பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மஹிந்த ராஜபக் ஷவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்காலத் தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராகப் பதவிவகித்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. கடந்த 2018 டிசம்பர் நான்காம் திகதி உயர் நீதிமன்றில் தாக்கல் செய்த விஷேட மேன்முறையீட்டு மனு மீதான விசாரணைகள் எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்று இந்த விஷேட மேன் முறையீட்டு மனு பிரதம நீதியரசர் நளின் பெரேரா, பிரியந்த ஜயவர்தன மற்றும் எல்.டி.பி. தெஹிதெனிய ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்த போதே இவ்வாறு ஒத்திவைக்கப்பட்டது.
நேற்றைய தினம் இந்த விஷேட மேன்முறையீட்டு மனு விசாரணைக்கு வந்தபோது, மேன் முறையீட்டில் பிரதிவாதிகளாகக் குறிப்பிடப்பட்டிருந்த 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரனும், மனுதாரர்களான மஹிந்த ராஜபக் ஷ சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி காமினி மாரப்பனவும் ஏனைய மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான ரொமேஷ் டி சில்வா, அலி சப்றி மற்றும் மனோகர டி சில்வா உள்ளிட்டோரின் சட்டத்தரணிகள் பிரதிநிதித்துவமும் மன்றில் பதிவானது.
அதன்படி நேற்றும் இன்றும் நாளையும் ஏற்கனவெ இந்த மேன் முறையீட்டு மனுவை விசாரணை செய்ய உயர் நீதிமன்றின் சிரேஷ்ட நீதியரசர் ஈவா வனசுந்தர (ஓய்வுபெற்றுள்ளார்), நீதியரசர் விஜித் மலல்கொட மற்றும் நீதியர்சர் புவனேக அலுவிஹார ஆகியோர் அடங்கிய நீதியரசர்கள் தீர்மானித்திருந்த நிலையிலேயே நேற்று அம்மனு விசாரணைக்கு வந்தது.
இதன்போது பிரதிவாதிகளான ஐக்கிய தேசியக் கட்சி, மக்கள் விடுதலை முன்னணி, தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகளின் 122 பாராளுமன்ற உறுப்பினர்கள் சார்பாக ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி கனக ஈஸ்வரன், ‘இந்த மேன் முறையீட்டுடன் தொடர்புபட்ட பிரதான வழக்கான மேன் முறையீட்டு நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ள சீ.ஏ. / ஏ.பி./368/18 எனும் கோ வொறன்டோ மனுவை வாபஸ் வாங்குவது தொடர்பில், அந்த மனுவின் மனுதாரர்களான 122 பேரிடமும் எழுத்துமூலம் ஆலோசனை பெற்றுக் கொள்ளவுள்ளதாகக் கூறினார். ஏனெனில், தற்போது அம்மனுவின் அடிப்படை விடயங்களில் மாற்றங்கள் நிகழ்ந்துள்ள நிலையில், தொடர்ந்து அம்மனுவை கொண்டுசெல்ல வேண்டுமா, இல்லையா என்பது குறித்து மனுதாரர்களிடம் ஆலோசனையைப் பெறவுள்ளதாகவும், அதனால் அதற்கு கால அவகாசம் வேண்டும் எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதன்போது மஹிந்த உள்ளிட்ட உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்ப்ட்டுள்ள விஷேட மேன் முறையீடு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகளான காமினி மாரப்பன, ரொமேஷ் டி சில்வா உள்ளிட்டோர் மேன்முறையீட்டு நீதிமன்றிலுள்ள வழக்கை வாபஸ் பெறுவதாக இருந்தால், உயர் நீதிமன்றிலுள்ள இந்த விஷேட மேன்முறையீட்டு மனுவை வாபஸ் பெறுவதற்கு தமது சேவையாளர்கள் தயாரென்று அறிவித்தனர்.
இதனையடுத்து மேன்முறையீட்டு மன்றில் உள்ள கோ வொறன்டோ மனுவை வாபஸ் பெறுவது தொடர்பிலான இறுதி முடிவை எட்டுவதற்காக, இந்த விஷேட மேன்முறையீட்டு மனு எதிர்வரும் பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
முன்னதாக ஐ.தே.க. தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட ஐக்கிய தேசிய கட்சி உறுப்பினர்கள், தமிழ் தேசிய கூட்டமைப்பு, மக்கள் விடுதலை முன்னணி, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகளின் பாராளுமன்ற உறுப்பினர்கள் 122 பேர் சார்பில் கடந்த 2018 நவம்பர் மாதம் 29 ஆம் திகதி அப்போது பிரதமராக இருந்த மஹிந்தவுக்கும் அவரது அமைச்சரவைக்கும் அப்பதவிகளில் செயற்படத் தடைவிதிக்கக் கோரி கோ வொறன்டோ நீதிப் பேராணை மனு மேன்முறையீட்டு மன்றில் தாக்கல் செய்யப்ப்ட்டது. அம்மனுவை விசாரித்த மேன்முறையீட்டு நீதிமன்றம் மஹிந்தவுக்கும் மேலும் 49 பேருக்கும் அவர்கள் அப்போது வகித்த பதவிகளில் செயற்படக் கடந்த 2018 டிசம்பர் 3 ஆம் திகதி இடைக்கால தடை விதித்தது.
இதனை ஆட்சேபித்து 2018 டிசம்பர் 4 ஆம் திகதி பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க தனக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்குமுகமாக உத்தரவொன்றினை பிறப்பிக்குமாறு கோரி, பிரதமராகப் பதவிவகித்த தற்போதைய எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக் ஷ எம்.பி. உயர் நீதிமன்றில் விஷேட மேன் முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்தார். அத்துடன் அப்போது அமைச்சர்களாகப் பதவி வகித்த ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ, சமல் ராஜபக் ஷ , தினேஷ் குணவர்தன மற்றும் விஜேதாஸ ராஜபக் ஷ ஆகியோரும் விஷேட மேன் முறையீட்டு மனுவொன்றினை தாக்கல் செய்தனர்.
இது தொடர்பில் பூர்வாங்க விசாரணைகள் உயர் நீதிமன்றில் கடந்த 2018 டிசம்பர் 14 ஆம் திகதி இடம்பெற்றன.
இதன்போது பிரதமர் பதவியிலும் அமைச்சர் பதவியிலும் கடமைகளை முன்னெடுக்க மஹிந்த ராஜபக் ஷவுக்கு மேன் முறையீட்டு நீதிமன்றம் விதித்த இடைக்காலத் தடையை நடை முறைப்படுத்துவதை தடுக்க முடியாதென உயர் நீதிமன்றம் அறிவித்தது. அத்துடன் மஹிந்த ராஜபக் ஷவின் அமைச்சரவை, பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்களும் அப்பதவிகளில் தொடர மேன்முறையீட்டு நீதிமன்றம் விதித்துள்ள இடைக்கால தடை உத்தரவு அவ்வாறே அமுலிலிருக்கும் என்று உயர் நீதிமன்றம் அறிவித்திருந்தது. நீதியரசர்களின் பெரும்பானமையினரின் முடிவின்படி மேன் முறையீட்டு நீதிமன்றின் இடைக்காலத் தடையை அகற்ற மறுத்த உயர் நீதிமன்றம், இரு விஷேட மேன் முறையீடுகளையும் விசாரணைக்கு எடுக்கத் தீர்மானித்து அதற்குத் திகதி குறித்தது.
அதன்படியே நேற்று அம்மேன்முறையீடுகள் இரண்டும் விசாரணைக்கு வந்தன. அதன்போதே பிரதம நீதியர்சர் தலைமையிலான நீதியர்சர்கள் குழு அம்மனுக்களை பெப்ரவரி 6 ஆம் திகதிக்கு ஒத்தி வைத்தது.
-Vidivelli