கோத்தாபய ராஜபக் ஷ ஜனாதிபதியாகப் பதவியேற்று கடந்த பெப்ரவரி 25ஆம் திகதியுடன் 100 நாட்கள் நிறைவடைந்தன. இந்த நிலையில் 19ஆவது திருத்தச் சட்டத்தினூடாக பாராளுமன்றத்தைக் கலைக்கும் அதிகாரம் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷவிற்கு கடந்த மார்ச் 1ஆம் திகதி கிடைக்கப் பெற்றது.
இந்த அதிகாரத்தையடுத்து 15ஆவது பாராளுமன்றத்தைக் கடந்த மார்ச் 2ஆம் திகதி நள்ளிரவு கலைத்தார். இதன் மூலம் ஐந்து வருடத்தைப் பூர்த்தி செய்யாத சுமார் 60 பாராளுமன்ற உறப்பினர்கள் தமது ஓய்வூதியத்தை இழந்தனர்.
இதேவேளை, எதிர்வரும் ஏப்ரல் 26ஆம் திகதி நடைபெறவுள்ள 16ஆவது பாராளுமன்றத் தேர்தலுக்கான வேட்புமனுக்களை மார்ச் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை தாக்கல் செய்ய முடியும். புதிய பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு மே 14ஆம் திகதி இடம்பெறவுள்ளது.
இந்தப் பாராளுமன்ற கலைப்பையடுத்து அனைத்துக் கட்சிகளும் தேர்தலுக்கான ஆயத்தங்களை முன்னெடுத்துள்ளன. பிரதமர் மஹிந்த ராஜபக் ஷ தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன இந்த தேர்தலில் மூன்றிலிரண்டு பெரும்பான்மையை எப்படியாவது பெற வேண்டுமென்ற அடிப்படையில் களமிறங்கியுள்ளது.
இதற்காக கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெற முடியாதுபோன முஸ்லிம் வாக்குகளை கவரும் நடவடிக்கைகளில் பல்வேறு திட்டங்களை முன்னெடுத்துள்ளதுடன், நாடளாவிய ரீதியில் முஸ்லிம்கள் பெரும்பான்மையாக வாழும் மாவட்டங்களில் முஸ்லிம் வேட்பாளர்களையும் களமிறக்க நடவடிக்கை எடுத்துள்ளது.
இவ்வாறான நிலையில் பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னர் ஐக்கிய தேசிய கட்சிக்குள் பாரிய பிளவொன்று ஏற்படக்கூடிய வாய்ப்பொன்று தோன்றியுள்ளது.
இந்தப் பிளவினால் அதிகம் பாதிக்கப்படக் கூடியவர்களாக முஸ்லிம் சமூகத்தினரே காணப்படுகின்றனர். அதாவது, கடந்த ஜனாதிபதி தேர்தலில் பெரும்பான்மையான முஸ்லிம்கள் சஜித் பிரேமதாசவையே ஆதரித்தனர்.
அதேபோன்று பெரும்பான்மையான முஸ்லிம்கள் ஐக்கிய தேசியக் கட்சியையே ஆதரிப்பவர்கள் என்ற தோற்றப்பாடொன்றும் உள்ளது. இதன் காரணமாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இன்று வரை ஐக்கிய தேசிய கட்சியுடன் தொங்கி நிற்கின்றன.
கடந்த பாராளுமன்றத்தில் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த 21 பேர் பாராளுமன்றத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தினர். இதில் 17 பேர் ஐக்கிய தேசிய முன்னனியை சேர்ந்தவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. இதனாலேயே ஐக்கிய தேசியக் கட்சிக்குள் பிளவொன்று ஏற்படுமாயின் முஸ்லிம் சமூகமே அதிகம் பாதிக்கப்படுமெனத் தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, பாராளுமன்ற தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் செய்யப்படுவதற்கு இன்னும் ஏழு நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் ஐக்கிய தேசியக் கட்சி எந்த சின்னத்தில் போட்டியிடுவதென இதுவரை தீர்மானம் மேற்கொள்ளவில்லை.
இந்நிலையில் அக்கட்சி தற்போது ரணில் அணி மற்றும் சஜித் அணியென இரண்டாகப் பிளவுபட்டுள்ளது. ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்கவின் பெரும்பான்மை ஆதரவைக் கொண்ட அக்கட்சியின் செயற்குழு யானைச் சின்னத்திலேயே களமிறங்க வேண்டுமெனத் தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
அதேவேளை, ஐக்கிய தேசிய கட்சியின் பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவின் பெரும்பான்மை ஆதரவினைக் கொண்ட அக்கட்சியின் பாராளுமன்றக்குழு சமகி ஜன பலவேகய எனும் கூட்டணியின் கீழ் களமிறங்க வேண்டும் என தீர்மானம் மேற்கொண்டுள்ளது.
எவ்வாறாயினும், ஐக்கிய தேசிய கட்சியின் செயற்குழுவே அதிகாரமிக்கதாகும். இவ்வாறான நிலையில் அக்கட்சியின் செயற்குழுவின் அங்கீகாரமின்றி சமகி ஜன பலவேகய கூட்டணியின் அங்குரார்ப்பண நிகழ்வு கடந்த மார்ச் 1ஆம் திகதி கொழும்பு – 07 இலுள்ள தாமரை தடாகத்தில் மிகப் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது.
இந்நிகழ்வை ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அக்கட்சியின் முக்கியஸ்தர்களான ரவி கருணாநாயக்க, நவீன் திசாநாயக்க மற்றும் அகில விராஜ் கரியவசம் ஆகியோர் பகிஷ்கரித்திருந்தனர்.
இந்த சமகி ஜன பலவேகய கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், ஜாதிக ஹெல உறுமய, ஜனநாயக மக்கள் முன்னணி, மலையக மக்கள் முன்னணி மற்றும் தொழிலாளர் தேசிய சங்கம் ஆகிய கட்சிகளின் தமிழ் முற்போக்கு முன்னணி உள்ளிட்ட ஐந்து அரசியல் கட்சிகளும் 20 சிவில் அமைப்புக்களும் 18 தொழிற்சங்கங்களும் அங்கம் வகிக்கின்றன.
ஏற்கனவே ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் இணைந்து முஸ்லிம் கூட்டமைப்பாக பாராளுமன்ற தேர்தலில் களமிறங்க வேண்டும் என்ற கோரிக்கையொன்று முஸ்லிம் சமூகத்தில் வலுப்பெற்றுள்ளது.
இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியின் அனுமதியின்றி அமைக்கப்பட்டுள்ள சமகி ஜன பலவேகய கூட்டணியில் மேற்குறிப்பிட்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அவசரப்பட்டு இணைந்துள்ளன.
இந்த இணைவின் காரணமாக முஸ்லிம் சமூகத்தின் பிரதிநிதித்துவத்திலேயே பாதிப்பேற்பட வாய்ப்புள்ளது. குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சியின் ரணில் அணி தனியாகவும், சஜித் அணி தனியாகவும் களமிறங்கும் பட்சத்தில் அது முஸ்லிம் சமூகத்திற்கே அதிக பாதிப்பாகும். அதேவேளை, இந்த செயற்பாடு ஆளும் அரசாங்கமான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை மேலும் பலப்படுத்தும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஐக்கிய தேசியக் கட்சி இரண்டு அணிகளாக தேர்தலில் போட்டியிட்டால் இரண்டு அணியினரும் முஸ்லிம் வேட்பாளர்களை களமிறக்குவர். இதனால் முஸ்லிம் வாக்குகள் பிளபுபடுமே தவிர பாராளுமன்ற உறுப்பினரைப் பெறுவதற்கு வழிவகுக்காது.
இதன் காரணமாக ஐக்கிய தேசிய கட்சி இரண்டு அணிகளாக களமிறங்கும் என்றால் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய இரண்டு கட்சிகளும் ஒன்றிணைந்து கூட்டமைப்பாக களமிறங்க வேண்டும். இதுவே குறித்த இரு கட்சிகளும் சமூகத்திற்கு செய்யும் பாரிய நன்மையாகும்.
ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான அல்லது சஜித் பிரேமதாச தலைமையிலான கூட்டணியில் இந்த இரண்டு கட்சிகளும் அங்கம் வகிக்க முடியும் என்றால் ஏன் இந்த இரண்டு கட்சிகளும் ஒன்றுமையாக தேர்தலில் களமிறங்க முடியாது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் மத்தியில் ஆயிரம் பிளவுகள் காணப்பட்டாலும் தேர்தல் என்று ஒன்று வரும் போது கூட்டமைப்பிலுள்ள அனைத்து கட்சிகளும் இலங்கை தமிரழரசுக் கட்சியின் வீட்டு சின்னத்திலேயே களமிறங்குகின்றன. காரணம், இலங்கை தமிழரசுக் கட்சி தாய்க் கட்சி என்பதாகும்.
அதேபோன்று ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் ஒரு தாய்க் கட்சி என்பதால் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அக்கட்சியில் இணைவதற்கு என்ன பிரச்சினை. இன்றுள்ள அனைத்து முஸ்லிம் அரசியல்வாதிகளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் ஊடாக முகவரி பெற்றவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்.
இதேவேளை, சமகி ஜன பலவேகய கூட்டணியில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் ஆகிய கட்சிகள் அங்கம் வகிக்கின்ற நிலையில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறை மாவட்டத்தில் தனித்துப் போட்டியிட வேண்டும் என அக்கட்சியின் அம்பாறை மாவட்ட முக்கியஸ்தர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்தக் கருத்து சமூகத்தினை அடிப்படையாக கொண்டு தெரிவிக்கும் கருத்தொன்றல்ல. மாறாக சில தனிநபர்களை அடிப்படையாகக் கொண்டு தெரிவிக்கும் விடயமாகும்.
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், சஜித் அணி மற்றும் ரணில் அணி என அனைவரும் இணைந்து போட்டியிடும் பட்சத்தில் அம்பாறை மாவட்டத்தில் நான்கு முஸ்லிம் ஆசனங்களை கைப்பற்ற முடியும்.
அவ்வாறில்லாமல் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரிந்து கேட்கும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் ஒரு பிரதிநிதியை இழந்து இரண்டு ஆசனங்களை மட்டுமே கைப்பற்றும். இதுதவிர, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதித்துவத்தை இம்முறையும் பெற முடியாத துர்ப்பாக்கியம் ஏற்படும். அம்பாறை மாவட்டத்தில் முன்னாள் அமைச்சர் ஏ.எல்.எம்.அதாஉல்லாவின் செல்வாக்கு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையினால், அதனை ஈடுசெய்ய இரு கட்சிகளும் ஒரு அணியில் போட்டியிடுவது பொருத்தமானதாக அமையும்.
இதேவேளை, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் அம்பாறையில் தனித்துப் போட்டியிடும் பட்சத்தில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் வன்னி மாவட்டத்தில் தனித்து களமிறங்கும். அவ்வாறு இறங்கும் பட்சத்தில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரான ரிஷாத் பதியுதீனின் வெற்றி கேள்விக்குரியதாக மாறும்.
ஏனெனில, கடந்த பாராளுன்ற தேர்தலில் ரிஷாத் பதியுதீனுடன் இணைந்து போட்டியிட்ட எஹியான் பாய் உள்ளிட்ட பலர் இன்று அவருடனில்லை. இவர்கள் அனைவரும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன சார்பில் ரிஷாத் பதியுதீனுக்கு எதிராகக் களமிறங்கத் தயாராகி வருகின்றனர். அத்துடன், ஏப்ரல் தாக்குதலுக்கு முன்னர் வன்னி தேர்தல் மாவட்டத்திலுள்ள தமிழ், சிங்கள வாக்குகள் குறிப்பிட்டளவு ரிஷாதுக்கு கிடைத்தன. இம்முறை அது சாத்தியமற்றதொரு நிலையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸும் தனித்துக் களமிறங்கினால் நிலைமை மோசமாக அமையும்.
ஐக்கிய தேசிய கட்சியின் இரண்டு அணிகளினதும் ஒற்றுமை இன்று வரை கேள்விக்குறியாகியுள்ள நிலையில், சஜித் தலைமையிலான கூட்டணில் கைச்சாத்திட்ட இரண்டு முஸ்லிம் கட்சிகளும் அந்த கூட்டணியிலிருந்து வெளியேறி முஸ்லிம் கூட்டமைப்பாக களமிறங்க வேண்டும்.
இதற்கு நாடளாவிய ரீதியிலுள்ள அனைத்து முஸ்லிம்களும் ஆதரவு வழங்குவர். இந்த இணைவு முஸ்லிம்களுக்கு பாரிய உந்து சக்தியினை வழங்கி, ஆசன எண்ணிக்கையிலும் அதிகரிப்பை ஏற்படுத்தும்.
சிலவேளை, ரணில் அணி தனித்துப் போட்டியிட்டு கைப்பற்றும் பாராளுமன்ற ஆசனங்கள் அனைத்தும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அமைக்கும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்கி மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை பெற்றுக்கொடுக்க வழிசமைக்கும்.
அச்சமயத்தில் முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை எதிர்கால அரசாங்கம் எதிர்பார்க்காது. இந்நிலையில் முஸ்லிம் கூட்டமைப்பென களமிறங்கும்போது பெறப்படும் அனைத்து ஆசனங்களும் எதிர்கால அரசாங்கத்தின் மூன்றில் இரண்டு பெரும்பான்மையினை தீர்மானிக்கும் சக்தியாக நிச்சயம் மாறவும் வாய்ப்புள்ளது.-Vidivelli
- றிப்தி அலி