நாட்டில் பொதுத் தேர்தலுக்கான திகதி அறிவிக்கப்பட்டு, பிரசாரப் பணிகளும் சூடுபிடிக்கத் தொடங்கியுள்ளன. கொவிட் 19 அச்சுறுத்தலுக்கே முகங்கொடுக்காத நாடு போன்று அல்லது அதன் பாதிப்பிலிருந்து முற்றாக விடுபட்டுவிட்ட நாடு போன்றே இலங்கையில் தேர்தல் கூட்டங்கள் நடைபெற்று வருகின்றன. சமய ஒன்றுகூடலில் இறுக்கமாகக் கடைப்பிடிக்கப்படும் சுகாதார விதிமுறைகளை தேர்தல் கூட்டங்களில் கிஞ்சித்தும் காணக்கிடைக்கவில்லை.
இவ்வாறு அனைவரும் தேர்தல் பரபரப்பில் மூழ்கியிருக்கையில், அரசியல்வாதிகளெல்லாம் பாராளுமன்றக் கதிரையை தக்கவைப்பதற்கான போராட்டத்தில் கவனம் செலுத்துகையில், நாம் கடந்த ஏப்ரல் மாதம் முதல் எந்தவித குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ள சிவில் செயற்பாட்டாளர் ரம்ஸி ராஸிக் மற்றும் பிரபல சட்டத்தரணி ஹிஜாஸ் ஹிஸ்புல்லாஹ் ஆகியோரின் விவகாரம் குறித்து கவனத்தையீர்க்க விரும்புகிறோம்.
சமூக சேவையிலும் நல்லிணக்க வேலைத்திட்டங்களிலும் தன்னை அர்ப்பணித்து, அடிப்படைவாதத்திற்கும் பயங்கரவாதத்திற்கும் எதிராக எப்போதுமே குரல் கொடுத்து வந்த ரம்ஸி ராஸீக் பயங்கரவாத தடைச் சட்டம் மற்றும் ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் கடந்த ஏப்ரல் 9 ஆம் திகதி முதல் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளார். கடும் சுகவீனமுற்ற நிலையிலும் கூட அவரது உரிமைகள் மறுக்கப்பட்டுள்ளன. சட்டத்தரணிகளும் குடும்ப உறுப்பினர்களும் அவரை அணுகுவதற்கான உரிமை மறுக்கப்பட்டுள்ளது. மருந்துகளைக் கூட முறையாக எடுக்க முடியாத நிலையில் அவர் இருப்பதாக மனித உரிமை அமைப்புகள் சுட்டிக்காட்டியுள்ளன.
ரம்ஸி ராஸிக்கின் கைது தொடர்பில் சர்வதேச மன்னிப்புச் சபை உள்ளிட்ட பல மனித உரிமை அமைப்புகள் குரல் எழுப்பியுள்ளன. இருப்பினும் அவரது விடயத்தில் இதுவரை நீதி நிலைநாட்டப்படவில்லை. மறுபுறம் பிரபல சட்டத்தரணியும் சமூக செயற்பாட்டாளருமான ஹிஜாஸ் ஹிஸ்புல்லாவும் கடந்த ஏப்ரல் மாத நடுப்பகுதியிலேயே கைது செய்யப்பட்டு எந்தவித குற்றச்சாட்டுக்களுமின்றி தடுத்து வைக்கப்பட்டுள்ளார். அவரைக் கூட குடும்ப உறுப்பினர்களும் சட்டத்தரணிகளும் முறையாக அணுகுவதற்கு தொடர்ச்சியாக அனுமதி மறுக்கப்பட்டு வருகிறது.
சட்டத்தரணி ஹிஜாஸ் மீதான குற்றச்சாட்டுக்களை விரைவாக அறிக்கையிட்டு அவரை நீதிமன்றில் நிறுத்துமாறு பல்வேறு தரப்புகளும் வேண்டுகோள்விடுத்துள்ளன. இதுவிடயத்தில் கவனம் செலுத்தியுள்ளதாக ஐரோப்பிய ஒன்றியமும் அண்மையில் அறிக்கை வெளியிட்டிருந்தது. எனினும் அது தொடர்பில் எந்தவிதமான முன்னேற்றகரமான நகர்வுகளையும் காண முடியவில்லை. அவர் மீது குற்றமிருப்பின் ஆதாரங்களை வெளிப்படுத்தி நீதிமன்றில் நிறுத்த முடியும். இன்றேல் அவரை விரைவாக விடுதலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாறாக சட்டத்தரணி ஹிஜாஸ் விவகாரத்தை அரசியல்மயப்படுத்தி அதில் குளிர்காய சிலர் முற்படுவது கவலையளிக்கிறது. அவரையும் இன்னுமொரு டாக்டர் ஷாபியாக மாற்றும் வகையிலேயே அரசாங்கத்தின் நடவடிக்கைகள் அமைந்துள்ளன.
தற்சமயம் தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இருவரும் முஸ்லிம் சமூகத்திலும் பிற சமூகங்களிலும் நன்மதிப்பைப் பெற்றிருந்தவர்களாவர். இருவருமே முஸ்லிம் சமூகத்தில் காணப்படும் அடிப்படைவாத, பிற்போக்கு சிந்தனைகளை வெளிப்படையாகவே எதிர்த்து வந்தவர்களாவர். அதேபோன்று இருவருமே சமூகப் பணிகளில் தம்மை ஈடுபடுத்தி வந்தவர்கள். இதற்கான சாட்சிகளாக அவர்களால் பயனடைந்த முஸ்லிம் மக்களே இருக்கிறார்கள்.
அவ்வாறான நிலையில் யாரினதோ தேவைகளுக்காக அல்லது அரசியல் பழிவாங்கலுக்காக சமூகத்திற்குப் பயன்தரக் கூடிய இவ்வாறான மனிதர்களை சிறையிலடைத்து அவர்களை மாத்திரமன்றி அவர்களது குடும்பத்தினர், நண்பர்கள், சமூகத்தை சோதிப்பது கவலைக்குரியதாகும்.
சட்டத்தரணி ஹிஜாஸ், தேர்தல் ஆணைக்குழுவின் உறுப்பினர் பேராசிரியர் ரட்ணஜீவன் ஹ{ல் சார்பில் வழக்கொன்றில் ஆஜராகியமைக்காகவே அவர் கைது செய்யப்பட்டு அரசியல் ரீதியாக பழிவாங்கப்படுகிறார் என சில தினங்களுக்கு முன்னர் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் கருத்து வெளியிட்டிருந்தார். அதேபோன்றுதான் சிங்கள மொழியில் இனவாத சக்திகளுக்கு தக்க பதிலடி கொடுத்து வந்தமைக்காகவே, அவர் எழுதிய ஒரு வார்த்தையை தவறாக அர்த்தப்படுத்தி சகோதரர் ரம்ஸி ராஸிக் கைது செய்யப்பட்டுள்ளார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கதாகும்.
அந்த வகையில் சுமார் 60 நாட்களுக்கும் மேலாக அநியாயமாக தடுத்து வைக்கப்பட்டுள்ள மேற்படி இரு பிரமுகர்கள் விடயத்தில் முஸ்லிம் சமூகம் தீவிர கவனம் செலுத்த வேண்டும். அவர்களது விடயத்தில் அரசாங்கத்திற்கு அழுத்தங்களை வழங்க வேண்டும். உண்மையாகவே இருவரும் குற்றமிழைத்திருந்தால் அதனை நீதிமன்றில் நிரூபித்து தண்டனையைப் பெற்றுக் கொடுக்கலாம். அதைவிடுத்து இரு மாதங்கள் கடந்தும் எந்தவித குற்றச்சாட்டுக்களையும் சுமத்தாது தடுத்து வைத்திருப்பதும் அவர்களது அடிப்படை உரிமைகளை மீறும் வகையில் நடந்து கொள்வதும் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல.
இதுவிடயத்தில் சம்பந்தப்பட்ட தரப்புகள் அரசாங்கத்திற்கு உரிய அழுத்தங்களை வழங்க வேண்டும். டாக்டர் ஷாபி, ரம்ஸி ராஸீக், ஹிஜாஸ் ஹிஸ்புல்லா என இந்த வரிசை நீண்டு செல்ல இடமளிக்க முடியாது என்பதையும் குறிப்பிட்டுச் சொல்ல விரும்புகிறோம். – Vidivelli