கொரோனா காலத்தில் இலங்கை முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள்
ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் சுட்டிக்காட்டு
கொவிட் 19 வைரஸ் பரவல் காலத்தில் இலங்கையில் முஸ்லிம்கள் மீது பாரபட்சங்கள் இடம்பெற்றுள்ளதாக ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லட் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஜெனீவாவில் ஆரம்பமாகியுள்ள ஐக்கிய நாடுகள் சபை மனித உரிமைகள் பேரவையில் 44 ஆவது கூட்டத் தொடரில் ஆரம்ப உரை நிகழ்த்துகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை முஸ்லிம்கள் உட்பட பல்வேறு நாடுகளிலும் வாழும் சிறுபான்மைக் குழுக்கள் இவ்வாறு விசேடமாக இலக்கு வைக்கப்பட்டதாகவும் அவர் தனது உரையில் சுட்டிக்காட்டியுள்ளார். அவர் தனதுரையில் மேலும் குறிப்பிடுகையில்,
பல நாடுகளில், சிறுபான்மை சமூகங்களின் உறுப்பினர்கள் மற்றும் புலம்பெயர்ந்தோர் சில சந்தர்ப்பங்களில், அதிகாரிகளாலும் களங்கங்களை எதிர்கொண்டுள்ளார்கள். குறிப்பாக இலங்கையிலும் இந்தியாவிலும், முஸ்லிம் சிறுபான்மையினர் மீது கொவிட் 19 காலத்தில் வெறுப்புப் பேச்சுக்கள் கட்டவிழ்த்துவிடப்பட்டதுடன் அவர்களை இலக்கு வைத்து சில சம்பவங்களும் பதிவாகின.
பாகிஸ்தானில், மத சிறுபான்மையினருக்கு எதிரான வெறுக்கத்தக்க பேச்சு கடுமையானதாகவே உள்ளது. கொவிட்-19 ஆல் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கருதப்படும் மக்களுக்கு எதிரான களங்கம் மற்றும் அச்சுறுத்தல்கள் ஹெயிட்டி, ஈராக் மற்றும் பல நாடுகளிலும் பதிவாகியுள்ளன என்றும் ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் மிஷேல் பெச்லட் தனது உரையில் மேலும் சுட்டிக்காட்டியுள்ளார். – Vidivelli