ஆறுதல் தரும் அறிக்கை

0 1,245

27.11.2020 விடிவெள்ளி வார இதழின் ஆசிரியர் தலையங்கம்

இலங்கையில் கொவிட் 19 தொற்றினால் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை எரிக்கும் விவகாரம் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் பலத்த விமர்சனங்களைத் தோற்றுவித்துள்ள நிலையில், அது தொடர்பில் உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அடிப்படை உரிமை மீறல் மனுக்கள் எதிர்வரும் திங்கட்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படவுள்ளன. இந் நிலையில் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு நேற்றைய தினம் சுகாதார அமைச்சுக்கு அனுப்பி வைத்துள்ள இந்த விவகாரம் தொடர்பான விரிவான அவதானங்களும் பரிந்துரைகளும் மிகவும் முக்கியத்துவமிக்கதாகும்.

சடலங்களை எரிக்க வேண்டும் எனும் சுகாதார அமைச்சின் தீர்மானமானது மக்களின் மத நம்பிக்கைகளையும் அடிப்படை உரிமைகளையும் மீறும் செயல் எனக் குறிப்பிட்டுள்ள ஆணைக்குழு, உடனடியாக வர்த்தமானி அறிவித்தலைத் திருத்தி வெளியிடுமாறும் அடக்கம் செய்ய அனுமதி வழங்குமாறும் கோரியுள்ளது.

முஸ்லிம்களின் ஜனாஸாக்களை கையாளும் விடயத்தில் சுகாதாரத்துறையினரும் பொலிசாரும் நடந்து கொள்ளும் மனிதாபிமானமற்ற முறைகள் குறித்து தமக்கு பல முறைப்பாடுகள் கிடைத்துள்ளதாக ஆணைக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. வீடுகளில் உயிரிழப்பவர்களின் ஜனாஸாக்களை பலவந்தமாக எடுத்துச் சென்று பிரேத அறைகளில் நாட்கணக்கில் வைத்திருப்பது, பி.சி.ஆர். பரிசோதனை முடிவுகளின் தாமதம், தொற்று இல்லாதவர்களையும் கூட தொற்று ஏற்பட்டுள்ளதாக கூறி எரித்தமை உள்ளிட்ட பல்வேறு மனித உரிமை மீறல்கள் குறித்தும் ஆணைக்குழு தனது அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும் சுகாதார அமைச்சு உடனடியாக எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்த் பரிந்துரைகளையும் மனித உரிமைகள் ஆணைக்குழு முன்வைத்துள்ளது. கொவிட் 19 இனால் உயிரிழப்பவர்களின் சடலங்களை சுகாதார விதிமுறைகளைப் பேணி அடக்கம் செய்யவோ அல்லது எரிக்கவோ அனுமதி வழங்குக,  உயிரிழந்தவரின் பி.சி.ஆர் பரிசோதனை அறிக்கை 24 மணி நேரத்தினுள் வழங்கப்பட வேண்டும், வீடுகளில் உயிரிழந்தவர்களின் சடலங்களை பொலிஸ் பிரேத அறைக்கு எடுத்துச் செல்வதை நிறுத்துவதுடன் அவற்றை பாதுகாப்பாக தொற்று நீக்கி பேணுவதற்கான பொறிமுறையை ஒன்றை உருவாக்க வேண்டும், உயிரிழப்பு விடயங்களை கையாளும்போது வெளிப்படைத்தன்மை அவசியம், ஒருவரது மரணத்திற்கான காரணத்தை அறிவிப்பதற்கான சரியான பொறிமுறை தேவை, உரிய சுகாதார விதிகளை பேணி உயிரிழந்தவருக்கான இறுதி மரியாதையை செலுத்த குடும்பங்களுக்கு அனுமதி வழங்க வேண்டும், உயிரிழந்த சடலங்களை கையாளும் முகாமைத்துவ விடயங்களில் அவர்களது சமூக பிரதிநிதிகளின் பிரசன்னம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என பல முக்கியமான பரிந்துரைகளை ஆணைக்குழு முன்வைத்துள்ளது.

அந்த வகையில் ஜனாஸா எரிப்பு விவகாரம் தொடர்பில் சுமார் 11 வழக்குகள் உயர் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவை திங்கட் கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும்போது மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கையும் சிபாரிசுகளும் விசேட கவனத்தைப் பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த வகையில் மனித உரிமைகள் ஆணைக்குழுவின் இந்த அறிக்கை முஸ்லிம்களுக்கு சற்று ஆறுதல் தருவதாக அமைந்துள்ளது எனலாம்.

அண்மைய நாட்களாக வெளிவரும் நீதிமன்றத் தீர்ப்புகள் மக்கள் மத்தியில் சலசலப்புகளைத் தோற்றுவித்துள்ளதை காணமுடிகிறது.  பாரிய குற்றச்சாட்டுகளுக்குள்ளானவர்களின் வழக்குகள் முடிவுக்குக் கொண்டுவரப்படுகின்ற செய்திகளும் சந்தேக நபர்கள் விடுவிக்கப்படும் செய்திகளும் அடிக்கடி வெளிவந்தவண்ணமுள்ளன. 20 ஆவது திருத்தத்தின் ஊடாக நீதித்துறைசார்ந்த உயர் நியமனங்களை வழங்குகின்ற அதிகாரமும் தற்போது ஜனாதிபதி வசம் சென்றுள்ளது. இந் நிலையில் இலங்கையில் நீதித்துறையின் சுயாதீனத்தன்மை குறித்த அச்சம் பலராலும் முன்வைக்கப்படுகிறது.

இவ்வாறானதொரு பின்னணியிலேயே ஜனாஸா எரிப்புக்கு எதிரான வழக்குகளும் திங்களன்று விசாரணைக்கு வருகின்றன. அரசாங்க தரப்பில் இடையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ள போதிலும் அவர்களால் தமது வாதங்களை விஞ்ஞானபூர்வமாக முன்வைக்க முடியுமா என்பது கேள்விக்குறியே. இந் நிலையில் சடலங்களை அடக்கம் செய்யலாம் எனும் உலக சுகாதார நிறுவனத்தின் வழிகாட்டல் முதல் இலங்கை மனித உரிமை ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை வரை வழக்குத் தாக்கல் செய்தவர்கள் தரப்பில் ஏராளமான சாதகமான நிலைமைகள் உள்ளன. இந் நிலையில் மிகவும் நியாயமானதொரு தீர்ப்பு இந்த விவகாரத்தில் கிடைக்கப் பெற வேண்டும் என்பதே அனைவரது எதிர்பார்ப்பும் பிரார்த்தனையுமாகும்.  – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.