சுமார் 11 மாத கால போராட்டங்களின் பின்னர் இலங்கை முஸ்லிம்களிடமிருந்து பறிக்கப்பட்ட உரிமையொன்று மீளக் கிடைக்கப் பெற்றுள்ளது. இதற்கமைய கொவிட் 19 தொற்றினால் உயிரிழந்தவர்களின் ஜனாஸாக்கள் உலகிலுள்ள ஏனைய நாடுகளைப் போன்று இலங்கையிலும் அடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போதைக்கு ஓட்டமாவடி பிரதேசத்திலுள்ள சூடுபத்தினசேனையில் அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள 3 ஏக்கர் காணியில் ஜனாஸாக்கள் அடக்கம் செய்யப்படுகின்றன. இருப்பினும் ஏனைய மாவட்டங்களிலும் இதற்கான இடங்களை அடையாளம் காணும் பணிகள் இடம்பெற்று வருகின்றன. அதுவரை ஓட்டமாவடி பிரதேசத்தில் நாட்டின் எந்தப் பகுதியையும் சேர்ந்த ஜனாஸாக்களை அடக்கம் செய்ய முடியும்.
உண்மையில் இப் பணியில் முன்னிற்கும் ஓட்டமாவடி பிரதேச மக்களும் அதிகாரிகளும் பாதுகாப்புப் படையினரும் பாராட்டுக்குரியவர்கள். எந்தவித எதிர்பார்ப்புகளுமின்றி, முஸ்லிம் சமூகத்தின் அடிப்படை உரிமையொன்றை நடைமுறைப்படுத்துவதற்காக, கொவிட் தொற்று அபாயங்களையும் புறந்தள்ளி அவர்கள் இப் பணியில் ஈடுபடுகின்றனர். இந்த உயரிய பணியில் ஈடுபடுவோருக்காக இலங்கை முஸ்லிம்கள் அனைவரும் பிரார்த்திக்க கடமைப்பட்டுள்ளனர்.
ஒருவாறு ஜனாஸா அடக்க உரிமை மீளக் கிடைத்துள்ளது என முஸ்லிம்கள் நிம்மதிப் பெருமூச்சு விட்ட மறுகணமே மேலும் பல தீர்மானங்கள் அரசாங்க தரப்பிலிருந்து இடியாக வந்திறங்கத் தொடங்கியுள்ளன.
முஸ்லிம் அமைப்புகளுக்குத் தடை, புர்காவுக்குத் தடை, இஸ்லாமிய புத்தகங்களை இறக்குமதி செய்ய கெடுபிடிகள், மத்ரஸாக்களை மூடுவதற்கான கோரிக்கைகள் என புதிய புதிய கதையாடல்கள் தற்போது சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை முன்வைத்தே இக் கதைகள் மேற்கிளம்பியுள்ளன. நேற்று முன்தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றிய பொது மக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர இது தொடர்பான மேலும் உறுதிப்படுத்தப்பட்ட விபரங்களை முன்வைத்திருந்தார்.
முஸ்லிம் சமூகத்தினுள் ஊடுருவியுள்ளதாக கருதப்படும் அடிப்படைவாத சிந்தனைகளை துடைத்தெறிவதற்கே இந்த நடவடிக்கைகள் என அமைச்சர் குறிப்பிட்டிருந்தார். மாறாக முஸ்லிம் சமூகத்தை அடக்கி ஒடுக்குவது எமது நோக்கமல்ல என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
முஸ்லிம் சமூகத்தினுள் அவ்வாறான சக்திகள் இன்னுமிருப்பின் அவர்களை சட்ட ரீதியாக எதிர்கொள்ள வேண்டியது அரசாங்கத்தின் கடப்பாடாகும். அதற்குத் தேவையான முழு ஒத்துழைப்புகளையும் கடந்த காலங்களைப் போன்றே எதிர்வரும் காலங்களிலும் வழங்க முஸ்லிம்கள் தயாராகவேயுள்ளனர். ஆனால் அடிப்படைவாதத்தை ஒழிக்கிறோம் என்ற பெயரில் எந்தவித சம்பந்தமுமில்லாத அப்பாவி மக்களையும் அமைப்புகளையும் தண்டிப்பதற்கு அரசாங்கம் முனையக் கூடாது.
ஆணைக்குழுவின் அறிக்கையில் நாட்டின் இன வன்முறைகளுக்கு வித்திட்ட பெளத்த கடும்போக்கு அமைப்புகளையும் தடை செய்ய வேண்டும், அதன் முக்கியஸ்தர்களை சட்டத்தின் முன் நிறுத்த வேண்டும் என்ற சிபாரிசுகள் பிரதானமாக உள்ளன. ஆனால் அவற்றை நடைமுறைப்படுத்த முடியாது என அரசாங்கம் பகிரங்கமாகவே அறிவித்துள்ளது. அமைச்சர் சரத் வீரசேகர தனது பாராளுமன்ற உரையில் பெளத்த அமைப்புகள் பற்றி ஒரு வார்த்தையேனும் குறிப்பிடவில்லை.
தற்போது ஆணைக்குழுவின் அறிக்கையில் உள்ள பெளத்த அமைப்புகள் குறித்த பரிந்துரைகளுக்கு எதிராக சம்பந்தப்பட்ட அமைப்புகள் வீதிக்கு இறங்கியுள்ளன. நேற்றைய தினம் சுதந்திர சதுக்கத்தில் பொதுபல சேனா அமைப்பும் பௌத்த பிக்குகள் சங்கமும் இணைந்து சத்தியாக்கிரகப் போராட்டம் ஒன்றையும் நடாத்தியுள்ளன. தினமும் ஊடகங்கள் முன்தோன்றி ஞானசார தேரர் மீண்டும் முஸ்லிம்களுக்கு எதிராக கடுமையான வெறுப்பை விதைத்து வருகிறார். இது ஆணைக்குழுவின் பரிந்துரைகளுக்கே முரணானதாகும். அவரது கருத்துக்கள் அனைத்தும் தாங்கள் சட்டத்திற்கு அப்பால்பட்டவர்கள் என்பதையே சுட்டிநிற்கின்றன.
எனவேதான் அரசாங்கம் முஸ்லிம் மத்தியில் உள்ள அடிப்படைவாதத்தை கட்டுப்படுத்துகின்ற அதேநேரம் பெளத்த அடிப்படைவாதத்தையும் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும். அதுவே ஆணைக்குழுவின் பரிந்துரைகள் ஊடாக எதிர்பார்க்கப்படுவதாகும்.
அதைவிடுத்து, தனது அரசியல் நலன்களை நிறைவேற்றிக் கொள்வதற்காக அப்பாவி முஸ்லிம்களைத் தண்டிப்பதும் உண்மையான அடிப்படைவாதிகளை பாதுகாப்பதும் எதிர்காலங்களில் மேலும் பல அழிவுகளுக்கே வழிவகுக்கும் என்பதைச் சொல்லிவைக்க விரும்புகிறோம்.- Vidivelli