எஸ்.என்.எம்.சுஹைல்
ஒன்பதாவது பாராளுமன்ற தேர்தலில் மக்கள் தீர்ப்பு அளித்து இரண்டு வாரங்கள் கடந்துவிட்டன. வெற்றி தோல்விகள் சகஜம், என்றாலும் தோல்விக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு அடுத்த தடவை தவறுகளை திருத்திக்கொண்டு பாராளுமன்றம் செல்லத் தயாராக வேண்டும். அத்தோடு புதிய முகங்கள் பாராளுமன்றத்துக்கு செல்லும்போது யாராவது தோற்றுப்போகவேண்டிய நிலைமையும் ஏற்படுகின்றது. அதுதவிர, பிரிந்து கேட்டமையினாலும் பலர் தோல்வியை சந்தித்து இருக்கின்றனர்.
முன்னாள் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து 2020 பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவியவர்கள் தொடர்பான பார்வை இது.
ஏ.எச்.எம்.பௌஸி
1959 ஆம் ஆண்டு அரசியலில் பிரவேசித்த மூத்த அரசியல்வாதியே ஏ.எச்.எம். பௌஸி. மாளிகாவத்தை வட்டாரத்தில் தொடர்ந்தும் 1960, 1962 மற்றும் 1965 ஆம் ஆண்டுகளிலும் போட்டியிட்டார். 1968 ஆம் ஆண்டு கொழும்பு மாநகரின் பிரதி மேயரானார். 1973 ஆம் ஆண்டு கொழும்பு மாநகர சபையின் மேயரானார். ஐக்கிய தேசியக் கட்சி ஊடாகவே இவரின் பிரதிநிதித்துவ அரசியல் பயணம் ஆரம்பமானது. எனினும், 70 களின் இறுதிப் பகுதியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் இணைந்துகொண்டார்.
ஸ்ரீமாவோ பண்டார நாயக்கவுடன் நெருக்கமான அரசியல் தொடர்புடைய இவர் 1993 ஆம் ஆண்டு மேல்மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் 1994 ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். 2000, 2001, 2004, 2010 ஆகிய தேர்தல்களிலும் போட்டியிட்டு சுதந்திரக் கட்சி சார்பில் தொடர்ந்து வெற்றிபெற்ற முஸ்லிம் பிரதிநிதியாக இவர் திகழ்ந்தார். எனினும், 2015 ஆம் ஆண்டு இவருக்கு தேர்தலில் போட்டியிட சந்தர்ப்பம் அளிக்காது, தேசியப் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்டார்.
சுதந்திரக் கட்சி தலைமையிலான அரசாங்கத்தில் தொடர்ந்தும் அமைச்சுப் பதவிகள் வகித்த சிரேஷ்ட அரசியல்வாதியான ஏ.எச்.எம்.பௌஸி அக்கட்சியில் போட்டியிட்டு 1 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை பெற்றவராகவும் திகழ்ந்தார்.
எனினும், 2018 ஆம் ஆண்டு அரசியல் சூழ்ச்சி முன்னெடுக்கப்பட்டு நல்லாட்சி அரசாங்கம் ஜனநாயகத்துக்கு முரணாக அப்போதைய ஜனாதிபதியினால் பதவி கவிழ்க்கப்பட்டதையடுத்து அதனை எதிர்த்து சுதந்திரக் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்தார். இவரின் பாராளுமன்ற உறுப்புரிமையை பறிப்பதற்கும் கடந்த அரசாங்கத்தில் தீவிர முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன. எனினும், அது முறியடிக்கப்பட்டதென்றே கூற வேண்டும். இம்முறை தேர்தலில் அவர் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் போட்டியிட்டு சொற்ப வாக்குகளால் தோல்வி கண்டார். ஐ.ம.ச. க்கு இன்னும் 3 ஆயிரம் வாக்குகள் கிடைத்திருப்பின் கொழும்பு மாவட்டத்திலிருந்து 7 ஆவது அதிகமான விருப்பு வாக்கைப் பெற்ற பௌஸி பாராளுமன்ற நுழைவு வாய்ப்பை மீண்டும் பெற்றிருப்பார்.
அலி ஸாஹிர் மௌலானா
சுயாதீனக் குழு மூலமாக ஏறாவூர் பட்டின சபை தேர்தலில் போட்டியிட்டு வென்று அரசியலில் தடம்பதித்தவர்தான் அலிசாஹிர் மௌலானா. 1989 ஆம் ஆண்டு ஐக்கிய தேசியக் கட்சி ஊடாக மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வென்று முதன் முதலாக பாராளுமன்றம் நுழைந்தார். 1994, 2000, 2001 ஆம் ஆண்டு தேர்தல்களிலும் ஐ.தே.க. சார்பில் மட்டக்களப்பில் போட்டியிட்டு வென்றார். 2004 ஆம் ஆண்டு தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
யுத்த வெற்றியின் ஆரம்பப் புள்ளியான விடுதலைப்புலிகள் இயக்கத்திலிருந்து கருணாவை பிரித்த விடயத்தின் முக்கிய புள்ளியாக இவரே காணப்படுகின்றார். குறித்த காலப்பகுதியில் அப்போதைய பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசகராக செயற்பட்ட இவர் யுத்த வெற்றிக்கு பங்களித்த முக்கிய நபராவார். 2011 ஆம் ஆண்டு நகர சபை தேர்தலில் வென்று நகர பிதாவாக செயற்பட்டதுடன் 2012 மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டார். 2015 பொதுத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மு.கா.விற்கு பாராளுமன்றத்தில் கட்சித் தலைமை அந்தஸ்த்தையும் பெற்றுக்கொடுத்தார். கடந்த அரசாங்கத்தில் இராஜாங்க அமைச்சராக செயற்பட்ட அவர் இம்முறை தேர்தலில் அவர் தோல்வியடைந்தார்.
எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ்
காத்தான்குடியைச் சேர்ந்த எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் இம்முறை ஐக்கிய சமாதான கூட்டணியின் வண்ணத்திப் பூச்சி சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டிருந்தார்.
1988 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் வெற்றிபெற்று முஸ்லிம் காங்கிரஸ் மூலமாக பிரதிநிதித்துவ அரசியலை மேற்கொண்ட அவர், 1989, 1994 ஆம் ஆண்டுகளில் மு.கா. ஊடாக பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு வென்றார். பின்னர் சுதந்திரக் கட்சியில் இணைந்த அவர் 2001 ஆம் ஆண்டு தேர்தலில் மீண்டும் வென்றார். 2004 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியை தழுவிய அவர், 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் வென்று மாகாண அமைச்சரானார். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அ.இ.ம.கா. சார்பில் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டு வென்ற அவர் 2015 இல் மீண்டும் வெற்றிலை சின்னத்தில் போட்டியிட்டார். அந்த தேர்தலில் தோல்வி அடைந்தாலும் தேசியப் பட்டியலில் மீண்டும் பாராளுமன்றத்திற்கு தெரிவாகி இராஜாங்க அமைச்சு, மற்றும் அமைச்சுப் பதவிகளை வகித்தார். 2019 ஜனவரியில் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இராஜினாமா செய்த அவர் கிழக்கு மாகாண ஆளுனராக பதவி பெற்றார். இவ்வாறு கடந்த காலங்களில் கூடுதலான உயர்பதவிகளை வகித்த ஹிஸ்புல்லாஹ் இம்முறை தேர்தலில் தோல்வியடைந்தார்.
பஷீர் சேகுதாவூத்
1989 இல் ஈரோஸ் ஊடாக தனது பிரதிநிதித்துவ அரசியல் பயணத்தை ஆரம்பித்த முன்னாள் போராளியான பஷீர் சேகுதாவூத், ஏறாவூரைச் சேர்ந்தவர். 1994 இல் மு.கா.வில் இணைந்த அவர் 2001 ஆம் ஆண்டு தேசியப் பட்டியல் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவுசெய்யப்பட்டார். 2003 இல் மு.கா.வின் தவிசாளரான அவர் 2004 இல் மீண்டும் தேசியப்பட்டியல் உறுப்பினராக தெரிவானார். 2008 இல் கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வென்ற அவர், 2010 இல் மு.கா. சார்பில் ஐ.தே.மு.வின் யானை சின்னத்தில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். மு.கா. மஹிந்த அரசாங்கத்துடன் இணைந்துகொண்டதன் பின்னர் அவர் பிரதியமைச்சரானார், பின்னர் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சராகவும் நியமிக்கப்பட்டார். 2015 பொதுத் தேர்தலில் அவர் தேசியப் பட்டியலில் உள்ளடக்கப்பட்டாலும் அவருக்கு எம்.பி. ஆகும் சந்தர்ப்பம் மு.கா.வினால் வழங்கப்படவில்லை.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் தவிசாளரான அவர் இம்முறை மட்டக்களப்பு மாவட்டத்தில் வண்ணத்துப்பூச்சி சின்னத்தில் போட்டியிட்டு தோல்வியடைந்தார்.
கே.ஏ.பாயிஸ்
முஸ்லிம் காங்கிரஸ் ஊடாக அரசியல் பிரவேசம் மேற்கொண்டவர் கே.ஏ.பாயிஸ். புத்தளம் நகர சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்றார். நகர பிதாவாகவும் பதவி வகித்தார். இந்நிலையில் 2001 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.மு. வின் யானை சின்னத்தில் மு.கா. சார்பில் போட்டியிட்ட பாயிஸ் தோல்வியடைந்தார். 2004 இலும் மீண்டும் தோல்வியைச் சந்தித்ததுடன் அவருக்கு மு.கா. தேசியப் பட்டியல் ஆசனத்தை வழங்கியது. குறிப்பிட்ட தேசியப் பட்டியல் எம்.பி. பதவியை பெற்றுக்கொண்டு அவர் மஹிந்த அரசாங்கத்துடன் 2007 ஆம் ஆண்டு இணைந்து பிரதியமைச்சு பதவியையும் பெற்றுக்கொண்டார். அத்துடன், 2010 இல் ஐ.ம.சு.மு.வில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். பின்னர் மீண்டும் புத்தளம் நகரசபை தேர்தலில் ஐ.ம.சு.மு. சார்பில் போட்டியிட்டு வென்று நகர பிதாவானார். இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு புத்தளம் மாவட்டத்திற்கான முஸ்லிம் பிரதிநிதித்துவத்தை உறுதி செய்துகொள்வதற்காக அவர் சுயேட்சைக் குழுவில் களமிறங்கி போட்டியிட்ட போதிலும் அவரால் பிரதிநிதித்துவத்தை பெற்றுக்கொள்ள முடியவில்லை. இம்முறை 2020 இலும் பாயிஸ் முஸ்லிம் தேசியக் கூட்டமைப்பில் போட்டியிட்டு விருப்பு வாக்குப் பட்டியலில் இரண்டாமிடத்தையே பெற்றார். இதனால் அவர் மீண்டும் பாராளுமன்ற வாய்ப்பை இழந்தார்.
அப்துல்லாஹ் மஹ்ரூப்
எம்.எச்.ஈ. மஹ்ரூபிற்குப் பிறகு திருகோணமலை மாவட்டத்தில் ஐ.தே.க. சார்பில் வெற்றிபெற்றவர் அப்துல்லாஹ் மஹ்ரூப். 2000, 2001 ஆம் ஆண்டு தேர்தல்களில் ஐ.தே.க.வில் போட்டியிட்டு வெற்றிபெற்றாலும் 2004 இல் தோல்வி கண்டார். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபை தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற மஹ்ரூப் மாகாண சபை உறுப்பினரானார். எனினும், 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐ.தே.க. மு.கா.வுடன் கூட்டணி சேர்ந்ததால் தேர்தலில் போட்டியிட மறுத்துவிட்டார். இதனாலேயே, இம்ரான் தேர்தலில் களமிறக்கப்பட்டார். பின்னர் மீண்டும் ஐ.தே.க.வுடன் இணைந்து பயணித்த மஹ்ரூப் 2012 ஆம் ஆண்டு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டார். எனினும் அவரால் வெற்றிபெற முடியவில்லை.
2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் ஐக்கிய தேசியக் கட்சியின் யானை சின்னத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு மாவட்டத்தில் அதிகூடிய வாக்குகளுடன் பாராளுமன்றத்திற்கு தெரிவாகினார். பிரதியமைச்சராக ஐ.தே.க. அரசாங்கத்தில் பதவி வகித்த அப்துல்லாஹ் மஹ்ரூப் இம்முறை தேர்தலில் தோல்வியை சந்தித்தார்.
அமீர் அலி
2004 ஆம் ஆண்டு மு.கா. சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றிபெற்று தனது பாராளுமன்ற அரசியல் பயணத்தை ஆரம்பித்தவர் அமீர் அலி. குறுகிய காலத்திற்குள் கட்சி தாவிய அவர் மஹிந்த அரசாங்கத்தில் அமைச்சரவை அந்தஸ்த்து அற்ற அனர்த்த முகாமைத்துவம், மீள்குடியேற்ற அமைச்சராக நியமிக்கப்பட்டார். 2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் தோல்வியுற்ற அவர் 2012 மாகாண சபை தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வென்றார். எனினும், 2014 இன் கடைசிப் பகுதியில் ஐ.ம.சு.கூ.வின் தேசியப் பட்டியில் (மர்ஹூம் ஏ.எச்.எம்.அஸ்வர் பதவி விலக) பாராளுமன்ற உறுப்பினராக மீண்டும் பாராளுமன்றத்திற்கு நியமிக்கப்பட்ட அவர் பொது எதிரணியுடன் இணைந்து மைத்திரிபால சிறிசேனவுக்கு ஆதரவை வழங்கினார். 2015 பொதுத் தேர்தலில் மட்டக்களப்பு மாவட்டத்தில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் அ.இ.ம.கா. சார்பில் மட்டக்களப்பு மாவட்டத்தில் போட்டியிட்டு நேரடியாக தெரிவானார். இம்முறை ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் அ.இ.ம.கா. சார்பில் போட்டியிட்டாலும் அவர் தோல்வி கண்டார்.
எம்.ஐ.எம்.மன்சூர்
ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் நீண்டகால உறுப்பினரான எம்.ஐ.எம். மன்சூர் சம்மாந்துறை பிரதேச சபை உறுப்பினராக அரசியல் பயணத்தை ஆரம்பித்தார். பின்னர் சிறிதுகாலம் பிரதேச சபை தவிசாளராக செயற்பட்டார். 2008 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற அவர் 2012 ஆம் ஆண்டு மாகாண சபை தேர்தலிலும் அம்பாறை மாவட்டத்தில் கூடுதலான வாக்குகளுடன் வெற்றிபெற்று மாகாண சுகாதார அமைச்சராகவும் பதவி வகித்தார்.
இந்நிலையில் 2015 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தலில் நல்லாட்சிக்கான ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று பாராளுமன்றத்திற்கு தெரிவானார்.
இம்முறை பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு இரண்டாயிரம் வாக்கு வித்தியாசத்தில் தோல்வியை சந்தித்தார்.
எம்.எஸ்.எம்.அஸ்லம்
மேல்மாகாண சபை உறுப்பினராக இரண்டு தடவைகள் பதவி வகித்தவர்தான் மொஹமட் சலீம் மொஹமட் அஸ்லம். இவர் பேருவளையைச் சேர்ந்த முஸ்லிம் காங்கிரஸ் முக்கியஸ்தராவார். களுத்துறை மாட்டத்தில் முஸ்லிம் காங்கிரஸின் தலைமைப் பொறுப்பை வகிக்கும் இவர், 2010 ஆம் ஆண்டு தேர்தலின்போது ஐக்கிய தேசிய முன்னணியின் யானை சின்னத்தில் போட்டியிட்டபோதும் வெற்றிபெறவில்லை, எனினும் அவருக்கு மு.கா. தலைமை தேசியப்பட்டியலை வழங்கி பாராளுமன்றத்திற்கு உள்ளீர்த்தது.
அவர் 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் ந.ஐ.தே.மு.வில் மு.கா. சார்பில் போட்டியிட்டு தோல்வியடைந்தார். இம்முறை பொதுத் தேர்தல் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் மு.கா. சார்பாக போட்டியிட்டபோதிலும் கணிசமான விருப்பு வாக்கை பெற்றுக்கொள்ளாமையினால் அவருக்கு பாராளுமன்ற பிரவேசம் கிடைக்கவில்லை.
ஹுனைஸ் பாரூக்
மன்னார், முசலியைச் சேர்ந்த ஹுனைஸ் பாரூக் இடம்பெயர்ந்த வடமாகாண முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்தவராவார். சட்டத்தரணியான ஹுனைஸ் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பணிபுரிந்தவராவார்.
2010 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் வெற்றிலைச் சின்னத்தில் போட்டியிட்டு முதன் முறையாக பாராளுமன்றம் நுழைந்தார். 2014 இல் கட்சித் தலைமையுடன் முரண்பட்ட அவர் சில காலம் சுயாதீனமாக செயற்பட்டார். அத்துடன், மஹிந்த அரசாங்கத்திலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சக்தியுடன் இணைந்த முதலாவது பாராளுமன்ற உறுப்பினராகவும் இவரே திகழ்ந்தார்.
எனினும், 2015 பொதுத் தேர்தலின்போது ஐக்கிய தேசியக் கட்சியுடன் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கூட்டணி அமைத்ததனால் அந்தக் கட்சியிலிருந்து வெளியேறி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடன் இணைந்து தேர்தலில் போட்டியிட்டார். எனினும், அக்கட்சிக்கு வன்னியில் ஒரு ஆசனம் கிடைத்தது. ஆனாலும் அவரால் பாராளுமன்றம் பிரவேசிப்பதற்கான விருப்பு வாக்குகளை பெற முடியவில்லை.
இந்நிலையில், அவர் பின்னர் முஸ்லிம் காங்கிரஸுடன் இணைந்துகொண்டார். அக்கட்சி சார்பில் இம்முறை பொதுத் தேர்தலின்போது வன்னி மாவட்டத்தில் ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் போட்டியிட்டு இரண்டாவது அதிக விருப்பு வாக்குகளை பெற்றார். எனினும், அவருக்கு பாராளுமன்றம் பிரவேசிக்கும் சந்தர்ப்பம் இம்முறையும் கிட்டவில்லை.
எஸ்.எம்.எம்.இஸ்மாயில்
சம்மாந்துறையைச் சேர்ந்த எஸ்.எம்.எம்.இஸ்மாயில் இரண்டு தடவைகள் தென் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தராக நியமிக்கப்பட்டவராவார். 2013 களுக்கு பின்னர் அரசியலில் ஈடுபட்ட அவர் 2015 ஆம் ஆண்டு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் சார்பில் அதன் மயில் சின்னத்தில் முதன் முறையாக பொதுத் தேர்தலில் போட்டியிட்டார். சம்மந்துறையில் பெரும் ஆதரவு கிடைத்த நிலையில் கட்சி சொற்ப வாக்குகளால் பிரதிநிதித்துவத்தை இழந்தது. எனினும், கட்சிக்கு கிடைத்த தேசியப் பட்டியல் ஊடாக இரண்டாவது தவணைக் காலப்பகுதிக்காக 2 வருடங்கள் அவர் பாராளுமன்ற உறுப்பினராக அ.இ.ம.கா.வினால் நியமிக்கப்பட்டார்.
2018 ஆம் ஆண்டு அரசியல் மாற்றம் இடம்பெற்ற போது இவர் மஹிந்த தரப்புடன் இணைந்து பிரதியமைச்சு பதவியை பெற முயற்சித்ததாக குற்றச்சாட்டுகள் இருக்கின்ற நிலையில் பாராளுமன்றம் கலைபதற்கு சில தினங்களுக்கு முன்னர் இவர் அ.இ.ம.கா. விலிருந்து விலகி மஹிந்த தரப்புடன் நெருங்கி செயற்படலானார். இஸ்மாயில் பொதுஜன முன்னணியுடன் இணையக் கூடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அவர் அதாவுல்லாஹ் தலைமையிலான தேசிய காங்கிரசில் இணைந்துகொண்டார். எனினும், அம்பாறையில் தே.கா. – ஸ்ரீல.பொ.ஜ.மு. கூட்டணி அமைப்பதில் சிக்கல் நிலை ஏற்பட்டது. இதனால் தே.கா.வின் குதிரை சின்னத்தில் போட்டியிட்டு அவர் இம்முறையும் தோல்வியடைந்தார்.
ஏ.எல்.எம்.நஸீர்
பொலிஸ் உத்தியோகத்தராக அம்பாறை மாவட்டத்தில் பல பகுதிகளிலும் கடமையாற்றியவர் அட்டாளைச் சேனையைச் சேர்ந்த ஏ.எல்.எம்.நஸீர். இவர் 2011 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை தேர்தலின்போது முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் போட்டியிட்டு அட்டாளைச்சேனை பிரதேச சபை தவிசாளரானார். குறுகிய காலம் தவிசாளராக சேவையாற்றிய இவர் 2012 ஆம் ஆண்டு கிழக்கு மாகாண சபைத் தேர்தலில் மு.கா. சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று மாகாண சபை உறுப்பினரானார். 2015 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலின்போது அவர் மு.கா.வின் தேசியப் பட்டியலில் உள்ளீர்க்கப்பட்டிருந்தார். குறித்த பொதுத் தேர்தலில் மாகாண அமைச்சராக இருந்த சம்மாந்துறை மன்சூர் பாராளுமன்ற உறுப்பினராக தெரிவுசெய்யப்பட்டதையடுத்து அவர் வகித்த மாகாண சுகாதார அமைச்சு பொறுப்பு நஸீருக்கு வழங்கப்பட்டது.
ஏற்கெனவே, அட்டாளைச்சேனைக்கு வழங்கிய உறுதிமொழிக்கமைய 2017 இன் இறுதியில் தற்காலிக தேசியப் பட்டியல் உறுப்பினர் சல்மான் பதவி விலகி, அந்த வெற்றிடத்திற்கு ஏ.எல்.எம்.நஸீர் நியமிக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர் இம்முறை பொதுத் தேர்தலின்போது ஐக்கிய மக்கள் சக்தியின் தொலைபேசி சின்னத்தில் மு.கா. சார்பில் போட்டியிட்டு தோல்விகண்டார். – Vidivelli