சாய்ந்தமருதில் மு.கா.திட்டமிட்டு குழப்பங்களை ஏற்படுத்துகின்றது
மக்கள் சமாதானத்தை விரும்புகின்றனர் என்கிறார் ஹனீபா
சமாதானத்தை விரும்பும், சமாதானமாக மக்கள் வாழும் சாய்ந்தமருதில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் திட்டமிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. எங்களூரின் சமாதானத்தைக் குலைத்து எம்மைப் பிளவுபடுத்த முயற்சிப்பவர்களின் கனவு ஒருபோதும் நிறைவேறாது என சாய்ந்தமருது ஜும்ஆ பள்ளிவாசல் தலைவர் வை.எம். ஹனிபா தெரிவித்தார்.
முன்னாள் கிழக்கு மாகாண சபையின் உறுப்பினரும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் இளைஞர் பிரிவு தேசிய அமைப்பாளருமான ஆரிப் சம்சுதீனின் வாகனம் மற்றும் பிரதேச அமைப்பாளரின் வீடு என்பன ஞாயிற்றுக்கிழமை இரவு தாக்கப்பட்டுள்ளமை தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்;
‘சாய்ந்தமருது மக்கள் சுயேச்சைக் குழுவான தோடம்பழ சின்னத்தையே தொடர்ந்தும் ஆதரிப்பார்கள். மக்களை இதிலிருந்தும் வேறுபடுத்தி எடுக்க முடியாது. அமைதியாக வாழும் மக்களை பிளவுபடுத்த அரசியல் கட்சிகள் ஒருபோதும் முயற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. ஊரில் திட்டமிட்டு பிரச்சினைகளை உருவாக்குபவர்களுக்கு தேர்தலில் மக்கள் தகுந்த பாடம் புகட்டுவார்கள்.
சாய்ந்தமருது மக்கள் தங்களுக்கென்று தனியான உள்ளூராட்சி மன்றமொன்றினையே இலக்காகக் கொண்டிருக்கிறார்கள். இதற்கான முன்னெடுப்புகளைத் தொடரும் நிலையில் அரசியல் கட்சிகள் மக்களைப் பிளவுபடுத்தும் முயற்சிகளில் ஈடுபடுவதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது’ என்றார்.
-Vidivelli