நாடளாவிய ரீதியில் கொரோனா வைரஸ் தொற்றுப் பரவலினால் நெருக்கடி நிலையொன்று ஏற்பட்டிருக்கும் நிலையில், தொற்றுப் பரவலைக் கட்டுப்படுத்தும் நோக்கில் சுய தனிமைப்படுத்தலில் இருக்கும் போது கடைப்பிடிக்க வேண்டிய விடயங்கள் தொடர்பான ஆலோசனை தொற்றுநோய் தடுப்பு பிரிவினால் வழங்கப்பட்டுள்ளது.
அந்த ஆலோசனைகள் அடங்கிய அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது,
வெளிநாடுகளிலிருந்து சமீபத்தில் நாடு திரும்பிய இலங்கைப் பிரஜைகள் அனைவரும் கொரோனா வைரஸ் சமூகத்திற்குள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்பட வேண்டும் என்று கோரப்பட்டுள்ளனர். அதேபோன்று காய்ச்சல், இருமல், தடிமன் போன்ற அறிகுறிகள் காணப்படுபவர்களும் சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுவது பொருத்தமானதாகும்.
சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படுபவர்கள் தமது வீட்டில் தனியறை ஒன்றில் இருப்பதுடன், அக்குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்கள் வேறு அறையில் அல்லது குறித்த நபரிலிருந்து விலகியிருக்க வேண்டும். சுய தனிமைப்படுத்தலுக்கு உட்படும் நபர் தனது குடும்பத்தின் ஏனைய அங்கத்தவர்களிடமிருந்து குறைந்தபட்சம் ஒரு மீற்றர் இடைவெளியைப் பேணவேண்டும். குறித்த நபர் பிரத்தியேக குளியலறையை உபயோகிக்க வேண்டும். அதற்கான வசதிகள் காணப்படாதவிடத்து, குளியலறையைப் பயன்படுத்திய பின்னர் ஒவ்வொரு முறையும் அதனை முழுமையாக சுத்தப்படுத்த வேண்டும்.
விருந்தினர்களை வீட்டிற்குள் அனுமதிப்பதையும், சுய தனிமைப்படுத்தலில் உள்ள நபர் விருந்தினர்களுடன் கலந்துரையாடுவதையும் தவிர்க்கவேண்டும். அடிக்கடி குறைந்தபட்சம் 20 செக்கன்களேனும் கைகளைத் தூய்மையாகக் கழுவவேண்டும். கைகளைக் கழுவ முன்னர் கண்கள், மூக்கு, வாய் போன்ற பகுதிகளைத் தொடுவதைத் தவிர்த்துக்கொள்ள வேண்டும்.
சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகியிருக்கும் நபர் நாளொன்றுக்கு இரு தடவைகள் அவரது உடல் வெப்பநிலையைப் பரிசோதித்துக்கொள்வது அவசியமாகும். காய்ச்சல், தடிமன், இருமல், சுவாசக்கோளாறு, உடற்சோர்வு அல்லது வலி உள்ளிட்ட அறிகுறிகள் தொடருமாக இருப்பின் உடனடியாக மருத்துவ உதவியை நாடவேண்டும்.
மேலும் முகக்கவசம், கையுறைகள் என்பவற்றைப் பயன்படுத்திய பின்னர் அவற்றை மீளப்பயன்படுத்தாமல், முறையாக அகற்றவேண்டும். சுய தனிமைப்படுத்தலுக்கு உள்ளாகும் நபர் தனக்கென பிரத்தியேகமாக உணவுத்தட்டு, தண்ணீர்க் குவளை, துவாய் என்பவற்றைப் பயன்படுத்த வேண்டும். – vidivelli.lk