முழு இலங்கை முஸ்லிம் மக்களையும் பூதங்களாக சித்தரிப்பது மற்றொரு பூதத்தை உருவாக்கிவிடும்
'லண்டன் ஐக்கியத்துக்கான சுயாதீன சிவில் அமைப்பு' அறிக்கை
இலங்கையில் இடம்பெற்ற ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத தொடர் குண்டுத்தாக்குதல் தொடர்பாக இலங்கையின் அனைத்து சிவில் சமூகங்களினதும் கவனத்தை ஈர்க்கும் வகையில் ‘ லண்டன் – ஐக்கியத்திற்கான சுயாதீன சிவில் அமைப்பு ’ அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது.
”ஐக்கியத்திற்கான சுயாதீன சிவில் சமூக அமைப்பு”, லண்டன் ஈஸ்ட்ஹாம் நகரின் டிரினிட்டி மண்டபத்தில் 2019 மே 4 ஆம்திகதி ஏற்பாடு செய்திருந்த கலந்துரையாடல் அமர்வில் உரையாடப்பட்ட விடயங்களின் சாராம்சத்தையும், நிறைவேற்றப்பட்ட வேண்டுகோள்களையும் உள்ளடக்கியஇவ் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது;
1) கண்டனங்கள் மாத்திரம் காயத்தை ஆற்றிவிடாது, அர்த்தமுள்ள நடவடிக்கைகள் அவசியம்.
அமைதியை விரும்பும் ஒரு மதத்தினரை குறிவைத்து உயிர்த்த ஞாயிறு தினத்தன்று மூன்று தேவாலயங்கள்மீதும் மூன்று சுற்றுலா விடுதிகள் மீதும் மேற்கொள்ளப்பட்ட கொடூரமான, காட்டுமிராண்டித்தனமான, பயங்கரவாத தாக்குதல்களை வன்மையாகக் கண்டனம் செய்வதுடன் இம் மூர்க்கத்தனமான தற்கொலைக் குண்டுவெடிப்பால் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடையவேண்டுவதோடு; இழப்புத்துயரால் வாடும்குடும்பங்கள், நண்பர்கள் மற்றும் பாதிக்கப்பட்டவர்களுக்கு நெருக்கமானவர்கள் அனைவருடனும் ஆழ்ந்த துயரை பகிர்ந்து கொள்கிறோம். இன்னொரு இரத்த ஆறு பெருக்கெடுத்தோடுவதை தடுக்கும் விதத்தில் – சொல்லொணா சோகத்தின்போதும்- நிதானத்துடனும் விவேகத்துடனும் துணிச்சலோடும் செயற்பட்ட பொதுமக்கள் மற்றும் மத, சமூகத் தலைவர்களுடன் சேர்ந்து எமது முழுமையான ஒருமைப்பாட்டை வெளிப்படுத்துவது என இவ்வரங்கு ஏகமானதாக தீர்மானித்தது.
எனினும் கண்டனங்கள் மாத்திரம் காயத்தை ஆற்றிவிடாது என இவ்வரங்கு கருதுகிறது. ஆத்திரமூட்டும் வகையில் அமைந்த இத்தாக்குதலின்போது அனைத்து தேவாலய தலைவர்களும் நிலைமையை துணிச்சலுடன் கையாண்டு தமது முதிர்ச்சியையும் பக்குவத்தையும் வெளிப்படுத்தி ஏனைய அரசியல் மத நிறுவனங்களில் இருக்கும் தீவிரவாதசக்திகள் பின்பற்றவேண்டிய முன்னுதாரணமொன்றினை உருவாக்கியுள்ளனர். சகிப்புத் தன்மையுள்ள கிறிஸ்தவ சமூகத்தின் மன்னிக்கும் மனப்பான்மை தவறாக விளங்கிக்கொள்ளப்படக்கூடாது. அவர்கள் மீது சமூகத்திற்கும் அரசாங்கத்திற்கும் உள்ள பொறுப்புகளை சந்தர்ப்பவாத ரீதியில்மறப்பதற்கு அது காரணமாகிவிடக்கூடாது என இவ்வரங்கு வலியுறுத்துகிறது.
நிகழ்ந்த பாதுகாப்பு குறைபாடுகளுக்கான முழுப்பொறுப்பையும் அரசாங்கமே ஏற்கவேண்டும், அதிலிருந்து தப்பி ஓடிவிடமுடியாது என இவ்வரங்கு திட்டவட்டமாக கூறுவதுடன்- உடனடி, மற்றும் நீண்டகால நிவாரணம் வழங்குதல், கொல்லப்பட்டவர்களினதும் பாதிக்கப்பட்டவர்களினதும் குடும்பங்களுக்கு புனர்வாழ்வளித்தல், அனர்த்தத்தினால் உளவியல் பாதிப்புக்குள்ளான தனிநபர்களுக்கு மாத்திரமன்றி குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் உளவியல் நிவாரணமளித்தல் ஆகிய கடமைகளை உடனடியாக மேற்கொள்ளவேண்டும் என வலியுறுத்துகிறது.
பாதிக்கப்பட்ட குடும்பங்கள் தொடர்பாக சகல சமூகங்களுக்கும், குறிப்பாக முஸ்லிம் சமூகத்திற்கும் ஒரு கடமை இருக்கிறது.நேரடியாக அவர்களின் துயரத்தையும் சுமையையும் நடைமுறைரீதியில் பகிர்ந்துகொண்டு உதவிக்கரம் நீட்டுவதன்மூலம் ஒருமைப்பாட்டை வெளிப்படுத்தி அர்த்தமுள்ள வகையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தும் முன்னுதாரணமொன்றை உருவாக்கமுடியும் என இவ்வரங்கு திடமாக நம்புகின்றது.
2) முழு முஸ்லிம் மக்களையும் பூதங்களாக சித்திரிப்பது மற்றொரு பூதத்தை உருவாக்கிவிடும்.
இத்தாக்குதலை திட்டமிட்டு செயல்படுத்திய ஒரு சிறுகுழுவான NTJ மீதான பழியை முழு முஸ்லிம் சமூகத்தின்மீது சுமத்தக்கூடாது என்பதை ஒரே குரலில் இவ்வரங்கு கூறுகிறது. ஒருசிறுகுழு செய்த காட்டுமிராண்டித்தனமான காரியத்துக்காக முழு முஸ்லிம் சமூகத்தையும் குற்றவாளியாக்குவது என்பது இஸ்லாமிய எதிர்ப்புவாத –இனவாத தப்பெண்ணங்களின் ஒருதீவிரவடிவமாகும். இலங்கை முஸ்லிம்கள் இத்தாக்குதலுக்காக வருந்துவதும் குற்றவுணர்ச்சி கொள்வதும் நியாயமானது. ஆனால் அவர்கள் அனைவரையும் மன்னிப்புக்கோர வேண்டும் என்ற தோரணையில் பல வகைகளில் நிர்ப்பந்திப்பது தேவையில்லாத விளைவையே தரும். பெரும்பான்மையான முஸ்லிம்கள் தமது சமூகத்துக்குள்ளேயே இந்த தீவிரவாத பயங்கரவாதத்தை தவிர்த்தொதுக்கியதுடன் நில்லாமல், தமது எதிர்ப்பையும் வெளிப்படையாக நிதர்சனமாக வெளிப்படுத்தியுள்ளனர்.
இலங்கை முஸ்லிம்கள் நாடெங்கும் பரந்து வாழ்கிறார்கள். ஒரு மூலையில் இரகசியமான முறையிலே இயங்கிய விரல்விட்டு எண்ணக்கூடிய ஒருசில தீவிரவாதிகளின் செயற்பாடுகள் பற்றி தெரியாத போது, உள்ளூரிலும் வெளிநாட்டிலும் இருந்து கிடைத்த அபாய அறிவிப்புகளை அரசே அலட்சியம் செய்து முழுநாட்டுக்கும் அவலத்தை கொண்டுவந்தபோது – இயல்பு வாழ்க்கை வாழும் முஸ்லிம்களுக்கு அதுபற்றி முழுவதுமாக தெரிந்திருக்க வாய்ப்பில்லை என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஆயினும் அதி தீவிரவாத NTJ பற்றியும் இத்தாக்குதலில் இறந்துவிட்டதாக கருதப்படும்,அதன் தலைவனான சஹ்ரான் ஹாஷிம் பற்றியும் சந்தேகித்தவர்கள் தமக்குதெரிந்த அனைத்தையும் பாதுகாப்புப் பிரிவுக்கும் அரசங்கத்திற்கும்கூறி பல ஆண்டுகளாக எச்சரித்து வந்துள்ளனர். NTJ ஐ தடைசெய்யுமாறும் சஹ்ரானை கைது செய்யுமாறும்கோரி காத்தான்குடியில் ஆர்ப்பாட்டமும் செய்துள்ளனர். முஸ்லிம் மதத்தலைவர்கள், இராணுவ புலனாய்வு அதிகாரிகளிடமும் அரசாங்கத்திடமும் இத்தீவிரவாதகுழு பற்றிய தகவல்களையும் அதன் தலைவனது பெயர் விபரங்களையும் கொடுத்து எச்சரிக்கை செய்துள்ளனர்.
ஈஸ்டர் படுகொலைக்குப் பிறகு முழு முஸ்லிம் சமூகமும் எஞ்சிய பயங்கரவாதிகளை கைது செய்வதற்கும் அழிப்பதற்கும் பூரண ஒத்துழைப்பை அரசுக்கு நல்கியுள்ளது. அத்துடன் குண்டுதாரிகளின் சடலத்தை முஸ்லிம் மையவாடிகளில் புதைப்பததற்கு அனுமதிமறுத்துள்ளது. துரதிர்ஷ்டவசமாக, இதுவரை நித்திரையில் இருந்த அதிகாரபீடம் இப்போது புர்கா, தாடி, வாள், ஏன் முஸ்லிம்களால் பயன்படுத்தப்படும் சமையலறைக்கத்திகள் மீதும் குற்றம்சாட்டி மக்களின் கவனத்தை திசை திருப்ப முயற்சிக்கிறது. இந்த அபத்த நாடகத்திற்கு பொறுப்பற்ற வகையில் சில ஊடகங்களும் துணை புரிந்து வருகின்றன.
பிரதான நீரோட்டத்திலுள்ள அச்சு மற்றும் காட்சி ஊடகத்தின் நடத்தை பண்பற்றதாகவும் அருவருப்பூட்டுவதாகவும் பொறுப்பற்றதாகவும் காணப்படுகிறது. ஒருதொலைக்காட்சி ‘நாய்-போனி குதிரை’ நிகழ்ச்சியை நடத்துகிறது. ஒரு ஊடகத்தில் அமைச்சரவையில் அங்கம் வகிக்கும் ஒரு முஸ்லிம் அமைச்சர் அவமரியாதையாக நடத்தப்பட்டு பழிவாங்கப்படுகிறார். முழு முஸ்லிம் சமூகமும் அங்கு ஒரு குறியீடாக அவர் மூலம் காட்டப்படுகிறது. முழு முஸ்லிம் சமூகமூம் நியாயமற்ற முறையில் குற்றம்சாட்டப்படுகிறது. ஒருசிலரால் மேற்கொள்ளப்பட்ட கண்டிக்கத்தக்க வன்முறைக்காக முழு சமுதாயமும் குறிவைக்கப்படுகிறது.
பொலிஸ் மற்றும் ஆயுதப் படைகளின் உறுப்பினர்கள் சிலர் தேவையற்ற முறையில் முஸ்லிம்கள்மீது கடுமையாகவும் முரட்டுத்தனமாகவும் நடந்துகொண்ட சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. அவர்கள் பயங்கரவாத நடவடிக்கையில் நேரடியாக சம்பந்தப்பட்டவர்களைப்போல நடத்தப்பட்டுள்ளனர். பயங்கரவாதத்திற்கு துணைபோகாத பல அப்பாவிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கைத் தமிழர் பல ஆண்டுகளாக அனுபவித்த அனுபவங்களை முஸ்லிம்கள் இப்போது அனுபவித்து வருகின்றனர்.இவ்வரங்கு பயங்கரவாதம் தழைப்பதற்கான மற்றொரு விளைநிலத்தை உருவாக்க வேண்டாம் என அரசாங்கத்திற்கும் ஊடகங்களுக்கும் வேண்டுகோள் விடுக்கின்றது.
இவ்வரங்கு, அதேசமயம், தீவிர பழமைவாதத்தை ஊடுருவ அனுமதித்ததற்காகவும்,தவறாக வழிநடத்தப்பட்ட ஒருசில இளைஞர்கள் ‘இஸ்லாமிய அரசின்’வெறுப்பு சித்தாந்தத்தை நோக்கி நகர்வதையிட்டு விழிப்புடன் இருக்கத் தவறியமைக்காகவும், இஸ்லாத்தை பின்பற்றும் தம்மவரை அமைதி வழியில் சகஜீவன சகவாழ்வில் நாட்டம்கொள்ளச் செய்வதற்கான வழிவகைகளைக் கண்டறியத் தவறியமைக்காகவும் முஸ்லிம் சமூகம் தன்னை இப்பாரிய விலையைக் கொடுத்த பின்னாவது சுயவிமர்சன ரீதியாக உள்நோக்கி பார்க்கவேண்டுமென வேண்டுகோள் விடுக்கின்றது.
3)கடினமான நிலைமைகளில் கடுமையான நடவடிக்கைகள் தேவைப்படுகின்றன.
இவ்வரங்கு, இலங்கை அரசாங்கத்திடம் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டும் அதேசமயம் நாட்டில் வாழும் அனைவரும் சமமான உரிமையையுடன் அமைதியாக வாழக்கூடிய சூழலை உருவாக்குமாறு வேண்டுகின்றது. பிறர்மீது மேலாதிக்கத்தை திணிக்கின்ற தீவிரதேசியவாதத்திற்கும் இவ்வகையான பயங்கரவாதத்தினைப் புரிந்த ஐஎஸ்சின் சித்தாந்தத்திற்கும் இடையே வித்தியாசம் எதுவும்கிடையாது என்பதை வலியுறுத்தி சொல்ல விரும்புகிறது. சட்டத்தின்முன் அனைவரும் சமம் என்ற கொள்கை உறுதியாகப் பின்பற்றப்படுவதோடு எந்த ஒருதனிநபரோ அல்லது சமூகமோ சட்டத்திற்கு அப்பாற்பட்டவராகவோ அல்லது கூடுதலான சமத்துவம் கொண்டவராகவோ நடத்தப்படுவதை அனுமதிக்கக் கூடாது. தற்போது நடைமுறையில் உள்ள கடுமையான சட்டங்களுக்குள் மேலும் கடுமையான சட்டங்களை உருவாக்கி சிவில் உரிமைகளை பறிப்பதற்கு தற்போதைய நிலைமையை பயன்படுத்தக் கூடாது. ஆனால் அரசு இதனை ஒரு வாய்ப்பாக பயன்படுத்துகிறது என சந்தேகிக்க வேண்டியுள்ளது.
இவ்வரங்கு, இன்றைய பிரச்சினை வெறுமனே சட்டம் ஒழுங்கு தொடர்பான ஒருவிடயம் மாத்திரமல்ல, அது மிகவும் ஆழமான பரிமாணங்களைக் கொண்டது எனக் கருதுகின்றது. ஈஸ்டர் ஞாயிறு படுகொலைக்குப் பின்னால் இருந்த ஈர்ப்புக்காரணி (pull factor) IS இன் சித்தாந்தமே எனினும் அதன் உந்துகாரணியாக (push factor) பெரும்பான்மை தீவிர-தேசியவாதமே செயற்பட்டது என்பதனை வசதியாக மறந்துவிடக்கூடாது. தீவிரவாதம் தீவிரவாதத்தையே வளர்க்கும். தீவிரவாதத்தால் பயங்கரவாதத்தை தோற்கடிக்க முடியாது.
எனவே, அனைத்து சிவில் சமூகங்களுக்கும் இவ்வரங்கு பின்வரும் வேண்டுகோள்களை விடுக்கிறது:
i. ஒவ்வொரு பொலிஸ் பிரிவிலும் பல்-லின சமாதான குழுக்களை (Peace Corps) உருவாக்குங்கள். மதத் தலைவர்களையும் சமூகத் தலைவர்களின் பிரதிநிதிகளையும் உள்ளடக்கியதாக இக்குழு உருவாக்கப்படல் வேண்டும். இலங்கையின் வடக்குப் பகுதியில் 70 களின் பிற்பகுதியில் மிகக் காத்திரமான பாத்திரத்தை வகித்த நீதிக்கும் சமத்துவத்திற்குமான இயக்கத்தின் (MERGE) அனுபவத்தை பயன்படுத்திக் கொள்ளமுடியும்.
ii. பதற்றம் நிலவும் பகுதிகளில் வன்முறைகளிலிருந்து மக்களை பாதுகாப்பதற்கும்,துரிதமாக செயல்பட்டு மோதல்களையும் பதற்றங்களையும் தணிப்பதற்கும், சட்டத்தையும் ஒழுங்கையும் பேணுவதற்கும் சட்ட – அமுலாக்க அதிகாரிகளுக்கு உதவுவதற்கும் நல்லிணக்கக் குழுக்களை (reconciliation committees) அமையுங்கள் எனக் கேட்கிறது.
இவ்வரங்கு ஆளை ஆள்குற்றம் சுமத்துவதை நிறுத்தி மீண்டும் இத்தகைய சம்பவங்கள்இடம்பெறுவதைதடுப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படல் வேண்டுமென வலியுறுத்துகிறது.
vidivelli