அமெரிக்காவில் பொலிஸாரின் அராஜகத்தை எதிர்த்து அந்நாட்டு மக்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். கொரோனா வைரஸினால் கடும் நெருக்கடிகளைச் சந்தித்த அமெரிக்கா, இந்தப் போராட்டங்களாலும் திணறிக் கொண்டிருக்கிறது.
கறுப்பினத்தவரான ஜோர்ஜ் பளொய்ட் வெள்ளையின பொலிஸ் அதிகாரிகளால் ஈவிரக்கமின்றி, கழுத்தில் கால்களால் அழுத்திப் பிடித்து மூச்சுத்திணறடிக்கப்பட்டு கொல்லப்பட்ட சம்பவம் கறுப்பர்களை மாத்திரமன்றி வெள்ளையர்களையும் ஏன் முழு உலக மக்களையுமே ஆத்திரமூட்டியிருந்தது.
இதனால் 21 ஆம் நூற்றாண்டிலும் தொடரும் இவ்வாறான அடக்குமுறைகளை எதிர்த்து மக்கள் வீதிக்கு வந்து தமது எதிர்ப்பை வெளிப்படுத்தி வருகின்றனர்.
அவ்வாறானதொரு நிலையிலேயே இந்த சம்பவத்தைக் கண்டித்து இலங்கையிலும் முன்னிலை சோசலிசக் கட்சியினரால் ஆர்ப்பாட்டம் ஒன்று நடாத்தப்பட்டது. துரதிஷ்டவசமாக அமெரிக்க பொலிசாரின் அராஜகத்தைக் கண்டித்து நடாத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திலேயே இலங்கைப் பொலிசார் அராஜகத்தைக் கட்டவிழ்த்துவிட்டமை கவலைக்கும் கண்டனத்துக்குரியதாகும்.
இந்த ஆர்ப்பாட்டம் உரிய சமூக இடைவெளியைப் பேணி மிகவும் அமைதியான முறையிலேயே இடம்பெற்றது. எனினும் பொலிசார் ஆர்ப்பாட்டக்காரர்களைப் பலவந்தமாகத் தாக்கியிழுத்து கைது செய்து இழுத்துச் சென்ற காட்சிகளை ஊடகங்கள் ஒளிபரப்பின. வயோதிப் பெண் ஒருவரைத் தள்ளி நிலத்தில் வீசிய காட்சியும் இளம் பெண் ஒருவரைத் தூக்கி ஜீப்பினுள் வீசிய காட்சியும் மிகவும் கொடூரமானவை.
இவ்வாறான ஆர்ப்பாட்டங்களும் ஒன்றுகூடல்களும் நாட்டின் பல பாகங்களிலும் ஆங்காங்கே நடைபெற்று வருகின்ற போதிலும் அவற்றைக் கண்டுகொள்ளாத பொலிசார் இந்த அமைதி ஆர்ப்பாட்டத்தின் மீது மாத்திரம் வன்முறையைப் பிரயோகித்ததும் சுமார் 53 பேரை கைது செய்ததும் ஏற்றுக் கொள்ள முடியாததாகும்.
இச் சம்பவம் தொடர்பில் உள்நாட்டில் மாத்திரமன்றி சர்வதேச ரீதியாகவும் கண்டனக்குரல்கள் வெளிப்பட்டுள்ளன. சர்வதேச மன்னிப்புச் சபை இது குறித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளதுடன், இலங்கையில் கடந்த காலங்களிலும் அதிகாரத்திலிருந்தவர்களால் ஆர்ப்பாட்டங்களில் ஈடுபடுவர்கள் மீது தேவையற்ற வன்முறைகள் அல்லது தாக்குதல்கள் பிரயோகிக்கப்பட்டிருப்பதுடன், அவற்றுக்கு நீதியும் வழங்கப்படவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
அத்துடன் அமைதிவழிப் போராட்டக்காரர்கள் மீது வன்முறைகள் பிரயோகிக்கப்படுவதை எவ்வகையிலும் நியாயப்படுத்த முடியாது என்றும் தெரிவித்திருக்கிறது.
“மக்கள் அமைதியான முறையில் கூடுவதற்கான சுதந்திரத்திற்கு தேவைக்கமைவாக ஏதேனும் கட்டுப்பாடுகள் காணப்படுமாயின், முதலில் போராட்டத்தில் ஈடுபடுபவர்கள் தாமாகவே கலைந்து செல்வதற்கு வாய்ப்பொன்று வழங்கப்பட வேண்டியது கட்டாயமாகும். மாறாக அமைதிவழியில் போராடியவர்கள் மீது வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்படுவதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது” என்றும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.
பொலிசார் இவ்வாறு தமது அதிகாரத்தை மீறிச் செயற்படுவது இதுவே முதன் முறையல்ல. பொலிசாரின் கட்டுப்பாட்டில் இருந்த சமயம் பலர் உயிரிழந்த சம்பவங்களும் கடந்த காலங்களில் இடம்பெற்றுள்ளன.
கடந்த மே மாதம் 25 ஆம் திகதி அளுத்கம பிரதேசத்தில் ஓடிசம் குறைபாடுடைய தாரிக் எனும் சிறுவன் மீது பொலிசார் நடாத்திய தாக்குதல் இலங்கை மக்களை மேலும் கோபமூட்டியிருந்தது. இச் சம்பவத்துக்கு எதிராக ஆளும், எதிர்த்தரப்பு அரசியல்வாதிகளும் மனித உரிமை ஆர்வலர்களும் கண்டனத்தை வெளிப்படுத்தியதுடன் சமூக ஊடகங்களிலும் போராட்டங்கள் வெடித்தன. இதனையடுத்து இச் சம்பவம் தொடர்பில் 3 பொலிசார் பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டனர். எனினும் குறித்த பொலிஸ் அதிகாரிகள் ஊரடங்கு நேரத்தில் வெளியில் சுற்றித்திரிந்த சிறுவனை கைது செய்யாமைக்காகவே இவ்வாறு பணி இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் ஊடகங்களுக்குத் தெரிவித்துள்ளார். அதாவது சிறுவனைத் தாக்கியமைக்காகவன்றி அவனைக் கைது செய்யாமைக்காகவே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். பொலிஸ் பேச்சாளரின் இந்தக் கருத்தும் மனித உரிமை ஆர்வலர்களை விசனத்தில் ஆழ்த்தியுள்ளது.
கொவிட் 19 வைரஸ் தாக்கத்தினால் இலங்கை முடக்கப்பட்ட சமயத்தில் அதனைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிசார் போற்றத்தக்க பங்களிப்பை வழங்கியிருந்தனர். இரவு பகல் பாராது சட்டத்தை நிலைநாட்டுவதிலும் மக்களுக்குத் தேவையான உதவிகளை வழங்குவதிலும் அவர்கள் அர்ப்பணிப்புடன் செயற்பட்டிருந்தனர். எனினும் இவ்வாறு பொலிஸ் திணைக்களம் ஈட்டிய நற்பெயருக்கு களங்கம் விளைவிக்கும் வகையிலேயே சிறுவன் தாரிக் மற்றும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீதான தாக்குதல் சம்பவங்கள் நடந்தேறியுள்ளன.
அமெரிக்காவில் பொலிஸ் அராஜகத்திற்கு எதிராக அம்மக்கள் வீதிக்கு இறங்கியதால் இன்று அந்நாடு எதிர்கொண்டுள்ள அசாதாரண நிலைமையை நாம் அறிவோம். அவ்வாறான துரதிஷ்டவசமான சம்பவங்கள் இலங்கையில் இடம்பெற்றுவிடக் கூடாது என்பதில் பொலிசாரே மிகவும் கவனமாகவும் பொறுப்புடனும் செயற்பட வேண்டும்.
அந்த வகையில் மேற்குறிப்பிட்ட இரு சம்பவங்கள் தொடர்பிலும் தவறிழைத்த பொலிசார் தண்டிக்கப்பட வேண்டும். முறையான விசாரணைகள் நடாத்தப்பட்டு எதிர்காலத்திலும் இவ்வாறான பொலிஸ் அராஜகங்கள் இடம்பெறாதவாறு தடுக்கப்பட வேண்டும்.
அதற்கப்பால் இந்த ஆர்ப்பாட்டத்தைக் கட்டுப்படுத்துமாறும் ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது தாக்குதல் நடத்துமாறும் பொலிசாருக்கு உத்தரவிட்டது யார் என்பதும் இதன் பின்னணியில் அரசியல்வாதிகள் உள்ளனரா என்பதும் வெளிப்படுத்தப்பட வேண்டும்.
கொரோனா வைரஸ் தனிமைப்படுத்தல் சட்டத்தை தமது அரசியல் நோக்கங்களுக்காக பயன்படுத்தும் போக்கு தவிர்க்கப்பட வேண்டும். இச் சட்டத்தைப் பயன்படுத்தி எதிர்வரும் தேர்தல் காலத்திலும் அரசியல் அடக்குமுறைகள் கட்டவிழ்க்கப்படலாம் எனும் அச்சம் மேலெழுந்துள்ளது. அதற்கு இடமளிக்க முடியாது. தேர்தல்கள் ஆணைக்குழு இது தொடர்பில் தீவிர கவனம் செலுத்தி கட்டுப்பாடுகளை விதிக்க வேண்டும் என வலியுறுத்த விரும்புகிறோம். – Vidivelli