இலங்கை முஸ்லிம்கள் உணர்வு ரீதியாக மிகவும் நெருக்கடியான காலகட்டத்தில் இருந்து கொண்டிருக்கின்றனர். கொவிட் 19 வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உயிரிழப்பவர்களின் உடல்கள் கண்டிப்பாக எரிக்கப்பட வேண்டும் என இலங்கையின் சுகாதார அமைச்சு கடந்த மார்ச் மாதம் வெளியிட்ட வர்த்தமானி அறிவித்தலும் அதனைப் பின்பற்றி சகல சடலங்களும் எரிக்கப்படுவதுமே இந்த உணர்வு ரீதியான நெருக்கடிக்கு காரணமாகும்.
நேற்று மாலை வரை இலங்கையில் 29 பேர் மரணித்துள்ள நிலையில், இவர்களில் 13 பேர் முஸ்லிம்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது. நேற்று முன்தினம் வரை 9 முஸ்லிம்கள் உயிரிழந்திருந்த நிலையில், நேற்று இடம்பெற்ற 5 மரணங்களில் பெரும்பாலானவர்கள் முஸ்லிம்கள் என்றே தெரிவிக்கப்படுகிறது. எனினும் அவர்களது சரியான எண்ணிக்கையை உறுதிப்படுத்திக் கொள்ள முடியவில்லை.
இலங்கை முஸ்லிம்கள் இந்த நாட்டில் தொன்றுதொட்டு பல்வேறு சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவித்து வந்துள்ளனர். துரதிஷ்டவசமாக 2012 ஆம் ஆண்டு இந்நாட்டில் தோற்றம் பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத பிரசாரங்கள், அதன் பின்னர் இடம்பெற்ற நான்கு மிகப் பாரிய வன்முறைகள் உள்ளிட்ட நூற்றுக் கணக்கான முஸ்லிம் விரோத சம்பவங்கள் என்பன முஸ்லிம்கள் அனுபவித்த சலுகைகளைச் சற்று கேள்விக்குள்ளாக்கின. அதன்பிற்பாடு 2019 ஏப்ரல் 21 இல் முஸ்லிம் பெயர்தாங்கிய குண்டுதாரிகளால் நடாத்தப்பட்ட பாரிய தற்கொலைக் குண்டுத்தாக்குதல்களால் இலங்கை முஸ்லிம்கள் வரலாற்றில் என்றுமில்லாத சவால்களுக்கு முகங்கொடுக்கத் தள்ளப்பட்டனர். ஈற்றில் முஸ்லிம்களை வெறுப்பதே இந்த நாட்டில் பெரும்பான்மையினர் மத்தியில் அரசியல் செல்வாக்கைத் தக்க வைப்பதற்கான பிரதான வழிமுறையாக கருதப்படும் அளவுக்கு நிலைமைகள் மாற்றமடைந்தன. 2019 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 பொதுத் தேர்தல் என்பன முழுக்க முழுக்க முஸ்லிம் வெறுப்பு பிரசாரத்தை அடிப்படையாகக் கொண்டே நடந்து முடிந்தன. அவற்றின் பெறுபேறுகளும் அவ்வாறே அமைந்தன. துரதிஷ்டவசமாக காலம் காலமாக முஸ்லிம்களை அரவணைத்து வந்த தேசிய கட்சிகள் கூட ஒரு கட்டத்தில் முஸ்லிம் வெறுப்பை கையிலெடுக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இன்றும் அந்நிலை தொடர்கிறது.
முன்னைய காலத்தில் முஸ்லிம் அரசியல் தலைமைகள் ஆளும் அரசாங்கங்களுடன் நல்லுறவைப் பேணியதுடன் தமது நேர்மை மற்றும் திறமை மூலம் முஸ்லிம் சமூகத்தின் உரிமைகளை வென்று கொடுத்தனர். எனினும் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின்னர் இந்நிலைமை தலைகீழாக மாற்றம் பெற்றுள்ளது. முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் என்போர் பதவிகளுக்கும் சலுகைகளுக்கும் அடிபணிபவர்கள் என்றும் யார் ஆட்சிக்கு வந்தாலும் அவர்களது பக்கம் பாய்ந்துவிடுவார்கள் என்பதும் இன்று பொது அபிப்பிராயமாக பெரும்பான்மை மக்கள் மனங்களில் பதிந்துள்ளது. கடந்த மாதம் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்த பிற்பாடு முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் ஒருவரிடம் எதிரணி பாராளுமன்ற உறுப்பினர் ஒருவர் இருபது ரூபா நாணயத்தாளை நீட்டியமை இந்த அபிப்பிராயத்தின் பிரதிபலிப்பேயாகும்.
இவ்வாறு முஸ்லிம் அரசியல் பிரதிநிதித்துவம் பெரும்பான்மை மக்கள் மத்தியிலும் அரசாங்கங்கள் மத்தியிலும் கேலிக்கூத்தாக்கப்பட்டுள்ள நிலையில், எமது உரிமைகளையும் சலுகைகளையும் மீள வென்றெடுப்பதற்கான சரியான மூலோபாயம் என்ன என்பது பற்றி முஸ்லிம் சமூகம் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளது.
அந்த வகையில் 20 ஆம் திருத்தத்திற்கு ஆதரவளித்தமை சாணக்கியமானதொரு நகர்வு என்ற நிலைப்பாட்டை முன்வைப்பவர்களும் உள்ளனர். எனினும் இந்த சாணக்கியத்தின் மூலம் முஸ்லிம் சமூகத்திற்கு என்ன நலன் கிடைத்தது? கிடைக்கப் போகிறது? என்பதே இங்கு முக்கியமான கேள்வியாகும். இக் கேள்விகளுக்கு கிடைக்கும் பதில்களில் முதன்மையானதாக அமைய வேண்டியது, முஸ்லிம்களின் ஜனாஸாக்கள் எரிக்கப்படும் விடயத்துக்கு முற்றுப்புள்ளி வைத்தோம் என்பதாகவே இருக்க வேண்டும். எனினும் அந்த பதில் நேற்று வரை கிடைக்கப் பெறவில்லை. இந்த வாரமேனும் கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பில் முஸ்லிம் சமூகம் உள்ளது.
தொடர்ந்தும் ஜனாஸாக்கள் எரிக்கப்படுவது நிச்சயம் முஸ்லிம் சமூகத்தை மிகப் பெரிய உணர்வு ரீதியான நெருக்கடிக்குள்ளேயே தள்ளும். அது நாம் எதிர்பாராத விளைவுகளை எதிர்காலத்தில் கொண்டுவரலாம். எனவேதான் முஸ்லிம் பிரதிநிதிகள் இதுவிடயத்தில் விரைந்து செயற்பட வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறோம். -Vidivelli