வெளிநாடுகளின் தலையீடுகளின்றி பிரச்சினைகளை தீர்த்துக் கொள்ளும் ஆற்றல் இலங்கைக்கு உண்டு
இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஹம்தல்லா ஸைத்
ஏனைய நாடுகளின் தலையீடுகளின்றி தமது உள்ளக விடயங்களை தீர்த்துக் கொள்வதற்கான இயலுமை இலங்கை மக்களிடம் உள்ளதென இலங்கைக்கான பலஸ்தீன தூதுவர் ஸுஹைர் ஹம்தல்லாஹ் ஸெய்த் தெரிவித்தார்.
ஆங்கிலப் பத்திரிகையொன்றுக்கு வழங்கிய நேர்காணலிலே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில்,
இலங்கை மக்களால் வெளித் தலையீடுகளின்றி தமக்கிடையே திறந்த கலந்துரையாடல்களில் ஈடுபடவும் புரிந்துணர்வுகளை கட்டியெழுப்பவும் முடியும்.
நாட்டினுடைய தற்போதைய நிலையை எடுத்துக் கொண்டால் அதனைக் கட்டுப்படுத்த வேண்டியது அவசியமாகும். இன்றேல் வெளியில் ஏற்பட்டுள்ள பிரதிபலிப்புகளிலிருந்து மாற்றத்தைக் கொண்டுவருவது கஷ்டமான ஒன்றாகிவிடும்.
இன்று சிறியதொரு விடயம் கூட சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி பாரிய விளைவுகளை ஏற்படுத்துகிறது. நாம் தீவிரவாதத்துக்கு எதிராகப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம்.
நாம் பரஸ்பரம் புரிந்துணர்வுடனும் ஒருவரை ஒருவர் மதித்தும் வாழ்வது பற்றி கவனம் செலுத்த வேண்டும். நாம் ஒற்றுமையாக வாழ என்ன வழி என்பதையும் கண்டறிய வேண்டும்.
பலஸ்தீனுக்கும் இலங்கைக்கும் இடையில் உள்ள உறவைப் பார்க்கும்போது அது மிகவும் உறுதியானது. எங்களுக்கும் இலங்கைக்கும் இடையில் மிகச்சிறந்த உறவு காணப்படுகிறது. பலஸ்தீனை ஒரு அரசாக முதன்முதலில் அங்கீகரித்தது இலங்கைதான். அரசியல் ரீதியாகவும் இலங்கையுடன் பரந்த உறவொன்று காணப்படுகிறது. இலங்கையிடமிருந்து உத்தியோகபூர்வமாகவும் பொதுமக்களுடைய நிலையில் இருந்தும் எங்களுக்கு அரசியல் பங்களிப்பு கிடைக்கிறது. எங்களுக்கு பங்களிப்பு வழங்குவதில் இலங்கை ஒன்றுபட்டு செயற்படுகிறது.
முஸ்லிம் உலகையும் இலங்கையையும் இணைக்கும் பாலமாக பலஸ்தீன் நிச்சயம் செயற்படும். அத்துடன் இலங்கை எதிர்நோக்கும் பிரச்சினைகளை தீர்த்து வைப்பதற்கு பலஸ்தீன் முடிந்தளவு பங்களிப்பு வழங்கும்.
பலஸ்தீனில் நுகரப்படும் 95 சதவீதமான தேயிலை இலங்கையில் இருந்தே இறக்குமதி செய்யப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான வர்த்தக நடவடிக்கைகளின் புள்ளிவிபரங்களை என்னால் சரியாகத் தரமுடியவில்லை. எனென்றால் மூன்றாம் நாடுகளுக்கு ஊடாகவே வர்த்தக பரிமாற்றங்கள் நடக்கின்றன.
இதிலிருந்தே நாங்கள் எங்களது விருந்தாளிகளுக்கு தேநீர் கொடுக்கின்றோம். நாங்களும் தேனீரை நுகர்கின்றோம். எங்களுடைய காலை உணவில் தேநீரும் ஒரு பகுதியாகும்.
நான் இலங்கையில் கடமையாற்றும் கடந்த 5 வருட காலத்தில் எந்த துன்புறுத்தல்களுமற்ற மிகவும் சிறந்ததொரு நாடாக இலங்கை விளங்குகிறது. முஸ்லிமோ கிறிஸ்தவரோ அனைவரும் மதிக்கப்படுகிறார்கள். எனினும் சில தீவிரவாத சக்திகள் நாட்டின் சமாதானத்தை குலைக்க முற்பட்டுள்ளன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் ஈடுபட்டவர்கள் தம்மை முஸ்லிம்கள் என்று கூறிக் கொண்டாலும் உண்மையில் அவர்கள் முஸ்லிம்கள் அல்லர். இலங்கையின் உள்ளக சமாதானத்தை சீர்குலைக்க விரும்பும் சில வெளிச் சக்திகளின் கையாட்களாகவே இந்த தீவிரவாதக் குழுக்கள் செயற்பட்டுள்ளன என்றார்.
-Vidivelli