(எம்.எப்.எம்.பஸீர்)
கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்கள் உள்ளிட்டோரின் சடலங்கள் தகனம் செய்யப்படுவதற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ள அடிப்படை உரிமை மீறல் மனுக்களை எதிர்வரும் 30 ஆம் திகதி திங்கட் கிழமை விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் நேற்று தீர்மானித்துள்ளது.
எஸ்.சி.எப்.ஆர். 109 எனும் அடிப்படை உரிமை மீறல் மனு மீதான விசாரணைகளை அவசர தேவையாக கருதி உடன் விசாரணைக்கு எடுக்குமாறு, சட்டத்தரணி சபீனா மஹ்ரூப் தாக்கல் செய்த நகர்த்தல் பத்திரத்தை அடுத்து அந்த மனு நேற்று விசாரணைக்கு வந்தது. இதன்போது அம்மனு சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன், சிரேஷ்ட சட்டத்தரணிகளான ருஷ்தி ஹபீப் மற்றும் ஏர்மிசா டகேல் ஆகியோருடன் ஆஜரானார்.
இந் நிலையிலேயே இம்மனு தொடர்பில் இடையீட்டு மனுவை தாக்கல் செய்துள்ள வைத்தியர் சன்ன பெரேரா சார்பில் மன்றில் ஆஜராகும் ஜனாதிபதி சட்டத்தரணி சஞ்ஜீவ ஜயவர்தன சுய தனிமைப்படுத்தலில் இருப்பதாக, அவரது கனிஷ்ட சட்டத்தரணி மன்றில் விடயங்களை தெளிவுபடுத்தினார். அதன் பிரகாரமே குறித்த மனு உள்ளிட்ட, கொவிட் மரணங்களை அடக்கம் செய்ய அனுமதி கோரும் 11 மனுக்களையும் எதிர்வரும் திங்களன்று விசாரணைக்கு எடுக்க உயர் நீதிமன்றம் தீர்மானித்தது. உயர் நீதிமன்ற நீதியரசர்களான புவனேக அலுவிஹார, சிசிர டி ஆப்றூ மற்றும் காமினி அமரசேகர ஆகியோரே இதற்கான உத்தரவை பிறப்பித்தனர்.
இதன்போது இந்த விவகாரத்துடன் தொடர்புடைய ஏனைய மனுதாரர்கள் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணிகளான பைசர் முஸ்தபா, நிசாம் காரியப்பர் ஆகியோரும் சிரேஷ்ட சட்டத்தரணிகளான விரான் கொரயா, என்.எம்.சஹீத், பாயிஸ் உள்ளிட்ட சட்டத்தரணிகளும் உயர் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
கொவிட் 19 வைரஸ் தொற்றால் உயிரிழக்கும் அனைவரையும் தகனம் செய்ய வேண்டும் என கடந்த ஏப்ரல் 4 ஆம் திகதி சனிக்கிழமை திகதியிடப்பட்டு சுகாதார மற்றும் சுதேச வைத்திய சேவைகள் அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சியினால் ஏப்ரல் 11 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2170/8 எனும் வர்த்தமானியை வலுவிழக்கச் செய்யக் கோரியே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. சுகாதார அமைச்சர் பவித்ராதேவி வன்னியாராச்சி, சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம், சட்ட மா அதிபர் உள்ளிட்டோரை பிரதிவாதிகளாக பெயரிட்டே இவ்வடிப்படை உரிமை மீறல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.- Vidivelli