‘பள்ளிவாசலுக்குள் எங்களைத் தடைசெய்வதற்கு நாங்கள் அடிப்படைவாதிகளோ, பயங்கரவாதிகளோ அல்ல. எங்களது பள்ளிவாசல் மீண்டும் எங்களுக்கு திருப்பித்தரப்பட வேண்டும். எதிர்வரும் ரமழானுக்கு முன்பு நாங்கள் மீண்டும் பள்ளிவாசலில் தொழ வேண்டும்.’ இது மஹர சிறைச்சாலை வளாக ஜும்ஆ பள்ளிவாசல் பரிபாலன சபைத் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழின் ஆதங்கம்.
100 வருடங்களுக்கும் மேலாக மஹர சிறைச்சாலை வளாகத்தில் இயங்கிவந்த பள்ளிவாசல் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளது. அங்கு புத்தர் சிலையொன்றும் வைக்கப்பட்டு, சிறைச்சாலை அதிகாரிகள் மதவழிபாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். ராகம பகுதியில் வாழும் சுமார் 290 குடும்பங்கள் இப்பள்ளிவாசலை பயன்படுத்தி வந்ததாக பள்ளிவாசல் தலைவர் துவான் மொஹமட் ஹாபிழ் தெரிவிக்கிறார்.
இவ்விவகாரம் தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகம் ஜனாதிபதி கோத்தாபய ராஜ பக் ஷ, பிரதமரும் கலாசார அமைச்சருமான மஹிந்த ராஜபக் ஷ, நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்ட மறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபாலடி சில்வா, முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்கள பணிப்பாளர் ஏ.பி.எம்.அஷரப், அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபைத் தலைவர் ரிஸ்வி முப்தி ஆகியோருக்கு முறைப்பாடு செய்துள்ளது.
4/21 தாக்குதலின் பின்பு தடை
ஏப்ரல் மாதம் 21 ஆம் திகதி இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்பு சிறைச்சாலை அதிகாரிகளால், பள்ளிவாசல் முஸ்லிம்களால் பயன்படுத்துவது தடை செய்யப்பட்டது. பாதுகாப்பு காரணங்களின் நிமித்தம் பள்ளிவாசல் தடைசெய்யப்பட்டுள்ளதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்தது.
பாதுகாப்பு காரணங்களை முன்வைத்து பள்ளிவாசல் தடைசெய்யப்பட்டிருந்தாலும் நிலைமை சீரடைந்த பின்பு, அவசரகாலசட்டம் நீக்கப்பட்டதன் பின்பு பள்ளிவாசல் மத கடமைகளுக்காக திறந்து வைக்கப்பட்டிருக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு திறந்துவிடப்படவில்லை. தொடர்ந்தும் தடை உத்தரவு அமுலிலே இருந்தது. இந்த கால எல்லையிலே பள்ளிவாசல் புனர்நிர்மாணம் செய்து ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளது.
ஆனால் பள்ளிவாசல் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டமையை நியாயப்படுத்துவதற்காக பள்ளிவாசல் நீண்டகாலமாக கைவிடப்பட்டிருந்ததாலே ஓய்வு அறையாக மாற்றப்பட்டதாக சிறைச்சாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
சிறைச்சாலை உத்தியோகத்தர்களுக்கு ஓய்வு நேரங்களைக் கழிக்க ஓய்வு அறை இல்லாத குறையை தீர்ப ்பதற்காக மேற்கொண்ட தீர்மானம் என்றும் சிறைச்சாலை அதிகாரி ஜகத் சந்தன வீரசிங்கவின் ஆலோசனைக்கு அமைய இத்தீர்மானம் மேற்கொள்ளப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மலே சிறைச்சாலை பாதுகாப்பு உத்தியோகத்தர்களின் பள்ளி
மஹர சிறைச்சாலையில் 1902 களில் மலே இனத்தைச் சேர்ந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்களே கடமையில் இருந்தனர். அந்தக் காலத்தில் சிறைச்சாலை வளாகத்தில் மலே உத்தியோகத்தர்களுக்கான பள்ளிவாசல் நிறுவுவதற்கு காணி ஒதுக்கப்பட்டு 1903 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் நிர்மாணிக்கப்பட்டது. அக்காலத்தில் மலே பாதுகாப்பு உத்தியோகத்தர்களினாலே இப்பள்ளிவாசல் பயன்படுத்தப்பட்டது. 1967 ஆம் ஆண்டு இப்பள்ளிவாசல் முஸ்லிம் சமயப் பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
பிற்பட்ட காலத்தில் மஹர சிறைச்சாலைக்கு அண்மித்த பகுதிகள் மற்றும் ராகமயில் முஸ்லிம்களின் சனத்தொகை அதிகரித்தது. அம்முஸ்லிம்கள் தமது சமய நடவடிக்கைகளுக்காக இப்பள்ளிவாசலையே பயன்படுத்தி வந்தனர். ஆனால் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களை அடுத்தே இப்பள்ளிவாசல் பாதுகாப்பு காரணங்களைக் கருத்திற்கொண்டு தடை செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் தாக்குதல்களின் பின்பு முஸ்லிம்கள் தீவிரவாதிகள் எனக்கருதியே இத்தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி இலங்கையின் சுதந்திர தின நிகழ்வினை இலங்கை மக்கள் அனைவரும் இன, மத வேறுபாடுகளின்றி ஒன்றிணைந்து கொண்டாடிய மறுதினமே இப்பள்ளிவாசல் ஓய்வு அறையாக திறந்து வைக்கப்பட்டுள்ளது. புத்தர் சிலையும் வைபவ ரீதியாக நிறுவப்பட்டுள்ளது.
பள்ளிவாசலின்றி முஸ்லிம்களுக்கு அசெளகரியம்
மஹர சிறைச்சாலை அதிகாரிகள் ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களின் பின்பு சிறைச்சாலை வளாகத்தினுள் இருக்கும் பள்ளிவாசலுக்கு முஸ்லிம்கள் பிரவேசிப்பதற்கு தடைவிதித்தனர். பாதுகாப்பு கருதி முஸ்லிம்களை அங்கு அனுமதிக்க முடியாதென்றும் கூறப்பட்டது. சிறைச்சாலை ஆணையாளர் நாயகமே இந்த உத்தரவினைப் பிறப்பித்திருப்பதாகவும் மஹர சிறைச்சாலை அதிகாரிகள் தெரிவித்தனர்.
இந்த ஜும்ஆ பள்ளிவாசலை ராகம பகுதியைச் சேர்ந்த சுமார் 290 முஸ்லிம் குடும்பங்கள் பயன்படுத்தி வந்தன. நூறு வருடங்களுக்கும் மேலாக இப்பள்ளிவாசலில் நாளாந்த ஐவேளை தொழுகை, வெள்ளிக்கிழமை ஜும்ஆ தொழுகை, பெருநாள் தொழுகைகள், தராவிஹ் தொழுகை மற்றும் ஜனாஸா தொழுகை என்பன நடைபெற்று வந்துள்ளன.
பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டதன் காரணமாக முஸ்லிம்கள் பல மைல்களுக்கப்பால் இருக்கும் வேறு பள்ளிவாசல்களுக்குச் செல்லும் நிலைமை உருவாகியிருக்கிறது. பள்ளிவாசலில் நடைபெற்று வந்த அஹதியா வகுப்புகளும் இடைநிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிவாசலுக்குள் பிரவேசிப்பது தடை செய்யப்பட்டுள்ளதால் பள்ளிவாசலை துப்புரவு செய்வதற்கோ, பள்ளிவாசலில் இருக்கும் பொருட்களைப் பயன்படுத்துவதற்கோ இயலாது இப்பகுதி மக்கள் பல்வேறு அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர்.
ஜனாஸாக்கள் இடம்பெற்ற போது ஜனாஸாக்களை சுமந்து செல்வதற்கான சந்தூக் மற்றும் ஜனாஸாவை குளிப்பாட்டுவதற்கான மேசை போன்றவற்றை பள்ளிவாசலிருந்து பெற்று பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டதால் ஜனாஸா நல்லடக்கத்திலும் அண்மைக்காலமாக இப்பகுதி மக்கள் அசெளகரியங்களை எதிர்கொண்டார்கள்.
அண்மையில் ஐந்து ஜனாஸாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டியிருந்தது.
இச்சந்தர்ப்பத்தில் சந்தூக் மற்றும் ஜனாஸா குளிப்பாட்டும் மேசை பெற்றுக் கொள்ள முடியாமற் போனதால் இரண்டு ஜனாஸாக்கள் நல்லடக்கத்துக்காக மாபோல மையவாடிக்கே எடுத்துச் செல்லப்பட்டன. பின்பு ஜனாஸாக்கள் நல்லடக்கத்துக்காக வேறு மையவாடிகளுக்கு கொண்டு செல்லப்படக்கூடாது.
மஹர மையவாடியிலே நல்லடக்கம் செய்ய வேண்டுமென மஹர பள்ளிவாசல் நிர்வாகம் தீர்மானித்தது. இந்த மையவாடி மஹர ஜும்ஆ பள்ளிவாசலுக்கு அண்மையிலே அமையப்பெற்றுள்ளது.
இரண்டு ஜனாஸாக்கள் மஹர மையவாடியில் நல்லடக்கம் செய்யப்பட்டன. இதற்கென சந்தூக் மற்றும் ஜனாஸாக்கள் குளிப்பாட்டும் மேசை என்பன மாபோலை பள்ளிவாசலிலிருந்தே எடுத்து வரப்பட்டு ஜனாஸா நல்லடக்கம் செய்யப்பட்டன. பள்ளிவாசல் முஸ்லிம்களுக்கு தடைசெய்யப்பட்டிருந்ததால் ஜனாஸா தொழுகை ஜனாஸா வீட்டிலேயே நடத்தப்பட்டது. இறுதியாக இப்பகுதியில் நிகழ்த்த ஜனாஸாவின் தொழுகை மையவாடியிலே நடாத்தப்பட்டது.
ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத்தாக்குதல்களின் பின்பு இவ்வாறான சவால்களையும் அசெளகரியங்களையுமே இப்பகுதி முஸ்லிம்கள் எதிர்கொள்ள வேண்டியிருந்தது. 100 வருடங்களுக்கும் மேற்பட்ட பள்ளிவாசல் ஒன்றுக்கு நேர்ந்த கதியே இது. அரசாங்கம், தேசிய ஒருமைப்பாடு, இன நல்லிணக்கம், மத உரிமைகள், அனைவருக்கும் சமமான நீதி என்றெல்லாம் பட்டியலிட்டு கவர்ச்சியான உறுதிமொழிகள் வழங்கினாலும் களநிலைமை இவ்வாறே அமைந்திருக்கிறது. இந்நிலைமைகளை அரசியல் தலைவர்கள், ஆட்சியாளர்கள் அறியாதிருக்கிறார்களா?
இவற்றுக்கெதிராக அமைச்சரவையில் குரல்கொடுக்க முஸ்லிம் சமூகத்தின் சார்பில் எவரும் இல்லை. முஸ்லிம் அமைச்சர்கள் நியமிக்கப்படாமை ஓர் திட்டமிட்ட செயலாகவே கருத வேண்டியுள்ளது. முஸ்லிம் சமய விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவே பதவி வகிக்கிறார். அவர் தன்னைச் சூழ பல முஸ்லிம் விவகார ஆலோசகர்களாக பலரை இணைத்துக் கொண்டுள்ளார். ஏன் அவர்கள் இவ்வாறான சந்தர்ப்பத்தில் வாய் மூடி மெளனிகளாக இருக்கிறார்கள் என்பது புரியவில்லை.
முஸ்லிம் சமூகத்தின் பிரச்சினைகளில் வாய் திறக்கக் கூடாது என்ற நிபந்தனையில் கீழ் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்களா? இல்லையேல் அவர்கள் வாய்திறக்கப்பயப்படுகிறார்களா? எனும் வினாக்களுக்கு அவர்கள் தான் சமூகத்துக்குப் பதிலளிக்க வேண்டும்.
தெவட்டகஹ பள்ளிவாசல் தலைவர்
தெவட்டகஹ பள்ளிவாசல் நிர்வாக சபையின் தலைவர் ரியாஸ்சாலி இந்தப் பள்ளிவாசலின் பிரச்சினையை சம்பந்தப்பட்ட தரப்பினருடன் கலந்துரையாடி விரைவில் சுமுக தீர்வு பெற்றுத்தருமாறு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக் ஷவை வேண்டியுள்ளார்.
இதேவேளை மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமையப்பெற்றுள்ள ஜும்ஆ பள்ளிவாசல் விவகாரம் கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் காலத்துக்குட்பட்டதாகும், அந்தச் சந்தர்ப்பத்தில் இவ்விவகாரம் வெளிப்படுத்தப்படவில்லை. தற்போது திடீரென வெளிச்சத்துக்கு வந்துள்ளது. இவ்வாறு தற்போது திடீரென இவ்விவகாரம் வெளிப்படுத்தப்பட்டுள்ளமை தற்போதைய அரசாங்கத்தை அவப்பெயருக்கு உட்படுத்துவதாகும். ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ இவ்விவகாரத்தில் தலையிட்டு தீர்வு வழங்கவேண்டும் என ரியாஸ்சாலி தெரிவித்துள்ளதுடன் இவ்விவகாரத்துக்கு நல்லாட்சி அரசையே குற்றம் சுமத்தியுள்ளார்.
ஏப்ரல் உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதல்களுக்கு முன்பே சிறைச்சாலை மற்றும் பொலிஸ் அதிகாரிகள் பலவந்தமாக மஹர பள்ளிவாசலை பொறுப்பேற்றிருக்கி றார்கள். நான் இது தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகிகளைக் கலந்து பேசினேன். அவர்களின் கூற்றுப்படி இச்சம்பவங்கள் நல்லாட்சி அரசின் ஆட்சிக்காலத்திலே நிகழ்ந்துள்ளன. தற்போதைய அரசாங்கத்தின் காலத்தில் அல்ல எனவும் ரியாஸ்சாலி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.
பள்ளிவாசலினுள் புத்தச் சிலை நிறுவப்பட்டதன் மூலம் இரு இனங்களுக்கிடை யிலான உறவு பாதிக்கப்பட்டுள்ளது. உயிர்த்த ஞாயிறு குண்டுத் தாக்குதல்களின் பின்பு பள்ளிவாசலுக்குள் எவரும் சிறைச்சாலை அதிகாரிகளினால் அனுமதிக்கப் படவில்லை. தொழுகைகளுக்கும் அனுமதி வழங்கப்படவில்லை. தொடர்ந்து பள்ளிவாசல் தடைசெய்யப்பட்டிருந்த இக்காலகட்டத்திலே மேலதிக நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
கடந்த காலங்களில் இனங்களுக்கிடையிலான முரண்பாடுகளைத் தீர்ப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படவில்லை. தற்போதைய அரசாங்கம் இனவாதத்தை இல்லாமற் செய்வதற்கு முன்னின்று செயற்படுகிறது. இந்த வகையில் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் சுமுக தீர்வினை விரைவில் பெற்றுத்தர வேண்டுமெனவும் கோரியுள்ளார்.
முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம்
நாட்டில் இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு குண்டுத்தாக்குதலின் பின்பு முஸ்லிம்கள் பல்வேறு சவால்களை எதிர்கொள்ள வேண்டியேற்பட்டது. நாட்டின் பல்வேறு பகுதிகளில் முஸ்லிம்கள் இலக்கு வைக்கப்பட்டார்கள். புர்கா, நிகாப் ஆடைகளுக்குத் தடை விதிக்கப்பட்டது. பல்வேறு பகுதிகளில் இனவாதிகளால் முஸ்லிம்கள் தாக்கப்பட்டார்கள். வர்த்தக நிலையங்கள் தீக்கிரையாக்கப்பட்டன.
ஏப்ரல் 21 உயிர்த்த ஞாயிறு தற்கொலைக் குண்டுத்தாக்குதல்கள் நல்லாட்சி அரசாங்கத்தின் ஆட்சிக்காலத்திலே இடம்பெற்றன. இத்தாக்குதல்களின் பின்பு மஹர சிறைச்சாலை வளாகத்தில் அமைந்திருந்த ஜும்ஆ பள்ளிவாசல் சிறைச்சாலை அதிகாரிகளால் தடைசெய்யப்பட்டது. தொழுகைகள் அனுமதிக்கப்படவில்லை. வளாகத்திற்குள் பிரவேசிக்க முஸ்லிம்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனையடுத்து பள்ளிவாசல் நிர்வாகம் அப்போதைய முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம், அப்போதைய முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களப் பணிப்பாளர் எம்.ஆர்.எம்.மலிக் மற்றும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முப்தி என்போருக்கு முறைப்பாடு செய்தது. அப்போதைய நீதி மற்றும் சிறைச்சாலைகள் புனரமைப்பு அமைச்சர் தலதா அத்துகோரவின் கவனத்திற்கும் இவ்விவகாரம் கொண்டுவரப்பட்டது.
மஹர ஜும்ஆ பள்ளிவாசலில் முஸ்லிம்களின் தொழுகைகளுக்கும், சமய நிகழ்வுகளுக்கும் தடை விதிக்கப்பட்டமையையடுத்து பள்ளிவாசல் நிர்வாக சபை பிரதிநிதிகளுடன் நீதி மற்றும் சிறைச்சாலை மறுசீரமைப்பு (முன்னாள்) அமைச்சர் தலதா அத்துகோரளவுடன் பேச்சுவார்த்தை நடத்தினேன். சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடனும் கலந்துரையாடல்கள் மேற்கொள்ளப்பட்டன என முன்னாள் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் ‘விடிவெள்ளி’க்குத் தெரிவித்தார்.
பேச்சுவார்த்தைகளில் பல முன்னேற்றங்கள் காணப்பட்டன. பள்ளிவாசலில் மீண்டும் தொழுகைகள் நடாத்தவும், ஏனைய சமய நிகழ்வுகள் நடத்தவும் முஸ்லிம்களுக்கு அனுமதி வழங்கப்படவேண்டும் என சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் அரசாங்கத்தினால் கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டன. சுமுகமான தீர்வு எட்டப்படுவதற்கான வாய்ப்பு நிலவிய சந்தர்ப்பத்திலேயே ஆட்சி மாற்றம் இடம்பெற்றுவிட்டது. எமது நல்லாட்சி அரசாங்கம் பதவியில் இருந்திருந்தால் மஹர பள்ளிவாசல், சிறைச்சாலை அதிகாரிகளின் ஓய்வு அறையாக மாற்றம் பெற்றிருக்காது. புத்தர்சிலையும் நிறுவப்பட்டிருக்காது. பள்ளிவாசல் பள்ளிவாசலாகவே இருந்திருக்கும். இதுவே எமது முன்னைய நல்லாட்சி அரசாங்கத்துக்கும் இன்றைய அரசாங்கத்துக்கும் இடையிலான வேறுபாடு என முன்னாள் அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கவலை வெளியிட்டார்.
நீதியமைச்சர்– பள்ளிவாசல் நிர்வாகம் ‘பேச்சுவார்த்தை
பள்ளிவாசல் நிர்வாகம் பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபாவின் தலைமையில் நீதி, மனித உரிமைகள் மற்றும் சட்டமறுசீரமைப்பு அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வாவை நீதியமைச்சில் நேற்று முன்தினம் புதன்கிழமை சந்தித்து இது தொடர்பில் கலந்துரையாடியிருக்கிறது. பள்ளிவாசல் விவகாரத்துக்கு சுமுகமான தீர்வு பெற்றுத்தருவதாக அமைச்சர் உறுதியளித்திருக்கிறார்.
பள்ளிவாசல் விவகாரத்தை எதிர்வரும் அமைச்சரவைக் கூட்டத்தில் கலந்துரையாடுவதாகவும் சிறைச்சாலை ஆணையாளர் நாயகத்துடன் பேச்சுவார்த்தை நடத்துவதாகவும் அவர் கூறியிருக்கிறார். இது முஸ்லிம்களுக்கு ஆறுதலை வழங்கியுள்ளது.
100 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்பட்டு வந்த பள்ளிவாசல் ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளமை குறித்து கவலை வெளியிட்ட பள்ளிவாசல் நிர்வாகம் மீண்டும் பள்ளிவாசலைப் பயன்படுத்துவதற்கான அனுமதியினைப் பெற்றுத்தருமாறு அமைச்சரிடம் கோரிக்கை விடுத்தது. 100 வருடங்களுக்கும் மேலான பள்ளிவாசலை இவ்வாறான நிலைமைக்கு உட்படுத்த முடியாதென்பதை ஏற்றுக்கொண்ட அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா இவ்விவகாரத்துக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக உறுதியளித்துள்ளார்.
இதேவேளை பாராளுமன்ற உறுப்பினர் பைசர் முஸ்தபா ‘100 வருடங்களுக்கும் மேல் பழைமை வாய்ந்த முஸ்லிம்கள் பயன்படுத்தி வந்த பள்ளிவாசல் ஏப்ரல் தாக்குதலுக்கு முன்பு எந்தச் சந்தர்ப்பத்திலும் மூடப்பட்டிருக்கவில்லை. ஏப்ரல் தாக்குதலின் பின்பு சிறைச்சாலை அதிகாரிகளே பள்ளிவாசலுக்குத் தடைவிதித்தனர். பள்ளிவாசல் நீண்டகாலம் மூடியிருந்ததாகக்கூறி சிறைச்சாலை அதிகாரிகள் ஓய்வு அறையாக மாற்றியுள்ளமை சட்டத்திற்கு முரணானதாகும். இப்பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான குடும்பங்கள் தங்கள் சமய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடியாது அசெளகரியங்களுக்கு உள்ளாகியுள்ளனர் என நீதியமைச்சரிடம் விளக்கியுள்ளார்.
நீதியமைச்சரின் உறுதிமொழி நிலைமையைச் சமாளிப்பதற்காக வழங்கப்பட்டதாக இருக்கக்கூடாது. அமைச்சர் நகர்வுகளைத் துரிதப்படுத்த வேண்டும். ஒரு மதத்தலத்தை மூடிவிட்டு அங்கே வேறு மத வழிபாடுகள் இடம்பெறுவதை எந்தவகையிலும் நியாயப்படுத்த முடியாது. அவ்வாறான நிலைமை இன முரண்பாடுகளை போஷிப்பதாக அமையும். இவ்விவகாரத்தில் அரசு துரித நடவடிக்கைகளை முன்னெடுக்க வேண்டும்.
மஹர ஜும்ஆ பள்ளிவாசல் சிறைச்சாலை உத்தியோகத்தர்களின் ஓய்வு அறையாக மாற்றப்பட்டு, அங்கு புத்தர் சிலை வைக்கப்பட்டு மத வழிபாடுகள் நடைபெறுகின்றமை முஸ்லிம்களை ஆழ்ந்த துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
ஜனாதிபதி கோத்தாபய ராஜபக் ஷ நாட்டு மக்கள் அனைவரையும் அரவணைத்துச் செல்வதே தனது இலக்கு எனத் தெரிவித்துள்ளார். இம்மாதம் 4 ஆம் திகதி அவர் ஆற்றிய சுதந்திர தின உரையின்போது கூட சகல மக்களினதும் மத சுதந்திரம் உறுதிப்படுத்தப்படும் என உறுதியளித்திருந்தார். அவரது உரை இடம்பெற்று மறுதினமே பள்ளிவாசலொன்று ஓய்வு அறையாக மாற்றப்பட்டுள்ளது. அரச அதிகாரிகளே இதை அரங்கேற்றியிருக்கிறார்கள். அரச அதிகாரிகளின் பொறுப்புகள், கடமைகள் மீது கூடுதலான அழுத்தங்களைப் பியோகித்து வரும் ஜனாதிபதி இவ்விவகாரத்தில் எவ்வாறான தீர்வு காணப்போகிறார்? முஸ்லிம் சமூகம் தீர்வை நோக்கிக் காத்திருக்கிறது.
ஜனாதிபதியுடனும் பிரதமருடனும் அவர்களது கட்சியுடனும் நெருங்கிய உறவினைப் பேணும் முஸ்லிம் தலைவர்கள் தீர்வுக்கு அழுத்தங்களைப் பிரயோகிக்க வேண்டும்.
சிறைச்சாலை வளாகத்தினுள் இருக்கும் பள்ளிவாசல் 100 வருடங்களுக்கும் மேலாக முஸ்லிம்களால் பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது. அதனால் அனைத்து உரித்துகளும் முஸ்லிம்களுக்கு உள்ளன. இந்நிலையில் பள்ளிவாசல் சிறைச்சாலை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கிறது என புலனாய்வு அறிக்கைகள் தெரிவித்திருந்தால் அதிகாரிகள் மாற்று நடவடிக்கை எடுத்திருக்கவேண்டும்.
பள்ளிவாசல் தடை செய்யப்படுவதற்கு முன்பு அப்பகுதி முஸ்லிம்களுக் கென்று அரச செலவில் சிறைச்சாலை வளாகத்துக்கு வெளியே புதிய பள்ளிவாசலொன்று நிர்மாணித்துக் கொடுக்கப்பட்டிருக்கவேண்டும். இதுவே அரசாங்கத்தின் தார்மிகப் பொறுப்பு அதைவிடுத்து பள்ளிவாசலுக்கு வரவேண்டாம் தொழ வேண்டாம் என நுழைவாயிலை இழுத்து மூடுவது ஜனநாயகப் பண்பாக அமையாது. முஸ்லிம் சமூகம் நல்ல தீர்வையே எதிர்பார்த்துக் காத்திருக்கிறது.-Vidivelli
- ஏ.ஆர்.ஏ.பரீல்