20 இற்கு ஆதரவளித்தமைக்கான சில நியாயங்களை உறுப்பினர்கள் முன்வைத்துள்ளனர்

உயர்பீடமே இறுதி தீர்மானம் எடுக்கும் ; ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பர்

0 1,040

ஆங்கிலத்தில்: சாரா ஹனான்
தமிழில்: ஏ.ஆர்.ஏ.பரீல்
நன்றி: ‘சன்டே மோர்னிங்’

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் தவிர, அக் கட்சியின் அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களும் அரசியமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.  ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அங்கம் வகிக்கும் எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி   20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதில்லை என உத்தியோகபூர்வமாக தீர்மானித்திருந்த நிலையிலேயே மு.கா. எம்.பி.க்கள் அத்திருத்தத்தை ஆதரித்துள்ளனர். இந்நிலையில் கட்சியின் எதிர்கால செயற்பாடுகள் குறித்து ‘சன்டே மோர்னிங்’ பத்திரிகை ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் சட்டத்தரணி நிஸாம் காரியப்பரிடம் வினவியது. அவருடனான முழுமையான நேர்காணல் வருமாறு.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளித்து வாக்களித்த நிலையில் கட்சியின் தலைவர் எதிர்த்து வாக்களித்துள்ளார். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் 20 ஆவது திருத்தத்தை ஆதரிப்பதாக உத்தியோகபூர்வமாக தீர்மானித்திருந்ததா?

வாக்களிப்பு இடம் பெறுவதற்கு முன்பு கட்சியின்  உயர்பீடம் கூடியது. கட்சியின் யாப்பின் பிரகாரம் உயர்பீடத்துக்கே தீர்மானம் எடுக்கும் உரிமை இருக்கிறது. கட்சியின் உயர்பீடத்தில் 20 ஆவது திருத்தத்தின் நன்மை, தீமைகள் கலந்துரையாடப்பட்டன. 20ஆவது திருத்தத்தின் சில பிரிவுகள் கட்சியினால் ஏற்றுக் கொள்ள முடியாதவை என்பது அநேகரின் கருத்தாக இருந்தது. மூன்று விடயங்கள் ஏற்றுக் கொள்ள முடியாதனவாக இருந்தன. குறிப்பாக சுயாதீனமான நீதித்துறைக்கு நியமனங்களை வழங்கும் அதிகாரம், சுயாதீன தேர்தல் ஆணைக்குழுவுக்கு நியமனங்கள் வழங்கும் அதிகாரம் மற்றும் நிறைவேற்று அதிகாரத்தின் மூலம் பாராளுமன்றத்தை 2-1/2 வருடங்களில் கலைக்கும் அதிகாரம் என்பனவாகும்.

20ஆவது திருத்தத்தில் இவை கைவிடப்பட்டால் அதற்கு ஆதரவு வழங்குவது பற்றி சிந்திக்கலாம் என்று நினைத்தோம். இறுதியில் கட்சியின் தலைவருக்கு தீர்மானிக்கும் அதிகாரத்தை வழங்கினோம். இது தொடர்பாக கட்சியின் தலைவரின் தலைமையிலான பாராளுமன்ற குழு, தலைவரின் வழிகாட்டல்களின்படி ஆலோசித்து தீர்மானம் எடுக்க வேண்டும் எனவும் தீர்மானிக்கப்பட்டது.

இதே வேளை முஸ்லிம் சமூகத்தின் சில அடிப்படை பிரச்சினைகள் தொடர்பிலும் பேசப்பட்டது. குறிப்பாக கொவிட்-19 வைரஸ் தொற்றினால் மரணிக்கும் முஸ்லிம்களின் ஜனாஸா தகனம் செய்யப்படுவது தொடர்பில் கவனத்திற் கொள்ளப்பட்டது. உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) கொவிட் -19 நோயாளிகள் மரணித்தால் அவர்களை அடக்கம் செய்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. இது சர்வதேச நியமமாகும்.
அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்குவதென்றால் அதற்கு முன்பு முஸ்லிம்களின் ஏனைய பிரச்சினைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட வேண்டும். கட்சியின்  பொதுச்செயலாளர் என்ற வகையிலும், உயர்பீட அமர்வில் கலந்து கொண்டவன் என்ற வகையிலும் எங்கள் தீர்மானம் கூட்டானதாகும்.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடன் 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதாக உடன்படிக்கை ஏதும் செய்து கொண்டிருந்ததா?

அது முழுமையாக தவறான கருத்தாகும். ஐக்கிய மக்கள் சக்திக்குள் எமது கட்சி எடுக்கும் தீர்மானம் எப்போதும் சுயாதீனமானதாகும். நாங்கள் ஒரு போதும் எங்களது அரசியல் கொள்கைகளை விட்டுக் கொடுப்பதில்லை. கட்சி என்ற வகையில் நாங்கள் ஐக்கிய மக்கள் சக்தியின் தீர்மானங்களில் சுதந்திரமாகவே அரசியல் தீர்மானங்களை எடுப்போம். 20 ஆவது திருத்தத்தில் மாத்திரமல்ல எந்தவொரு திருத்தமென்றாலும் நாம் சுயாதீனமாகவே தீர்மானிப்போம். நாங்கள் ஐக்கிய மக்கள் சக்திக்குள்ளிருந்து கொண்டே தீர்மானங்களை மேற்கொள்வதற்கு முயற்சிப்போம்.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேர்ந்தெடுத்தது தந்திரமான நகர்வு என குற்றம் சுமத்தப்படுகிறது. 20 ஆவது திருத்தத்திற்கு எதிர்க்கட்சி எதிர்த்து வாக்களித்த நிலையில் சிலர் ஆதரவாக வாக்களித்து அரசாங்கத்துக்கு ஆதரவு வழங்கியிருக்கிறார்கள். இதற்கு நீங்கள் என்ன பதில் வழங்குகிறீர்கள்?

இந்த இக்கட்டான, சிக்கலான நிலைமையையே நாம் எதிர்கொண்டோம். வாக்களிப்பு இடம்பெற்ற வேளை தலைவர் முழுமையாக அதனை எதிர்த்தார். என்றாலும் சில உறுப்பினர்கள் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்தார்கள். இந்நிலைமை மக்களின் மனதில் பாரிய சந்தேகங்களை ஏற்படுத்தியது. வாக்களிப்பு இடம்பெற்ற பின்பு உடனடியாக கட்சியின் பொதுச் செயலாளர் என்றவகையில் எனது நிலைப்பாட்டில் தெளிவாக இருந்தேன். தலைவர் பெரிதும்  அக்கறை கொண்டிருந்தார். கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களின் கூட்டமொன்றை கட்சித் தலைவரின் வீட்டில் நடத்தினோம்.

இந்தச் சம்பவத்தை நாம் கேள்விக்குட்படுத்தியபோது பாராளுமன்ற உறுப்பினர்களின் சில நிலைப்பாடுகளை தெளிவாக அறிந்து கொண்டோம். அவர்கள் குறிப்பாக கிழக்கு மாகாணத்தைச் சேர்ந்தவர்கள். அத்தோடு கிழக்கு மாகாண சமூகத்தின் அபிலாஷை அரசாங்கத்துடன் உறவை பேண வேண்டும் என்பதாயிருந்தது.  ஆனால் எமது கட்சியின் தலைவருக்கு எதிராக குற்றச்சாட்டுகள் முன் வைக்கப்பட்டுள்ளதால் பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்களது விளக்கங்களை கட்சியின் உயர்பீடத்தில் தெரிவிக்கவேண்டியது அவசியமாகும்.

கே: 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த கட்சி உறுப்பினர்கள் தாங்கள் அரசுக்கு ஆதரவளிப்பது தொடர்பில் கட்சியுடன் அல்லது கட்சித் தலைமைத்துவத்துடன்  பேச்சுவார்த்தை நடத்தினார்களா?

இது மிகவும் முக்கிய விடயமாகும். அவர்கள் வேறுபட்ட முடிவை எடுப்பதற்கு முன்னர் பாராளுமன்றக் குழுவுக்கும்  கட்சித் தலைமைக்கும் இடையில் ஒரு புரிதல் இருந்ததா என்ற கேள்வி எழுகிறது. இதில் அபிப்பிராயபேதங்கள் இருப்பதாக நான் அறிந்துகொண்டேன். தலைவர் இவ்விவகாரம் கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானிக்கப்படவேண்டும் என்ற தீர்மானத்தை எடுத்தார்.

எனது முன்னிலையில், பாராளுமன்ற உறுப்பினர்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தியதால், இந்த பிரிவின் ஒரு பகுதியைத் தொடர்ந்து நாங்கள் சந்தித்த சிரமத்தையும் சங்கடத்தையும் அவர்களிடம் சொல்ல முடிந்தது. இருப்பினும், உயர் பீடத்தின் சந்திப்புகள் முடியும் வரை நான் அதைப் பற்றி கருத்து தெரிவிக்கமாட்டேன்.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளிக்கட்சியாக இருக்கும் நிலையில் ஐக்கிய மக்கள் சக்தி கூட்டாக எடுத்த தீர்மானத்தை மீறியுள்ள பாரளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கட்சி ஒழுக்காற்று நடவடிக்கை மேற்கொள்ளுமா?

கட்சியின் தலைவருடன் கூட்டாக தீர்மானம் மேற்கொள்வதற்கே நாங்கள் உடன்பட்டோம்.  ஆதரவாகவோ அல்லது எதிர்த்தோ வாக்களிக்கும் படி அவர்களை கட்டாயப்படுத்தவில்லை. ஆனால், கட்சி எதிர்பார்த்தவாறு நடைபெறவில்லை. அங்கு பிரிவு ஏற்பட்டது கட்சியின் தலைவர் ஒரு பக்கம் பாராளுமன்ற உறுப்பினர்கள் மறுபுறம் இதுவே நடந்தது. பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆதரித்தமைக்கு அவர்களது சொந்தக்காரணங்கள் இருக்கின்றன. 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிக்காமைக்கு தலைவருக்கு சொந்தக்காரணங்கள் இருக்கின்றன.

இந்த தெளிவுகள் கட்சியின் உயர்பீடத்தில் முனன் வைக்கப்பட வேண்டும். ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பது பற்றி அடுத்த வாரம் நடைபெறவுள்ளக்கட்சியின் உயர்பீடத்தில் தீர்மானம் மேற்கொள்ளப்படும்.

கே: ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் சம்பந்தப்பட்ட 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்குமாறு எதிர்கட்சித் தலைவரைக் கோரியுள்ளார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியிடம் எவ்வாறு நிலைமையினை விளக்கும்?

எமது கட்சியின் தலைமை 20 ஆவது திருத்தத்தை எதிர்ப்பதற்கு எடுத்த தீர்மானத்தை, கட்சியும் அதன் எம்.பி.க்களும் எதிர்த்தமை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியினர் அதிருப்தியில் உள்ளார்கள் என்பதையே அவர்களுடனான தொடர்பாடல்களிலிருந்து என்னால் உணர முடிகிறது. எமது கட்சி ஐக்கிய மக்கள் சக்தியின் தலைமைத்துவத்திற்கு எதிராக செயற்படுவதாக அவர்கள் இதனை அர்த்தப்படுத்துகின்றனர். கட்சி தீர்மானமொன்றினை மேற்கொண்டு அவர்கள் என்ன செய்ய வேண்டும் என தெளிவாகக் கூறியிருக்க வேண்டும் என அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

நாம் ஐக்கிய மக்கள் சக்தியுடன் செய்து கொண்ட புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் ஐக்கிய மக்கள் சக்திக்குள் எமது வேறுபாடான தனித்துவமான அடையாளம், கட்சி என்ற வகையில் கூட்டாக தீர்மானம் எடுக்கும் உரிமை, ஐக்கிய மக்கள் சக்தி கொள்கைத் தீர்மானங்களின்போது சுயாதீனத்தன்மை என்பன பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது.  அவர்கள் எமது உத்தியோகபூர்வ நிலைப்பாட்டினை எதிர்பார்க்கிறார்கள். நாங்கள் உயர்பீடத்தில் தீர்மானம் மேற்கொண்டதன் பின்பே இது பற்றி அவர்களுக்கு தெரிவிக்க முடியும்.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர், சம்பந்தப்பட்ட கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்களை பாராளுமன்றத்திலிருந்து வெளியேற்றத் தவறினால் அவரையும் நீக்கும்படி ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினர்கள் கோரியிருப்பது தொடர்பில் உங்கள் கருத்து என்ன?

ஐக்கிய மக்கள் சக்தி ஒரு கட்சி என்றவகையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸுக்கு எதிராக நடவடிக்கை எடுப்பதற்கு அதற்கு அரசியல் அல்லது சட்ட உரிமை  இருப்பதாக நான் கருதவில்லை. ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பாராளுமன்ற உறுப்பினர்கள் அவர்கள் மீதான ஒழுக்காற்று நடவடிக்கைகள் வரை சுயாதீனமாகவே செயற்படுவார்கள். ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், ஐக்கிய மக்கள் சக்தியின்  பங்காளிக் கட்சியாக எதிர்க்கட்சியில் இருப்பதா என்பதை கட்சித்தலைவர்கள் கூடி தீர்மானிக்க வேண்டும்.

ஐக்கிய மக்கள் சக்தி பங்காளிக் கட்சித் தலைமைத்துவங்களுடன் இது தொடர்பில் கலந்துரையாட வேண்டும். பின்பே தீர்மானம் மேற்கொள்ள வேண்டும். இதுவே ஒரு கூட்டமைப்பை கையாளக்கூடிய   நடைமுறையாகும்.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு தனியான அரசியல் கட்சி என்ற வகையில் 20 ஆவது திருத்தம் தொடர்பிலான நிலைப்பாடு என்ன?

கிழக்கு மாகாண பாராளுமன்ற உறுப்பினர்களின் கருத்துக்களை கவனத்திற் கொண்டதன் பின்பு எனது தனிப்பட்ட கருத்து என்னவென்றால், 19 ஆவது திருத்தத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட ஜனநாயக பெறுமானமிக்க சில விடயங்களை குறைக்க முயற்சித்ததை நாம் தடுத்திருக்கலாம்.

இந்நாட்டின் ஜனாதிபதி நாட்டை சிறந்த முறையில் ஆளுவதற்கு சில  அதிகாரங்கள் வழங்கப்பட வேண்டும் என்பதை நாம் வரவேற்கிறோம். பாராளுமன்றம் , நீதித்துறை மற்றும் சுயாதீனமான குழுக்கள் என்ன ஜனாபதிபதிக்கு கீழ்படிதலானவைகளாக இருக்கவேண்டும் என்பது அரசாங்கத்தின் ஓர் இலக்காக இருக்கலாம்.

ஆனால் நீதித்துறை நிறைவேற்று அதிகாரத்துக்குட்படக்கூடாது என்று நாங்கள் விரும்புகிறோம். அத்தோடு தேர்தல் ஆணைக்குழு கட்டாயமாக சுதந்திரமாக செயற்படவேண்டும். அவ்வாறென்றாலே முழுமையான தேர்தல் வழிமுறைகளில் நம்பிக்கை கொள்ள முடியும்.

நிறைவேற்று அதிகாரம் கொண்டவர் சட்டசபையை கட்டுப்படுத்துபவராக இருக்கக்கூடாது, சட்டசபை தேர்ந்தெடுக்கப்பட்ட காலத்தில் இயங்கக் கூடியதாக இருக்கவேண்டும் கலைக்கப்பட்டு விடுமென நிறைவேற்று அதிகாரத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்படக்கூடாது.

இந்த மூன்று விடயங்களும் 20 ஆவது திருத்தத்திற்கு ஆதரவளிப்பதற்கு முன்பு கவனத்திற்கொள்ளப்படவேண்டும். மேலும் அரசாங்கம் முஸ்லிம் சமூகத்தை பாதிக்கும் அம்சங்கள் தொடர்பில் கவனம் செலுத்தவேண்டும்.

குறிப்பாக தமிழ் மொழிபேசும் முஸ்லிம்கள் தேசியவாத குழுக்களால் அச்சுறுத்தப்படுகிறார்கள். முஸ்லிம்களுக்கு எதிராக சட்டவிரோத, சட்டத்துக்கு முரணான விடயங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன. முஸ்லிம்கள் வாழும் காணிகள் அரசாங்கத்துக்குச் சொந்தமானவை அல்லது புதைபொருள் முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகள் என குற்றம் சுமத்தப்படுகிறது. அரசாங்கம் முஸ்லிம் சமூகத்துடன் கலந்துரையாடி இருக்க வேண்டும்.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஐக்கிய மக்கள் சக்தியுடனான தனது உறவினை எவ்வாறு மீட்டுக்கொள்ளும்?

ஐக்கிய மக்கள் சக்தி நாம் சுதந்திரமாக எதிர்க்கட்சியாக செயற்படுவதைப் புரிந்து கொள்ளவேண்டும் நாம் அவர்களுடன் எதற்கும் உடன்படவேண்டும் என்று  நினைக்கக்கூடாது தலைமைத்துவ கவுன்ஸில் ஒன்றினை உடனடியாக நியமிக்க வேண்டும்.

இதனை நாம் ஏற்கனவே முன்மொழிந்துள்ளோம். ஐக்கிய மக்கள் சக்தியின் பங்காளர்களாகவுள்ள தமிழ் முற்போக்கு முன்னணி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், .அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் என்பன  எதிர்கட்சியில் அங்கம் வகிக்கும் அதேவேளை அவர்களின் பங்களிப்புக்கு சந்தர்ப்பம் வழங்கவேண்டும். ஐக்கிய மக்கள் சக்திக்கு எதிரான நிலைப்பாட்டினை எடுக்கும் தேவையேற்பட்டால் அதற்கும் சந்தர்ப்பம் வழங்கப்படவேண்டும்.

கே: ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் அரசாங்கத்துடன் இணைந்து கொள்ளுமா?

நான் அவ்வாறு நினைக்கவில்லை. ஏனென்றால் அரசாங்கத்துடன் இணைவதென்றால் எமது நிலைப்பாடு தொடர்பில் சில உறுதிகள் அரசாங்கத்தினால் வழங்கப்படவேண்டும்.

இது கட்சியின் உயர்பீடத்தில் ஆலோசிக்கப்பட்டே தீர்மானிக்கப்படவேண்டும். உயர்பீடம் அவ்வாறு கருதினால், சமூகத்துக்காக ஆரம்பிக்கப்பட்ட கட்சி என்ற வகையில் அரசாங்கத்திடமிருந்து சாதகமான சமிக்ஞை கிடைத்தால் அதன் அடிப்படையில் எம்மால் அரசாங்கத்துடன் இணைந்து பணியாற்ற முடியும். நாங்கள் எப்போதும் சுதந்திரமானவர்களாகவே இருப்போம்.

கே: எதிர்க்கட்சியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் எவ்வாறான வகிபாகத்தைக் வகிக்கவுள்ளது?

அனைத்தும் உயர்பீடத்தின் தீர்மானத்துக்கு உட்பட்டதாகவே அமையும். இறுதித் தீர்மானம் தலைவரினால் மேற்கொள்ளப்படும். அவர் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியில் பாரிய செல்வாக்கினைக் கொண்டுள்ளவர்.

வழக்கம் போல் நாங்கள் உயர்பீட உறுபிப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட பாராளுமன்ற உறப்பினர்களின் கருத்துகளை கவனமாக செவிமடுப்போம். உயர்பீட அமர்வின் இறுதியில் எங்களால் பொருத்தமான தீர்மானமொன்றினை எடுக்கலாம் என நான் நம்புகிறேன். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.