நாட்டில் இடம்பெற்றுவரும் அரசியல் குழப்பங்களுக்கு ஜனாதிபதியே காரணமாவார். இந்தப் பிரச்சினைகளைத் தொடர்ந்து கொண்டுசெல்கின்றார். அத்துடன் அரசாங்கத்தை வீழ்த்தவே ஜனாதிபதி முயற்சித்து வருகின்றாரென ஐக்கிய தேசியக் கட்சி பாராளுமன்ற உறுப்பினர் சரத் பொன்சேகா தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று புதன்கிழமை இந்த வருடத்துக்கான வரவு செலவுத்திட்டத்தின் ஜனாதிபதி, பிரதமர் தலைமையிலான நிதி ஒதுக்கீடுகள் தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்
அவர் அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,
அரசாங்கத்தில் பிரச்சினை இருப்பதாக எதிர்க்கட்சியினர் தெரிவித்து வருகின்றனர். நாட்டில் இடம்பெற்ற அரசியல் குழப்பத்துக்கு ஜனாதிபதியே காரணமாகும். அதனால் தனி ஒரு நபரின் நடவடிக்கையால் முழு அரசாங்கத்தையும் குற்றம்சாட்ட முடியாது. ஜனாதிபதி ஏற்படுத்திய இந்தக் குழப்பத்தை அவர் தொடர்ந்து மேற்கொண்டுவருகின்றார். அரசாங்கத்தை வீழ்த்தவே நடவடிக்கை எடுத்துவருகின்றார்.
அததுடன் கம்பெரலிய வேலைத்திட்டத்துக்காக அரசாங்கம் 16பில்லியனை ஒத்துக்கியிருந்தது. ஆனால் ஜனாதிபதி மேற்கொண்ட அரசியல் சதித்திட்டம் காரணமாக கிராமங்களில் மக்களுக்கு சேவை செய்ய முடியாமல்போனது. 5பில்லியன் ரூபா செலவிட முடியுமாகியது. இம்முறையும் கம்பெரலிய வேலைத்திட்டத்துக்கு 48 பில்லியன் ஒதுக்கி இருக்கின்றோம். என்றாலும் இந்த வருடத்திலும் மூன்று மாதங்கள் கடந்த பின்னரே இதனை ஒதுக்க முடியுமாகி இருக்கின்றது. அரசியல் குழப்பம் இடம்பெறவில்லை என்றிருந்தால் கிராமங்களில் பாரிய வேலைத்திட்டம் இடம்பெற்றிருக்கும்.
மேலும் அரசாங்கம் ஆரம்பிக்கும் அபிவிருத்தி நடவடிக்கைகளை தடுத்து நிறுத்தும் வேலைத்திட்டத்தை ஜனாதிபதி ஆரம்பித்திருக்கின்றார். குறிப்பாக பாடசாலை மாணவர்களுக்காக டெப் வழங்க எடுத்த திட்டம், நாட்டின் வர்த்தக துறையை கட்டியெழுப்ப மேற்கொண்ட சிங்கப்பூர் ஒப்பந்தம் போன்ற நடவடிக்கைகளை இடைநிறுத்தியுள்ளார். கண்டி அதிவேகப்பாதை நிர்மணிக்கும் அந்தப் பிரதேசத்தில் மலைகளை வெட்டவேண்டாம் என தெரிவித்துள்ளார். மத்திய மாகாணம் என்பது மலைப்பிரதேசமாகும். மலைகளை வெட்டாமல் எவ்வாறு அதிவேகப்பாதை அமைப்பது?
மேலும் தனது பேச்சை உறுப்பினர்கள் யாரும் கேட்பதில்லை என்று அண்மையில் பாராளுமன்றத்தில் தெரிவித்திருந்தார். ஜனாதிபதி, உறுப்பினர்களின் காலை வாரும் நடவடிக்கையை மேற்கொள்ளும்போது அவர்கள் ஜனாதிபதியின் பேச்சை கேட்கமாட்டார்கள். அமைச்சுக்களுக்கு பொருத்தமான செயலாளர்களை நியமிக்கமாட்டார். அவருக்கு தேவையானவர்களையே நியமிக்கிறார். அதனால் அமைச்சுக்களின் வேலைத்திட்டங்களை முறையாக கொண்டுசெல்ல முடியாத நிலை ஏற்படுகின்றது.
அத்துடன் கடந்த காலத்தில் ஜனாதிபதி ஐக்கிய தேசிய கட்சியை இல்லாமலாக்கி நாட்டுக்குள் அரசியல் குழப்பம் ஒன்றை ஏற்படுத்த திட்டமிட்டு செயற்பட்டுள்ளார். எதிர்க்கட்சி உறப்பினர்களுடன் இதுதொடர்பாக இரகசிய சந்திப்புக்களை மேற்கொண்டுள்ளார். அடுத்த முறையும் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கிலே இவ்வாறு செயற்பட்டுள்ளார் என்பது தெளிவாகியுள்ளது.
நாட்டின் அரச தலைவராக இருப்பவர் தனிப்பட்ட காரணங்களுக்காக பழிவாங்கும் செயல்களில் ஈடுபடுவது முறையல்ல. ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் ஆட்சி செய்யும் போது பிரதமர் பெயரிடும் நபருக்கு அமைச்சுப்பதவி வழங்குவதே ஜனாதிபதியின் கடமை. மாறாக என்னுடன் இருக்கும் தனிப்பட்ட கோபத்துக்காக எனக்கு அமைச்சுப்பதவி வழங்கப்போவதில்லை என்று தெரிவிக்க அவருக்கு எந்த தார்மீக உரிமையும் இல்லை. நாட்டின் தலைருக்கு இது பொருத்தமில்லை.
எனவே, இந்த நிலைமையை மாற்றியமைக்கவேண்டுமாக இருந்தால் தேசிய அரசாங்கம் அமைக்கப்படவேண்டும். தேசிய அரசாங்கம் அமைக்கப்பட்டால் எமக்குத் தேவையான அமைச்சுப்பதவிகளை அமைத்துக்கொள்ள முடிவதுடன் இருக்கும் அமைச்சுக்களை பாதுகாத்துக்கொள்ள முடியும். அத்துடன் ஜனாதிபதிக்கு இம்முறை 23 பில்லியன் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது மக்களுக்கு பிரயோனமாகப்போவதில்லை. அவரின் அரசியல் நடவடிக்கைக்கே செலவிடுவார். அதனால் இந்த ஒதுக்கீடுக்கு நான் ஆதரவளிக்கமாட்டேன் என்றார்.
-Vidivelli