ஹக்கீம், ரிஷாட் அணிகளுக்கு எமது கட்சியில் இடமளியோம்
தனியாகப் போட்டியிட்ட பின்னர் இணைந்து செயற்படலாம் - ஐக்கிய மக்கள் சக்தியின் ஊடகப் பேச்சாளர் மரிக்கார்
நேர்கண்டவர்:
எஸ்.என்.எம்.சுஹைல்
ஐக்கிய மக்கள் சக்தி என்ற அரசியல் கட்சி ஆரம்பிக்கப்பட்டு ஒரு வருடமாகிறது. கூடுதலான தமிழ் முஸ்லிம் மக்களின் ஆதரவு அக்கட்சிக்கு இருக்கின்ற நிலையில் சிறுபான்மையினர் தொடர்பான ஐ.ம.ச.வின் நிலைப்பாடு என்ன?
தமிழ், முஸ்லிம் மக்களில் கூடுதலானோர் ஐக்கிய மக்கள் சக்திக்குத்தான் ஆதரவளிக்கின்றனர். சிங்கள மக்களும் எமது கட்சியுடன்தான் இருக்கின்றனர். எமக்கு வாக்களிக்கும் தமிழ், முஸ்லிம் மக்களின் எதிர்பார்ப்புகளை சாத்தியப்படுத்துவதற்கு இன்னும் அதிகமான சிங்கள மக்களின் ஆதரவைப் பெற்று அரசாங்கம் ஒன்றை அமைக்க வேண்டும். அப்போதுதான், தமிழர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் நீதியும், நியாயமும் கிடைக்கும். உரிமைகள் மதிக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தியானது இனவாதமில்லாது இந்நாட்டில் சிங்கள, தமிழ், முஸ்லிம்களை ஒன்றிணைத்து பயணிக்கும் டீ.எஸ்.சேனாநாயக்கவின் கட்சியின் கொள்கையுடனேயே செயற்படுகிறது. ஏனென்றால், இந்நாட்டில் வாழும் சிறுபான்மை மக்களுக்கும் சம உரிமை இருக்கிறது. அதையே எமது கட்சியும் நம்புகிறது. சிறுபான்மை மக்களின் உரிமைகள், கலாசாரங்கள் என்பன ஐக்கிய மக்கள் சக்தியின் பன்மைத்துவ கொள்கையினால் பெற்றுக்கொடுக்கப்படும்.
ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை உருவாக்கம் இன்னும் நிறைவடையவில்லை. இந்நிலையில், சிறுபான்மையினர் சார்பான அரசியல் கொள்கைகளை உள்வாங்கும் வேலைகள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றன?
ஐக்கிய மக்கள் சக்தியின் கொள்கை வரையப்படுகிறது. நாம் கட்சியை ஆரம்பித்தவுடனேயே தேர்தலுக்கு முகம்கொடுக்க நேரிட்டது. கொரோனா தொற்று பிரச்சினையால் நாடு முடக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், இக்கட்சியின் சட்ட ரீதியாக உரிமையை பெற்றுக்கொள்வதற்கும் நிர்வாக கட்டமைப்பை உருவாக்கிக் கொள்வதற்கும், தேர்தல் தொகுதி அமைப்பாளர்களை நியமிப்பதற்கும் என்றே ஒரு வருட காலம் சென்றுவிட்டது. அத்துடன் ஐக்கிய இளைஞர் சக்தி, ஐக்கிய மகளிர் சக்தி மற்றும் தொழிற்சங்கங்கள் என்பனவும் அமைக்கப்பட்டுள்ளன. தொடர்ந்தும் கொள்கை உருவாக்கும் வேலைகள் முன்னெடுக்கப்படுகின்றன.
சிறுபான்மை மக்களும் இந்நாட்டில் பிறந்து, வளர்ந்து, வாழ்ந்தவர்களே. பெரும்பான்மை மக்களுக்கு என்ன உரிமைகள் இருக்கின்றதோ அத்தனை உரிமையும் சிறுபான்மையினருக்கும் இருக்கின்றது என்பதே எமது கொள்கையாக அமையும். இதனை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்கள் முஸ்லிம் மற்றும் தமிழ் சமூகத்துடன் இணைந்து முன்னெடுக்கப்படுகின்றது.
கடந்த காலங்களில் ஐக்கிய தேசியக் கட்சி, சிறுபான்மை கட்சிகளுடன் கூட்டணி அமைக்கும்போது, சொந்த கட்சிக்காரர்களை புறக்கணித்ததாக குற்றச்சாட்டு இருக்கிறது. இந்நிலையில், முஸ்லிம்கள் கூடுதலாக ஐக்கிய மக்கள் சக்திக்கு ஆதரவு வழங்கியிருக்கின்றமை கடந்த 2020 பொதுத் தேர்தல் முடிவுகளின் மூலம் தெரிந்துகொள்ள முடிகிறது. இந்நிலையில், ஐ.ம.ச.வும் சிறுபான்மை கட்சிகளுடன் ஒப்பந்தம் செய்வதன் ஊடாக சொந்த கட்சிக்காரர்களுக்கு அநீதி இழைக்குமா?
ஐக்கிய தேசியக் கட்சி செய்த பிழைகளை ஐக்கிய மக்கள் சக்தி ஒருநாளும் செய்யாது. ஹக்கீமின் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ரிஷாட்டின் அகில இலங்கை மக்கள் காங்கிரஸும் முஸ்லிம்களின் பிரச்சினைகளை விற்று தேர்தலில் பெரிய கட்சிகளின் வாக்குகளில் விருப்பு வாக்கை பெற்றுக்கொண்டு பாராளுமன்ற பிரதிநிதித்துவம் பெற்றுக்கொண்டபின்னர் சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கட்சி மாறுபவர்கள். இதனை கடந்த காலங்களில் செய்து காட்டியுள்ளனர். இவ்வாறான நிலைமைகள் எதிர்காலத்தில் ஏற்படக் கூடாது என்பது குறித்து கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸவுடன் அதிகமான கலந்துரையாடல்களை செய்திருக்கிறோம்.
மு.கா.வுக்கும் அ.இ.ம.கா.வுக்கும் மக்கள் பலம் இருக்குமானால் தனியாக தேர்தலில் போட்டியிட்டு மக்கள் பலத்தை காட்டி பிரதிநிதித்துவத்தை பெற்றபின்னர் எம்முடன் வந்து சேர்ந்துகொள்ள முடியும். ஆனால், அடுத்த தேர்தலில் எமது விருப்பு வாக்கை கொள்ளையடித்து விலைபோகும் நிலை ஏற்பட இடமளியோம்.
20 ஆம் திருத்தத்திற்கு மு.கா., அ.இ.ம.கா. கட்சிகளின் தலைமைகளை தவிர்ந்து ஏனைய பாராளுமன்ற பிரதிநிதிகள் ஆதரவளித்துள்ளனர். இது குறித்து ஐ.ம.ச. அவர்களிடம் விளக்கம் கோரியிருந்தது. இது குறித்த ஒழுக்காற்று நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றதா?
அவர்கள் எல்லோருமே 20 க்கு ஆதரவுதான். தலைவர்கள் 20 க்கு ஆதரவளிக்காமை ஒரு நாடகமாகும்.
கொழும்பிலுள்ள பொதுஜன ஐக்கிய முன்னணியின் தேசியப் பட்டியல் உறுப்பினர் ஒருவரின் வீட்டில்தான் இந்த நாடகத்திற்கான கதை எழுதப்பட்டது. தலைவர்கள் இருவரும் இந்த பக்கத்தில் இருந்துகொண்டு ஏனைய உறுப்பினர்களை அடுத்த பக்கம் அனுப்பி வைத்தனர். இந்த அரசாங்கத்திற்கு தலைவர்களை எடுக்கும் தேவை இருக்கவில்லை. இந்த இரு கட்சியினரும் சிறுபான்மை மக்களின் உரிமைகளை விட்டுக்கொடுத்து, முஸ்லிம்களின் மானத்தை வாங்கிவிட்டார்கள். கடந்த காலத்தில் முஸ்லிம்களின் உரிமைகளை நசுக்கி மன உளைச்சலுக்கு ஆளாக்கிய இந்த அரசாங்கத்திடம் முஸ்லிம் மக்களின் பிரச்சினைகளை விற்று பாராளுமன்றுக்கு வந்த இவர்கள் இறுதியில் எப்படி வாக்களித்தனர். இவர்களுக்கு கௌரவம் இருக்கிறதா? இவர்களை அரசியல் வியாபாரிகள் என்றுதான் சொல்ல வேண்டும்.
முஸ்லிம் சமுதாயத்தினர் மடையர்கள் அல்லர். யார் எப்படி நடந்துகொள்கின்றனர் என்று முஸ்லிம் சமூகத்தினர் தெட்டத் தெளிவாக விளங்கிக்கொண்டுள்ளனர். கோத்தாபய ஜனாதிபதியாக தெரிவுசெய்யப்பட்ட பின்னர் ஐக்கிய மக்கள் சக்தி எதிர்க்கட்சியில்தான் இருக்கப்போகின்றது என்று தெரிந்தும் மொட்டு சின்னத்திற்கு எதிராக இருக்க வேண்டும் என்பதற்காகத்தான் முஸ்லிம் கட்சிகளுக்கு முஸ்லிம்கள் கடந்த பொதுத் தேர்தலின்போது வாக்களித்தனர். இவ்வாறு முஸ்லிம்களின் எதிர்பார்ப்புகளை மீறி செயற்பட்டவர்கள் சமூகத்திற்கு துரோகமிழைத்துவிட்டனர்.
முஸ்லிம் எம்.பி.க்கள் 20 க்கு ஆதரவளிக்கவில்லையென்றால் பொதுஜன முன்னணி அரசாங்கத்தால் மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றுக்கொள்ள முடியாமல் போயிருக்கும். அப்படி மூன்றில் இரண்டு கிடைக்காதிருப்பின் அரசாங்கத்திற்கு பெரும் தலையிடியாக மாறியிருக்கும். சிறுபான்மையினர் தொடர்பில் காலம்தாழ்த்தாது நீதமாக நடந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்கும்.
20 க்கு ஆதரவளித்தவர்கள் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படும்போது அதனைத் தடுக்க எந்த முயற்சியையும் எடுக்கவில்லை. அவர்கள் 20 க்கு ஆதரவளித்ததற்கான பலாபலன்களைப் பெற்றுக்கொள்வதிலேயே குறியாக இருந்தனர்.
முஸ்லிம் கட்சிகளுக்கும் ஐக்கிய மக்கள் சக்திக்கும் இடையே ஒப்பந்தம் இருக்கிறது. இந்நிலையில், குறித்த எம்.பி.க்களுக்கு எதிரான நடவடிக்கையை முஸ்லிம் கட்சிகளினால்தான் எடுக்க வேண்டியிருக்கிறது. இதனால்தான், ஹக்கீம் ஒரு நாடகத்தை அரங்கேற்றினார். அந்த மன்னிப்பு கோரும் நாடகம் பொய்யானது.
ஜனாஸாக்கள் எரிக்கப்பட்டு உரிமை மறுக்கப்படும்போது நாங்கள்தான் முன்னின்று போராடினோம். கொழும்பில் பாரிய எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு அரசாங்கத்தை தொடர்ந்தும் நெருக்கடிக்குள் தள்ளியே இந்த உரிமையை பெற பாடுபட்டோம். பாராளுமன்றத்திலும் பிரதமரிடமும் அரசாங்கத்திடமும் கேள்வியெழுப்பி அழுத்தங்களை கொடுத்தோம். இவர்கள் போட்டோ பிடிப்பதிலும் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிப்பதிலுமே முன் நின்றனர். அடுத்த தேர்தலில் மக்கள் இவர்களுக்கு நல்ல பாடம் புகட்டுவர்.
விரைவில் மாகாண சபை தேர்தல் நடத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அடுத்த தேர்தல்களில் ஐக்கிய மக்கள் சக்தி வேட்புமனுவில் சிறுபான்மை கட்சிகளுக்கு இடம் கிடைக்குமா?
முஸ்லிம் கட்சிகளுக்கு ஐக்கிய மக்கள் சக்தியில் இடமளிக்க முடியாது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க சிறுபான்மை மக்களின் வாக்குகளை அரசியல் வியாபாரிகளுக்கு விற்றார். இவ்வாறான முரண்பாடான நிலைப்பாடுகள் காரணமாகத்தான் நாம் ரணில் விக்ரமசிங்கவை விட்டுவிட்டு தீர்க்கமான முடிவுகளை மேற்கொள்ளும் தலைமையொன்றை உருவாக்கினோம். 20 ஆம் திருத்தத்திற்கு இவர்கள் ஆதரவளித்த பின்னர் நாம் சஜித் பிரேமதாஸவுடன் மிக ஆழமாக கலந்துரையாடியிருக்கின்றோம். முஸ்லிம் சமுதாயத்தின் உரிமைகளை காட்டிக்கொடுத்து அவர்களின் பிரச்சினைகளை வைத்து வியாபாரம் நடத்துபவர்கள் தேவையில்லை என கட்சித் தலைமை எம்மிடம் உறுதியளித்திருக்கிறது. அவர்களுக்கு முஸ்லிம் மக்களின் ஆதரவு இருக்குமாயின் தனித்து தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெறட்டும். அதுவே எமது தீர்மானமாகும்.
ஐக்கிய மக்கள் சக்தியில் நேரடியாக எமது வேட்பாளர்களை களமிறக்குவதே சிறந்தது என்பது எனது கருத்தாகும். ஒருவர் வெற்றிபெற்றாலும் பரவாயில்லை, கிழக்கில் எமது வேட்பாளர்களை வெற்றிபெறச் செய்வதற்கு முயற்சிப்போம்.
கடந்த இரு ஜனாதிபதித் தேர்தல்களிலும் மைத்திரிபாலவுக்கும் சஜித்துக்கும் முஸ்லிம் கட்சிகள் சொல்லித்தான் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை. சரியான கொள்கையுடனும் திட்டங்களுடனும் மக்களுக்கு தலைமைத்துவம் வழங்குமிடத்து புதிய தலைமைகளுக்கும் மக்கள் வாக்களிப்பர். அதற்கான வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றன. அடுத்த மாகாண சபை தேர்தலிலும் பொதுத் தேர்தலிலும் கிழக்கில் நாம் தனித்து போட்டியிடுவோம்.
கிழக்கு மாகாணத்தை பொறுத்தமட்டில் திருகோணமலை மாவட்டத்தை தவிர்ந்து ஏனைய பகுதிகளில் ஐக்கிய மக்கள் சக்திக்கு நேரடியான பிரதிநிதித்துவம் கிடையாது. மற்றுமொரு தேர்தலை முகம்கொடுக்கும் நிலை உருவாகிவருகின்ற சூழலில் கிழக்கில் கட்சியை ஸ்திரப்படுத்தும் வேலைத்திட்டங்கள் எவ்வாறு முன்னெடுக்கப்படுகின்றது?
கட்சியை புனரமைக்கும் வேலைகள் கிழக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. வடக்கிலும் இந் நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படவுள்ளன. அடுத்த பொதுத் தேர்தலுக்கு இன்னும் 3 வருடங்கள் இருக்கின்ற நிலையில் எங்களுக்கு காலம் போதுமாக உள்ளது. கிழக்கில் முஸ்லிம் சமூகத்திற்காக உண்மையாக குரல்கொடுக்கும் இளம் அரசியல்வாதிகளை உருவாக்கும் தேவை இருக்கிறது. அதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றோம்.
ஜனநாயகத்தை பாதுகாக்க பலமான எதிர்க்கட்சியொன்றின் தேவையிருக்கிறது. ஐக்கிய மக்கள் சக்தி அந்த பணியை சரியாக செய்யவில்லை என்ற குற்றச்சாட்டு இருக்கிறதே?
ஐக்கிய மக்கள் சக்தி பலமான எதிர்க்கட்சியா இல்லையா என்பதை பாராளுமன்ற அமர்வுகளில் இருந்து புரிந்து கொள்ள முடியும். இன்று இந்நாடு எமது தேவையை உணர்ந்துள்ளது. பொதுஜன முன்னணியும் 54 பாராளுமன்ற உறுப்பினர்களுடனேயே ஆரம்பிக்கப்பட்டது. நாமும் 54 பேருடன் இந்த கட்சியை ஆரம்பித்திருக்கிறோம். அடுத்த அரசாங்கம் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமையில் உருவாகும். அதன்போது, சிறுபான்மை மக்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும். அதற்கான நம்பிக்கை துளிர்ந்திருக்கிறது. பெரும்பான்மை மக்களின் ஆதரவை பெற்றுக்கொள்வதற்கான வேலைத்திட்டத்தை நாடு பூராகவும் கிராம மட்டத்தில் முன்னெடுத்து வருகின்றோம்.
ஐக்கிய தேசியக் கட்சியில் இருக்கும்போது இவ்வாறான பிரயத்தனங்களை நாம் மேற்கொள்ளவில்லை. தற்போது, ஒவ்வொரு வார இறுதியிலும் ஒவ்வொரு மாவட்டமாக சென்று கிராமங்கள் தோறும் கட்சி புனரமைப்பு வேலைகளை மேற்கொள்கிறோம். நாட்டின் நிலைமை குறித்து மக்களை தெளிவூட்டுகிறோம். அத்துடன் இன்றைய அரசியல் போக்கு குறித்தும் தெளிவூட்டுகின்றோம்.
முஸ்லிம்களையும் சிங்கள மக்களையும் தூரப்படுத்தி அரசியல் நடத்தும் துரதிஷ்டம் எமது நாட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. ஐக்கிய மக்கள் சக்தி எல்லா சமூகத்தையும் அரவணைத்து செல்லும் கட்சி என நீங்கள் கூறுகின்றீர்கள். இந்நிலையில், சிங்கள மக்கள் மத்தியில் முஸ்லிம்கள் பற்றிய நல்லபிப்பிராயத்தை ஏற்படுத்துவதற்கும் முஸ்லிம்கள் மத்தியில் சிங்கள மக்கள் பற்றிய நல்லெண்ணம் உருவாவதற்கும் ஏதும் வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்றனவா?
சிங்கள மக்களையும் முஸ்லிம்களையும் ஒன்றிணைக்கும் வேலைத்திட்டம் எங்களுடைய பணி. அதனை நாம் கட்டாயம் செய்வோம். இந்த நாட்டில் இனவாதம் தலைதூக்கியிருந்தும் மிதவாதப் போக்குடைய சிங்கள மக்கள் இன்றும் இருக்கின்றனர். அதனால்தான் கொழும்பு மாவட்டத்தில் என்னால் இரண்டாமிடத்தில் வெற்றிபெற முடிந்தது. எனக்கு அதிகமான முஸ்லிம்கள் வாக்களித்தனர். அதேநேரம் சிங்கள மக்களும் ஓரளவு வாக்களித்தனர். உருவாக்கப்பட்டுள்ள இனவாதம் நூறு வீத சிங்கள மக்களிடத்திலும் இல்லை. நான் அதிகமான சிங்கள மக்கள் இருக்கும் தொகுதியொன்றுக்குத்தான் தலைமைத்துவம் கொடுத்து வருகின்றேன். அந்த நம்பிக்கையைத்தான் நாம் உருவாக்க வேண்டியிருக்கிறது. சிங்கள மக்களிடையே முஸ்லிம் மக்கள் தொடர்பான சந்தேகங்களை இல்லாமலாக்கி இந்த இரண்டு சமூகத்தினரையும் ஒன்றிணைக்கும் வேலை எமக்கானது. அதனை செய்ய வேண்டியது எமது கடமை. அதற்கான வேலைத்திட்டமொன்று முன்னெடுக்கப்படுகின்றது.- Vidivelli