அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடரினை வெற்றிகரமாக நிறைவு செய்ததன் மூலம் உலகின் ஏழு கண்டங்களிலும் நடைபெற்ற மரதன் ஓட்டப் போட்டிகளில் பங்குபற்றிய முதல் இலங்கையர் என்னும் புதிய சாதனையினை நிலைநாட்டினார் மரதன் ஓட்ட வீரரான ஹசன் யூசுபலி.
மிகவும் கடுமையான நிபந்தனைகள் கொண்ட அந்தாட்டிக் கண்டத்தின் அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் அதிக குளிர், பனிக்கட்டிப் பாறைகள், மிகக் குறைவான பார்வை வீச்சு என ஆபத்துக்கள் நிறைந்த 42.2 கிலோ மீட்டர் ஓடுபாதையினை கொண்ட மிகச் சவாலான தொடராகும். குறித்த மரதன் தொடரை ஹசன் எசுபலி வெற்றிகரமாக நிறைவு செய்ய 8 மணித்தியாலயங்கள் மற்றும் 35 நிமிடங்களை எடுத்திருந்தார்.
மிகவும் ஆபத்தான சூழ்நிலைகளை கொண்டிருக்கும் இந்த மரதன் ஓட்டத் தொடரில் ஹசன் யூசுபலியுடன் சேர்ந்து உலகின் முன்னணி வீரர்கள் பலரும் கலந்து கொண்டிருந்தனர். குறித்த வீரர்கள் அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் பற்றி பேசும் பொழுது இந்த ஆண்டு இடம்பெற்ற மரதன் தொடரே ஏனைய ஆண்டுகளை விடவும் மிகவும் கடினமாக இருந்தது எனக் குறிப்பிட்டிருந்தனர். அந்தாட்டிக் மரதன் தொடரில் பங்கேற்பதற்கு முன்னதாக ஹசன் யூசுபலி உலகின் மிகவும் கடின மரதன் தொடராக கருதப்படும் இன்கா ஓடுபாதை மரதன் தொடரை ஓடிமுடித்த முதல் இலங்கையராகவும் பதிவாகியிருந்தது குறிப்பிடத்தக்கது. இத் தொடர் நிறைவுக்குப் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட ஹசன் யூசுபலி “அந்தாட்டிக் ஐஸ் மரதன் தொடர் உலகின் மிகவும் கடினமான மரதன் தொடர் என்பதால் அதனை எதிர்பார்த்த நேர இடைவெளி ஒன்றில் நிறைவு செய்தது மகிழ்ச்சியான விடயம். மேலும் உலகின் ஏனைய கடினமான மரதன் தொடர்களில் பங்கேற்றது அந்தாட்டிக் ஐஸ் மரதன் ஓட்டத் தொடரினை நிறைவு செய்ய பலவகைகளிலும் உதவியாக இருந்தது” எனவும் தெரிவித்திருந்தார்.
-Vidivelli