கலாநிதி அமீரலி,
மேர்டொக் பல்கலைக்கழகம்,
மேற்கு அவுஸ்திரேலியா
முஸ்லிம் சமூகத்தின் தேவைகளும் பிரச்சினைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே போகின்றன. அவற்றைப்பற்றி மேடைகளிலே அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் ஓயாது கதறுகிறார்கள். அவற்றையே துரும்பாகப் பாவித்து தேர்தல்களிலும் ஜெயிக்கிறார்கள். மதபோதகர்களும் அவர்களுக்குத் தெரிந்த பாணியில் ஒப்பாரி வைக்கிறார்கள். அரசாங்கம்தான் இத்தேவைகளைப் பூர்த்திசெய்து பிரச்சினைகளையும் தீர்த்துவைக்க வேண்டுமென இவர்கள் எல்லாருமே விரும்புவதுபோல் தெரிகிறது. இது பரம்பரையாகப் பாடப்படும் ஒரு பல்லவி. இதன் அடிப்படையிலேதான் அரசின் சலுகைகளை நம்பி வாழும் ஒரு சமூகமாக மற்ற இனங்கள் முஸ்லிம்களை இனங்கண்டுள்ளன.
இந்த நிலை மாறவேண்டும். நடப்பிலிருக்கும் இந்த அரசாங்கமோ அல்லது புதிதாக வரும் எந்த அரசாங்கமோ ஒரு தனிப்பட்ட சமூகத்தின் தேவைகள் எல்லாவற்றையும் பூர்த்திசெய்ய முடியாது. முதலாவதாக, அதற்கான வளங்கள் அரசிடம் கிடையாது.
இரண்டாவதாக, இன்று உலகை ஆளும் அரசியல் பொருளாதாரச் சித்தாந்தங்கள் பொதுநலப்பணியிலும்கூட அரசின் பங்கைக் குறைத்துத் தனியார் பங்கைக் கூட்டியுள்ளது. அதற்கேற்ப சமூகங்களும் தமது தேவைகள் யாவற்றையும் அரசாங்கமே பூர்த்திசெய்ய வேண்டுமென எதிர்ப்பது தவறு. ஆகவே ஒரு சமூகம் அரசாங்கத்தின் பாரமாக இயங்காமல் அதன் பங்காளியாக மாறவேண்டும். உதாரணமாக, ஒரு முஸ்லிம் பாடசாலைக்கு விஞ்ஞான ஆய்வுகூடம் தேவைப்படுவதாக வைத்துக்கொள்வோம். இதை நிறைவேற்ற அரசாங்கத்தையே முழுமையாக நம்பி இராமல் கட்டிடத்தை அவ்வூர் மக்களும் ஏனைய தளபாடங்களையும் விஞ்ஞான உபகரணங்களையும் அரசாங்கமும் பங்கெடுத்தால் அரசாங்கத்தின் பாரமும் குறையும் ஊர்மக்களின் நாட்டுப்பற்றும் போற்றப்படும். இனபேதத்தை வளர்க்கும் ஒரு நாட்டில் முஸ்லிம் இனத்தின் இவ்வாறான செயற்பாடுகள் அந்த இனத்தைப்பற்றிய அபிப்பிராயங்களை எவ்வாறு மாற்றும் என்பதைச் சிந்திக்க வேண்டும்.
முஸ்லிம்களின் பிரச்சினைகளைப் பற்றியும் தேவைகளைப் பற்றியும் பொது மேடைகளில் சதா பேசிக்கொண்டு பொருளும் புகழும் சம்பாதிக்கும் அரசியல்வாதிகளுக்கும் சமூகத் தலைவர்களுக்கும் அந்தப் பிரச்சினைகளின் பரவலும் ஆழமும் என்ன, அல்லது தேவைகள் எவ்வாறானவை, அவை எங்கெங்கே யார் யாருக்கு அவசியம் என்பன பற்றிய தகவல்கள் உண்டா என்பதே முதற் கேள்வி. அதாவது முஸ்லிம்களின் பிரச்சினைகளையும் தேவைகளையும் பற்றிய ஒரு தகவல் திரட்டு இற்றைவரை இல்லையென்பதை உறுதியுடன் கூறலாம். சென்றகால முஸ்லிம் வரலாறுபற்றிய எத்தனையோ தகவல்கள் தனிப்பட்ட சிலரிடையே சிதறுண்டு கிடக்கின்றன. அவற்றையெல்லாம் ஒன்று திரட்டி ஆவணப்படுத்த வேண்டாமா? அப்படிப்பட்ட ஒரு தகவல் பெட்டகம் இல்லாமல் பிரச்சினைகளைத் தீர்க்கவும் தேவைகளைப் பூர்த்திபண்ணவும் எடுக்கப்படும் முயற்சிகள் எதிர்பார்க்கும் பயனைத் தரமாட்டா. எனவே, அப்பெட்டகத்தை எவ்வாறு உருவாக்கலாம் என்பது பற்றிய சில சிந்தனைகளை இக்கட்டுரை வாசகர்களுடன் பகிர்ந்துகொள்ள விரும்புகிறது.
ஒரு சமூகத்துக்குரிய தகவல்களை ஓரிருவரால் தனிப்பட்ட முறையில் திரட்டமுடியாது. இத்தகவல் திரட்டு இலங்கையின் குடிசனக் கணக்கெடுப்புத் திணைக்களம் தேசிய மட்டத்தில் மேற்கொள்ளும் ஒவ்வொரு தசாப்தத்துக்கான கணக்கெடுப்பு போன்று முஸ்லிம்களால் ஒரு முஸ்லிம் சமூகநிறுவனத்தினதோ அமைப்பினதோ தலைமையில் முஸ்லிம்களுக்காக மேற்கொள்ளப்படல் வேண்டும். அதற்கு அடிப்படையாக ஒரு முஸ்லிம் சமூக அமைப்பும், ஆட்பலமும், நிதிப்பலமும் அவசியமாகின்றன.
சமூக அமைப்பு
முஸ்லிம்களுக்குள்ளே எத்தனையோ சங்கங்கள், இயக்கங்கள், மன்றங்களென்று மழைக்கு முளைக்கும் காளான்கள் போன்று காலத்துக்குக் காலம் தோன்றி மறைகின்றன. அவைகளுள் எத்தனையோ பொதுவாக ஓரிருவரின் தனிப்பட்ட நோக்கங்களுக்காகவும் நலன்களுக்காகவும் உருவாகி அந்த நோக்கங்களும் நலன்களும் நிறைவேறியும் நிறைவேறாமலும் இருந்த இடம் தெரியாமலே மறைந்த வரலாறும் உண்டு. ஆனாலும் சமூகப்பற்றும், பொதுநலனும், தூரநோக்கும் கொண்ட சிறந்த சிந்தனையாளர்கள் தோற்றுவித்த ஓரிரு அமைப்புகள் இன்னும் நிலைத்து நிற்கின்றன. அவற்றுள் ஒன்றுதான் இளம் முஸ்லிம் இளைஞர் சங்கம் (YMMA). அது நல்ல பல பணிகளை அதுவும் குறிப்பாகக் கல்வித்துறையில் செய்துள்ளதை மறக்க முடியாது.
இன்றைக்கு, அதுவோ அல்லது அது போன்ற இன்னொரு இயக்கமோ தகவல் பெட்டகம் ஒன்றை உருவாக்கும் பணியில் செயற்பட வேண்டியுள்ளது. அவ்வாறான பணிக்கு முக்கிய தேவை ஒரு நிலையான ஆய்வுகூடம். முன்னொரு கட்டுரையில் நான் குறிப்பிட்டது போல் காலஞ்சென்ற மு.கா. தலைவர் எம். எச். எம். அஷ்ரபை நான் 1990களில் சந்தித்தபோது அவர் நிர்மாணித்துக் கொண்டிருந்த தாருஸ்ஸலாம் என்ற கட்டிடத்தைச் சென்று பார்த்துவிட்டு அதையே முஸ்லிம்களின் வரலாறு, சமூகம், பொருளாதாரம் சம்பந்தமான ஆய்வு கூடமாக மாற்றவேண்டும் என்றும் அதற்கான பூரண ஒத்துழைப்பையும் நான் வழங்கத் தயாராக உள்ளேன் என்றும் கூறினேன். துரதிஷ்டவசமாக அவருடைய மறைவுடன் அந்த வாய்ப்பு நழுவி விட்டது. தாருஸ்ஸலாம் கட்டிடத்தின் இன்றைய நிலையென்ன, அதை யார் எதற்காகப் பயன்படுத்துகிறார்கள் என்பது பற்றியெல்லாம் எனக்கு எதுவுமே தெரியாது. ஆனால் அதனை ஆய்வு கூடமாக மாற்ற வழியுண்டா என்பதை சமூகமே தீர்மானிக்க வேண்டும்.
ஜாமியா நளீமியாவும் இப்பணியைத் தலைமை தாங்கி நடாத்தியிருக்கலாம். 1983 இல் அங்கே சர்வதேச மகாநாடொன்று நடைபெற்றபோது அந்தத் தேவையைப்பற்றியும் அப்போது பிரஸ்தாபிக்கப்பட்ட ஞாபகம் உண்டு. அத்துடன் கொழும்பு சாஹிராக் கல்லூரியின் நூல் நிலையக் கட்டிடத்தை அவ்வாறான தேவைக்காக மாற்றவேண்டும் என்ற எண்ணம் அன்றைய அதன் அதிபர் சிந்தனையாளர் அஸீஸ் அவர்களுக்கிருந்தது. ஆனால் சந்தர்ப்பங்கள் அதையும் கைகூடச் செய்யவில்லை. இதற்கு மத்தியில் இலங்கைப் பல்கலைக்கழகங்களுள் எங்கேயாவது அரபுமொழித்துறையோ வேறு ஏதாவது ஒரு துறையோ இதனைச் செய்யுமென்று அங்கே நிலவும் இன்றைய சூழலில் எதிர்பார்க்க முடியாது. ஆகவே எங்கேயாவது முஸ்லிம் சமூகத்துக்கென சகல நவீன தொழில்நுட்ப வசதிகள்கொண்ட ஒரு பிரத்தியேக ஆய்வுகூடம் அவசியம் தேவை.
ஆய்வாளர்களும் தகவல் திரட்டுவோரும்
தகவல் திரட்டுவோர் படையொன்று பொருளியல், சமூகவியல், கணிதவியல் போன்ற துறைகளிற் பாண்டித்தியம்பெற்ற புத்திஜீவிகளின் தலைமையின்கீழ் அவர்களின் வழிகாட்டலில் செயற்படவேண்டும். பொதுவாக, இப்புத்திஜீவிகள் பல்கலைக்கழகப் பேராசிரியர்களாகவோ சிரேஷ்ட விரிவுரையாளர்களாகவோ அல்லது அரசாங்க நிர்வாகத்துறையில் நீண்ட அனுபவமுள்ளவர்களாகவோ இருத்தல் வேண்டும். அவர்களால் தயாரிக்கப்படும் வினாக்கொத்தைக் கொண்டு அவ்வினாக்களுக்குரிய விடைகளை ஒவ்வொரு முஸ்லிம் குடும்பத் தலைவியிடமிருந்தோ தலைவனிடமிருந்தோ இப்படையினர் நேரிலே சென்று சேகரித்தல் வேண்டும். இது ஒரு செயலணிபோல் இயங்குதல் அவசியம்.
இப்படையினர் பல்கலைக்கழகப் பட்டதாரிகளாக அல்லது இடைநிலைப் பள்ளிக் கல்வியை முடித்தவர்களாக இருத்தல் நன்று. அவர்களுக்கு இரண்டொரு நாட்கள் மேற்குறிப்பிட்ட புத்திஜீவிகளால் ஆய்வுகூடத்தில் பயிற்சிப் பாசறையொன்று நடத்தப்படவேண்டும். அப்படையினர் சேகரித்த விடைகளே புத்திஜீவிகளின் ஆய்வுக்கு மூலப் பொருளாகும். அதன் பிறகு இவ்வாறிவாளிகள் கணினியின் துணையுடன் பல அம்சங்களையும் தொகுத்து வேண்டியமாதிரி அட்டவணைகள் தயாரித்து அந்த ஆய்வுகூடத்தின் பொக்கிஷமாக வைத்தல் வேண்டும். இதுவே தகவல் பெட்டகம். இந்தப்பணியை காலத்துக்குக்காலம் மேற்கொள்வதால் சமூகத்தில் எத்துணை மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன, சமூகத்தின் பிரச்சினைகள் குறைந்துள்ளனவா பெருகியுள்ளனவா அவற்றைத் தீர்க்க என்ன வழி என்பதையெல்லாம் ஆதாரபூர்வமாக அணுகலாம். ஆனால் இந்தப் பெட்டகத்தை அமைப்பதற்கு நிதி வேண்டும்.
தனவந்தர்களின் கடமை
ஏற்கனவே முஸ்லிம் தனவந்தர்களுக்கோர் விண்ணப்பம் என்ற கட்டுரையில் இக்கடமை பற்றிக் குறிப்பிட்டேன். அதை மேலும் வலியுறுத்துவது அவசியமாகின்றது. முஸ்லிம் சமூகத்தைப் பொறுத்தவரை பல தீயசக்திகளின் அரசியற் தந்திரங்களும் சூழ்ச்சிகளும் ஆபத்தான ஒரு நிலையை உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. திருமறையில் அல்லாஹ் ஓரிடத்தில் பின்வருமாறு கூறுகிறான்: “அவர்களும் திட்டம் தீட்டுகிறார்கள், நானும் திட்டம் தீட்டுகிறேன், அவர்களைவிட நான் திட்டம்போடுவதில் வல்லவன்”. ஆகவே இறைவனின் திட்டத்தை நாம் அறியோம். ஆனாலும் நம்மை நாமே பாதுகாக்க முயற்சி எடுக்க வேண்டாமா?
எம்மிடையே திறமைவாய்ந்த புத்திஜீவிகள் பலருண்டு. இது கடந்த முப்பது அல்லது நாற்பது ஆண்டுகளுக்குள் நடைபெற்ற மெச்சத்தக்க ஒரு வளர்ச்சி. அவர்களுள் ஆண்களும் உண்டு, பெண்களும் உண்டு. இவர்கள் சமூகத்தின் சொத்து. ஆனால் அவர்களிடம் அறிவும் சமூக உணர்வும் இருக்கின்றன, பணமில்லை. இதனால் அவர்களால் தமது உணர்வுகளைச் சமூகத்துக்குப் பயனுள்ளதாக மாற்ற முடியாமலிருக்கிறது. இது ஒரு தடை. அந்தத் தடையை தனவந்தர்களாலேயே அகற்ற முடியும். தனவந்தர்களின் தனமும் புத்திஜீவிகளின் திறனும் சேர்ந்து செயற்படும்போது இறைவனின் வழிகாட்டல் நிச்சயம் கிடைக்கும். இது உலக முஸ்லிம் நாகரிகத்தின் வரலாறு புகட்டும் பாடம்.
முஸ்லிம்களுக்கு ஓர் ஆய்வுகூடம் வேண்டுமென நான் எண்ணியபோது எனது ஞாபகத்தில் வந்தது அப்பாசிய கலீபா மாமூனின் பைத்துல் ஹிக்மா என்ற அறிவுகூடம். அந்த அறிவுச்சாலையே முஸ்லிம் தத்துவ ஞானிகளதும், கணித மேதைகளதும் அறிவு விற்பன்னர்களினதும் பயிற்சிக் களமாக விளங்கி முஸ்லிம் அல்லாதவர்களையும் ஈர்த்தது. அப்பாசிய செல்வந்தர்களின் தனமும் அறிவாளிகளின் சிந்தனையும் ஆய்வும் சேர்ந்தே உலகிலேயே ஒப்பற்ற ஒரு நாகரித்தை தோற்றுவித்தது.
முஸ்லிம் தனவந்தர்களே! தகவல் பெட்டகமொன்றைப் படைக்கும் அரும்பணிக்கு உதவ முன்வாருங்கள். இதில் நீங்கள் முடக்கும் பல இலட்சம் ரூபாய்கள் எதிர்காலத்தில் பல வடிவங்களில் எத்தனையோ கோடி ரூபாய் பெறுமதியான நன்மைகளை சமூகத்துக்கு விளைவிக்கும். முயற்சி நம்முடையது. வெற்றியும் தோல்வியும் இறைவனுடையது. இறைவன் துணை செய்பவனே ஒழிய இயக்குபவன் அல்ல.- Vidivelli