அஷ்ரப் நகரிலிருந்து மக்களை மீண்டும் வெளியேற உத்தரவு

ஒரு மாத காலக்கெடு விதித்து காடு பேணுனர் தலைமை அதிகாரி கடிதம் : வெளியேற முடியாது என பிரதேச மக்கள் பதிலளிப்பு

0 766

அம்பாறை மாவட்டத்திலுள்ள அஷ்ரப் நகரில் குடியிருக்கும் முஸ்லிம் குடும்பங்களை அங்கிருந்து ஒரு மாத காலத்தினுள் வெளியேறுமாறு வன இலாகா திணைக்களம் உத்தரவிட்டுள்ளது.

காடு பேணுனர் தலைமை அதிபதி டபிள்யு.ஏ.சி. வேரகொட என்பவரால், 28.02.2020 திகதியிட்டு குறித்த கடிதம் வரையப்பட்டுள்ளது. எனினும் இந்த வெளியேற்ற அறிவித்தல் கடிதமானது கடந்த 24.06.2020 அன்றே தமக்கு கிடைக்கப் பெற்றதாக அ~;ரப் நகர் கிராம மக்கள் தெரிவிக்கின்றனர்.

பழைய திகதியிட்டு இக் கடிதம் வரையப்பட்டுள்ள போதிலும், 24.06.2020 ஆம் திகதியே தபால் நிலையத்தில் இக் கடிதம் முத்திரையிடப்பட்டுள்ளதாகவும் இம் மக்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இது தொடர்பில் பிரதேசத்தில் வசிக்கும் இப்ராலெவ்வை முகம்மது அலியார் என்பவர் சத்தியக் கடதாசி ஒன்றினை குறித்த அதிகாரிக்கு அனுப்பி வைத்துள்ளார்.

குறித்த காணியானது தமக்கு சட்டரீதியாக உரித்துடையது என்றும் அது வன இலாகா திணைக்களத்துக்குரிய காணியல்ல என்றும் குறித்த சத்தியக் கடதாசியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் உயர்நீதிமன்றில் வழக்கொன்று நிலுவையில் உள்ள நிலையில், இவ்வாறு வெளியேற்ற அறிவித்தல் அனுப்பியுள்ளதை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த விவகாரம் தொடர்பில் அம்பாறை மாவட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எவரும் அக்கறை செலுத்தவில்லை என்றும் இம்மக்களின் காணியை பாதுகாக்க உரிய நடவடிக்கைகளை எடுக்கவில்லை என்றும் காணி உரிமைக்கான அம்பாறை மாவட்ட செயலணி குற்றம்சாட்டியுள்ளது.- vidivelli

Leave A Reply

Your email address will not be published.