அரபுக் கல்லூரிகள், தௌஹீத் பள்ளிவாசல்கள், காதி நீதிமன்றங்கள் மற்றும் ஹலால் விவகாரம் உட்பட முஸ்லிம் அடிப்படைவாதத்துக்கு எதிராக தீர்மானங்கள் மேற்கொள்ளப்பட்டு அவற்றைத் தடைசெய்யுமாறு அரசாங்கத்திடம் மகஜர் கையளிக்கப்படவுள்ளதாக பொதுபலசேனா அமைப்பு தெரிவித்துள்ளது.
இந்தத் தீர்மானங்கள் எதிர்வரும் 7 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கண்டி தலதா மாளிகை திடலில் நடைபெறவுள்ள பிக்குகள் மாநாட்டில் மேற்கொள்ள வுள்ளதாகவும் பொதுபலசேனா அமைப்பு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப் பட்டுள்ளது.
இந்த பெளத்த குருமார்களின் மாநாட்டில் ஒரு இலட்சத்துக்கும் மேற்பட்ட பொதுமக்களும் 10 ஆயிரம் பௌத்த குருமாரும் கலந்து கொள்ளவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் இன ரீதியான சட்டங்களுக்குத் தடைவிதித்து நாட்டு மக்கள் அனைவரும் ஒருமித்த ஒரு சட்டத்தின் கீழ் ஆளப்படுவதற்கு மகஜர் தயாரித்து பொதுமக்களினதும், பௌத்த குருமார்களினதும் கையொப்பங்கள் பெற்றுக் கொள்ளப்படவுள்ளன.
கண்டி தலதாமாளிகைத் திடலில் இந்த மாநாடு இடம்பெறவுள்ளதால் முக்கியத்துவமிக்கதாக அமைவதுடன் அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுப்பதாகவும் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதேவேளை பொதுபலசேனாவினால் ஏற்பாடு செய்துள்ள இம்மாநாடு முஸ்லிம்களின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக அமையலாம் என பாராளுமன்ற உறுப்பினர் ஏ.எச்.எம். பௌஸி கடந்த வியாழக்கிழமை தனது பாராளுமன்ற உரையின் போது தெரிவித்துள்ளார். அவசரகால சட்டத்தை முழுமையாக மீறி நடைபெறவுள்ள இம்மாநாட்டுக்கு எதிராக பாதுகாப்புத் தரப்பினர் இதுவரை எவ்வித தடுப்பு நடவடிக்கையும் எடுக்கவில்லை. அவசரகாலச் சட்டம் அமுலில் இருக்கும் போது இனங்களுக்கிடையில் முறுகல் நிலையை ஏற்படுத்தும் மாநாடு தொடர்பில் அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெரிவித்தார்.
vidivelli