கிழக்கின் இன நல்லுறவுக்கு நம்பிக்கை தரும் புதுமுகங்கள்!

0 1,103

எம்.பி.எம்.பைறூஸ்

“ நான் சிங்கள பாடசாலையிலேயே கல்வி கற்றேன். எனக்கு அதிகமான சிங்கள, தமிழ், முஸ்லிம் நண்பர்கள் இருக்கிறார்கள். என்னால் மூன்று மொழிகளிலும் சரளமாகப் பேச முடியும். நான் இனவாதம் பேசுபவனல்ல. நான் இந்த நாட்டில் வாழும் சகல மக்களினதும் பிரச்சினைகள் பற்றியும் பேசுவதற்காகவே பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்டிருக்கிறேன்”

இது மட்டக்களப்பிலிருந்து இம்முறை பாராளுமன்றத்திற்கு முதன் முறையாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தெரிவு செய்யப்பட்ட இளைஞரான இராசமாணிக்கம் சாணக்கியன், பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னி உரையின் ஒரு பகுதியாகும்.

மூன்று மொழிகளிலும் அவர் சரளமாக ஆற்றிய உரை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் மாத்திரமன்றி சிங்கள மக்கள் மத்தியிலும் பெரும் வரவேற்பைப் பெற்றிருந்தது. இவ்வாறான மொழி ஆற்றலும் நாட்டின் யதார்த்தத்தை விளங்கிப் பேசுகின்ற பேச்சாற்றலும் கொண்டவர்களே பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட வேண்டும் என பலரும் அவரது உரை தொடர்பில் சமூக வலைத்தளங்களில் கருத்து வெளியிட்டிருந்தனர். 

அதேபோன்றுதான் இம்முறை பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்யப்பட்ட மற்றொரு இளைஞரும் ஊடகவியலாளருமான முஷாரப் முதுநபீன், பாராளுமன்றத்தில் ஆற்றிய கன்னியுரையும் பலத்த கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. “நான் எனது மாவட்டத்தில் வாழுகின்ற எல்லா மக்களுக்காகவும் சேவையாற்றவே இந்த சபைக்கு வந்துள்ளேன். யாதும் ஊரே யாவரும் கேளீர் என்பதற்கொப்ப யாதும் எனது ஊர், யாவரும் எனது மக்கள் என்ற கண்ணோட்டத்திலேயே நான் எனது அரசியல் பயணத்தை முன்னெடுக்க விரும்புகிறேன்” என அவர் குறிப்பிட்டிருந்தார். முஷாரபின் கன்னியுரையும் அதிக கவனயீர்ப்பைப் பெற்றிருந்தது. இவ்வுரையினை வட மாகாண முன்னாள் ஆளுநரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான ஓய்வுபெற்ற நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனும் சிலாகித்துப் பாராட்டியிருந்தார்.

கிழக்கு மாகாணத்திலிருந்து தமிழ், முஸ்லிம் சமூகங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தும் மேற்படி இரு இளம் பாராளுமன்ற உறுப்பினர்களதும் கருத்துக்களும் கண்ணோட்டங்களும் பிராந்தியத்தினதும் தேசத்தினதும் இன நல்லுறவின் எதிர்காலம் குறித்த நம்பிக்கையைத் தருவனவாக அமைந்துள்ளன எனலாம்.

கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை 2012 ஆம் ஆண்டு சனத்தொகைக் கணக்கெடுப்பின்படி, 39.29 வீதம் தமிழ் மக்களும் 36.69 வீதம் முஸ்லிம் மக்களும் 23.15 வீதம் சிங்கள மக்களும் வாழ்கின்றனர். இவர்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி இம்முறை 7 முஸ்லிம் எம்.பி.க்களும் 6 தமிழ் எம்.பி.க்களும் 4 சிங்கள எம்.பி.க்களும் பாராளுமன்றத்திற்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

இந் நிலையில் மூவின மக்களும் கலந்து வாழும் கிழக்கிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள இப் பாராளுமன்ற உறுப்பினர்கள் தத்தமது சமூகங்களுக்காக மாத்திரமன்றி சக இன மக்களுக்காக பேசவும் செயற்படவும் வேண்டும் எனும் எதிர்பார்ப்பு மேலெழுந்துள்ளதை அவதானிக்க முடிகிறது.

தேர்தல் பிரசார காலத்தைப் பொறுத்தவரையில் தமிழ், முஸ்லிம் வேட்பாளர்கள் பெரும்பாலும் தத்தமது இன வாக்குகளை மாத்திரம் மையப்படுத்தியே பிரசாரங்களை முன்னெடுத்திருந்தனர். தமிழ் அரசியல்வாதிகள் தமிழ் தேசியம் பற்றியும் தமிழ் மக்களின் உரிமைகளை வென்றெடுப்பது பற்றியுமான கருப்பொருளுக்கே தேர்தல் மேடைகளில் அதிக முக்கியத்துவமளித்திருந்தனர். அதேபோன்றுதான் முஸ்லிம் வேட்பாளர்களும் தமது பிரதேசத்தின் அபிவிருத்தி, உரிமைகளை வென்றெடுத்தல் போன்ற கோ~ங்களுக்கே முன்னுரிமையளித்திருந்தனர். அடுத்த சமூகங்களுக்காகவும் குரல் கொடுப்பது பற்றி பிரசாரங்களில் அவ்வளவு முக்கியத்துவம் வழங்கியிருக்கவில்லை.

இருந்தபோதிலும் கிழக்கு மாகாணத்தில் வாழும் சமூகங்கள் எதிர்கொள்ளும் தனித்தனியான பிரச்சினைகள் ஒருபுறமிருக்க, பல பொதுவான பிரச்சினைகளும் இருக்கத்தான் செய்கின்றன. இந்நிலையில் இவற்றை தனித்தனியாகவன்றி ஒன்றுபட்டு செயற்படுவதன் மூலமே வெற்றி கொள்ள முடியுமாகவிருக்கும்.

இதுபற்றி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இராசமாணிக்கம் சாணக்கியன் குறிப்பிடுகையில், “கிழக்கு மாகாணத்தில் வாழும் சகல மக்களுக்குமான பொதுவான பிரச்சினைகளுக்காக அரசியல் வேறுபாடின்றி நாம் குரல் கொடுக்க வேண்டும் என்பதை நான் ஏற்றுக் கொள்கிறேன். தமிழ், முஸ்லிம், சிங்கள மக்களின் பிரச்சினைகளை இன்னுமொரு இனத்துக்கு எதிராக பயன்படுத்தி அச்சுறுத்தும் அரசியலை நாம் செய்யக் கூடாது. ‘ஒரு நாடு ஒரு சட்டம்’ என்று பேசும் இக் காலத்தில் நாம் அனைவரையும் சமமாகவே நோக்க வேண்டும், நடாத்த வேண்டும்.

எல்லா கட்சிகளும் இணைந்து பேசுவதன் மூலமே கிழக்கில் நிலவும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண முடியும். பிரிந்து செயற்படுவதன் மூலம் ஒருபோதும் எமது இலக்குகளை அடைய முடியாது. இன, மத ஒற்றுமையின் ஊடாகவே இதனை அடையலாம். நாட்டிலுள்ள ‘தாராளவாத சிந்தனை’ கொண்ட அரசியல்வாதிகள் அனைவரும் இன மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணை வேண்டும். இதில் தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் மாத்திரமன்றி சிங்கள சமூகத்தில் உள்ள தாராளவாத சிந்தனை கொண்ட அரசியல்வாதிகளையும் நாம் இணைத்துக் கொண்டு பயணிக்க வேண்டும்” என்றார்.

இதேபோன்றதொரு கருத்தையே அம்பாறை மாவட்டத்திலிருந்து இம்முறை தெரிவான பாராளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி முஷாரபும் வலியுறுத்துகிறார்.  “ நான் தமிழ், முஸ்லிம் மக்களுக்கு மாத்திரமன்றி சிங்கள மக்களுக்கும் சேவையாற்றவே விரும்புகிறேன். எனது ஆசையெல்லாம் இந்த நாடு நன்றாக வளர்ச்சியடைய வேண்டும் என்பதுதான். என்னுடைய இனத்துக்காக பேசுகிறேன் என்பதற்காக இன்னொரு இனத்தை தாழ்த்திப் பேசி அதனூடாக வாக்குகளைச் சேகரிக்கின்ற, அதற்காக இனவாதம் பேசுகின்ற மட்டமான அரசியலை முன்னெடுக்க நான் விரும்பவில்லை. தமிழ் மக்கள் வாழும் திருக்கோவில் பிரதேசத்தில் இல்மனைட் அகழ்வு நடக்கிறது. இது தொடர்பில் தமிழ் இளைஞர்களோடு நான் பேசிக் கொண்டிருக்கிறேன். இப் பிரச்சினை பற்றி அடுத்து வரும் நாட்களில் பாராளுமன்றில் கேள்வி எழுப்பவும் திட்டமிட்டுள்ளேன்.  இன ரீதியாக பிரித்துப் பேசுவது வாக்குகளைப் பெறுவதற்கு இனிமையாகத்தான் இருக்கும். ஆனால் நான் அதனைச் செய்ய விரும்பவில்லை. மனிதம் தான் என்னுடைய அடையாளம்” என்றார்.

தமிழ், முஸ்லிம் அரசியல்வாதிகள் தாம் இன மத பேதமின்றியே சேவைகளை முன்னெடுப்பதாக குறிப்பிடுகின்ற போதிலும் இன ரீதியாக பிரிந்து நின்றே செயற்படுவதாகக் குறிப்பிடுகிறார் தமிழ் – முஸ்லிம் நல்லுறவு தொடர்பில் நீண்ட காலமாக செயற்பட்டுவருபவரும் சிவில், அரசியல் செயற்பாட்டாளருமான யூ.எல்.எம்.என். முபீன்.  தமிழ் முஸ்லிம் அரசியல்வாதிகள் இன ரீதியாக சிந்தித்து செயற்படாமல் இணைந்து செயற்பட்டால் கிழக்கு மாகாணத்தை மேலும் இன நல்லுறவுமிக்கதாக கட்டியெழுப்பலாம் என்றும் அவர் சுட்டிக்காட்டுகிறார்.

“உண்மையில் தமிழ் அரசியல்வாதிகளும் முஸ்லிம் அரசியல்வாதிகளும் இன ரீதியாக பிரிந்தே செயற்படுகின்றனர். மட்டக்களப்பில் தமிழர்கள் தமிழ் வேட்பாளர்களுக்கும் முஸ்லிம்கள் முஸ்லிம் வேட்பாளர்களுக்குமே வாக்களிக்கின்ற போக்கு தொடர்கின்ற போதிலும் கடந்த காலங்களில் மாவட்ட அபிவிருத்திக் குழுத் தலைவர்களாக பதவி வகித்த முஸ்லிம் எம்.பி.க்கள் பலரும் அபிவிருத்தியிலும் வேலைவாய்ப்பிலும் தமிழ் மக்களுக்குரிய பங்கை வழங்கியுள்ளனர் என்பதை மறுப்பதற்கில்லை. மாவட்ட அபிவிருத்திக் குழுவுக்கு கிடைக்கப் பெறும் நிதி மாவட்டத்தின் சனத்தொகை விகிதாசாரத்திற்கேற்ப தமிழ் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளது. தமது பிரச்சினைகளைத் தீர்க்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட வேண்டும் என தமிழ் பிரதிநிதிகள் கோரிக்கைகளை முன்வைத்த சமயங்களில் அதற்காக முயற்சி செய்து அரசாங்கத்திடமிருந்து முஸ்லிம் அரசியல்வாதிகள் நிதிகளைப் பெற்றுக் கொடுத்துள்ளனர். எதிர்காலத்திலும் இதே நிலை தொடர வேண்டும்” என்றும் முபீன் குறிப்பிட்டார்.

கடந்த தேர்தல் பிரசார காலத்தில் தமிழ் – முஸ்லிம் விரிசலைத் தூண்டி அதன் மூலம் வாக்குகளைச் சேகரிக்கின்ற பிரசார உத்தியை சில வேட்பாளர்கள் கையாண்டிருந்தனர். குறிப்பாக அம்பாறை மாவட்டத்தில் போட்டியிட்ட கருணா அம்மான் தொடர்ச்சியாக முஸ்லிம்களுக்கு எதிராகவும் முஸ்லிம் வேட்பாளர்களுக்கு எதிராகவும் தமிழ் வாக்காளர்களின் உணர்வுகளைத் தூண்டும் விதமான வெறுப்பூட்டும் கருத்துக்களை வெளியிட்டிருந்ததாகவும் ஹேஷ்டெக் தலைமுறை அமைப்பு வெளியிட்டுள்ள தேர்தல் கண்காணிப்பு அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதே விடயத்தை தேர்தல் வன்முறைகளைக் கண்காணிப்பதற்கான நிலையமும் சுட்டிக்காட்டியுள்ளது.

அதேபோன்றுதான் அடிக்கடி இனவாதக் கருத்துக்களை வெளியிட்டு சர்ச்சைகளில் சிக்கும் மட்டக்களப்பு மங்களாராமய விகாராதிபதி அம்பிட்டியே சுமணரத்தின தேரரும் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் சுயேட்சைக்குழுவில் போட்டியிட்டார். எனினும் அவரால் 667 வாக்குகளை மட்டுமே பெற்றுக் கொள்ள முடிந்தது.

அவ்வாறு இனவாதத்தை தூண்டி பிரசாரம் மேற்கொண்டவர்கள் இம்முறை வெற்றி பெறவில்லை என்பதும் சக சமூகங்களையும் அனுசரித்து அரசியல் செய்யப் போவதாக தமது பிரசாரங்களில் வலியுறுத்தியவர்களையே மக்கள் தெரிவு செய்துள்ளார்கள் என்பதும் வரவேற்கத்தக்க மாற்றமாகவும் கிழக்கு மாகாணத்தின் எதிர்கால அரசியல் எதிர்காலத்திற்கு கட்டியங்கூறுவதாகவும் அமைந்துள்ளது எனலாம்.

“முஸ்லிம் அரசியல்வாதிகள் தமிழ் பிரதேசங்களில் வாக்குச் சேகரிக்க செல்வது போல் தமிழ் அரசியல்வாதிகளும் உரிமையுடன் முஸ்லிம் பிரதேசங்களுக்குள் வர வேண்டும். தங்களது ஒதுக்கீடுகளில் அபிவிருத்தி செயல்பாடுகளில், வேலை வாய்ப்புகளில் முடிந்தளவு முஸ்லிம் பிரதேசங்களும், முஸ்லிம்களும் உள்வாங்கப்பட வேண்டும். இன நட்புறவை வலுவாக்கும் பணிகளை மேற்கொள்ள வேண்டும். இன்றைய அரசியல் இதற்கு மிக தோதான காலம்” என ஏறாவூர் பிரதேச சமூக செயற்பாட்டாளர் தௌபீக் அலி குறிப்பிடுகிறார். அதேபோன்று “தமிழ் கட்சிகளில் முஸ்லிம் வேட்பாளர்களையும் முஸ்லிம் கட்சிகளில் தமிழ் வேட்பாளர்களையும் உள்வாங்க வேண்டும். இதன் மூலம் இன வேறுபாடின்றி மக்கள் வாக்களிக்க சந்தர்ப்பம் கிடைக்கும். தேர்தல் பிரசார மேடைகளிலும் ஒருவரையொருவர் தாக்கிப் பேசாது ஆதரித்துப் பேசுகின்ற நிலைமை உருவாகும். இது பற்றியும் எதிர்காலத்தில் அரசியல் கட்சிகள் கவனம் செலுத்த வேண்டும்” என மட்டக்களப்பு மாவட்டத்தில் சிவில் சமூக நல்லிணக்க வேலைத்திட்டங்களில் பங்கெடுத்துவருபவரான மு. கருணாகரன்  குறிப்பிடுகிறார்.

கிழக்கில் தெரிவு செய்யப்பட்டுள்ள சகல பாராளுமன்ற உறுப்பினர்களும் தத்தமது இனத்திற்கு மாத்திரமன்றி, தமக்கு வாக்களித்த மக்களுக்கு மாத்திரமன்றி சகலருக்காகவும் பணியாற்றுகின்ற வழக்கத்தைக் கைக்கொள்ள வேண்டும். மக்களைப் பிரித்தாளும் அரசியலுக்கு முற்றுப்புள்ளி வைத்து, சகலரையும் அரவணைத்துச் செல்கின்ற அரசியலையே முன்னெடுக்க வேண்டும். அதுவே இந்த நாட்டினதும் தமிழ் – முஸ்லிம் சமூகங்களினதும் நீண்ட கால நல்லுறவுக்கு அடித்தளமிடுவதாக அமையும். தமிழ் முஸ்லிம் வாக்காளர்களின் எதிர்பார்ப்பும் அதுவாகவே உள்ளது.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.