அரசாங்கத்தினால் எந்த உதவிகளும் கிடைக்கப் பெறவில்லை; மூவின மக்கள்தான் உதவுகிறார்கள்
பயங்கரவாதிகளால் சுடப்பட்ட தஸ்லீம்
மாவனல்லையில் புத்தர் சிலை தாக்கப்பட்டு சேதப்படுத்தப்பட்ட சம்பவத்தின் பின்பு அப்போதைய அமைச்சர் கபீர் ஹாஷிம் சி.ஐ.டி.க்கு ஒத்துழைப்பு வழங்குமாறு தனது இணைப்பாளர் தஸ்லீமை வேண்டிக் கொண்டார். தஸ்லீம் தன்னால் இயன்ற வகையில் இதற்கு ஒத்துழைப்பு வழங்கினார்.
இந்த விபரங்கள் இஸ்லாமிய அடிப்படைவாதிகளுக்கு அறியக்கிடைத்தது. சி.ஐ.டிக்கு தகவல் வழங்கியதன் காரணமாக சஹ்ரானினால் அனுப்பப்பட்ட பயங்கரவாதியொருவரினால் 2019 மார்ச் மாதம் 9 ஆம் திகதி தஸ்லீம் துப்பாக்கியினால் சுடப்பட்டார். எனினும் இறைவனின் உதவியால் அவர் உயிர் பிழைத்தார்.
“தான் உயிர்பிழைத்துக் கொண்டாலும் இன்று எனக்கு வீட்டுக்காவல் கைதி போன்றே காலத்தைக் கழிக்கவேண்டியேற்பட்டுள்ளது என அடிப்படைவாதிகளின் துப்பாக்கி தாக்குதலால் காயங்களுக்குள்ளாகி மாற்றுத் திறனாளியாக மாறியிருக்கும் மாவனல்லை எம்.எஸ்.எம்.தஸ்லீம் தெரிவித்தார்.
எனக்கு 24 மணி நேரமும் பொலிஸ் பாதுகாவலின் மத்தியில் வாழ வேண்டியேற்பட்டுள்ளது. தொழுகைக்காக பள்ளிவாசலுக்கோ, சிகிச்சைகளுக்காக வைத்தியசாலைக்கோ மாத்திரமே செல்வதற்கு அனுமதியளிக்கப்பட்டிருக்கிறது. பொது விடயங்களில் கலந்து கொள்வதற்கு நான் அனுமதிக்கப்படுவதில்லை என்கிறார் தஸ்லீம். ஒரு மனிதனுக்கு கிடைக்கவேண்டிய சுதந்திரம் கட்டுப்படுத்தப்படும்போது ஏற்படும் கடுமையான மானசீக தாக்கங்களுக்குள்ளாகி இருப்பதாகவும் தஸ்லீம் கூறினார்.
அவர் லங்காசர இணையத்தளத்திற்கு வழங்கி நேர்காணல் வருமாறு:
சிங்களத்தில்:
சாமிந்த வாரியகொட
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
Q: தஸ்லீம் இப்போது நீங்கள் எப்படி இருக்கிறீர்கள்?
என் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டு கடந்த 9 ஆம் திகதி இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ளன. உங்களுக்கு ஞாபகமிருக்கும் நான் வீட்டில் உறங்கிக்கொண்டிருந்தபோது என்மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டினால் நான் நூலிழையில் தப்பினேன். பலத்த காயங்களுக்கு உள்ளான நான் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு நீண்ட காலம் சிகிச்சை பெற்றேன். நான்கு மாதங்கள் கட்டிலிலேயே இருந்தேன். பேசுவதற்கும், எழும்புவதற்குக் கூட முடியாதிருந்த நான் தற்போது ஊன்றுகோலின் உதவியுடன் மெதுவாக சிறிது நடக்கிறேன்.
உடல்ரீதியாக நான் குணமடைந்தாலும், இந்தச் சூட்டுச் சம்பவத்தின் காரணமாக எங்கள் குடும்பத்துக்கு ஏற்பட்ட மானசீக காயம் இன்னும் குணமாகவில்லை.
மனைவி மீண்டும் எங்கள் வீட்டுக்குச் செல்வதற்குப் பயப்படுகிறாள். அந்த சம்பவ நினைவுகளே இதற்குக் காரணம். இரண்டு பிள்ளைகளில் மூத்த பிள்ளைக்கே சம்பவம் நினைவிருக்கிறது. அவர் மாலை நேரங்களில் அந்த வீட்டுக்குள் எவராவது ஒருவரின் துணையின்றி ஒரு அடிகூட எடுத்துவைக்க மாட்டார். அந்தளவுக்கு அவர்களது மனதில் பயம் குடிகொண்டுள்ளது. இன்றும் கூட கனவில் பயந்து சப்தமிடுகிறார்.
Q: இப்போது நீங்கள் இருக்கும் இந்த வீடு யாருடையது?
எனக்கு இந்த வீட்டை டாக்டர் ஒருவர் வாங்கித் தந்தார். குறிப்பிட்ட அளவு ஒரு தொகைப்பணத்தை அவர் இதற்கு செலவழித்துள்ளார். அதன் பின்பு aranya.lk எனும் முகநூல் சமூக நலன்புரி குழுவினர் சுமார் 40 இலட்சம் ரூபாய் சேகரித்து இந்த வீட்டை புனர் நிர்மாணம் செய்து தந்தார்கள்.
Q: நீங்கள் தற்போது வாழ்வதற்கு என்ன செய்கிறீர்கள்? எப்படி உழைக்கிறீர்கள்?
இந்தச் சம்பவம் இடம் பெறுவதற்கு முன்பு நான் சிறு வியாபாரமொன்று செய்து கொண்டிருந்தேன். அது ஒரு பண்ணையாகும். ஆனால் இன்று நான் அடுத்தவர்களின் தயவில் வாழ்கிறேன்.
இந்தச் சம்பவம் இடம்பெற்ற காலத்திலிருந்து சிங்களவர்கள், முஸ்லிம்கள், தமிழர்கள் என அனைவரும் எனக்கு உதவி செய்தார்கள். தற்போதும் ஏராளமானோர் தனிப்பட்ட ரீதியில் எனக்கு உதவுகிறார்கள். இதுவரை காலமும் என்னால் எதுவும் செய்து கொள்ள முடியாத நிலையில் இருந்தேன். என்றாலும் தொடர்ந்தும் எந்நாளும் அடுத்தவர்களின் தயவில் வாழ நான் விரும்பவில்லை. எதிர்காலத்தில் நான் சிறியளவில் புடவை வியாபாரம் ஒன்று செய்வதற்கு எதிர்பார்த்திருக்கிறேன்.
Q: உங்களுக்கு அரசாங்கத்திடமிருந்து நிதியுதவி கிடைக்கவில்லையா?
இல்லை, அரசாங்கத்திடமிருந்து எனக்கு நிதியுதவி கிடைக்கவில்லை. முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் வழங்கும் உதவியைத் தவிர கடந்த அரசாங்கத்திடமிருந்தும் தற்போதைய அரசாங்கத்திடமிருந்தும் எனக்கு எவரும் உதவி செய்யவில்லை.
Q: அண்மையில் வெளியிடப்பட்ட உயிர்த்த ஞாயிறு தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவின் அறிக்கையில் சிபாரிசு ஒன்று செய்யப்பட்டிருந்தது. அது உங்களுக்கு இங்கிலாந்தில் சிகிச்சை வழங்குவதற்கான ஏற்பாடுகளை அரசாங்கம் முன்னெடுக்க வேண்டும் என்பதே அந்த சிபாரிசாகும்?
ஆம், நான் இந்த விபரத்தை ஊடகம் மூலமே அறிந்து கொண்டேன். இதுவரை அரசாங்கத்திடமிருந்து எனக்கு எந்த விபரமும் அறிவிக்கப்படவில்லை. என்னை இது தொடர்பில் எவரும் தொடர்பு கொள்ளவுமில்லை.
Q: நீங்கள் அரசாங்கத்திடம் இவ்வாறான கோரிக்கையை முன் வைத்திருந்தீர்களா?
ஆம், நான் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான ஜனாதிபதி விசாரணை ஆணைக்குழுவில் சாட்சியம் அளித்துள்ளேன். நான் வைத்தியசாலையில் இருந்தபோது என்னிடம் வாக்கு மூலம் பெற்றுக்கொள்ளப்பட்டது. நான் வைத்தியசாலை நோயாளர் கட்டிலில் இருந்து கொண்டு சாட்சியமளித்தபோது விசாரணை அதிகாரிகள் நீங்கள் அரசாங்கத்திடமிருந்து என்ன எதிர்பார்க்கிறீர்கள் என்று வினவினார்கள்.
அப்போது நான் இரண்டு கோரிக்கைகளை முன் வைத்தேன். நான் ஏதாவது செய்து கொள்ளும் அளவுக்கு என்னை குணமாக்கிக்கொள்ள ஐக்கிய இராச்சியத்தில் சிகிச்சை பெற அரசாங்கம் தேவையான நிதியுதவியை வழங்கவேண்டும் என்று வேண்டினேன். அதன்பின்பு நான் தொடர்ந்தும் வாழ்வதற்கு அரசாங்கத்தின் அனுசரணையை பெற்றுத் தருமாறும் கோரினேன். எனது இரு கோரிக்கைகளில் முதலாவது கோரிக்கையே விசாரணை ஆணைக்குழு சிபாரிசு செய்துள்ளது. என்றாலும் எனக்கு இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்பும் கிடைக்கவில்லை.
இங்கு இன்னொரு விடயத்தைக் குறிப்பிடவேண்டும். நான் ஊடகவியலாளர் ஒருவர் மூலம் பிரதமருக்கு கடிதம் ஒன்றினை அனுப்பி வைத்தேன். நான் வாழ்வதற்கு தேவையான ஏற்பாடு ஒன்றினைச் செய்யுமாறு கடிதத்தில் கோரியிருந்தேன். அந்தக் கடிதத்துக்கு பிரதமரிடமிருந்து எனக்கு பதில் கடிதம் கிடைத்தது. இது தொடர்பில் நடவடிக்கை மேற்கொள்வதற்கு பொது மக்கள் பாதுகாப்பு தொடர்பான அமைச்சர் சரத் வீரசேகரவுக்கு கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக பதில் கடிதத்தில் தெரிவிக்கப்பட்டிருந்தது.
Q: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை தொடர்பில் என்ன நினைக்கிறீர்கள்? என்ன கூறுகிறீர்கள்?
நான் ஆணைக்குழுவின் அறிக்கையைக் காணவில்லை. என்றாலும் ஊடகங்களில் தெரிவிக்கப்பட்டவைகளை நான் கண்டேன். இந்த ஆணைக்குழுவின் மூலம் வெளிவந்தவைகள் நாங்கள் அறிந்தவைகளே என்று நினைக்கிறேன். என்றாலும் இந்தத் தாக்குதலின் பின்னணியில் இருந்தவர்கள் யார் என்பது தொடர்பிலான உண்மையான விபரங்கள் வெளிவரவில்லை. இந்தச் சாட்சியங்கள் அனைத்தையும் பார்த்தால் சிலவேளை இதன்பின்னணியில் இருந்தவர் யார் என்பதை அறிந்து கொள்ள முடியும்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் கொல்லப்பட்டவர்களுக்கும் சஹ்ரான் காரணமாக மாற்றுத்திறனாளிகளான என் போன்றவர்களுக்கும் நீதி கிடைக்க வேண்டுமென்றால் இந்தத் தாக்குதல் தொடர்பான உண்மைகள் வெளிப்படவேண்டும். இவற்றை அரசாங்கமே வெளிப்படுத்திக் கொள்ளவேண்டும். இந்த நாட்டின் 69 இலட்சம் மக்கள் வாக்குகளை வழங்கியதும் அரசாங்கத்திடமிருந்து இவ்வாறான எதிர்பார்ப்புகளுடனேயாகும்.
Q: நாங்கள் அறிந்தவகையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் மேற்கொள்ளப்பட்டபோது நீங்கள் வைத்தியசாலையிலே இருந்தீர்கள். நீங்கள் அச்சந்தர்ப்பத்தில் என்ன நினைத்தீர்கள்?
ஏப்ரல் 21 ஆம் திகதி தற்கொலை குண்டுத்தாக்குதல் மேற்கொள்ளப்பட்டது. ஏப்ரல் 22 ஆம் திகதி எனது மனைவி என்னைப் பார்க்க வந்தார். அப்போது என்னால் பேச முடியாது.
‘‘சஹ்ரானினால் குண்டுத்தாக்குதல் நடத்தப்பட்டு 200 பேர் பலியாகியிருக்கிறார்கள்’’ என்று மனைவி கடதாசி துண்டொன்றில் எழுதியிருந்தார். அதை வாசித்ததும் எனக்கு மிகவும் கவலை ஏற்பட்டது. நான் அழுதேன். நான் வழங்கியிருந்த தகவல்கள் மூலம் இந்தத் தாக்குதலைத் தவிர்த்திருக்கலாமென்று அழுதேன். என்றாலும் அப்போது இதற்கு அரசாங்கம் ஆர்வம் கொண்டிருக்கவில்லை.
மாவனல்லையில் புத்தர் சிலை உடைப்புடன் தொடர்புடைய சாதிக் சகோதரர்கள் பற்றிய விபரங்கள் மற்றும் வனாத்தவில்லு தோட்டத்தில் ஆயுதக் களஞ்சியத்துடன் கைது செய்யப்பட்டவர்களின் விபரங்கள் மூலம் இந்த வலையமைப்பை இலகுவாக கண்டு பிடித்திருக்கலாம் என நான் நினைக்கிறேன்.
ஏனென்றால் தாக்குதல் நடைபெற்று 24 மணி நேரத்துக்குள் இவர்களை கைது செய்வதற்கு தேவையான போதிய தகவல்கள் பாதுகாப்பு பிரிவினரிடமிருந்தது. என்றாலும் இதைவிடுத்து அரசாங்கம் பிரதிபொலிஸ்மா அதிபர் நாலக சில்வாவின் பொய்யான கதையொன்றினை இழுத்தடிப்புச் செய்து கொண்டு வந்தது. அதனால் உண்மையான பிரச்சினையில் எவருக்கும் அக்கறை இருக்கவில்லை.
Q: உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற சம்பவங்கள் இதன் பின் நடைபெறாத வகையில் பணியாற்றுவோம் என்று கூறியே இந்த அரசாங்கம் பதவிக்கு வந்தது. நீங்கள் இந்த அரசாங்கத்திடமிருந்து என்ன கேட்கிறீர்கள்?
இந்த அரசாங்கம் இதுபோன்ற சம்பவங்கள் இனி ஒருபோதும் நடைபெறாத வகையில் எதிர்காலத்தில் செயற்படவேண்டும். அனைத்து மதங்கள் தொடர்பாக பிள்ளைகளுக்கு கற்பிக்கும் பாடங்களில் அடிப்படைவாதம் அல்லது இனவாதம் போன்ற போதனைகள் இருப்பின் அவை பாடங்களிலிருந்து நீக்கப்படுவதற்கு நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். ஏனென்றால் அவ்வாறான போதனைகள் மக்கள் மத்தியில் குரோதங்களை விதைக்கும்.
அத்தோடு மக்களின் கலாசார அடையாளங்களப் பாதுகாத்துக்கொள்வதற்கு இடமளிக்கப்படவேண்டும். கடந்த காலங்களில் முஸ்லிம் ஜனாஸாக்கள் அடக்கம் செய்வதில் ஏற்பட்பட்டது போன்று மக்கள் பிரிவுகளுக்கிடையில் உணர்ச்சி மேலீட்டினால் ஆவேச நிலைமைகள் உருவாகலாம். இவ்வாறான நிலைமைக்கு இடமளிக்கக்கூடாது.
Q: இவ்வாறான தியாகம் செய்த உங்களுக்கு இந்நாட்டிடமிருந்து என்ன கிடைத்தது?
இந்தச் சம்பவம் இடம்பெற்றதன் பின்பு நான் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டேன். இங்கு விசேட வைத்திய நிபுணர் ரஞ்சித் விக்கிரமசிங்க உட்பட வைத்தியர் குழு பாரிய முயற்சியின் பின்பு எனது உயிரைக் காப்பற்றினார்கள். அதனாலேயே இன்று ஊன்று கோலின் துணையுடனாவது நடக்க முடியுமான நிலையில் இருக்கிறேன்.
எனக்கு இந்த விபத்து நடந்ததன் பின்பு நான் விரைவில் குணமடைவதற்கு சிங்கள மக்கள் பூஜை வழிபாடுகள் செய்தார்கள். எனக்கு உதவிகள் செய்தார்கள். கிராமத்தில் போன்று நாடெங்கும் முஸ்லிம் மக்கள் ஒருநாள் நோன்பிருந்து, இப்தார் நடத்தி எனக்காக துஆ பிரார்த்தனைகளில் ஈடுபட்டார்கள். அது எனக்கு பாரிய பலமாக இருந்தது. வீடொன்று நிர்மாணித்துக்கொள்ள காணியொன்று கிடைத்தது. வீடு நிர்மாணத்துக்கு உதவிகளும் வழங்கினார்கள்.
என்னால் மறக்கவியலாத மேலும் ஒருவரைப்பற்றியும் கூறியாக வேண்டும். அவர் தற்போது அம்பாறை பொலிஸில் கடமை புரியும் பந்துல சேர். அவர் நான் கண்டி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தபோது எனது பாதுகாப்பிற்காக கடமையில் இருந்தவர். நான் பேச முடியாமல் இருந்தபோது அவரே எனக்குப் பேசுவதற்கு பயிற்சியளித்தார். அவரது பயிற்சியினாலே என்னால் விரைவில் பேச முடிந்தது.
நான் மிகவும் கவலையுடன் ஒரு விடயத்தைக் கூறுகிறேன். எனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பைத் தவிரவேறு எதுவும் கடந்தகால அரசாங்கத்திலும் இந்த அரசாங்கத்திலும் வழங்கப்படவில்லை. கிடைக்கவில்லை. ஏதாவது கிடைத்ததென்றால் அது இந்நாட்டின் சிங்கள, தமிழ், முஸ்லிம் மக்களிடமிருந்தே கிடைத்தது. அதுபற்றி நான் மகிழ்கிறேன்.
Q: என்றாலும் நீங்கள் கடந்த அரசில் பதவி வகித்த பிரபல அமைச்சரும், ஐ.தே.கட்சியின் தவிசாளருமான கபீர் ஹாஷிமின் இணைப்புச் செயலாளராக கடமையாற்றியவரல்லவா?
ஆம், முன்னாள் அமைச்சர் கபீர் ஹாஷிம் அவரால் இயலுமான உதவிகளை எனக்குச் செய்தார். ஆனால் அரசாங்கத்திடமிருந்து ஏன் உதவிகள் கிடைக்கவில்லை என்பதை அமைச்சரிடம் தான் கேட்க வேண்டும்.
அரசாங்கம் என்ற வகையில் அவர்களால் எனக்கு உதவி செய்வதற்கோ, நான் வழங்கிய தகவல்களின் அடிப்படையில் உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கோ அவர்களால் முடியாமற்போனது.
Q: உங்களால் தற்போது வழமைபோன்று ஓரளவாவது சமூகத்துடன் இணைந்து பணியாற்ற முடிகிறதா?
முடியாது. இதனை நான் கட்டாயமாக குறிப்பிட்டாக வேண்டும். இன்று நான் 24 மணி நேரமும் பொலிஸ் பாதுகாப்பின் கீழேயே வாழ வேண்டியுள்ளது. என்னால் வெள்ளிக்கிழமை பள்ளிவாசலுக்கும் வைத்திய சிகிச்சைகளுக்கும் மாத்திரமே செல்லமுடியும். பொலிஸாரின் அனுமதியின்றி வேறு எங்கும் என்னால் செல்ல முடியாது.
எனக்கு பாதுகாப்பு வழங்கும் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரியினால் கூட இதுவிடயத்தில் தீர்மானம் மேற்கொள்ள முடியாது. இது எனக்கு பெரிய பிரச்சினை. இதனால் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருக்கும் ஒருவரைப்போல் இருக்க வேண்டிய நிலைமை எனக்கு ஏற்பட்டுள்ளது. நான் உளரீதியில் பாதிக்கப்பட்டுள்ளேன். எனது உறவினர்களின் ஜனாஸா வீடுகளுக்கு, திருமண வீடுகளுக்கு மற்றும் வேறு பள்ளிவாசல்களில் நடைபெறும் சமய நிகழ்வுகளில் கூட என்னால் கலந்து கொள்ள முடியாது.
நான் இருக்கும் இந்தப் பகுதியில் சில நாட்கள் தண்ணீர் வழங்கல் தடைப்படுகிறது. ஆறு, ஓடைகளில் குளிப்பதற்கு செல்வதற்கும் எனக்கு அனுமதியில்லை. எனக்கு இவ்விடயத்தில் தேவையான வசதிகளைச் செய்து தருமாறு நான் பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகரவிடம் கோரிக்கை விடுக்கிறேன். இது எனக்கு ஆறுதலளிக்கும் என நான் நினைக்கிறேன்.
Q: இன்று நீங்கள் வாழும் வாழ்க்கையில் உங்களது எதிர்பார்ப்பு என்ன?
முன்பு நான் பாரிய அளவில் மக்களுடன் இணைந்து அனைத்து இனமக்களுடன் அந்நியோன்யமாக வேலை செய்த ஒருவன். எனக்கென்று சிறிய விவசாயப் பண்ணையொன்றை அமைத்து வாழ்ந்தவன் நான். இன்று நன்கொடையாக வழங்கப்பட்ட காணியில் அமைக்கப்பட்ட வீடொன்றில் மூன்று பிள்ளைகள், மனைவியுடன் வாழ்ந்து கொண்டிருக்கிறேன். காலையில் 5 மணிக்கு எழும்புவேன். தொழுவேன். பின்பு உடற்பயிற்சிகளில் ஈடுபடுவேன். இவ்வாறே எனது நாட்கள் நகர்கின்றன.
இந்த வீட்டில் சிலவேலைகள் பூரணப்படுத்துப்படாது இருக்கிறது. இந்த வீட்டு வேலைகளைப் பூர்த்தி செய்துகொள்ளவேண்டும். அடுத்தது எனக்கு வருமானம் பெற்றுக்கொள்ளக்கூடிய வர்த்தகம் ஒன்றினை ஆரம்பிக்க வேண்டும். இந்த இரண்டு விடயங்களுக்கும் அரசாங்கமோ அல்லது வேறு எவராவது உதவிசெய்தால் அது பெரிய உதவியாக அமையும் என்றார்.- Vidivelli