கண்டி- திகன சம்பவங்கள்: 210 மில்லியன் ரூபா நஷ்டஈடு சொத்துக்களுக்கு வழங்கப்பட்டுள்ளது
இழப்பீடு பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர்
2018 ஆம் ஆண்டு மார்ச் மாதம் 5 ஆம் திகதி முஸ்லிம்களுக்கு எதிராக கண்டி– திகன பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட வன்செயல்களினால் சேதமடைந்த சொத்துகளுக்கும் பள்ளிவாசல்களுக்கும் இதுவரை 210 மில்லியன் ரூபா நஷ்டஈடாக வழங்கப்பட்டுள்ளதாக இழப்பீட்டுப் பணியகத்தின் பிரதிப் பணிப்பாளர் எஸ்.எம். பதூர்தீன் தெரிவித்தார்.
கண்டி –திகன வன்முறைகளுக்கு நேற்றுடன் இரண்டு வருடங்கள் பூர்த்தியாகியுள்ள நிலையில் அவ்வன்முறைகளால் சேதங்களுக்குள்ளாக்கப்பட்ட சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு கூறினார்.
அவர் இது தொடர்பில் ‘விடிவெள்ளி’க்கு தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்; 2018 ஆம் ஆண்டு மார்ச் 5 ஆம் திகதி இடம்பெற்ற வன்செயல்களினால் கண்டி –திகன பகுதிகளில் பாதிக்கப்பட்ட 546 சொத்துகளுக்கு நஷ்டகோரி இழப்பீட்டு பணியகத்துக்கு விண்ணப்பங்கள் அனுப்பப்பட்டிருந்தன.
இவற்றில் 90 வீதமான நஷ்டஈடுகள் வழங்கப்பட்டு விட்டன. எஞ்சிய நஷ்டஈடுகள் வழங்கப்படுவதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
திறைசேரியிலிருந்து தேவையான நிதியும் கோரப்பட்டுள்ளது. 16 விண்ணப்பங்களுக்கே நஷ்டஈடு வழங்கப்பட வேண்டியுள்ளது. இந்த விண்ணப்பங்களில் சில குறைபாடுகள் காணப்படுவதாலும் உரிய ஆவணங்கள் இன்மையாலுமே நஷ்டஈடு இதுவரை வழங்கப்படவில்லை. இது தொடர்பில் ஆராய்ந்து நஷ்டஈடுகளைத் துரிதப்படுத்துவதற்கு அமைச்சரவையின் ஆலோசனையின் பேரில் கமிட்டியொன்று நியமிக்கப்பட்டுள்ளது. கமிட்டியின் சிபாரிசுகள் கிடைக்கப் பெற்றதும் எஞ்சியுள்ள நஷ்டஈடுகளும் வழங்கப்படும்.
நஷ்டஈடு கோரிய விண்ணப்பங்கள் அக்குறணை 35, பூஜாபிட்டிய 41, குண்டசாலை 243, ஹேவாஹட்டை 1, பாத்ததும்பற 48, ஹாரிஸ்பத்துவ 134, யட்டிநுவர 7, கண்டி நகரம் கங்கவட்ட கோறளை 27, மினிப்பே 1, உடுநுவர 3, மெததும்பர 5, உடதும்பற 1 என்ற அடிப்படையில் 546 விண்ணப்பங்கள் கிடைக்கப்பெற்றிருந்தன. அமைச்சரின் ஆலோசனைக்கமைய எஞ்சியுள்ள 16 சொத்துகளுக்கான நஷ்டஈடுகள் துரிதப்படுத்தப் படவுள்ளன. இந்த 16 நஷ்டஈடுகளுக்கான விண்ணப்பங்களில் காணப்படும் குறைகளும் உரிய ஆவணங்கள் இன்மை யுமே தாமதத்திற்குக் காரணமேயன்றி இதற்கு இழப்பீட்டுப் பணியகம் பொறுப்பல்ல என்றார்.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்