எம்.ஐ.அப்துல் நஸார்
இஸ்லாத்தின் புனிதத் தலங்களான மக்கா மற்றும் மதீனாவுக்கு வருடாந்தம் மேற்கொள்ளப்படும் யாத்திரையான ஹஜ்ஜினை இவ்வருடம் சவூதி அரேபியா எவ்வாறு ஒழுங்கு செய்யப்போகின்றது என்பது தொடர்பில் நிச்சயமற்றதன்மை காணப்படுகின்றது. உடலில் சக்தியும் பொருளாதார இயலுமையும் இருக்கும் அனைத்து முஸ்லிம்களும் தமது வாழ்நாளில் ஒரு தடவையேனும் சென்று வர வேண்டிய கடமையாக ஹஜ் கருதப்படுகின்றது.
உலகளாவிய ரீதியில் தொடர்ந்தும் கொவிட்-19 தொற்று பரவிவரும் நிலையில், இவ்வருட ஹஜ் தொடர்பில் தெளிவற்ற நிலை காணப்படுகின்றது. ஒரு வாரம் நீடிக்கும் இவ்வருட ஹஜ்ஜினை ஜுலை மாதம் 28 ஆம் திகதி ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஹஜ்ஜிற்கு வரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை கணிசமாகக் குறைப்பதற்கு சவூதி அரேபியா திட்டமிடக்கூடும் என ரொய்டர் செய்தித் தாபனம் தெரிவித்துள்ளது. சாதாரணமாக வருடாந்தம் சுமார் 2.5 மில்லியன் மக்கள் ஹஜ் கடமையினை நிறைவேற்றுகின்றனர்.
இஸ்லாத்தின் முக்கிய கடமைகளுள் ஒன்று என்பதற்கு மேலதிகமாக, றியாதின் மிக முக்கியமான அன்னியச் செலாவணி வருமான மூலமாக ஹஜ் காணப்படுகின்றது. வருடாந்த ஹஜ் மற்றும் அதனையடுத்து வருடம் முழுவதும் நடைபெறும் உம்றா கடமைகள் காரணமாக சவூதி அரேபியாவுக்கு வருடாந்தம் சுமார் 12 பில்லியன் அமெரிக்க டொலர்கள் வருமானமாகக் கிடைப்பதாக ரொய்டர் செய்தித் தாபனம் தெரிவித்துள்ளது.
கடந்த மார்ச் மாதம் கொவிட்-19 தொற்று அதிகரிக்க ஆரம்பித்ததும் ஹஜ் திட்டமிடலை நிறுத்தி வைக்குமாறு நாடுகளிடம் வேண்டுகோள் விடுத்ததோடு உம்றா யாத்திரையினையும் இடைநிறுத்தியது.
இவ் வருட ஹஜ்ஜினை இரத்துச் செய்யுமாறு சில சவூதி அரேபிய அதிகாரிகள் அழுத்தம் கொடுத்து வருவதாக ரொய்டர் தெரிவித்துள்ளது. வயதானவர்களை ஹஜ் கடமைக்கு அனுமதிக்காதிருத்தல் மற்றும் மேலதிக சுகாதாரப் பரிசோதனைகள் போன்ற கட்டுப்பாடுகளுடன் மிகக் குறைந்த எண்ணிக்கையான யாத்திரிகர்களுடன் இவ்வருட ஹஜ்ஜிற்கு அனுமதி வழங்கப்பட முடியும் என இரு சவூதி அரேபிய அதிகாரிகளை மேற்கோள் காட்டி அச் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது.
இறுக்கமான நடைமுறைகளுடன் யாத்திரைக்காக வருடாந்தம் ஒவ்வொரு நாட்டிற்கும் வழங்கப்படும் கோட்டாவில் 20 வீதத்திற்கு அனுமதியளிப்பதன் மூலம் இதனை சாத்தியப்படுத்தலாம் என அதிகாரிகள் கருதுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2020 ஆம் ஆண்டு ஹஜ் இடம்பெறுவதற்கு வாய்ப்புகள் மிக அரிதாகவே காணப்படுகின்றன. இரத்துச் செய்வதற்கான விண்ணப்பத்தினை சமர்ப்பிக்காதவர்களுக்குக்கூட முழுமையாக பணம் மீளளிப்புச் செய்யப்படும் என கடந்த வார பிற்பகுதியில் இந்திய ஹஜ் குழு அறிவித்தது. சராசரியாக வருடாந்தம் இந்தியாவிலிருந்து சுமார் இரண்டு இலட்சம் பேர் ஹஜ் உம்றா கடமைகளை நிறைவேற்றுவதற்காக சவூதி அரேபியாவுக்குச் செல்கின்றனர். இவ்வருட ஹஜ் தொடர்பில் சவூதி அரேபிய அதிகாரிகளிடமிருந்து எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என குழுவின் அதிகாரியொருவர் தெரிவித்தார்.
ஹஜ் கடமைக்காக தனது நாட்டு பிரஜைகளை அனுப்பி வைப்பதா இல்லையா என்பது தொடர்பில் எதிர்வரும் வியாழக்கிழமை தீர்மானிக்கவுள்ளதாக மலேசிய அரசாங்கம் அறிவித்துள்ளது.
கடந்த வாரம், உலகில் அதிகூடிய முஸ்லிம்களைக் கொண்ட நாடான இந்தோனேசியா ‘சவூதி அரேபிய அதிகாரிகள் உறுதிப்படுத்தலை வழங்கத் தவறியுள்ளனர்’ எனத் தெரிவித்து ஹஜ்ஜில் தனது பிரஜைகள் பங்குபற்றுவதை இரத்துச் செய்தது. இந்தோனேசியாவிலிருந்து வருடாந்தம் கிட்டத்தட்ட 2.2 இலட்சம் மக்கள் ஹஜ் கடமையில் பங்குபற்றுகின்றனர். கடந்த மாதம், சிங்கப்பூர் இவ்வருட ஹஜ் யாத்திரையை இரத்துச் செய்தது.
சவூதி அரேபியாவில் கொவிட்-19 தொற்று அதிகரித்து வருகின்றது. நேறற்று தினம் வரை 112,288 பேர் தொற்றுக்குள்ளாகியுள்ளனர். 819 பேர் உயிரிழந்துள்ளனர்.
இவ்வருட ஹஜ்ஜினை இரத்துச் செய்தாலோ அல்லது யாத்திரிகர்களின் எண்ணிக்கையினைக் குறைத்து ஹஜ் யாத்திரைக்கு அனுமதியளித்தாலோ சவூதி அரேபியாவின் சமய சுற்றுலப் பயணத்துறையினை மேம்படுத்தும் திட்டத்திற்கு பாரிய பின்னடைவாகவே அமையும். பட்டத்திற்குரிய இளவரசர் மொஹமட் பின் சல்மானின் பொருளாதார மறுசீரமைப்புத் திட்டம் வருடாந்தம் ஹஜ் மற்றும் உம்றாக் கடமைகளுக்காக வருகைதரும் யாத்திரிகர்களின் எண்ணிக்கையினை 30 மில்லியனாக அதிகரிப்பதையும் 2030 ஆம் ஆண்டளவில் 13.32 பில்லியனாக வருமானத்தை அதிகரிப்பதையும் நோக்கமாகக் கொண்டுள்ளது. – Vidivelli