கமர் நிசாம்தீன் மீது பொய்க் குற்றச்சாட்டையே சுமத்தினேன்
தவறை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கோரினார் அர்சலான் கவாஜா
ஏ.ஆர்.ஏ.பரீல்
அவுஸ்திரேலியாவின் நியூசவுத் வேல்ஸ் பல்கலைக்கழத்தின் இலங்கையைச் சேர்ந்த மாணவர் ஒருவரை பயங்கரவாதியென பொய் குற்றம் சுமத்தி அவரை ஒரு மாத காலம் தடுப்புக்காவலில் சிறை வாசம் அனுபவிக்கச் செய்தவர் தான் ஒரு கோழை என்றும் தவறு செய்து விட்டதாகவும் நீதிமன்றில் தெரிவித்திருக்கிறார்.
அர்சலான் தாரிக் கவாஜா என்பவர், இலங்கை மாணவர் மொஹமட் கமர் நிசாம்தீன் பெண் ஒருவருடன் பழகி வந்ததால் அவரது குறிப்புப் புத்தகத்தைக் கையாடி அவர் பயங்கரவாத குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என்று குறிப்புப் புத்தகத்தின் நிழற்பட பிரதிகள் மூலம் முறைப்பாடு செய்தார். அவரது இந்த முறைப்பாடு 2018 ஆகஸ்டில் முன்வைக்கப்பட்டது.
அர்சலான் கவாஜா (40), அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜாவின் சகோதரராவார். அவர் மாவட்ட நீதிமன்றில் விம்மியழுதார். தன்னம்பிக்கையற்றதும், உளநலப் பிரச்சினைகளினாலுமே இந்தத் திடீர் செயலுக்கு தான் தள்ளப்பட்டதாக அவர் நீதிமன்றில் கூறினார்.‘நான் சுற்றிவளைக்காமல் நேரடியாகக் கூறுகிறேன். நான் துணிவில்லாத கோழை என்றார். கட்டாயமாக இத்தவறை ஏற்க நான் முன் வரவேண்டும் என்றும் கூறினார்.
தாரிக் கவாஜாவின் சகோதரரான கிரிக்கெட் வீரர் உஸ்மான் கவாஜா வீடியோ தொடர்பு ஊடாக பிரிஸ்பனிலிருந்து நீதிமன்றுக்கு வாக்கு மூலமளித்தார். இந்தப் பொய்யான முறைப்பாட்டினை செய்வதற்கு முன்பு எனது சகோரர் ஒரு நேர்மையான சிறந்த பிரஜையாகவே இருந்தார்.
எனது இளைய சகோதரரான அவர் பிரபல்யமானவர். அவர் அவுஸ்திரேலிய அணியுடன் நெருங்கிய தொடர்பில் இருந்தார். அவுஸ்திரேலிய அணியினர் எப்போதும் அவர் பற்றி என்னிடம் விசாரிப்பார்கள் என்று வாக்குமூலமளித்துள்ளார்.
கமர் நிசாம்தீன் ஒரு மாதகாலம் கோல்பர்ன் சுப்பர் மெக்சில் தடுப்புக் காவலில் இருந்தார். அவருக்கெதிராக முன்வைக்கப்பட்டிருந்த குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படவில்லை. அவரது குறிப்புப் புத்தகத்தில் இருந்த கையெழுத்து அவருடையதல்ல என நிபுணர்களால் உறுதி செய்யப்படும் வரை அவர் அங்கு தடுத்து வைக்கப்பட்டிருந்தார்.
2018 ஆம் ஆண்டு கவாஜா முன்வைத்த பொய் குற்றச்சாட்டுகள் முதன் முறையானதல்ல. இதே போன்ற தீவிரவாத குற்றச்சாட்டுகளை முன்பும் ஒருவர் மீது முன்வைத்திருத்தார். அக்குற்றச் சாட்டும் பெண்ணொருவர் மீது கொண்ட பொறாமை காரணமாகவே மீது முன்வைக்கப்பட்டதாக நீதிமன்றில் தெரிவிக்கப்பட்டது.
ஒருவருடத்துக்கு முன்பு பெண்ணொருவருடன் ஒருவர் கொண்டிருந்த நட்பை தடுப்பதற்காக அவர் மீதும் இவர் பொய் குற்றச்சாட்டுகளை முன் வைத்திருந்தார். ஏனென்றால் தாரிக் கவாஜா அப்பெண்ணுடன் மிக நெருங்கிய தொடர்புகளைக் கொண்டிருந்தார். அவர் குற்றம் சுமத்திய நபரது விபரங்கள் சட்டப் பிரச்சினை காரணமாக வெளியிடப்படவில்லை.
இரண்டாவது பெண் கமர் நிசாம்தீனுடன் பழகியதால் அதனைத் தடுக்கும் நோக்கிலேயே இவ்வாறான பயங்கரவாத குற்றச்சாட்டுகளை நிசாம்தீன் மீது சுமத்தியுள்ளார். அந்தத் தொடர்பு தடுக்கப்பட்டதால் அப்பெண் தனது கவலையைத் தெரிவித்து கவாஜாவுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வைத்துள்ளார்.
தாரிக் கவாஜா தனது கண்ணீரைத் துடைத்துக் கொண்டார். அவர் இச்சம்பவத்தால் அடைந்த துன்பங்களையும், வலிகளையும் கூறினார்.
‘கமர் நிசாம்தீன் உயர்வான சிறந்த நபர்’ என்றும் தெரிவித்தார்.
‘நீங்கள் எவரும் என்னை ஒருபோதும் மன்னிக்கமாட்டீர்கள் என்று நம்புகிறேன். நான் இழைத்த தவறுகள் குறிப்பாக கமருக்கு இழைத்த தவறுகளுக்காக நான் வருந்துகிறேன்’ என்றார்.
கமர் நிசாம்தீன் தடுப்புக்காகவில் சிறையிலிருந்தும் விடுதலை பெற்று இலங்கை திரும்பியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பில் அவர் நியூசவுத் வேல்ஸ் பொலிஸாரிடம் நஷ்டயீடு கோரி வழக்குத் தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli