கலாநிதி அமீர் அலி,
மேர்டொக் பல்கலைக்கழகம், மேற்கு அவுஸ்திரேலியா
எதிர்வரப்போகும் பொதுத் தேர்தல் முஸ்லிம் சமூகத்தின் எதிர்காலத்தை நிர்ணயிக்கும் ஒரு தேர்தலாக அமையப்போவதிலே சந்தேகமில்லை. இத்தேர்தலில் மகிந்த ராஜபக்சவின் பொதுஜன முன்னணிக் கட்சியே வெற்றி பெறக்கூடிய சாத்தியங்கள் நிறைய உண்டு. ஆனால் இந்தக் கட்சியின் தூணாக நின்று அதனை இயக்குவது பௌத்த பேராதிக்கவாதச் சக்திகள் என்பது யாவருக்கும் தெரியும். இந்தச் சக்திகள் முஸ்லிம் சமூகத்தின் பொருளாதார அடிப்படையையும் அதன் அரசியல் செல்வாக்கையும் சீரழிப்பதற்குக் கங்கணம் கட்டியுள்ளன என்பதை அதன் ஆதரவாளர்கள் மறைக்கின்றனர். இருந்தும் அந்தக் கட்சியுடன் இணைந்து பங்காளிகளாக மாறினாலன்றி முஸ்லிம்களுக்கு விடிவுகாலம் இல்லை என்ற ஒரு பிரச்சாரம் முஸ்லிம் வேட்பாளர்கள் பலரால் பரப்பப்படுகிறது. அதற்கு முஸ்லிம் வாக்காளர்களும் மயங்குகின்ற ஓர் ஆபத்தும் நிலவுகிறது. இவ்வாறு ஆளுங்கட்சியுடன் இணைந்து செயற்படும் போக்கு சுதந்திரம் கிடைத்த காலம் தொடக்கமே முஸ்லிம்களிடம் காலூன்றியுள்ளது. இந்த மனப்பாங்கினுக்கு முஸ்லிம் சமூகத்தின் ஆரம்பகால வரலாறும், முஸ்லிம்களின் மதவழிபாட்டு நம்பிக்கைகளும் காரணங்களாகலாம் என்பதை இக்கட்டுரை வாசகர்முன் சமர்ப்பிக்கினறது. பல்கலைக்கழக மட்டத்தில் இது ஓர் ஆய்வுப் பொருளாகவும் பட்டதாரி மாணவர்களுக்கு அமையலாம்.
இலங்கைக்கு முஸ்லிம்கள் வைசியராகவே, அதாவது வியாபாரிகளாகவே, வந்தார்கள். அவர்களோடு வந்ததே இஸ்லாம். ஆகவே வாளோடு இஸ்லாம் இங்கு வரவில்லை, தராசோடும் முளக்கோலோடுமே வந்தது. இவை வரலாறு உறுதிப்படுத்தும் இரண்டு உண்மைகள். ஆனால், வியாபாரக் கலையும் இஸ்லாம் போதிக்கப்பட்ட விதமும் அதனைக் கடைப்பிடித்த முறையும் காலவோட்டத்தில் இறுக்கமாகி அதுவே வைதீகமாயிற்று. இந்த வைதீகம் வைசியர் குடியிருப்புகளின் வாழ்க்கை முறையையும், அம்மக்களின் மனோநிலையையும் ஆழமாகப் பாதித்துள்ளது. இந்தப் பாதிப்பு முஸ்லிம்களின் அரசியல் ஈடுபாட்டினையும் விட்டுவைக்;கவில்லை. சுருக்கமாகக் கூறினால் வைசியமும் வைதீகமும் முஸ்லிம்களின் அரசியல் போக்கினையே மாற்றியுள்ளன.
புறநானூறு என்னும் பழந்தமிழ் இலக்கியத்திலே கணியன் பூங்குன்றனார் என்னும் ஒரு புலவா,; “யாதும் ஊரே யாவரும் கேளிர்”, அதாவது, போகும் இடமெல்லாம் எனது ஊர்தான், காணும் மக்களெல்லாம் எனது உறவினரே, என்ற ஓர் உலகளாவிய மானித மந்திரத்தை எழுதி வைத்தார். எனினும், இந்த மந்திரம் குறிப்பாக வைசியருக்கு மிகவும் வேண்டியதொன்று. ஏனெனில் ஒரு வியாபாரியின் தொழில் வாங்கலும் விற்றலும். அதற்குத் தேவை வாடிக்கையாளர்கள். வாடிக்கையாளர்களின் தொகை பெருகப்பெருக வியாபாரியின் தொழிலும் விருத்தியடைந்து இலாபமும் அதிகரிக்கும். அந்த வாடிக்கையாளர்களை உறவினர்போல் அல்லது நண்பர்கள்போல் அணுகி அவர்களுடன் இலாவகமாக உரையாடி உறவாடினாற்தான் அவர்கள் மீண்டும் மீண்டும் அவ்வியாபாரியை நாடுவர். வியாபாரமும் செழிக்கும். ஆகவே வியாபாரிகளுக்கு உலகமே ஒரு சந்தை. அதில் வாழும் எல்லாருமே வாடிக்கை நண்பர்கள். இந்த நோக்கில் பார்க்கும்போது பூங்குன்றனாரும் ஒரு வைசியர்போல் தோன்றுகிறது. அது ஒரு புறம் இருக்கட்டும்.
இலங்கைக்கு வந்த முஸ்லிம் வியாபாரிகளுக்கு இலங்கையே ஒரு சந்தையானது. இங்கு வாழ்ந்த சிங்கள, தமிழ், வேட்டுவ மக்கள் முஸ்லிம்களின் வாடிக்கையாளராயினர். அம்மக்கள் தமது கிராமங்களில் உற்பத்திசெய்த பொருள்களை முஸ்லிம் வியாபாரிகளுக்கு விற்று தமக்கு வேண்டிய வேறு பொருள்களை அவ்வியாபாரிகளிடமிருந்து வாங்கிச் சென்றனர். வியாபாரிகள் மலிவாக வாங்கி ஒறுப்பாக விற்று இலாபம் திரட்டினர். ஆரம்பத்தில் தாவளங்கள் மூலம் வாடிக்கையாளர்களைத் தேடிச்சென்ற வியாபாரிகள், நாளடைவில் நாடு வளர்ச்சியடைந்து நகரங்களும் பட்டணங்களும் பெருகவே அங்காடித் தெருவோரங்களில் கடைகளைத் திறந்து நிலைகொள்ளலாயினர். ஆதலால் வாடிக்கையாளர்கள் வியாபாரத்தலங்களைத் தேடிவந்தனர். இதிலே புதுமைப்பட வேண்டிய எதுவுமே இல்லை. வியாபாரத்தின் முக்கிய பண்பே அதுதானே.
ஆனாலும், நாட்டையே ஒரு சந்தையெனக் கருதும் மக்களுக்கும் நாடே எங்களின் சொத்து, அதன் வளத்திலேயே எங்கள் வாழ்வு தங்கியுள்ளது என்று கருதும் மக்களுக்குமிடையே ஒரு பெரும் மனோபாவ வேறுபாடுண்டு. பரம்பரை பரம்பரையாக இலங்கையை ஒரு சந்தையாகக் கருதிய முஸ்லிம் வியாபாரிகள் இலங்கையின் வளர்ச்சி பற்றிக் கவலை கொள்ளவில்லை. இதை ஒரு முறை கலாநிதி கொல்வின் ஆர் டி சில்வா பேசும்போது, முஸ்லிம்களுக்கும் இலங்கைக்கும் உள்ள உறவு மாட்டுக்கும் புல்லுக்குமிடையே உள்ள உறவென்று குறிப்பிட்டார். ஒரு வியாபாரி காலையிலே கடையைத் திறந்தால் இரவுமட்டும் அதனுள்ளேயே இருந்துகொண்டு பணம் திரட்டுவதிலேயே கண்ணாயிருப்பான். தொழுகை நேரத்தில் மட்டும் பள்ளிவாசலை நோக்கி வெளியே செல்வான். வீடு, பள்ளிவாசல், கடை ஆகிய மூன்றையும் சுற்றியே அவன் வாழ்க்கை கழியும். ஆகவே, இந்த வியாபாரிக்கு நாட்டை இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன? நாட்டுப் பற்றென்பது இவனுக்கு அவசியமா? நாட்டின் ஏனைய பிரச்சினைகளைப்பற்றி இவன் கவலைப்பட வேண்டுமா? ஓர் அரசாங்கம் தனது வியாபாரம் விருத்தியடைவதற்கு ஏற்றபடி கொள்கைகளை அமைத்து அமைதியையும் நிலைநாட்டினால் அந்த அரசாங்கத்துக்கு ஆதரவாய் இருப்பதுவே அவனது நோக்கமாயிருக்கும். ஆளும் கட்சியே அவனின் கட்சி. இது வைசியம் புகட்டும் அரசியல்.
இந்த விவாதத்ததைத் தொடருமுன் கலாநிதி சில்வாவின் கூற்றுக்குப் புறனடை உண்டென்பதையும் உணரவேண்டும். அவரின் கூற்று இலங்கையின் எல்லா முஸ்லிம்களுக்கும் பொருந்தாது. உதாரணமாக, நெற்செய்கையையே தொழிலாகக் கொண்ட கிழக்கிலங்கை முஸ்லிம்களுக்கு இது பொருந்துமா? நிலத்தையே நம்பி வாழும் அம்மக்கள் அதன் வளத்தை எவ்வாறு பாதுகாப்பது என்பதிலேயே கண்ணும் கருத்துமாய் இருப்பர், இன்னும் இருக்கின்றனர். ஆனால், இது 16ஆம் நூற்றாண்டுக்குப் பின்னர் ஏற்பட்ட மாற்றமே. அதேபோன்று சிறுபயிர்ச் செய்கையில் ஈடுபட்டுள்ள எத்தனையோ முஸ்லிம் குடும்பங்களுக்கும் நிலத்துக்கும் நெருங்கிய தொடர்புண்டு. எனினும் பெரும்பாலான முஸ்லிம்கள் விவசாயிகளல்லர், வியாபாரிகளே. எனவேதான் முஸ்லிம்களை ஒரு வர்த்தக சமூகத்தினரென வரலாறு அழைக்கிறது.
ஒரு வைசியனின் கவனமெல்லாம் சந்தையையும் அவனது வாடிக்கையாளர்களையும் சுற்றிச் சுழல அவன் பின்பற்றிய மார்க்கத்தின் கவனமெல்லாம் வேறோர் உலகத்தைப் பற்றியே சுற்றிச் சுழன்றது. இஸ்லாத்தின் மதபோதகர்கள் தொன்றுதொட்டுப் போதித்துவருகின்ற ஒரே போதனை இகலோக வாழ்க்கையின் நிலையாமை பற்றியும் பரலோக வாழ்வின் நிரந்தரம் பற்றியதே. இவ்வுலகத்தில் ஓர் பயணியைப்போல் வாழ்ந்துகொண்டு மறு உலகுக்கான ஆயத்தங்களைச் செய்வதிலேயே, அதாவது மார்க்கக் கடமைகளைப் பேணுவதிலேயே, கவனம் செலுத்த வேண்டுமென்பதே இன்று வரை பள்ளிவாசல்களிலும் மதரசாக்களிலும் பொதுமேடைகளிலும் இஸ்லாமிய மதபோதகர்களும் பிரச்சாரிகளும் பிரசங்கிகளும் வழங்குகின்ற தாரக மந்திரம். இந்தப் போதனையின்படி ஒரு முஸ்லிமின் வாழ்வு அவனது குடும்பம், பள்ளிவாசல், அவனது தொழில் ஆகிய மூன்றையுமே சுற்றிச் சுழலும். இந்தப் போதனையின்படியும் ஒரு முஸ்லிமுக்கு நாட்டை இராமன் ஆண்டாலென்ன இராவணன் ஆண்டாலென்ன? அவனுக்குத் தேசப்பற்று, மொழிப்பற்று, இனப்பற்று போன்றவையெல்லாம் அவசியமற்றவை. இதுதான் வைதீக மார்க்கம்.
இதுவரை கூறியவற்றிலிருந்து வைசியத்துக்கும் வைதீகத்துக்கும் இடையே நெருங்கிய மனோபாவ ஒற்றுமையொன்று உண்டென்பது தெளிவாகவில்லையா? இந்தப்போக்கு எவ்வாறு சுதந்திரத்துக்குப் பின்னுள்ள முஸ்லிம்களின் அரசசியலைப் பாதித்ததென்பதை இனி விளக்குவோம்.
இலங்கையின் ஜனநாயக அரசியல் கட்சி அடிப்படையில் அமைந்ததொன்று. 1990வரை தமக்கெனத் தனிப்பட்ட அரசியல் கட்சியொன்றை அமைக்காமல் தேர்தலில் வெல்லும் கட்சியுடன் இணைந்தே முஸ்லிம் அரசியல்வாதிகள் செயற்பட்டு வந்தள்ளனர். 1990க்குப் பிறகும் இலங்கை முஸ்லிம் காங்கிரஸ் கட்சி, முஸ்லிம்களின் மொத்த வாக்குகளையும் ஒரு குடையின்கீழ் திரட்டுவதற்காக அமைக்கப்பட்;டதே ஒழிய தனியே ஆட்சி அமைப்பதற்காகவல்ல. ஆனால் நோக்கு ஒன்றுதான். ஆளுங்கட்சியுடன் இணைந்து இயலுமான சலுகைகளைப் பெற்றுக் கொள்வதே.
இந்த அரசியல்வாதிகளும் வைசியத்தினதும்; வைதீகத்தினதும் பாசறைகளில் பயிற்றப்பட்டவர்களே. எனவே அவர்கள் தமது சமூகத்தின் தேவைகளை நாட்டின் தேவைகளோடு இணைத்து அவற்றை எல்லா மக்களினதும் உரிமைகளெனக் கருதிப் போராடாமல் தனிப்பட்ட சலுகைகளாகக் கணித்தே அவற்றைப் பெறும் வழிவகைகளைத் தேடினர். இராமன் ஆண்டாலோ இராவணன் ஆண்டாலோ ஆள்பவனைச் சேர்வதே இவர்களின் நோக்கமாக இருந்தது. உதாரணமாக, இவர்களுள் எவராவது நாட்டின் பொருளாதாரத்தைப் பற்றியோ அதனை எவ்வாறு வளாப்பது என்பதைப்பற்றியோ எந்த நாடாளுமன்றக் கூட்டத்திலும் பேசியதில்லை. அதே போன்று நாட்டின் வெளிவிவகாரக் கொள்கைள், பாதுகாப்பு, சுற்றுச்சூழல் போன்ற எந்தப் பொது விடயங்களைப்பற்றிய விவாதங்களிலும் பங்குபற்றவுமில்லை. அவற்றைப்பற்றிக் கவலைப்படவுமில்லை. சுருங்கக் கூறின் அரசாங்கத்துடன் இணைந்து ஆமாப்போடும் பொம்மை அங்கத்தவர்களாகவே இருந்துவந்துள்ளனர். அதைத்தான் வைசியமும் வைதீகமும் வரவேற்றன.
1950களில் மொழிப்பிரச்சினை உருவானபோது தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட அத்தனை முஸ்லிம் அங்கத்தவர்களும் சிங்கள மொழியை ஆதரித்தே வாக்களித்தனர். காரணம், அது பெரும்பான்மையான வாடிக்கையாளர்களின் மொழி. இங்கே வைசியப்பண்பு மொழிப்பற்றை வென்றுவிட்டது. அதுமட்டுமல்ல, பெரும்பாலான முஸ்லிம்களைப் பொறுத்தவரை மொழி என்பது ஒரு வெறும் ஊடகமே. வாழ்க்கையை ஓட்டுவதற்காக ஒரு மொழி தேவையேயன்றி அதற்காகப் போராடுவதில் அர்த்தமில்லை. அத்துடன் அந்த மொழி அரபு மொழியைப்போல் பரலோக வாழ்வுக்கு உதவக்கூடிய மொழியல்ல என்பதும் வைதீகத்தின் போதனையாக இருந்தது. எனவே, அனிச்சயமான இவ்வாழ்வுக்கு மொழிப்பற்று, நாட்டுப்பற்று, இனப்பற்று ஆகியவை அவசியமாகக் கருதப்படவில்லை.
இதே மனோபாவமே இந்தத் தேர்தலிலும் வெல்லக்கூடிய கட்சியின் பக்கம் முஸ்லிம் வேட்பாளர்களை நகர்த்துகிறது. வைசியத்துக்குச் சந்தையும் வாடிக்கையாளர்களும் முக்கியம். வைதீகத்துக்கு மறு உலக வாழ்வு முக்கியம். எனவே ஆளுங்கட்சியுடன் இணைந்து காலத்தை ஓட்டுவதே சிறந்த உத்தி. இந்தச் சிந்தனையிலிருந்து முஸ்லிம் சமூகம் விடுதலையாக வேண்டும்.
இன்றைய முஸ்லிம் சமூகத்தை வியாபாரச் சமூகமென அடையாளம் குத்துவது மடமை. பல துறைகளிலும் இன்று முஸ்லிம்கள் பங்குகொண்டு வருகின்றனர். அதே போன்று இஸ்லாத்தைப் பற்றிய விளக்கங்கள் புரட்சிகரமான முறையில் பல்வேறு அறிவாளிகளால் பல மொழிகளில் வெளிவருகின்றன. இவற்றையெல்லாம் வைதீக மரபில் வந்த போதகர்களால் விளங்கவும் முடியாது. அக்கருத்துக்களை ஜீரணிக்கவும் முடியாது. இதனாலேதான் அரசியல்வாதிகளும் பழைய பல்லவியையே பாடிக்கொண்டு முஸ்லிம் வாக்களர்களை ஏமாற்றுகின்றனர். முஸ்லிம்களின் அரசியல் தேசியத்தடன் கலந்து தலைகீழாக மாறவேண்டியது அவசியம். நடக்குமா? – Vidivelli