எஸ்.ஏ.எம்.அஸ்மி
அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பேருவளை பிரதேச அமைப்பாளரும், பிரதேச சபை உறுப்பினருமான ஹசீப் மரைக்கார் கடந்த 16 ஆம் திகதி இரவு தர்ஹா நகர், அதிகாரிகொட பிரதேசத்தில் வைத்து அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்ட நிலையில் 26 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
கடந்த 16 ஆம் திகதி இரவு அதிகாரிகொட பிரதேச ஜும்ஆ பள்ளிவாசலின் வெளிப்பகுதி நுழைவாயிலின் வடிகானை நிர்மாணிக்க முற்பட்ட வேளையில் அதன் அருகில் காணப்படும் முச்சக்கர வண்டி சாரதிகள் எதிர்ப்பினை தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து நிர்மாணப் பணியில் ஈடுபட்டவர்களுக்கும், முச்சக்கர வண்டி சாரதிகளுக்குமிடையே முறுகல் நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த பிரதேச சபை உறுப்பினர்களான ஹசீப் மரைக்கார், பைசான் நைசர் ஆகியோர் அதிகாரிகொட பிரதேசத்திற்கு சென்று முரண்பாடு தொடர்பாக கேட்டறிந்ததுடன் பிரேதேச சபை தவிசாளர் மேனகவிடம் தொடர்பு கொண்டு விடயத்தை விளக்கினர்.
இவ்வேளையில் நிலைமையினை சுமுகமாக்க பொலிசார் வருகை தந்திருந்ததுடன் அதனைத் தொடர்ந்து வந்த விஷேட அதிரடிப் படையினரால் அங்கிருந்த பொதுமக்கள் உட்பட இரு பிரதேச சபை உறுப்பினர்களும் தாக்கப்பட்டதுடன் பிரதேச சபை உறுப்பினர் ஹசீப் மரைக்கார் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது. – Vidivelli