மீண்டும் பலம்பெறும் நிறைவேற்று அதிகாரம்

0 615

பொதுத் தேர்தலின் பின்னர் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அரசியலமைப்பின் 20 ஆவது திருத்தம் அமைச்சரவையில் அங்கீகரிக்கப்பட்டு, வர்த்தமானியிலும் வெளியிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 19 ஆவது திருத்தம் மூலம் அறிமுகப்படுத்தப்பட்ட பல்வேறு அம்சங்கள் நீக்கப்பட்டு, நிறைவேற்று அதிகார ஜனாதிபதிக்கு மீண்டும் அதிகாரங்களை பெற்றுக் கொடுக்கும் வகையிலான திருத்தங்களே இதில் உள்ளடங்கியுள்ளன.

ஒரு வருடத்தில் பாராளுமன்றை கலைக்கலாம், அரசியலமைப்பு பேரவை நீக்கம், அமைச்சர்களின் எண்ணிக்கைக்கு வரையறையில்லை, பிரதமர் மற்றும் அமைச்சர்களை ஜனாதிபதி பதவி நீக்கலாம், தேர்தல் ஆணைக்குழு தலைவர், பிரதம நீதியரசர் உள்ளிட்ட உயர்பதவிகளுக்குரியவர்களை ஜனாதிபதியே நியமிக்கலாம், இரட்டை குடியுரிமை கொண்டவர்களும் பாராளுமன்றம் செல்லலாம், 30 வயதிலேயே ஜனாதிபதி பதவிக்கு போட்டியிடலாம் என்பன 20 ஆவது திருத்தத்தின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகின்றன.

மொத்தத்தில் 2015 ஆம் ஆண்டுக்கு முன்னர் இருந்த, அதே நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறைமை 20 ஆம் திருத்தம் ஊடாக மீளவும் கொண்டுவரப்படவுள்ளது.

வர்த்தமானி அறிவித்தல் மூன்று மொழிகளிலும் நேற்று மாலை வெளியிடப்பட்ட பிற்பாடு, 20 ஆவது திருத்த வரைபு தொடர்பில் கடுமையான விமர்சனங்கள் சமூக ஊடகங்கள்வாயிலாக முன்வைக்கப்பட்டு வருகின்றன. ராஜபக்‌ஷ குடும்பம் அதிகாரத்தை மேலும் பல தசாப்தங்களுக்கு தம்வசம் வைத்திருப்பதற்கான நகர்வே இது என பலர் சுட்டிக்காட்டியுள்ளனர். மேலும் 20 ஆவது திருத்தத்தின் சில உள்ளடக்கங்களுக்கு எதிராக நீதிமன்றை நாடவும் சில தரப்புகள் நடவடிக்கை எடுத்து வருவதாக அறியமுடிகிறது.

இலங்கையானது 19 ஆவது திருத்தம் மூலம் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கான ஒருபடி முன்னேற்றத்தை காண்பித்திருந்தது. எனினும் 20 ஆவது திருத்தமானது மீண்டும் நிறைவேற்று அதிகாரத்தை மேலும் பலப்படுத்துவதற்கான நகர்வாகவே அமைந்துள்ளது. இது இந்நாட்டில் நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையை இதன்பின்னர் ஒழிக்கவே முடியாது என்ற அபிப்பிராயத்தை தோற்றுவித்துள்ளது.

அத்துடன் இது ஜனநாயகத்திற்கு விழுந்த மிகப் பெரிய அடியாகவும் பார்க்கப்படுகிறது. பாராளுமன்றத்திற்கும் ஆணைக்குழுக்களுக்கும் அதிகாரங்களை வழங்குவதற்குப் பதிலாக, ஜனாதிபதியே தன்வசம் அதிகாரங்களை குவித்து வைத்திருப்பது ஆபத்தானதாகும்.

20 ஆவது திருத்தம் தொடர்பில் மக்கள் அபிப்பிராயம் பெறப்பட வேண்டும். எனினும் சர்வஜன வாக்கெடுப்பு அவசியமில்லை. பாராளுமன்றத்தில் விவாதம் நடாத்தப்பட்ட பின்னர் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் நிறைவேற்றப்பட வேண்டும். நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் 2/3 பெரும்பான்மையைப் பெற்று பெருவெற்றியீட்டியுள்ளதால் அந்த தைரியமே இவ்வாறான திருத்தங்களுக்கு அடித்தளமாக அமைந்துள்ளது எனலாம்.

இட்டைப் பிரஜாவுரிமை கொண்டவர்களும் பாராளுமன்றம் நுழையலாம் என அனுமதி வழங்குவதானது தமது அரசாங்கத்தினது முக்கியஸ்தர் ஒருவரை மீண்டும் பாராளுமன்றத்திற்கு கொண்டுவருவதற்கான முயற்சி என்பது வெளிப்படையானதாகும்.

இவ்வாறான திருத்தங்கள் நாட்டில் ஜனநாயகத்திற்கு வேட்டு வைப்பதாக அமைந்துவிடக் கூடாது என்பதே எமது எதிர்பார்ப்பாகும். முன்வைக்கப்பட்டுள்ள வரைபில் உள்ள கூடுதல் பாதகமான அம்சங்கள் திருத்தப்பட வேண்டும். அதற்கான அழுத்தங்களை எதிர்க்கட்சியும் சிவில் சமூகங்களும் வழங்க வேண்டும். ஆனால் மூன்றிலிரண்டு பெரும்பான்மை இருக்கின்ற தைரியத்தில் எதிர்ப்புகளை அரசாங்கம் கவனத்திற்கொள்ள வாய்ப்பில்லை என்பதே கசப்பான யதார்த்தமாகும். – Vidivelli

Leave A Reply

Your email address will not be published.