ஏ.ஆர்.ஏ.பரீல், ஐ.எம்.மிதுன் கான், முஹம்மட் ஹாசில்
அரபு எழுத்துக்களையும், அரபு எழுத்தணிக்கலையையும் காணும் போதெல்லாம் பெரும்பான்மைச் சமூகத்தைச் சேர்ந்த பெரும்பாலானவர்கள் இது ஐ.எஸ். தீவிரவாதிகளின் சுலோகங்கள், அவர்கள் ஏதோவொரு தீவிரவாத செயலுக்கு தயாராகிறார்கள் என்றே கருதுகிறார்கள். உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் இதுவே யதார்த்தமாகிவிட்டது.
கடந்த வாரம் அரபுக் கல்லூரி ஒன்றின் வெள்ளி விழா மலரில் இலங்கைப் படத்தை உள்ளடக்கி அரபு எழுத்தணிக்கலையில் ஜமாலியா அரபுக் கல்லூரி என்ற பெயர் வடிவமைக்கப்பட்டிருந்தமை பாதுகாப்பு தரப்பினர் மத்தியிலும் அப்பகுதி பெரும்பான்மை இன மக்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திவிட்டது. அது மாத்திரமன்றி சிங்கள ஊடகங்களும் ஏதோ தீவிரவாத சஞ்சிகை ஒன்றை அச்சிட்டமை போன்று செய்திகளை வெளியிட்டமையானது இவ்விடயத்தைப் பூதாகரமாக்கிவிட்டது.
இச்சம்பவம் கஹட்ட கஸ்திகிலிய ஹெட்டுவெவ என்ற பகுதியில் இடம் பெற்றுள்ளது. இது தொடர்பில் பொலிஸார், குற்றப்புலனாய்வுப் பிரிவினர், உளவுப் பிரிவினர் என பல தரப்பும் விசாரணைகளை நடத்தியுள்ளன. இச்சம்பவத்தின் உண்மைத் தன்மை தொடர்பில் ‘விடிவெள்ளி’ தகவல் திரட்டிய போது பின்வரும் விபரங்கள் தெரியவந்தன.
கஹட்டகஸ்திகிலிய ஹெட்டுவெவ என்ற பகுதியில் இயங்கி வருகிறது ஜமாலியா அரபுக் கல்லூரி. இக்கல்லூரி 1995 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டது. தற்போது இக்கல்லூரியில் 45 மாணவர்கள் கல்வி பயில்கிறார்கள். இவ் அரபுக்கல்லூரி தனது 25 வருட பூர்த்தி வெள்ளி விழாவை கொண்டாடுவதற்கான ஏற்பாடுகளைச் செய்திருந்தது. அறபுக் கல்லூரியின் வெள்ளி விழா கடந்த 13 ஆம் திகதி புதன் கிழமை கொண்டாடுவதற்குத் திட்டமிட்டிருந்தது. இதற்கென சிறப்பு மலர் ஒன்றும் தயாரிக்கப்பட்டு 500 பிரதிகள் அச்சிடுவதற்கான ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருந்தன. சஞ்சிகையை அச்சிடுவதற்கு அநுராதபுரம் மிகிந்தலையிலுள்ள அச்சகம் ஒன்றுக்கு வழங்கப்பட்டிருந்தது.
அரபுக்கல்லூரியின் சிறப்பு மலரான சஞ்சிகையில் இலங்கைப்படத்தின் வடிவில் அரபு எழுத்தணியில் ஜமாலியா அரபுக்கல்லூரி என பெயர் எழுதப்பட்டு அச்சிடுவதற்கு வழங்கப்பட்டிருந்தது.
அரபு எழுத்துக்கள் இலங்கை வரைபடத்தில் முழுமையாக உள்ளடக்கப்பட்டிருந்ததால், இது பயங்கரவாதிகளின் ஏதோவொரு திட்டமென சந்தேகம் கொண்ட அச்சக ஊழியர் பொலிஸாருக்கு வழங்கிய இரகசிய தகவலையடுத்து மிஹிந்தலை பொலிஸார் அச்சகத்தை சுற்றிவளைத்து அச்சிடப்பட்டிருந்த சிறப்பு மலர் பிரதிகளைக் கைப்பற்றி விசாரணைகளை முன்னெடுத்தனர்.
குற்றப்புலனாய்வுப் பிரிவினர் பொலிஸார் மற்றும் உளவுப் பிரிவினர் இதுபற்றி விசாரணைகளில் ஈடுபட்டனர். இவ்விவகாரம் தொடர்பில் ஹெட்டுவெவ ஜமாலியா அரபுக்கல்லூரியின் அதிபர் மெளலவி எஸ்.அகமட் ‘விடிவெள்ளி’குக் கருத்துத் தெரிவிக்கையில்,
‘எமது கல்லூரியின் வெள்ளி விழாவினைக் கொண்டாடுவதற்காகவே சிறப்பு மலர் வெளியிடத் திட்டமிட்டிருந்தோம். 500 பிரதிகள் அச்சிடுவதற்கு மிஹிந்தலையிலிருந்த அச்சகத்துக்கு வழங்கியிருந்தோம். சிறப்பு மலரில் பழைய மாணவர்கள், மாணவர்கள், ஆசிரியர்கள், நலன் விரும்பிகள் என்போர் ஆக்கங்களை எழுதியிருந்தனர். வாழ்த்துச் செய்திகளும் உள்ளடக்கப்பட்டிருந்தன.
வெளிநாட்டிலிருக்கும் எமது பழைய மாணவர் ஒருவர் அரபு எழுத்தணியில் இலங்கைப் படத்தின் வடிவில் எமது கல்லூரியின் பெயரை உள்ளடக்கியிருந்தார். அத்தோடு அரபு கல்லூரிகளின் ஒன்றியத்தில் நாம் எமது கல்லூரியைப் பதிவு செய்திருந்தோம். அந்தப்பதிவுக்கான சான்றிதழில் இலங்கைப் படத்தின் மத்தியில் குர்ஆனின் படமொன்று பிரசுரிக்கப்பட்டிருந்தது. இதனால் சந்தேகம் கொண்டே பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
மிஹந்தலை பொலிஸார் அச்சிடப்பட்ட எமது 140 சிறப்பு மலர் பிரதிகளை கைப்பற்றியுள்ளார்கள். மிஹிந்தலை பொலிஸாருக்கும் குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் எனது வீட்டுக்கு வந்து விசாரணை நடாத்தினார்கள். நான் அவர்களுக்கு விடயத்தை தெளிவுபடுத்தினேன்.
‘நாங்கள் முஸ்லிம்கள். தாய் நாட்டை நேசிப்பவர்கள். நாட்டிற்கு எதிரானவர்கள் அல்ல. பெரும்பான்மை சமூகத்துடன் எப்போதும் ஒற்றுமையாக சகவாழ்வு வாழ்பவர்கள். அறபு எழுத்துக்களை விளங்கிக் கொள்ளாதவர்களே இவ்வாறு தவறான முறைப்பாடுகளை செய்துள்ளார்கள்’ என்று பொலிஸாருக்கு விளக்கமளித்தேன்.
சிறப்பு மலர் பிரசுரிக்கப்பட்டிருக்கும் அரபு எழுத்தணி அரபுக்கல்லூரியின் பெயரே தவிர, தவறாக எதுவும் உள்ளடக்கப்படவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தினால் உறுதிப்படுத்திய கடிதமொன்று கோரப்பட்டுள்ளது. அதற்கான ஏற்பாடுகளைச் செய்துள்ளோம் என்றார்.
அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் செயலாளர்
அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தின் செயலாளர் மெளலவி எஸ்.எ.எம். ஜவுபரை ‘விடிவெள்ளி’ தொடர்பு கொண்டு வினவியது. அது தொடர்பில் அவர் பின்வருமாறு பதில் வழங்கினார். ஜமாலியா அரபுக் கல்லூரி அரபுக் கல்லூரிகள் ஒன்றியத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு நாம் பதிவுச் சான்றிதழ் வழங்கியுள்ளோம். எமது இலட்சினை (LOGO) இலங்கைப் படத்தில் மத்தியில் குர்ஆனின் படமொன்றினைக் கொண்டதாக உள்ளது. இது தொடர்பிலும் பொலிஸாரினால் விசாரணை செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பில் நான் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளருடன் பேசியிருக்கிறேன். இதனை அத்தாட்சிப்படுத்தி கடிதமொன்று வழங்குமாறு கோரியிருக்கிறேன் என்றார்.
ஊடகங்களின் தவறான பிரசாரம்
மிகிந்தலையைச் சேர்ந்த அச்சகமொன்றில் ‘இலங்கையை அரேபியாவாக்குவோம்’ என்று குறிப்பிட்ட சஞ்சிகையொன்று அச்சிடப்படுவதாக மிகிந்தலை பொலிஸாருக்கு முறைப்பாடு கிடைக்கப்பெற்றதையடுத்து பொலிஸார் குறிப்பிட்ட சஞ்சிகைத் தொகுதியொன்றை தங்கள் பொறுப்பில் மீட்டுள்ளதாக சிங்கள ஊடகங்களும் ,சமூக வலைத்தளங்களும் செய்திகள் வெளியிட்டதால் பரபரப்பான நிலைமை உருவாகியது.
கஹட்டகஸ்திகிலிய பிரதேசத்தைச் சேர்ந்த அரபுக் கல்லூரியொன்று தனது 25 வருட பூர்த்தியைக் கொண்டாடுவதற்காக இந்த சிறப்பு மலரை வெளியிடவிருந்ததாகவும், விழாவில் இம்மலர் பகிர்ந்தளிக்கப்பட விருந்ததாகவும் செய்திகள் வெளியிடப்பட்டிருந்தன. இந்தச் சஞ்சிகை பொலிஸாரால் கைப்பற்றப்பட்ட தன் பின்பு குறிப்பிட்ட அரபுக் கல்லூரி மேற்படி விழாவை முழுமையாக நிறுத்தியுள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தன. உண்மையில் குறிப்பிட்ட சஞ்சிகையில் இலங்கை வரைபடத்தினுள் ஜமாலியா அரபுக்கல்லூரியின் பெயர் அரபு எழுத்தணிக்கலையில் உள்ளடக்கப்பட்டுள்ளது. இதனைப் புரிந்து கொள்ள முடியாது ஊடகங்கள் அரபுக்கல்லூரி மீது தவறான கருத்துகளைப் பரப்பியுள்ளன. அத்தோடு சஞ்சிகைகளை பொலிஸார் கைப்பற்றுவதற்கு முன்னரே, பொலிஸாருக்கு முறைப்பாடளிக்கப்படுவதற்கு முன்பே மேற்படி வெள்ளிவிழா நிகழ்வை கொவிட் -19 பரவல் காரணமாக கல்லூரி நிர்வாகம் நிறுத்தியிருந்ததாக அரபுக் கல்லூரியின் அதிபர் ‘விடிவெள்ளி’ க்குத் தெரிவித்தார். அரபுக் கல்லூரி மீது பொய்க் குற்றச்சாட்டுகளை சுமத்தி அபகீர்த்தியை ஏற்படுத்திய ஊடகங்கள் மீது கல்லூரி நிர்வாகம் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாகவும் இது தொடர்பில் சட்டத்தரணிகளின் ஆலோசனைகளைக் கோரியுள்ளதாகவும் அவர் கூறினார்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர்
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம். அஷ்ரபிடம் இவ்விவகாரம் தொடர்பில் ‘விடிவெள்ளி’ வினவியது. அது தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில், ‘கஹட்டகஸ்திகிலிய ஜமாலியா அரபுக் கல்லூரியின் விவகாரம் தொடர்பில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது. நான் பொலிஸ் நிலைய பொறுப்பாதிகாரியை தொடர்பு கொண்டு பேசினேன். அரபு எழுத்தணிக் கலையின் அடிப்படையில் இலங்கை வரைபடத்தில் ஜமாலியா அரபுக் கல்லூரி என்றே குறிப்பிடப்பட்டுள்ளது. வேறு சந்தேகத்துக்கிடமாக எதுவும் குறிப்பிடப்படவில்லை. அரபு எழுத்தணிக்கலை பற்றி ஏனையோர் அறியாமையினாலேயே சந்தேகம் எழுப்பப்பட்டுள்ளது என்றேன்.
இதனை உறுதி செய்து திணைக்களத்தினால் கடிதம் ஒன்று வழங்குமாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி என்னை வேண்டிக் கொண்டார். இதனையடுத்து அரபு எழுத்தணிக்கலையில் நிபுணத்துவம் பெற்ற மூவரைத் தொடர்பு கொண்டு தெளிவுபெற்றதன் பின்பு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு அரபு மொழியில் அரபுக் கல்லூரியின் பெயரே எழுதப்பட்டுள்ளது என்பதை உறுதி செய்து கடிதமொன்றினை அனுப்பி வைத்துள்ளேன். அரபுக் கல்லூரிகள் மற்றும் முஸ்லிம் சமய நிறுவனங்கள் இவ்வாறான நிகழ்வுகள் ஏற்பாடு செய்யும் போது மற்றும் நடவடிக்கைகளின் போது முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் ஆலோசனைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அவ்வாறு பெற்றுக் கொண்டிருந்தால் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதிலிருந்தும் தவிர்ந்து கொள்ளலாம்’ என்றார்.
ஹெல பொது சவிய அமைப்பு ஜனாதிபதிக்கு கடிதம்
‘இலங்கையை அரேபியாவாக்குவோம்’ என்ற எண்ணக் கருவில் மிகிந்தலை, கன்னட்டிய பகுதியில் உள்ள அச்சகமொன்றில் அச்சிடப்பட்டுக் கொண்டிருந்த சஞ்சிகையொன்று மிகிந்தலை பொலிஸாரினால் கைப்பற்றப்பட்டுள்ளது. ஆனால், இந்த சஞ்சிகையை அச்சிட வழங்கியவர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை. இஸ்லாமிய அடிப்படைவாத கருத்துகளைக் கொண்டுள்ள இவ்வாறானவர்களுக்கு எதிராக நாட்டின் சட்டத்தை அமுல்படுத்துங்கள்’ என ஹெலபொது சவிய அமைப்பின் தலைவர் புதுகல ஜினவன்ச தேரர் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, 70 இலட்சம் மக்கள் உங்களுக்கு வாக்களித்தது விலைவாசிகளைக் குறைப்பதற்கோ அல்லது அபிவிருத்திப் பணிகளை முன்னெடுப்பதற்கோ அல்ல. இஸ்லாமிய அடிப்படைவாதிகள், புலிகள் அமைப்பின் தீவிரவாதிகளுக்கு எதிராக நாட்டில் சட்டத்தை கடுமையாக அமுல்படுத்துவதற்காகும். 20 ஆவது திருத்தத்தை விடவும் இவ்வாறான அடிப்படைவாத செயற்பாடுகளில் ஈடுபடுபவர்கள் தொடர்பில் நீங்களும், தற்போதைய அரசும் மேற்கொள்ளும் சட்ட நடவடிக்கைகளை பெளத்தமக்கள் எதிர்பார்த்துக் காத்திருக்கிறார்கள். இவ்வாறான மத்ரஸாக்களே முஸ்லிம் மாணவர்களை அடிப்படைவாதிகளாக மாற்றுவதற்கு துணை போயின என்பது கடந்த கால நிகழ்வுகள் உறுதி செய்துள்ளன. உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு முன்பு புத்தர் சிலைகள் சிதைக்கப்பட்டமை, மட்டக்களப்பில் சைக்கிள் வண்டியில் குண்டுவெடிக்கச் செய்தமை என்பவற்றை ஞாபகப்படுத்துகிறோம். சஹ்ரான் போன்றவர்கள் பிறப்பினால் உருவாவதில்லை. சமூகத்தில் முன்னெடுக்கப்படும் அடிப்படைவாத சிந்தனைகளின் மூலமே உருவாகுகிறார்கள்“ என அகக் கடிதத்தில் தெரிவிக்கப்படுள்ளது.
விசாரணைகள் நிறைவு
இந்த விவகாரம் தொடர்பில் பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாடுகளையடுத்து பொலிஸாரும் குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் மேற்கொண்ட விசாரணைகள் நேற்று முன்தினம் 14 ஆம் திகதி நிறைவுக்கு வந்தன.
ஜமாலியா அரபுக் கல்லூரி என்ற பெயர் இலங்கை வரைபடத்தில் அரபு எழுத்தணிக்கலையில் முழுமையாக உள்ளடக்கப்பட்டிருக்கிறது. வேறு தவறாக எதுவும் உள்ளடக்கப்படவில்லை என முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கு எழுத்து மூலம் வழங்கிய உறுதியினையடுத்தே இது தொடர்பான விசாரணைகள் தற்போது நிறைவுக்கு வந்துள்ளன.
கடந்த புதன் கிழமை ஜமாலியா அரபுக்கல்லூரியின் அதிபர் மெளலவி எஸ்.அஹமட், மிகிந்தலை பொலிஸ் நிலையத்திற்கும் கஹட்டகஸ்திகிலிய பொலிஸ் நிலையத்திற்கு வாக்குமூலமளிப்பதற்காக அழைக்கப்பட்டிருந்தார்.
அதிபரின் வாக்குமூலத்தினைப் பதிவுசெய்து கொண்ட பொலிஸார், தமிழ் மற்றும் அரபு மொழியிலான குறிப்பிட்ட சிறப்பு மலரை சிங்களத்தில் மொழிபெயர்ப்பதற்காக அநுராதபுரம் தேசிய மொழிகள் திணைக்களத்திற்கு அனுப்பிவைப்பதாகவும் உத்தியோகபூர்வ மொழிபெயர்ப்பின்போது குறிப்பிட்ட சஞ்சிகையில் தவறான, தீவிரவாத கருத்துகள் உள்வாங்கப்பட்டிருந்தால் மீண்டும் கல்லூரி அதிபரை விசாரணைக்கு அழைப்பதாகவும் தெரிவித்து தற்காலிகமாக விசாரணைகளை நிறைவு செய்தனர்.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரப், மிகிந்தலை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரியுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு விளக்கமளித்ததுடன் அரபு எழுத்தணிக் கலையைப் பயன்படுத்தி ஜமாலியா அரபுக் கல்லூரியின் பெயர் இலங்கை வரைபடத்தில் பொறிக்கப்பட்டுள்ளதென்பதையும் விளக்கினார்.
அத்தோடு அரபு எழுத்தணிக்கலையில் நிபுணத்துவம் பெற்ற இருவரிடமிருந்து பெற்றுக் கொள்ளப்பட்ட அரபு எழுத்து வடிவங்களின் பிரதிகளையும் பொலிஸாருக்கு அனுப்பிவைத்தார். இதனையடுத்தே தொடர்ந்து நான்கு தினங்களாக பொலிஸாரும், குற்றவியல் விசாரணைப் பிரிவினரும் தாம் நடாத்தி வந்த விசாரணைகளை நிறைவுக்குக் கொண்டு வந்தனர்.
தவறாக புரியப்படும் அரபு மொழி
உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பின்னர் சிங்கள மக்களும் பொலிசாரும் ஏனைய அதிகாரிகளும் அரபு எழுத்துக்களையும் அரபு எழுத்தணிகளையும் சந்தேகக் கண் கொண்டே பார்க்கின்றமை துரதிஷ்டவசமானதாகும்.
அரபு எழுத்துகள் தீவிரவாதத்தின் வடிவம் என்ற மனப்பதிவு இன்று சிங்கள மக்கள் மத்தியில் ஊடகங்களால் தோற்றுவிக்கப்பட்டுள்ளது. இந் நிலையில் முஸ்லிம் நிறுவனங்கள், அரபுக் கல்லூரிகள் தமது பெயர்ப்பலகைகள், கடிதத் தலைப்புகள், இலச்சினைகள் என்பவற்றைப் பயன்படுத்தும்போது மிகுந்த அவதானமாக நடந்து கொள்வது சிறந்ததாகும். குறிப்பாக அரபு எழுத்துக்களுடன் இலங்கைப் படத்தைப் பயன்படுத்தும்போது அது தவறான புரிதலைக் கொண்டுவர வாய்ப்புள்ளது. நாம் அரபு மொழியைப் பயன்படுத்துவதற்கான உரிமையை எவராலும் மறுதலிக்க முடியாது என்ற போதிலும் நாம் அதனை தேவையான இடங்களில் மாத்திரம் பயன்படுத்துவதே சமயோசிதமானதாகும்.
இது விடயத்தில் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் முஸ்லிம் நிறுவனங்களுக்கு வழிகாட்டல்களை வழங்குவது வரவேற்கத்தக்கதாகும். அத்துடன் நாட்டில் அரபு மொழியின் முக்கியத்துவம் பற்றி சக இன மக்களுக்கு விழிப்புணர்வூட்டுகின்ற வேலைத்திட்டங்களும் முஸ்லிம்கள் தரப்பிலிருந்து முன்னெடுக்கப்பட வேண்டியதும் காலத்தின் தேவை என்பதையே மேற்படி சம்பவம் உணர்த்தி நிற்கிறது. – Vidivelli