ஜனாஸாக்களை எரிப்பது பாரிய மனித உரிமை மீறல்

இலங்கை மனித உரிமை ஆணைக்குழு சுகாதார அமைச்சுக்கு பரிந்துரை

0 1,089
  • வர்த்தமானியை திருத்தி அடக்கம் செய்ய உடன் அனுமதி வழங்குக
  • பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தினுள் வழங்கப்பட வேண்டும்.
  • வீடுகளில் இறப்பவர்களின் சடலங்களை பொலிஸ் பிரேத அறைக்கு கொண்டு செல்ல வேண்டாம்
  • கொவிட் 19 உயிரிழப்புகள் விடயத்தில்  வெளிப்படைத்தன்மை வேண்டும்

(ஏ.ஆர்.ஏ.பரீல்)

கொவிட் 19 வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்பவர்களின் உடல்கள் தகனம் செய்யப்பட வேண்டும் என்ற உத்தரவு ஏற்றுக் கொள்ள முடியாத ஒன்றாகும் என இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சிடம் தெரிவித்துள்ளது.

கொவிட் 19 வைரஸ் காரணமாக இறந்தவர்கள் அல்லது நோய்த்தொற்றுள்ளவர்களாக சந்தேகிக்கப்பட்டு இறந்தவர்களின் உடல்கள் தகனம் செய்யப்படவேண்டுமென்ற உத்தரவு மத சுதந்திரம், மத நம்பிக்கைகளினால் அனுமதிக்க முடியாத கட்டுப்பாடாகும் எனவும் மனித உரிமைகள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இறந்தவர்களின் உடல்கள் இறப்புக்கான உறுதியான ஆதாரங்கள் இன்றி தகனம் செய்வதற்கு பலவந்தப்படுத்தப்படுகிறது. விரைவுபடுத்தப்படுகின்றது. குடும்ப அங்கத்தவர்களுக்கு இறுதிக் கிரியைகள் நடத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படுவதில்லை. பாதுகாப்பு விதி முறைகளை அனுசரித்து இறுதிக் கிரியைகள் நடாத்துவதற்கு சந்தர்ப்பம் வழங்கப்படாமை மத சுதந்திரம் மற்றும் மத நம்பிக்கைக்கு அவமரியாதையாகும் எனவும் தெரிவித்துள்ளது.

இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு கொவிட் 19 வைரஸ் காரணமாக மரணிப்பவர்களின் உடல்களின் இறுதிக்கிரியைகள் தொடர்பில் தனது கண்காணிப்பினையும், சிபாரிசுகளையும் முன்வைத்துள்ளது.

கடந்த 2020 நவம்பர் 9 ஆம் திகதி வரை கொவிட் 19 தொற்றாக இனங்காணப்பட்ட 35 உடல்கள் தகனம் செய்யப்பட்டன. இவற்றில் 17 உடல்கள் முஸ்லிம்களுடையதாகும்.

சில சந்தர்ப்பங்களில் முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் பலவந்தமாக வீடுகளிலிருந்து தகனம் செய்யப்படுவதற்கு முன்பு கொழும்பு தேசிய வைத்தியாசாலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

மரணித்தவர்களின் உடல்களில் பி.சி.ஆர். பரிசோதனை சில சந்தர்ப்பங்களில் நடத்தப்படவில்லை என்றும் எமக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

இது சுகாதார அமைச்சின் வழிகாட்டல்களுக்கு மாறானதாகும். அத்தோடு பல சந்தர்ப்பங்களில் பி.சி.ஆர் பரிசோதனை முடிவுகள் இறந்து 48-72 மணித்தியாலயங்களின் பின்பே வழங்கப்பட்டுள்ளன.

தகனம் செய்யப்பட்ட இரு முஸ்லிம் ஜனாஸாக்களின் பெயர்கள் கொவிட் 19 தொற்றினால் இறந்தவர்களின் பெயர் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளமை எமது கவனத்திற்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இவர்கள் கொவிட் 19 தொற்றுக்குள்ளாகாதவர்கள்.

மேலும் வீடுகளில் மரணித்த சிலருக்கு வைரஸ் தொற்றியிருக்கவில்லை. அவர்கள் பலவீனம் காரணமாக வீட்டினுள்ளே இருந்துள்ளார்கள். அவர்களது குடும்ப அங்கத்தவர்களும் வீட்டினுள்ளே இருந்துள்ளார்கள்.

தகனம் செய்யப்பட்டவர்கள் சிலர் கொவிட் 19 தொற்றுக்குள்ளானவர்கள் இல்லை என அறிய முடிகிறது. ஏனென்றால் அவர்களது குடும்ப அங்கத்தவர்களுக்கு 14 நாட்களுக்குள் வைரஸ் தொற்று ஏற்பட்டிருக்கவில்லை. அவர்கள் சுகாதார அதிகாரிகளால் வைரஸ் பரிசோதனை உட்படுத்தப்படவுமில்லை எனத் தெரிவித்துள்ளது.

இதேவேளை பின்வரும் பரிந்துரைகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

1. கொவிட் 19 இனால் உயிரிழப்பவர்களின் சடலங்களை சுகாதார விதிமுறைகளைப் பேணி அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதி வழங்குக.
2. உயிரிழந்தவரின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தினுள் வழங்கப்பட வேண்டும்.
3. வீடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸ் பிரேத அறைக்கு எடுத்துச் செல்வதை நிறுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக தொற்று நீக்கி பேணுவதற்கான பொறிமுறை ஒன்றை உருவாக்க வேண்டும்.
4. உயிரிழப்பு விடயங்களை கையாளும்போது வெளிப்படைத்தன்மை அவசியமாகும். அத்துடன் ஒருவரது மரணத்திற்கான காரணத்தை அறிவிப்பதற்கான சரியான பொறிமுறை தேவை. மேலும் உரிய சுகாதார விதிகளை பேணி உயிரிழந்தவருக்கான இறுதி மரியாதையை செலுத்த குடும்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
5. உயிரிழந்த சடலங்களை கையாளும் முகாமைத்துவ விடயங்களில் அவர்களது சமூக பிரதிநிதிகளின் பிரசன்னம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.

தமது மேற்படி  பரிந்துரைகளை அடிப்படையாக கொண்டு வர்த்தமானியில் திருத்தங்களை மேற்கொள்ளுமாறும் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு சுகாதார அமைச்சை வேண்டியுளள்ளது.

இதேவேளை இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் மேற்படி அறிக்கையானது எதிர்வரும் திங்கட் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ள ஜனாஸா எரிப்புக்கு எதிரான அடிப்படை உரிமை மீறல் வழக்கிலும் தாக்கம் செலுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.