கடலுக்குச் சென்று 33 நாட்களாகியும் நான்கு மீனவர்களையும் காணவில்லை
தேடும் நடவடிக்கைகள் மந்த கதியில்; கண்டுபிடித்து தரும்படி உறவினர்கள் கோரிக்கை
(எச்.எம்.எம்.பர்ஸான்)
மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற வாழைச்சேனை பகுதியைச் சேர்ந்த நான்கு மீனவர்கள் இதுவரை வீடு திரும்பவில்லை என துறைமுக அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த செப்டம்பர் மாதம் 25 ஆம் திகதி மீன்பிடிக்க ஆழ்கடலுக்குச் சென்ற தந்தை, மகன், உறவினர் ஒருவர் உட்பட நான்கு மீனவர்களுமே இவ்வாறு காணாமல் போயுள்ளதாக மீனவர்களின் உறவினர்கள் வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளனர்.
ஏழு நாட்கள் பயணம் செய்து மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களும் 31 நாட்கள் கடந்தும் ஒக்டோபர் 26 ஆம் திகதி வரை வீடு திரும்பவில்லை என்று காணமல் போயுள்ள மீனவர்களின் உறவினர்கள் கவலை தெரிவித்தனர்.
இதில், வாழைச்சேனை கோழிக்கடை வீதியைச் சேர்ந்த உமர்தீன் அசன் அலி (62 வயது) அவரது மகன் அசன் அலி முகாஜித் (34 வயது) மற்றும் அவர்களது உறவினரான பிறைந்துறைச்சேனையைச் சேர்ந்த பீ.எம்.இர்ஷாத் (32 வயது) அவர்களோடு வாழைச்சேனை ஹைராத் வீதியைச் சேர்ந்த எம்.எச்.எம்.றிஸ்வி (34 வயது) ஆகிய மீனவர்களே இவ்வாறு காணாமல் போயுள்ளனர்.
35 அடி நீளமான இயந்திரப் படகில் சென்ற நான்கு மீனவர்களும் ஒரு வாரத்துக்கான உணவுகளை மாத்திரமே கொண்டு சென்றுள்ளதாகவும், மீனவர்களை தேடும் நடவடிக்கைகள் மந்த கதியில் இடம்பெற்று வருவதாகவும் மீனவர்களின் உறவினர்கள் தெரிவித்தனர்.
அத்துடன், மீனவர்களை கண்டுபிடிப்பதற்காக வேண்டி மனித உரிமைகள் ஆணைக்குழுவில் தாம் முறைப்பாடு செய்யவுள்ளதாகவும் மீனவர்களின் உறவினர்கள் மேலும் தெரிவித்தனர்.
இவ்வாறு காணமால் போயுள்ள தமது உறவுகளை கண்டுபிடிக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அவசர நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று உறவினர்கள் வேண்டிக் கொண்டுள்ளனர்.-Vidivelli