றிப்தி அலி
இலங்கையின் தேசிய அரசியலிலும் ஆசியப் பிராந்தியத்திலும் இந்த வாரம் அதிக கவனயீர்ப்பைப் பெற்ற விவகாரமே பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் இலங்கை விஜயமாகும். சீனாவுடன் நெருங்கிய உறவைக் கொண்டுள்ள பாகிஸ்தானின் தலைவர், அதே சீனாவுடன் அண்மைக்காலங்களில் நெருக்கத்தை வளர்த்து வரும் இலங்கைக்கு விஜயம் செய்வதானது இலங்கையினதும் பாகிஸ்தானினதும் அயல் நாடான இந்தியாவின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
இம்ரான் கான் இலங்கைக்கும் பாகிஸ்தானுக்குமிடையிலான வர்த்தக உறவுகளை முன்னேற்றுவதை இலக்காகக் கொண்டே இந்த விஜயத்தை மேற்கொண்டிருந்த போதிலும் இலங்கையில் வாழுகின்ற முஸ்லிம்கள் மத்தியில் அவரது விஜயம் வேறொரு நோக்கத்தில் எதிர்பார்ப்புகளைத் தோற்றுவித்திருந்தது.
இலங்கை வாழ் முஸ்லிம்கள் இன்றைய காலகட்டத்தில் பல்வேறு சவால்களுக்கு முகங்கொடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக தனகம் செய்வது இதில் முதன்மையானதாகும். இம்ரான் கானின் விஜயத்தின் ஊடாக இலங்கை வாழ் முஸ்லிம்கள் தற்போது எதிர்நோக்கியுள்ள ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரத்திற்கு தீர்வு கிடைக்கும் என்ற நம்பிக்கை இலங்கை முஸ்லிம்கள் மத்தியில் மேலோங்கியிருந்தது.
இதே காலப்பகுதியில் ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் பேரவையில் இலங்கையின் மனித உரிமை நிலைவரங்கள் தொடர்பிலும் குறிப்பாக ஜனாஸாக்களை எரிக்கும் தீர்மானத்திற்கு எதிராகவும் பிரேரணை ஒன்று முன்வைக்கப்பட்டுள்ளது. இவ்வாறான நிலையிலேயே ஓ.ஐ.சி. எனப்படும் இஸ்லாமிய ஒத்துழைப்புக்கான அமைப்பின் உறுப்பு நாடாக செயற்படுகின்ற, தெற்காசிய பிராந்தியத்தின் வலுவான ஒரு முஸ்லிம் நாடாகவுள்ள பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான்கானின் இலங்கைக்கான விஜயம் முக்கியத்துவமுடையதாக நோக்கப்படுகிறது.
கொரோனா வைரஸ் பரவலிற்கு பின்னர் உலகத் தலைவர் ஒருவர் இலங்கைக்கு மேற்கொள்ளும் முதலாவது விஜயம் என்பதால் இம்ரான் கானின் விஜயம் கொவிட் 19 சுகாதார பாதுகாப்பு விதிமுறைகளுக்கு அமைய பலத்த கட்டுப்பாடுகளுடன் திட்டமிடப்பட்டிருந்தது. இந் நிகழ்வுகளை அறிக்கையிட்ட ஊடகவியலாளர்கள் கூட பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்ட பின்னரே அனுமதிக்கப்பட்டனர்.
அதேநேரம் சில சக்திகள் இந்த விஜயத்தை தவறான கண்கொண்டு நோக்கின. குறிப்பாக கடந்த ஞாயிற்றுக்கிழமை சிலரது பங்கேற்புடன் கோட்டை புகையிரத நிலையத்திற்கு முன்பாக இம்ரானின் வருகையை எதிர்த்து ஆர்ப்பாட்டம் ஒன்று மேற்கொள்ளப்பட்டது. அதேபோன்று ஏலவே திட்டமிடப்பட்டிருந்த இம்ரான் கானின் பாராளுமன்ற உரையும் இறுதி நேரத்தில் இரத்துச் செய்யப்பட்டது.
முன்னர் மூன்று நாட்களுக்கு என திட்டமிடப்பட்டிருந்த இம்ரான் கானின் இலங்கைகான விஜயம் பின்னர் இரண்டு நாட்களாக சுருக்கப்பட்டது. எனினும் அவர் மொத்தமாக 24 மணி நேரம் மாத்திரமே இலங்கையில் தங்கியிருந்தார்.
கடந்த செவ்வாய்க்கிழமை கட்டுநாயக்க விமான நிலையத்தினை பி.ப 4.05 மணியளவில் வந்தடைந்த இம்ரான் கானை, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உத்தியோகபூர்வமாக விமான நிலையத்தில் வரவேற்றார்.
அத்துடன் 19 துப்பாக்கி வேட்டுகள் முழங்கப்பட்டு, இராணுவ மரியாதை அணிவகுப்புடன் செங்கம்பள வரவேற்பும் அளிக்கப்பட்டது.
பிரதமர் இம்ரான் கானுடன் பாகிஸ்தான் வெளி விவகார அமைச்சர், வர்த்தக அமைச்சர் உட்பட தொழிலதிபர்கள் உள்ளிட்ட தூதுக்குழுவொன்றும் இலங்கைக்கு வந்தது.
இந்த விஜயத்தின் முதற்கட்டமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் இம்ரான் கானிற்கும் இடையிலான இராஜதந்திர சந்திப்பொன்று அன்று மாலை அலரி மாளிகையில் இடம்பெற்றது.
இதன்போது, பாதுகாப்பு கடனாக 50 மில்லியன் அமெரிக்க டொலரினையும், விளையாட்டுத் துறையின் அபிவிருத்திக்காக 52 மில்லியன் பாகிஸ்தான் ரூபாவினை வழங்கவுள்ளதாக இதன்போது இம்ரான் கான் அறிவித்தார். மேலும் இரு நாடுகளுக்குமிடையில் ஐந்து புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்பட்டன. சுற்றுலா ஒத்துழைப்பு, முதலீட்டு சபைகளுக்கு இடையிலான ஒப்பந்தம், இலங்கை தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் (ஐ.டி.ஐ), மற்றும் பாகிஸ்தான் கராச்சி பல்கலைக்கழகம் இடையிலான ஒப்பந்தம், கொழும்பு தொழில்துறை தொழில்நுட்ப நிறுவனம் மற்றும் இஸ்லாமாபாத்தின் COMSATS பல்கலைக்கழகத்திற்கு இடையிலான ஒத்துழைப்பு, கொழும்பு பல்கலைக்கழகம் மற்றும் பாகிஸ்தான் லாகூர் பொருளாதார கல்லூரி ஆகியவற்றுக்கு இடையிலான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஆகியனவே இவ்வாறு கைச்சாத்திடப்பட்டன.
மறுநாள் காலை ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷவிற்கும் பாகிஸ்தான் பிரதமருக்கும் இடையிலான சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்றது. முதலில் இரு நாட்டு தலைவர்களும் தனியாக சிநேகபூர்வ கலந்துரையடலொன்றை மேற்கொண்டதனைத் தொடர்ந்தே இராஜதந்திர மட்டத்திலான சந்திப்பினை மேற்கொண்டனர்.
இதன் பின்னர் பாகிஸ்தான் பிரதமர் ஷங்க்ரிலா ஹோட்டலில் இடம்பெற்ற வர்த்தக மாநாட்டில் சிறப்புரையாற்றினார்.
இலங்கை விஜயத்தின்போது சீனாவைப் பற்றி இம்ரான் கான் அதிகம் புகழ்ந்து பேசியமை குறிப்பிடத்தக்கதாகும். அத்துடன் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோரை பாகிஸ்தானுக்கு வருமாறும் இம்ரான் கான் உத்தியோகபூர்வமாக அழைப்பு விடுத்தார்.
அத்துடன் கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் இலங்கைக்கு பாகிஸ்தான் ஆதரவு வழங்க ஒருபோதும் தயங்கமாட்டாது என்றும் பிரதமர் இம்ரான் கான் இந்த விஜயத்தில் குறிப்பிட்டார்.
பாகிஸ்தான் பெளத்த மத புராதன சின்னங்களைப் பாதுகாப்பதற்கு வழங்கியுள்ள முக்கியத்துவம் குறித்து தனது உரைகளில் இம்ரான் கான் அதிக முக்கியத்துவம் கொடுத்து வலியுறுத்தினார். இலங்கை மக்களுக்கு பௌத்த மத சுற்றுலாவுக்கான முக்கிய தலமாக பாகிஸ்தான் உள்ளதாக குறிப்பிட்ட அவர், பாகிஸ்தானின் வளமான பெளத்த பாரம்பரியத்தை பற்றியும் அரச தலைவர்களுக்கு தெளிவுபடுத்தினார்.
பிராந்திய சூழலில், அமைதி, அபிவிருத்தி மற்றும் நாடுகளுக்கு இடையே உள்ள தொடர்புகள் பற்றிய தனது பார்வை குறித்து அவர் தெளிவுபடுத்தியதுடன், சார்க் அமைப்பின் மூலம் பிராந்திய ஒத்துழைப்பின் முக்கியத்துவத்தையும், சி.பி.இ.சி (CPEC) மூலம் பிராந்திய அபிவிருத்திக்கான வாய்ப்புக்களையும் வலியுறுத்தினார். சீனாவின் பட்டுப்பாதைத்திட்டத்தில் பாகிஸ்தானும் இலங்கையும் முக்கிய கேந்திரஸ்தானங்கள் என்பதையும் அவர் தனது உரையில் நினைவுபடுத்தினார்.
தனது விஜயத்தின் போது தான் கிரிக்கட் வீரராக இருந்த காலத்தில் இலங்கையுடன் கொண்டிருந்த நெருக்கமான உறவுகளையும் அவர் நினைவுகூர்ந்தார். இந்த விஜயத்தின் போது சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவும் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்சவும் இணைந்து வழங்கிய விருந்துபசாரத்திலும் அவர் பங்கேற்றார். இந் நிகழ்வுக்கு இலங்கையின் முன்னணி விளையாட்டு வீரர்களும் அழைக்கப்பட்டிருந்தனர். இதன்போது இலங்கையில் அமைக்க உத்தேசிக்கப்பட்டுள்ள உயர் தர விளையாட்டு கட்டிடத் தொகுதி தொடர்பான திட்ட வரைபும் இம்ரான் கானிடம் கையளிக்கப்பட்டது. இக் கட்டிடம் அமைக்கப்பட்ட பிறகு இதற்கு இம்ரானின் கானின் பெயர் சூட்டப்படவுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. இந் நிகழ்வில் இலங்கை கிரிக்கட் அணியின் முன்னாள் தலைவர் அர்ஜுன ரணதுங்கவும் கலந்து கொண்டார். தனது உரையில் அர்ஜுனவின் பெயரைக் குறிப்பிட்டுக் கூறிய இம்ரான் கான், தனது அரசியல் வாழ்க்கையில் அர்ஜுனவுக்கும் படிப்பினைகள் உள்ளதாக சுட்டிக்காட்டினார்.
இதேவேளை, இலங்கை – பாகிஸ்தான் பாராளுமன்ற நட்புறவுச் சங்கம் கடந்த செவ்வாய்க்கிழமை அங்குரார்ப்பணம் செய்யப்பட்டதுடன் அதன் தலைவராக நிமல் சிறிபால டி சில்வாவும் செயலாளராக றிசாத் பதியுதீனும், பிரதித் தலைவராக ரவூப் ஹக்கீமும் தெரிவுசெய்யப்பட்டனர்.
இதனிடையே பிரதமர் இம்ரான் கான் இந்த விஜயத்தின் போது இலங்கையில் நடைமுறையிலுள்ள கட்டாய தகனம் தொடர்பில் இலங்கை அரசாங்கத்துடன் கலந்துரையாடுவார் என பாரியளவில் எதிர்பார்க்கப்பட்டது. இதனை அடிப்படையாகக் கொண்டு இலங்கை முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சிகைள் தொடர்பில் பிரதமர் இம்ரான் கானுடன் கலந்துரையாடுவதற்கு நேரம் ஒதுக்கித் தறுமாறு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாத் பதியுதீன் ஆகியோர் தனித் தனியாக இலங்கைக்கான பாகிஸ்தானின் பிரதி உயர் ஸ்தானிகர் தன்வீர் அஹமடினை சந்தித்து அவரது வருகைக்கு முன்னராகவே கோரிக்கை விடுத்திருந்தனர்.
அது மாத்திரமல்லாமல், 15 முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டாக கையெழுத்திட்டு இம்ரான் கானை சந்திப்பதற்கான வாய்ப்பை ஏற்படுத்தித் தருமாறு தூதரகத்திடம் கோரிக்கை விடுத்திருந்தனர். எனினும் அதற்கு அனுமதி வழங்கப்பட்டிருக்கவில்லை.
இந்நிலையில் “பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையிலேயே இம்ரான் கானிற்கும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான சந்திப்பு ரத்துச் செய்யப்பட்டது” என ஊடக அமைச்சர் ஹெகலிய ரம்புக்வெல கடந்த செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர் மாநாட்டில் ஊடகவியலாளரொருவரினால் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போது தெரிவித்திருந்தார்.
இதனிடையே, இம்ரான் கான் கொழும்பை வந்தடைவதற்கு முன்னர் அவர் தங்கியிருந்த ஹோட்டலிற்கு அருகிலுள்ள ஜனாதிபதி செயலகத்தினை அண்மித்த காலி முகத்திடலில் ஆர்ப்பாட்டமொன்று இடம்பெற்றது.
கட்டாய தகனத்திற்கு எதிரான இந்த ஆர்ப்பாட்டத்தில் முஸ்லிம் மற்றும் தமிழ் அரசியல்வாதிகள் எனப் பலர் கலந்துகொண்டனர். இதன்போது, ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம், “இம்ரான் கானுடனான முஸ்லிம் பிரதிநிதிகளின் சந்திப்பினை அரசாங்கம் ரத்துச் செய்தமை கோழைத்தனமான செயற்பாடு” என்றார்.
இவ்வாறான நிலையில், கடந்த புதன்கிழமை (24) காலை முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களை இம்ரான் கான் சந்திப்பதற்கான ஏற்பாடொன்றைச் செய்துள்ளதாக கொழும்பிலுள்ள பாகிஸ்தான் உயர் ஸ்தானிகராலயம் அறிவித்தது. இதற்கமைய சங்கரில்லா ஹோட்டலில் பிற்பகல் 2.30 மணியளவில் இடம்பெற்ற இந்ந சந்திப்பு சுமார் 30 நிமிடங்கள் நீடித்தது.
“கொரோனா வைரஸ் தொற்றினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக எரிக்கப்படுவது தொடர்பில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ ஆகியோருடன் பேச்சு நடத்தியுள்ளேன். விரைவில் சாதகமான பதில் கிடைக்கும்” என பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், இதன்போது முஸ்லிம் எம்.பிக்களிடம் தெரிவித்தார்.
இலங்கை முஸ்லிம்கள் மற்றும் உலக முஸ்லிம்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாகவும் இச் சந்திப்பில் விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.
இலங்கையில் சிறுபான்மையாக வாழுகின்ற முஸ்லிம்கள் பெரும்பான்மை சமூகத்தினரை தூண்டும் விதமாக நடந்துகொள்ளாது அவர்களுடன் ஒற்றுமையாக வாழுமாறு பாகிஸ்தான் பிரதமர் இதன்போது முஸ்லிம் எம்.பி.க்களிடம் அறிவுரை வழங்கியுள்ளார்.
இந்த சந்திப்பில் அமைச்சர் அலி சப்ரி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவர் றிசாத் பதியுதீன், பாராளுமன்ற உறுப்பினர்களான பைசல் காசிம், ஏ.எச்.எம். ஹலீம், நஸீர் அஹமட், எம்.எஸ். தௌபீக், எச்.எம்.எம்.ஹரீஸ், அலி சப்ரி ரஹீம், எம்.எம்.முஷாரப், இஷாக் ரஹ்மான், முஜிபுர் ரஹ்மான், இம்ரான் மஹ்ரூப் ஆகியோர் கலந்துகொண்டனர்.
ஆளும் கட்சியினை பிரதிநிதித்துவப்படுத்தும் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களான ஏ.எல்.எம். அதாஉல்லா, காதர் மஸ்தான், மர்ஜான் பளீல் மற்றும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரைக்கார் ஆகியோர் இதில் பங்கேற்கவில்லை.
இதனிடையே இந்த சந்திப்பு இடம்பெறுவதற்கு முன்னர் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவினை பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் சந்தித்து பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பில் ஐக்கிய மக்கள் சக்தி பாராளுமன்ற உறுப்பினர்களான இம்தியாஸ் பாக்கீர் மாக்கார் மற்றும் கபீர் காசீம் ஆகியோர் கலந்துகொண்டமையினால் முஸ்லிம் எம்.பி.க்களுடனான சந்திப்பில் அவர்கள் இருவரும் கலந்துகொள்ளவில்லை.
இதேவேளை, கொரோனா வைரஸினால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் ஜனாஸாக்களை தகனம் செய்வறத்கு ஐக்கிய மக்கள் சக்தி தொடர்ந்து எதிர்ப்பு வெளியிட்டு வருதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்த சந்திப்பில் இம்ரான் கானிடம் தெரிவித்துள்ளார்.
கட்டாய ஜனாஸா எரிப்பு தொடர்பில் அரசாங்கத்தினால் பல தடவைகள் வாக்குறுதியளிக்கப்பட்டு இலங்கை முஸ்லிம்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். இவ்வாறான நிலையில் இம்ரான் கானின் விஜயத்தின் தொடர்ந்து இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம், சாதகமான தீர்வொன்றினை முஸ்லிம்களுக்கு வழங்கும் என்று முழு உலகமும் அவதானித்துக் கொண்டிருக்கின்றது. இம்ரான் கானும் அந்த உறுதிமொழியை அளித்துள்ளார். இலங்கை அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்ப்போம்.- Vidivelli