுக்கப்படும் எனவும் அவர் கூறினார்.- Vidivelli